Apr 9, 2013

காருக்கும் ஆளுக்கும் என்ன சம்பந்தம்?


இப்பொழுதெல்லாம் இந்தியாவில் இல்லாத கார் வகைகளே இல்லை போலிருக்கிறது. உலகின் பணக்கார கார் கம்பெனிகள் அத்தனையும் இந்தியாவில் கார்களை விற்பனை செய்கின்றன.அப்படியே சில கார்களுக்கு  நேரடி விற்பனை இல்லையென்றாலும் ஹம்மர் போன்ற கார்களை நம்மவர்கள் ஹவாலாவிலாவது வாங்கிவிடுகிறார்கள். 

சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களின் சாலைகளில் முப்பது லட்சம், நாற்பது லட்சம் ரூபாய் கார்களெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது.

அசால்ட்டாக ஒரு கோடியில் வீடு வாங்குகிறார்கள், நாற்பது லட்சத்தில் கார் வாங்குகிறார்கள், ஐந்தாயிரம் ரூபாயில் செருப்பு வாங்குகிறார்கள், அட அவ்வளவு ஏன்? நாய்க்கு போடும் 3 கிலோகிராம் பெடிக்ரீயின் விலை நானூற்றைம்பது ரூபாய். பணத்தை இப்படி தாறுமாறாக செலவு செய்தால் பணம் வீங்கத்தான் செய்யும், விலைவாசி ஏறத்தான் செய்யும். ஆனால் இதெல்லாம் நம் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவுக்கு கண்ணில்படுவதில்லை போலிருக்கிறது.  “ஏழைகள் சத்து பண்டமாகத் தின்கிறார்கள் அதனால் விலைவாசி ஏறி போயிடுச்சு” என வெட்கங்கெட்டு பேசியிருக்கிறார். தொலையட்டும்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பாக அம்பாஸிடர் காரை வேண்டுமானால் சாலைகளில் பார்க்கலாம். சற்று பணக்காரர்களாக இருந்தால் மாருதி 800 வைத்திருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால் இப்பொழுது நிலைமை ஒட்டுமொத்தமாக மாறியிருக்கிறது. கார் என்பது அத்தியாவசியமான பொருள் என்ற மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. அலுவலகத்திற்கு பைக்கில் போய் வருகிறேன் என்று சொன்னால் ஆளாளுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். சுற்றுச்சூழல் மாசுபட்டுக் கிடக்கிறது, வெயில் கருக்குகிறது, முதுகுவலி வரும், எப்பொழுதுமே இருசக்கர வாகனத்தில் ரிஸ்க் அதிகம்...இந்த மாதிரி..இந்த மாதிரி..

நமக்குத்தான் கார் அத்தியாவசியம். முந்தைய தலைமுறையைச் சார்ந்த நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்தக் கார்களின் மதிப்பு பற்றிய புரிதல் துளியும் இல்லை. சாலையில் ஓடும் ஆடியைக் காட்டி இதன் விலை இருபது லட்சம் ரூபாய்க்கு மேலாக இருக்கும் என்று சொன்னால் அப்பாவும் அம்மாவும் “அதுவும் கார்தானே? அதுக்கு எதுக்கு அத்தனை காசு?” என்கிறார்கள் அவர்களைப் பொறுத்த வரையில் நான்கு சக்கரத்தில் கூடாரம் அமைக்கப்பட்ட வாகனம் எல்லாமே கார்தான். அது ஆடியாக இருந்தாலும் சரி, ஐ 10 ஆக இருந்தாலும் சரி. இதில் ஒரு கார் நான்கு லட்சம் இன்னொரு கார் நாற்பது லட்சம் என்பதெல்லாம் சீட்டிங் என்றுதான் நினைக்கிறார்கள்.

“ப்ராண்டுக்கு வேல்யூ அதிகம்” என்றால் இன்னமும் அதிர்ச்சியடைந்துவிடுகிறார்கள். ப்ராண்டுக்காக பணம் கொடுப்பதை இந்தத் தலைமுறைதான் ஆரம்பித்து வைத்திருக்கிறது. முன்பெல்லாம் எது ‘சீப்’ என்று பார்த்துதான் வாங்கினார்கள். நாம்தான் எது வைத்திருந்தால் ‘கெத்து’ என்று பார்த்து வாங்குகிறோம் என நினைக்கிறேன்.

அம்மா அப்பா இரண்டு பேருமே அரசாங்க வேலையில் இருந்திருந்தாலும் ஆரம்பத்தில் ஒரு டி.வி.எஸ் 50 பிறகு ஒரு சுசுகி மேக்ஸ் 100 ஆர் அதன் பிறகு ஸ்பெண்டர் ப்ளஸ் என்று இருந்துவிட்டவர்கள். கார்கள் என்பவை இப்பொழுதும் அவர்களுக்கு அவசியமில்லாதது, வீண் செலவு- குறிப்பாகச் சொன்னால் அது ஒரு காஸ்ட்லி கனவு. அதற்கு மேல் அது பற்றி அவர்கள் யோசிப்பதில்லை.

எங்கள் வீட்டில் மட்டுமில்லை நம் பெரும்பாலானோரது வீட்டிலும் இதுதான் நிலைமை என நினைக்கிறேன். என்னுடன் வேலை செய்யும் கோபியைச் சார்ந்த பையன் ஒருவனின் அப்பா கல்லூரியில் விரிவுரையாளர். அது ஒரு அரசு கல்லூரி. கிட்டத்தட்ட மாதம் ஒரு லட்சம் சம்பளமாக வாங்குகிறாராம். பத்து லட்சம் ரூபாயுள்ள ஹோண்டா சிட்டி கார் வாங்கியே தீர வேண்டும் என இவன் ஒற்றைக் காலில் நிற்கிறான். காருக்கு பதிலாக காலி இடத்தை வாங்கிப்போட்டால் விலையாவது ஏறும்,  “கார் எதுக்கு? வெட்டிச் செலவு” என்கிறாராம். இவன் “கார் இல்லாம எப்படிண்ணா பொண்ணு பார்க்கப் போறது?” என்று புலம்பிக் கொண்டிருக்கிறான். இப்படித்தான் பல தலைமுறைகள் வாழ்ந்திருக்கிறார்கள். நாம்தான் ஒரேயொரு தலைமுறையில் ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டிருக்கிறோம்.

எனக்கு கார் மீது ஒரு மார்க்கமான மோகம் இருக்கிறது. புதுப்புது கார்களாக வாங்க வேண்டும் என்ற விருப்பமெல்லாம் இல்லை. ஆனால் சைட் அடிப்பது போன்ற மோகம். நல்ல கார்கள் சாலையில் வந்தால் வாயைப் பிளந்து பார்ப்பேன். கொஞ்சம் உருகியும் போவேன். ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. காரை சைட் அடிக்கும் ஆர்வத்தில் நல்ல ஃபிகர்களை மிஸ் செய்துவிடுகிறேன். இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பாக ஹெச்.ஏ.எல் சாலையில் ஒரு அட்டகாசமான பி.எம்.டபிள்யூ கார் ஒன்று சிக்னலில் நின்று கொண்டிருந்தது. வழக்கம் போல சுற்றிச் சுற்றி காரை பார்த்துவிட்டு காருக்குள் பார்த்தால் டிரைவர் ஸீட்டுக்கு பக்கத்தில் இலியானா. ஒரே ஒரு செகண்ட்தான் பார்த்திருப்பேன். ப்ச். பட்சி பறந்துவிட்டது.

திருப்பூர் போன்ற தொழில்நகரங்களில் காஸ்ட்லி கார்கள் வைத்திருப்பதற்கு ஒரு சுவாரசியமான காரணம் சொல்கிறார்கள். பந்தா என்பது ஒருபுறம் என்றாலும், “முப்பது லட்ச ரூபாய் கார் வைத்திருக்கிறவன் ஏமாத்த மாட்டான் சார்” என்ற எண்ணம் வருமாம். ஆனால் காருக்கும் ஆளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. சிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் போன்ற லாஜிக் போலத்தான் இது.

இன்றைக் காலையில் ஒரு காஸ்ட்லி காருடன் அப்படியான அனுபவம்தான். சர்ஜாப்பூர் சாலையில் ஒரு கறுப்பு நிற லேண்ட் ரோவர் கார் ட்ராபிக்கில் நின்று கொண்டிருந்தது. எண்பத்தி நான்கு லட்சம் ரூபாய் மதிப்புடைய கார் அது. KA 03 MR 5007 என்பதில் MR 007 என்பது மட்டும் பெரிதாக தெரியும் படி நெம்பரை எழுதி வைத்திருந்தார்கள். வேகமாகச் சென்று லேண்ட்ரோவரின் பின்னழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.

 “இந்தக் காரை அந்த நடிகை வச்சிருந்தா... அந்த நடிகையை யாரு வெச்சிருந்தா?” என்பது நம்முடைய காமன் சைக்காலஜிதானே? இந்தக் காரை வைத்திருக்கும் பாக்கியவான் யார் என்று பார்க்க விரும்பி கொஞ்சம் முன்புறமாகச் சென்ற போது அவன் செய்து கொண்டிருந்த காரியம் இருக்கிறது பாருங்கள். அவன் ஒரு வெள்ளைக்காரன். சுற்றுவட்டாரம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படு சுவாரசியமாக மூக்கை நோண்டிக் கொண்டிருந்தான். அதாவது பரவாயில்லை என்று விட்டுவிடலாம். சனியன் பிடித்தவன் அடுத்த வினாடியே...சரி விடுங்கள். அவனை நான் பார்க்க நான் அவனைப் பார்க்க...ஒரே களோபரம்தான். அவன் பார்க்கும் போதே எனது முன் தலையை ஓங்கித் தட்டினேன். அதன் பிறகு வேகமாக நகர்ந்துவிட்டேன். “நீ லேண்ட் ரோவரில் வந்தால் என்ன நடந்து வந்தால் என்ன?” என்பதுதான் அந்த தட்டுக்கு அர்த்தம் என அவன் புரிந்திருப்பான் என நினைக்கிறேன்.