Apr 8, 2013

கம்பர்-இன்னுமொரு தகவல்


திரு மணிகண்டன்

தேரழந்துர் பற்றிய உங்கள் வலைப்பதிவு கண்டேன். மிக்க மகிழ்ச்சி.

கம்பர் பிறந்த தேரழுந்துர் தான் அடியேன் ஊரும். 

கம்பர் பிறந்த ஊரில் கம்பர் மேடு என்று உள்ளது. அந்த இடத்தில் தான் கம்பரின் வீடு இருந்தது என்று கூறுவர்.

கம்பர் ஆமருவியப்பன் திருக்கோவிலில் உள்ள யோக நரசிம்ஹர் முன்னர் அமர்ந்து கம்ப ராமாயணம் எழுதி உள்ளார் என்று பெரியோர் கூறுவர்.நரசிம்ஹரிடம் மிகுந்த பக்தி கொண்டதால்தான் அவர் தனது இயற்பெயரை மாற்றி கம்பன் என்று கொண்டார் என்றும் எனது பெரிய தகப்பனாரும், தமிழ்ப் புலவருமான காலம் சென்ற முனைவர். ராம பத்ராச்சாரியார் தனது உபன்யாசங்களில் கூறக் கேட்டிருக்கிறேன்.  ( கம்பத்திலிருந்து வந்ததால் நரசிம்ஹர் பெயரும் கம்பர் தான் )

தனது நரசிம்ஹ பக்தியினால்தான் ராமாயணத்தில் இரணிய வதைப் படலம் எழுதினார் என்றும் அவர் தனது புத்தகங்களிலும் எழுதியுள்ளார்.

தங்கள் வலைப்பதிவில் கமெண்ட் எழுத வசதி இல்லாததால் தங்களுக்கு மின் அஞ்சல் எழுதியுள்ளேன்.

நன்றி.
ஆமருவி தேவநாதன் 

                                                              ****

அன்புள்ள திரு.ஆமருவி தேவநாதன்,

வணக்கம். தகவல்களுக்கு நன்றி.

திருவழுந்தூர் பற்றி அதிக தகவல்கள் எதுவும் தெரியாது. தெரிந்ததெல்லாம் வாசித்தவற்றில் இருந்து அறிந்து கொண்டவைதான். அந்த ஊருக்கு ஒரு முறை வர வேண்டும் என விரும்புகிறேன். 

கம்பரின் பெயருக்கு இன்னும் வேறு சில காரணங்களைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள். காளி கோயில் கம்பத்திற்கு கீழே கிடைத்தமையால் கம்பன் என்றார்கள் என்று கூட வாசித்திருக்கிறேன். 

உங்களது பெரிய தகப்பனாரின் புத்தகங்கள் ஏதேனும் இருக்கிறதா? இருப்பின் தெரியப்படுத்துங்கள்.

மிக்க அன்புடன்,
மணிகண்டன்.