Apr 10, 2013

நான் ஏன் பிறந்தேன்?


முப்பத்தியொரு வயது முடிந்துவிட்டது. துல்லியமாகச் சொல்ல வேண்டுமானால் இன்று மாலை 5.21 லிருந்து முப்பத்தியிரண்டாவது வருடம் தொடங்குகிறது.

பிறந்தநாள் என்பதில் எந்தச் சிறப்பும் இல்லை என்றெல்லாம் ஸீன் காட்ட விரும்பவில்லை. உண்மையில் பிறந்த நாள் என்பது ஸ்பெஷலானதுதான். ஆயிரமாயிரம் வருடங்களில் நமக்கு அளிக்கப்பட்ட வாழ்வுத் துளியின் துவக்க தினம் பிறந்த நாள். அந்த தினத்திற்காக ப்ளக்ஸ் பேனர் வைத்து கோவிலில் கூழ் ஊற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் நமக்கு நாமே திட்டத்திலாவது கொண்டாட வேண்டும் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு வருடமும் பிறந்த தினத்திற்கு முந்தின நாள் இரவில் பதினொன்றரை மணிக்கு குளித்துவிட்டு நெற்றி நிறைய திருநீறுடன் பயபக்தியுடன் பன்னிரெண்டு மணிக்காக காத்திருப்பேன். 11.58 மணிக்கு ஆரம்பித்து 12.02 வரைக்கும் இஷ்ட தெய்வங்களையெல்லாம் துணைக்கழைத்துக் கொள்வதில்தான் எனக்கான பிறந்த தினம் தொடங்கும். 11.58லிருந்து அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு கடந்த ஒரு வருடத்தின் நிகழ்வுகளைகளை மிக வேகமாக நினைவுபடுத்திக் கொள்வேன். அதற்கடுத்த இரண்டு நிமிடங்களில் வரவிருக்கும் வருடத்தில் நான் விரும்பனவற்றையெல்லாம் பட்டியல் போட்டு சாமிகளிடம் ஒரு கோரிக்கை வைத்துவிட்டு தூங்கிவிடுவேன். முந்தைய வருடத்தின் ரீவைண்டையும் அடுத்த வருடத்தின் கோரிக்கைகளையும் நான்கு நிமிடங்களில் முழுமையாகச் செய்வது சாத்தியம்தான்.சரியாக முயற்சி செய்தால் கடந்த முப்பது வருடங்களையும் அதிகபட்சம் முப்பது நிமிடங்களில் ரீவைண்ட் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாலணா ரஜினி படம் வாங்கித் தந்தால்தான் பள்ளிக்கு போவேன் என்று ட்ரவுசரைப் போட்டுக் கொண்டு அழுதது தெள்ளத்தெளிவாக ஞாபகத்தில் இருக்கிறது. ஆறாம் வகுப்பில் பாட நோட்டில் எழுதாமல் போனதற்காக கண்ணம்மா டீச்சர் அடிக்கிறார் என்பதால் நெஞ்சுவலி என்று பொய் சொல்லி கிட்டத்தட்ட மூன்று மாதம் பள்ளியை ஏமாற்றியதும் மறக்கவில்லை. மீன் பிடித்தது, குருவியடித்தது என அத்தனையும் ஞாபகத்தில் இருக்கிறது. பத்தாம் வகுப்பும் சரி, பன்னிரெண்டாம் வகுப்பும் சரி - அப்படியே ஒப்பிக்க முடியும். கல்லூரி ராகிங், முதல் Crush, முதல் வேலை,  முதல் சம்பளம், திருமணம், குழந்தை என சகலத்தையும் ஒரு ஓட்டு ஓட்டிவிட முடியும். வெறும் முப்பது நிமிடங்களில்.


ஆனால் எதிர்காலத்தை பற்றித்தான் எந்த கணிப்பையுமே செய்ய முடிவதில்லை. இது நாள் வரைக்கும் எதிர்காலத்தை பற்றிய எந்த பயமுமே இருந்ததில்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. குடும்பம் சார்ந்து நிறைய பொறுப்புகளை சுமக்க தொடங்கியிருப்பதன் ஆரம்ப பருவம் இது. அடுத்த இருபது வருடங்களுக்காகவாவது ஒழுங்காக சுமக்க வேண்டும் என்ற நினைப்பு அவ்வப்போது திகிலூட்டுகிறது.

எல்லாமே நல்லதாக நடக்கும் என்ற பாஸிடிவ் எண்ணம் அவசியம்தான். ஆனால் வாழ்க்கை ஒரு மனிதனை எப்பவுமே Smooth ஆக வைத்திருப்பதில்லை. அதற்கு தோன்றும் போது புரட்டி வீசிவிடுகிறது. புரட்ட வேண்டாம் என்று வேண்டிக் கொண்டால் அது நம்மை விட்டுவிடப் போவதில்லை. மாறாக "ஒரு வேளை, புரட்டுவதற்காக நீ என்னைத் தேர்ந்தெடுத்தால் அதைத்  தாங்குமளவுக்கு உறுதியைக் கொடுத்தால் போதும்” என்றுதான் வேண்டிக் கொள்கிறேன்.

நடக்கவே முடியாத கிழவன் காய்கறிகள் நிரப்பப்பட்ட தள்ளு வண்டியைத் தள்ளி வருவதை பார்க்கும் போதோ, சிக்னலில் கைக்குழந்தையுடன் யாராவது பிச்சையெடுக்கும் போதோ, எனது வயதையொத்தவன் கருங்கல்லை சுமந்து கொண்டிருப்பதை எதிர்கொள்ளும் போதோ விரல்கள் சில்லிடுவதை கவனித்திருக்கிறேன். ஏதோ ஒரு காரணத்தினால்தான் அந்த இடங்களில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துவிட்டேன் என்றுதான் ஆறுதல்படுத்திக் கொள்கிறேன்.

இத்தகைய பயங்களும் பதட்டங்களும் தேவையற்றவைதான் என்றாலும் பயமுறுவதுதானே மனித மனம்? உண்மையில் இந்த தினம் வரைக்கும் எனக்கு அளிக்கப்பட்ட முப்பத்தியோரு வருடங்களின் பெரும்பாலான நாட்கள் ஆசிர்வதிக்கப்பட்டவை. வாழ்க்கையில் நான் விரும்பாமலே கிடைத்தவைதான் நிறைய. தகுதிக்கு மீறியவையும் கூட பட்டியலில் நிறைய உண்டு. அதே சமயம் விரும்பி கைகூடாமல் போனவையும் பட்டியலில் இருக்கின்றன என்றாலும் அவை மிக சொச்சம். விரும்புவது கிடைக்காமலும் விரும்பாதது கிடைத்து விடுவதும்தானே வாழ்க்கை! 

அறுபது வயதுதான் எனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் என்றாலும் கூட பாதிக் கிணறைத் தாண்டியாகிவிட்டது. எண்பது வயது, நூறு வயது என்றெல்லாம் ஆசைப்படலாம்தான். ஆனால் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. சரியாக வாழ்ந்துவிட்டால் அறுபதுக்கு மேலாக தேவையும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

இதோ இந்த வருடத்திற்கான Wishlist என்றொரு பட்டியல் வைத்திருக்கிறேன். பட்டியலை ஒரே நேரத்தில் வெளிப்படையாக சொல்ல சங்கோஜமாக இருந்தாலும் அவ்வப்போது உளறிவிடுவேன் என்று நினைக்கிறேன். ஒருவனது ஆழ்ந்த பிரார்த்தனையும் மற்றவர்களின் மனமார்ந்த வாழ்த்துகளும் அவனுக்கு தேவையான அத்தனை பலத்தையும் கொடுத்துவிடும் என்பதில் முழு நம்பிக்கை இருக்கிறது. 

எனக்கு பலம் தேவைப்படுகிறது. வாழ்வதற்கும், எழுதுவதற்கும் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் அதிகமான பலம் தேவை.  அதற்காக நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். நீங்கள் ஒரேயொரு வினாடி என்னை வாழ்த்திவிடுங்கள்.நன்றி