Apr 15, 2013

நீ வளரணும் தம்பி


கீழ்க்கண்ட இரண்டும் நீங்கள் எழுதியது. சாதாரணமாகப் படித்தாலே, இவை இரண்டும் நேர் முரணாக இருப்பது புரியும். 

பாரத் பந்த்

தொழிற்சங்கவாதிகள் கோரிக்கைகளை முன்வைப்பது பற்றிய ஆட்சேபனைகள் எதுவும் இல்லை. ஆனால் இரண்டு நாட்கள் பந்த் நடத்துவதால் காய்கறி விற்பவனுக்கும், தினசரி ஆட்டோ ஓட்டி பிழைப்பவனுக்கும், கட்டடவேலை செய்பவனுக்கு, மண் வேலை செய்பவர்களுக்கும் என்ன பயன் வந்துவிடப் போகிறது என்றுதான் தெரியவில்லை. ஆனால் இந்த பந்த்களால் அதிகம் பாதிக்கப்படப் போவது அவர்கள்தான்.

இன்றைய பந்த்தினால் நேரடியாக பாதிக்கப்படப் போவது இந்த ஆட்டோக்காரரை போன்ற இலட்சக்கணக்கான அன்றாடங்காய்ச்சிகள்தான். பந்த்க்கு அழைப்பு விடுத்திருக்கும் பதினோரு தொழிற்சங்கத் தலைவர்களும் ஏ.சி.ரூமில் இருப்பவர்கள் என்று நம்புகிறேன்.

சோற்றுக்கு லாட்டரி அடிப்பவர்கள் எப்படியோ தொலையட்டும்.

தொழிற்சங்கம் ஜிந்தாபாத்......சமத்துவம் ஜிந்தாபாத்!


தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்தால் சுங்கவரியை தவிர்க்கலாம். சுங்கவரி என்ற பெயரில் சுருட்டிக் கட்டுகிறார்கள். கேட்டால் தனியார்மயமாக்கல் என்பார்கள். நமக்கெதுக்கு பொல்லாப்பு? எவனோ எப்படியோ போகட்டும் என்று மாநிலச் சாலையை எடுத்துக் கொள்வதுதான் உசிதம். தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் நூற்றைம்பது கிலோமீட்டரில் குறைந்தபட்சம் பத்து நாய்களாவது நசுங்கிக் கிடக்கும். டெவலப்மெண்ட் என்ற பெயரில் பெரும்பாலான ஊர்களுக்கு நடுவில் கோடு போட்டுச் செல்கிறது நெடுஞ்சாலை. முன்பு அடுத்ததடுத்த தெருவாக இருந்தவர்களை இப்பொழுது நெடுஞ்சாலை பிரித்து வைத்திருக்கிறது. அடுத்த தெருவுக்கு செல்வதென்றால் கூட நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் பயணித்து யூ டர்ன் அடிக்க வேண்டியிருக்கிறது. நம்மவர்களே கணக்கு வழக்கில்லாமல் வண்டிகளின் சக்கரத்திற்கடியில் சரணமடைகிறார்கள்.

முதல் கட்டுரையில் தனியார்மயத்தை எதிர்ப்பவர்களை (கம்யூனிஸ்ட்கள்) எதிர்க்கிறீர்கள். தனியார்மயம் இருந்தால், சாதாரண தொழிலாளியும் பிழைக்கலாம் (ஒரு நாள் மட்டும்) என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஒரே மாதத்தில் தனியார்மயம் மோசமானது என்று எழுதுகிறீர்கள். இதில் எது சரி?

மேற்கண்ட தாண்டவம் கட்டுரை சார்ந்து மற்றொரு விஷயம்: இயற்கையால் குத்திக் கிழிக்கப்படும் எனது ஊரின் அவலத்தை ... இப்படியெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். 

இயற்கை ஏதோ பெரிய நம்பியார், பி.எஸ்.வீரப்பாவைப் போல. இயற்கை என்பது தன் உணர்வு அற்ற ஒரு ஜடமல்ல. அது காரண, காரியத் தொடர்புடையது. அதை அறிவியல்பூர்வமாக புரிந்துகொண்டால் மட்டுமே அதை உணர்ந்து கொள்ள முடியும்.

எதையும் சுவாரசியமாக எழுத வேண்டும் என்ற முனைப்பைத் தவிர, வேறு எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால், உலகம் சுவாரசியமானதல்ல, வஞ்சகம், சூழ்ச்சி, அதிகாரம், பணம், பலம் போன்ற பல்வேறு நச்சுகள் நிறைந்தது. அதை உங்கள் தளத்தில் பார்க்க முடியவில்லை.

இந்தக் கடிதத்தை முன்பே எழுதிவிட்டேன். இன்றைக்கு வெளியான கட்டுரையை பார்த்தவுடன்தான் கடிதத்தை உடனே அனுப்ப வேண்டுமெனத் தோன்றியது. பாரத் பந்த் என்று 2 மாதங்களுக்கு முன்பு எழுதிய அதே கட்டுரையை, ஒரு குடுவையில் போட்டு குலுக்கி எடுத்து இன்றைக்கு தேர்தல் பற்றி எழுதியிருக்கிறீர்கள். எதிலுமே அரசியல் பார்வையோ, சமூகப் பார்வையோ இல்லை.  நடுத்தர வர்க்கம் ஏற்கெனவே ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிற அதே ஒப்பாரி, சால்ஜாப்பு, "என்னத்தை செய்து, என்ன மாறப் போகிறது" என்ற போக்கிலேயே கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

Thanks,

Regards,
Valliappan .K

                                                        **************

அன்புள்ள வள்ளியப்பன்,

வணக்கம்.

மூன்று கட்டுரைகளையும் Comparison செய்து ஒரு மின்னஞ்சலை அனுப்பியமைக்கு மிக்க நன்றி. நேரடியான எதிர்மறை விமர்சனம் என்றாலும் நாகரீகமான மொழியில் அனுப்பியிருக்கிறீர்கள். அதற்காக என் அன்பு.

இந்த மூன்று கட்டுரைகளையும் எதற்காக வலுக்கட்டாயமாக இணைத்து பார்த்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. நேரமிருப்பின் எந்த முன் முடிவும் இல்லாமல் இன்னொரு முறை வாசித்துப் பாருங்கள். மூன்று கட்டுரைகளுமே வெவ்வேறு விஷயங்களை மனதில் வைத்து எழுதப்பட்டது. அவற்றை எந்தவிதத்திலும் ஒப்பிட்டு பார்க்கத் தேவையில்லை என நினைக்கிறேன். இருந்தாலும் எழுதுவதற்கான உரிமை எனக்கு இருப்பதை போலவே விமர்சிப்பதற்கான உரிமை வாசிப்பவர்களுக்கு இருக்கிறதல்லவா? அதனால் No comments.

பாரத் பந்த்தை பாட்டிலில் குலுக்கி டூ மச் என்ற கட்டுரையை எழுதப்பட்டிருக்கிறது என்ற தங்களின் கண்டுபிடிப்பு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. எந்தவிதத்தில் இவை இரண்டும் சம்பந்தமுடையவை என்று யோசித்து விடை கிடைக்காமல் மண்டை காய்ந்து கொண்டிருக்கிறேன். அதுமட்டுமில்லை பாரத் பந்த் கம்யூனிஸ்ட்களை எதிர்த்து எழுதப்பட்டது, தாண்டவம் இயற்கையை வில்லனாக சித்தரித்து எழுதப்பட்டது என்பதெல்லாம் கூட எனக்கு புரியாத புதிர்கள்தான். (தா.பாண்டியனை கம்யூனிஸ்ட் என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்)

நான் எழுதியது சரி என்றும், உங்களின் விமர்சனம் தவறு என்றும் justification செய்யப்போவதில்லை. அது தேவையுமில்லை என நினைக்கிறேன். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “இயற்கையை வில்லனாக சித்தரித்திருக்கிறேன்” என்ற உங்களது குற்றச்சாட்டிலிருந்தே இந்தக் கட்டுரைகளில் உங்களின் வாசிப்பிற்கும் புரிதலுக்கும் இடையில் இருக்கக் கூடிய இடைவெளியை புரிந்து கொள்கிறேன்.

இன்னும் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.

முழுமையாக கட்டமைக்கப்பட்ட எந்த சித்தாந்தமும் எனக்கு கிடையாது. யாரையுமே முழுமையாக பின் தொடர்வதில்லை. கம்யூனிஸத்தின் ஒரு அம்சத்தை எதிர்க்கும் என்னால் கம்யூனிஸத்தின் இன்னொரு அம்சத்தை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள முடியும். தனியார் மயத்தை இன்று ஏற்றுக் கொள்ள முடியும் என்னால் நாளை ஏதோ ஒரு காரணத்திற்காக தனியார்மயத்தை எதிர்க்க முடியும். பெரியாரின் புத்தகத்தை வாசிக்கும் என்னால் சபரிமலைக்கு மாலையிட முடியும். இப்படியான கேரக்டராகத்தான் இருந்து வந்திருக்கிறேன்.

மற்றபடி Concrete ஆன சித்தாந்தங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் களத்தில் இறங்கிப் போராடும் போராளியாகவோ அல்லது செயற்பாட்டாளாராகவோ இதுவரை  இருந்ததில்லை. இனியும் அப்படி இருப்பேன் என்று நினைக்கவில்லை. தனிப்பட்ட வாழ்வில், அன்றாட நிகழ்வில், வாசிப்பதன் அடிப்படையில் என்னை எவையெல்லாம் பாதிக்கின்றனவோ அதே அடிப்படையில்தான் சிந்தனை ஓட்டம் இருக்கிறது. அதைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்டபடி ‘என்னத்தை சொல்லி என்ன மாறப்போகிறது’ என்பதுதான் என் நம்பிக்கை. இந்த தேசத்தை திருத்துகிறேன், சமூகத்தை மாற்றுகிறேன் என்பதெல்லாம் எனக்கு சாத்தியமேயாகாத விஷயங்கள்.

அவநம்பிக்கைகள் மிகுந்தவனாக, நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயந்தவனாக, அதே சமயம் வாழ்வதற்கு தேவையான துக்கினியூண்டு உற்சாகமிக்கவனாக இந்த உலகில் மிக மிகச் சாதாரண மனிதனாக வாழ விரும்புகிறேன். உங்களின் கசப்பான வார்த்தையில் சொன்னால் “நடுத்தர வர்க்கம்”. என் சமாதான வார்த்தைகளில் சொன்னால் “யதார்த்தவாதி”.

இந்த வாழ்க்கை என்னைச் சுற்றி நிகழ்த்தும் பகடையாட்டங்களை எள்ளலாக, புலம்பலாக, அழுகையாக, கோபமாக என ஏதோ ஒரு வடிவத்தில் மற்றவர்களிடம் சொல்ல எத்தனிக்கிறேன். அந்த எத்தனிப்பு சுவாரசியமானதாக இருக்க வேண்டும் என விரும்புவதில் என்ன தவறு என்று தெரியவில்லை.

மனதில் தோன்றுவதை எழுதுகிறேன். வாசிக்கிறார்கள். சிலரது சிந்தனை நான் யோசிப்பதோடு ஒத்துப் போகிறது. உடன் வருகிறார்கள். உங்களைப் போன்றவர்கள் முரண்படுகிறார்கள். அவர்களிடமும் முடிந்தவரை என் நிலைப்பாட்டைச் சொல்லிவிடுகிறேன். ஏற்றுக் கொள்பவர்கள் இன்னும் சற்று தூரம் வந்து பார்க்கிறார்கள். மறுப்பவர்கள் வேறு வழியை பார்த்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். Passing clouds.

மற்றபடி இந்த உலகம் வஞ்சகம், சூழ்ச்சி, பணம், அதிகாரம், பலம் போன்ற பல்வேறு நச்சுகள் நிறைந்தது, எனக்கு சமூகப் பிரக்ஞை இல்லை, அரசியல் பார்வை இல்லை போன்றவற்றை கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி. “நீ வளரணும் தம்பி” என்று எனது முதுகில் தங்களின் சார்பாக தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.