மே 5 ஆம் தேதி கர்நாடகாவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? எனக்கு மட்டுமில்லை இங்கு யாருக்குமே தெரியாது போலிருக்கிறது. அத்தனை அமைதி. பட்டாசு இல்லை, போஸ்டர் இல்லை, ஊர்வலம் இல்லை, தெருமுனைக் கூட்டம் இல்லை, பிரச்சார வாகனங்கள் இல்லை. சுற்றி வளைக்காமல் சொன்னால் ஒன்றுமே இல்லை. கிழவி செத்த வீட்டிலாவது கொஞ்சம் சலசலப்பு இருக்கும். இங்கு அது கூட இல்லை. இன்னும் இருபது நாட்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது என மூன்றாவது மனுஷனிடம் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்தாலும் கூட நம்பமாட்டான்.
நம் ஊரில் தேர்தல் என்பது காலங்காலமாக ஒரு திருவிழாவாகத்தானே இருந்தது? அதை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டிவிட்டார்கள் டி.என்.ஷேசன் அண்ட் கம்பெனியார்.
தேர்தல் காலத்தில் போஸ்டர் அடிக்கும் பிரிண்டிங் பிரஸ்ஸிலிருந்து வீதி வீதியாக ஒட்டும் மனிதர்கள் வரைக்கும் ஒவ்வொருவருக்கும் வருமானம் இருந்தது. ஊர்வலங்களுக்காக கார்களையும், சைக்கிள்களையும் வாடகைக்கு விடும் ஓனர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தார்கள். “போடுங்கம்மா ஓட்டு” என்று கத்திக்கொண்டு உடன் செல்லும் கூட்டத்தினருக்கு அடுத்த ஒரு மாதத்திற்கான உணவும், குவார்ட்டரும், பேட்டாவும் உறுதி செய்யப்பட்டது. சுவர் ஓவியம் எழுதுபவர்களுக்கு பிழைப்பு ஓடியது. பந்தல் போடுபவர்களுக்கு கிராக்கி இருந்தது. மைக் செட் கட்டுபவர்கள், ஆட்டோக்காரர்கள், மாலை விற்பவர்கள், சால்வை நெய்பவர்கள், டியூப்லைட் கட்டுபவர்கள் என ஒவ்வொருவருக்கும் வருமானம் உறுதி செய்யப்பட்டது. பதுக்கி வைக்கப்பட்ட கறுப்புப்பணம் பணமுதலைகளிடமிருந்து உழைப்பாளிகளையும் இல்லாதவர்களையும் அடைந்தது. இந்த பணப்பரிமாற்ற முறைக்குத்தான் கெடுபிடி என்ற பெயரில் ஆப்பு வைத்திருக்கிறார்கள்.
இப்பொழுது தேர்தல் கமிஷன் ஒட்டுமொத்தமாக செலவுகளைக் கட்டுப்படுத்திவிட்டதா? பணப்பரிமாற்றம் முன்பை விட அதிகமாகியிருக்கிறது என்பதுதான் உண்மை. பெரும்பாலான வேட்பாளர்கள் தலைமைக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்துதான் ஸீட்டே வாங்குகிறார்கள். அப்படி ஸீட் வாங்கினாலும் அவர்கள் ஒன்றும் மோசம் போவதில்லை. தேர்தல் செலவுக்கு என பல கோடி ரூபாய்களை பெரிய கட்சிகள் வேட்பாளர்களுக்கு கொடுக்கின்றன. முன்பெல்லாம் கட்சி கொடுத்த தொகை போதாமல் வேட்பாளர்கள் சொந்தக் காசை போட்டு செலவு செய்வார்கள். “ஜெயிச்சா வட்டியோட எடுத்துடலாம்” என்ற பிலாசபி ரோலிங் ஆகிக் கொண்டிருக்கும். இப்பொழுதெல்லாம் அவ்வளவு செலவு செய்ய வேண்டியதில்லை. மூன்று கோடி ரூபாயைக் கட்சி கொடுத்தால் ஒரு கோடி ரூபாயை மட்டும் நூறு அல்லது ஐந்நூறு நோட்டுகளாக மாற்றி வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள். மிச்சமிருக்கும் ஒரு கோடியை வேட்பாளரின் அடிப்பொடிகள் சுருட்டிக் கொண்டாலும் கூட ஒரு கோடி ரூபாயாவது வேட்பாளருக்கு மிச்சம் ஆகிறது. அவ்வளவுதான். வென்றாலும் சரி தோற்றாலும் சரி. நட்டம் இல்லை.
இதுதான் தேர்தல் கமிஷன் செய்திருக்கும் காரியம். பெருமுதலைகளிடமிருக்கும் பெரும்பணம் சிறுமுதலைகளுக்கு மட்டும்தான் செல்கிறது. பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவது மட்டுமே தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளுக்கு காரணமில்லை என்று யாராவது சொன்னால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ராத்திரி முழுக்கவும் தொண்டை கிழிய கத்தி அரசியல்வாதிகள் நம் தூக்கத்தை கெடுப்பதில்லை, நம் முதுகைத் தவிர கிடைக்கும் இடங்களிலெல்லாம் கலர் அடித்து வைப்பதில்லை போன்ற நல்ல விஷயங்களும் தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளால் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் அதற்காக ‘கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி’ என்று மொத்த ஊரையும் மயான அமைதியாக்க வேண்டியதில்லை. பத்து மணிக்கு மேல் பைக்கில் போனாலும் கூட ஏ.கே.47 வைத்திருக்கும் காவலர்கள் நம்மை வழிமறித்து ஜெர்க் ஆக்க வேண்டியதில்லை.
அமெரிக்காவில் அப்படித்தான் இருக்கிறது; ஐரோப்பாவில் இப்படித்தான் இருக்கிறது என்றெல்லாம் யாராவது சொல்லக் கூடும். ஆனால் இதெல்லாம் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதைதான். அங்கு ஒபாமாவையும், ரூம்னியையும் ஒரே மேடையில் அமரவைத்து விவாதம் செய்ய வைக்க முடியும். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மெட்ரோ ட்ரெயினில் பயணிக்கிறார். இங்கு கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஒரே மேடையில் ஏற்ற முடியுமா என்ன? சோனியாவை ட்ரெயினில் பயணிக்கச் சொல்வீர்களா என்ன?
நம் ஊரில் எதெல்லாம் சாத்தியமோ அதை மட்டும்தான் செய்ய வேண்டும். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக ஒட்டுமொத்தமாக வாலைச் சுருட்டுங்கள் என்று தேர்தல் கமிஷன் சொல்வது என்னளவில் டூ மச். அப்படி அதிகாரங்களைச் செயல்படுத்த வேண்டுமானால் தேர்தல் நிதி என்ற பெயரில் கோடிக்கணக்கில் கொடுத்து கட்சிப் பதவி வாங்கும் நபர்களிடம் உண்மையான கணக்கை கேட்பதற்கான வழிவகைகளை உருவாக்க வேண்டும். காசு கொடுத்து தேர்தல் ஸீட் வாங்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும். கட்சிகள் வேட்பாளர்களுக்கு கொடுக்கும் நிதியை முற்றாக தடை செய்ய வேண்டும். தேர்தலுக்கு முந்தின நாள் இரவு பதினோரு மணிக்கு வீடு வீடாக பட்டுவாடா செய்யப்படும் ரூபாய் தாள்களை முழுமையாக தடை செய்ய வேண்டும்.
இதையெல்லாம் படிப்படியாகத்தான் செய்ய முடியும் என்று தேர்தல் கமிஷன் சொன்னால் “கெக்கபிக்கே” என்று சிரிக்கலாம். இதையெல்லாம் இந்தியாவில் தடுக்கவே முடியாது. சத்தியம் கூடச் செய்யலாம். இருக்கும் அதிகாரங்களை வைத்துக் கொண்டு நேரடியாக கண்ணுக்குத் தெரியும் போஸ்டர்கள், கார்கள், கூட்டம் போன்றவற்றை வேண்டுமானால் தடை செய்து அதன் மூலம் வருமானம் பார்த்தவர்களின் வயிற்றில் மண்ணை அள்ளிக் கொட்டலாம். ஆனால் தேர்தல் தில்லாலங்கடிகள் எல்லாக்காலத்திலும் மறைமுகமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதற்கான அத்தனை ஓட்டைகளும் இங்கு இருக்கிறது.
வாழ்க ஜனநாயகம்.