Apr 17, 2013

ஏன் சார் கல்யாணம் பண்ணிக்கல?


“ஆக்கித் திங்கறவனுக்கு பொண்டாட்டி வேண்டாம்; மூட்டை தூக்கறவளுக்கு புருஷன் வேண்டாம்” என்று ஒரு சொலவடை உண்டு. சமையல் செய்யத் தெரிந்தவனுக்கும், மூட்டை தூக்கியாவது பிழைத்துக் கொள்ளும் துணிச்சல் உடையவளுக்கும் திருமணம் அவசியமில்லை என்று அர்த்தம். ‘புள்ள குட்டி’க்கு எல்லாம் திருமணம் அவசியமில்லை என்ற லாஜிக் பேக்ரவுண்டில் இருக்கும் போலிருக்கிறது. அது இருக்கட்டும்.

திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது வரமா? சாபமா என்றெல்லாம் கேட்க போவதில்லை. ஆனால் வேறொரு கேள்வி இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்து திருமணம் செய்து கொள்ளாத மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா? ஒரு செகண்ட் கண்களை மூடி அவர்களை நினைத்து பாருங்கள். இப்பொழுது அவர்களைப் பற்றி சொல்வதற்கான ஒரு கதை நிச்சயம் உங்களிடம் இருக்கும். 

என்னிடமும் ஒரு கதை இருக்கிறது. சுப்பையன் வாத்தியாரைப் பற்றி. எங்கள் பள்ளியில் உதவித் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். 

சுப்பையன் வாத்தியார் குடியிருந்த வள்ளியாம்பாளையத்திலிருந்து எங்கள் பள்ளி ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. வாத்தியார்கள் பைக்கில் வரத் துவங்கிய காலத்திலும் கூட சைக்கிளில் வந்த மிகச் சில ஆசிரியர்களில் ஒருவர். முழுக்கை கதர்ச்சட்டையை முழங்கைக்கு மேலாக சுருட்டிவிட்டிருப்பார். மடித்துவிட்டிருப்பார் என்று சொல்லவில்லை- சுருட்டி விட்டிருப்பார். நெற்றியில் ஒரு சிறிய கட்டி இருக்கும். தலையில் பூசிய எண்ணெய் அந்தக் கட்டி வரைக்கும் வடிந்து நின்றிருக்கும். 

காலையில் எட்டரை மணிக்கெல்லாம் சைக்கிளில் போய்க் கொண்டிருப்பவரை பார்க்க முடியும். பார்க்க மட்டும்தான் முடியும். பிடிக்க முடியாது. அத்தனை வேகத்தில் மிதிப்பார். அவரது சைக்கிள் அரதப்பழசானது. ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. முன்புறமாக யாராவது மெதுவாக போய்க் கொண்டிருந்தால் மணி அடித்துக் கொண்டிருக்கமாட்டார். ஒரு கட் அடித்து தாண்டி போய்க் கொண்டேயிருப்பார். எதற்காக அத்தனை வேகத்தில் செல்கிறார் என்றெல்லாம் தெரியாது. பத்து பதினைந்து நிமிடங்களில் பள்ளியை அடைந்துவிடுவார். அவரை முந்துவதற்காக முயற்சி செய்த எந்தப் பையனுமே வென்றதாக ஞாபகத்தில் இல்லை.

அவரது சைக்கிளின் ஹேண்டில் பாரில் எப்பொழுதும் ஒரு மஞ்சள் நிற துணிப்பை தொங்கிக் கொண்டிருக்கும். அதில் கசங்கிய ஒரு செட் வேட்டி சர்ட்டையும் டிபன் பாக்ஸ் ஒன்றையும் வைத்திருப்பார். சைக்கிளை விட்டு இறங்கியவுடன் ஒரு அறைக்குள் வேகவேகமாகச் சென்று பையில் இருக்கும் வேட்டி சட்டையை உடுத்திக் கொண்டு அதுவரை அணிந்திருந்த சட்டை வேட்டியை அந்தப் பைக்குள் திணித்துக் கொள்வார். இரண்டு செட் உடைகளுமே கசங்கி, சுருட்டித்தான் இருக்கும். ஆனால் எதற்காக மாற்றுகிறார் என்று யாருக்குமே தெரியாது. மாலை பள்ளி முடிந்து போகும் போதும் ஒரு முறை துணியை மாற்றிக் கொள்வார்.

துணியை மாற்றிவிட்டால் அவர் ‘ரவுண்டு’க்குத் தயார் என்று அர்த்தம். அந்த ரவுண்டு செம சுவாரசியமானது. சைக்கிளின் வேகத்திற்கு எந்தவிதத்திலும் சளைக்காதது ரவுண்ட் வேகம். தண்டனையளிப்பதற்காக வெளியே நிற்க வைப்பட்டிருக்கும் அல்லது முட்டி போட வைக்கப்பட்டிருக்கும் வகுப்புகளில் மட்டும் சில வினாடிகள் நிற்பார். ஆசிரியர் விரும்பினால் காது கொடுத்துக் கேட்பார். இல்லையென்றால் சில வினாடிகளில் நடப்பதற்கு ஆரம்பித்துவிடுவார். சில ஆசிரியர்கள் அவர் நகர்ந்த பிறகு பேச முயற்சிப்பார்கள். ஆனால் அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ‘இன்னொரு தடவை பேசிக் கொள்ளலாம்’ என்று விட்டுவிடுவார்கள்.

விளையாட்டு மைதானங்களில் மற்ற வாத்தியார்கள் நம்மை பார்த்துவிட்டால் திட்டுவார்கள் என்ற பயம் மாணவர்களுக்கு இருக்கும். ஆனால் சுப்பையன் வாத்தியார் கிரவுண்டுக்கு வந்தால் படு ஜாலியாக இருக்கும். கில்லி விளையாடினாலும் சரி, பம்பரம் விட்டுக் கொண்டிருந்தாலும் சரி அவர் எதுவுமே சொன்னதில்லை. மீறிச் சொன்னால் “கில்லி விளையாடும் போது கண்ணை பத்திரமா பாத்துக்குங்க” என்ற மாதிரியான அறிவுரைகளாகத்தான் இருக்கும் என்பதால் பையன்களுக்கும் அவர் மீது ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. 

சாஃப்ட் கார்னருக்கு அது மட்டும் காரணமில்லை. அப்பொழுதெல்லாம் பள்ளியில் இருந்து பாதியில் வெளியேற விரும்பினால் உதவித் தலைமையாசிரியர்கள் மூன்று பேர்களில் யாராவது ஒருவரிடம் அனுமதி வாங்க வேண்டும். ஒரு துண்டுச்சீட்டில் பெயரும், வகுப்பும் எழுதிச் சென்றால் ‘வெளியே விடவும்’ என்று எழுதி கையொப்பமிட்டுத் தருவார்கள். மற்ற இரண்டு உதவித் தலைமையாசிரிகளிடம் சென்றால் துருவித் துருவி விசாரிப்பார்கள். திருப்தி வரவில்லையென்றால் மிரட்டி வகுப்பிற்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். ஆனால் சுப்பையன் வாத்தியார் அதையெல்லாம் எதுவுமே கண்டுகொள்ள மாட்டார். அனுமதி கொடுத்துவிடுவார். மதிய உணவுக்கு பிறகு குறைந்தது ஐம்பது பேராவது அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதற்கு நிற்பார்கள். வடிவேலு கணக்காக “விட்டா மடுவுக்கு ஒரு கையெழுத்து கேட்பாங்க போலிருக்கு” என்று அடித்து நொறுக்குவார்.  

மாலையில் பள்ளி முடியும் தறுவாயில் மீண்டும் துணி மாற்றிக் கொண்டு மூன்று கிலோமீட்டர் தாண்டி இருக்கும் ஒரு பேக்கரிக்கு செல்வார். மாலை நேரம் என்பதற்காக சைக்கிளின் வேகம் குறைந்திருக்காது. காலையில் பறந்த அதே வேகத்தில்தான் செல்வார். பேக்கரி, மளிகைக் கடை என்று எதுவாக இருந்தாலும் வெளியே நின்று கேட்க மாட்டார். கடைக்குள் புகுந்துவிடுவார். நேரம் இருக்கும் வரை கடைக்காரருக்கு உதவிகரமாக மற்ற வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை எடுத்துத் தருவது, பொட்டலம் கட்டுவது என்று கொஞ்ச நேரத்துக்கு கலக்குவார். நேரம் ஆனதும் தனக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொண்டு காசையும் வைத்துவிட்டு கிளம்பிவிடுவார்.

தினமும் அந்த பேக்கரியிலிருந்து பிஸ்கட், ரொட்டி பாக்கெட்களை எடுத்துக் கொண்டு சைக்கிளை பேக்கரிக்கு முன்னால் நிறுத்தி பூட்டிவிட்டு பேருந்து பிடித்து வளையபாளையம்,கணக்கம்பாளையம் போன்ற மலையடிவார கிராமங்களுக்குச் சென்றுவிடுவார். அங்கு படிப்பை கைவிட்ட பெண்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதும் அவர்களுக்கான Guidance செய்வதையும் ஒரு சேவையாகவே செய்து கொண்டிருந்தார். அந்தப் பெண்களுக்கு கொடுக்கத்தான் பிஸ்கெட்டும், ரொட்டி பாக்கெட்டும். இரவில் திரும்ப வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு போவார்.

எங்கள் அத்தை மலையடிவார ஊரில்தான் இருந்தார்.‘அந்தப் பெண்ணுக்கு டீச்சர் ட்ரெயினிங் சீட் வாங்கிக் கொடுத்தார், இந்தப் பெண் அவரால்தான் D.Co-op படிப்பை முடித்தாள்’ என்று ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு ‘வெற்றிக் கதையை’ சொல்லாமல் இருந்ததில்லை. ஆனால் இந்தக் கதைகளை வாத்தியார் வெளியில் சொன்னதுமில்லை மற்றவர்களுக்கு தெரிந்ததுமில்லை. 

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சுப்பையன் வாத்தியார் ரிடையர்ட் ஆகிவிட்டார். அனேகமாக எழுபத்தைந்து வயதை நெருங்கியிருக்கக் கூடும். வயதுதான் கூடியிருக்கிறது. ஆள் அப்படியேதான் இருக்கிறார். இன்னமும் அதே சைக்கிளைத்தான் வைத்திருக்கிறார். அதே வேகத்தில்தான் ஓட்டுகிறார். எப்பவாவது பார்க்கும் போது சிரித்துக் கொள்வோம். கடந்த முறை ஊருக்கு சென்றிருந்த போது மூக்கான் மளிகைக்கடையில் பொட்டலம் கட்டிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்து சிரித்த போது “முட்டை வாங்க வந்தேன் சார்” என்றேன். மூக்கானிடம் எனக்கு சீக்கிரம் கட்டித்தரச் சொன்னார். கடையை விட்டு வெளியே வந்து வேலை பற்றியெல்லாம் விசாரித்தார். நானும் விவரித்துக் கொண்டிருந்தேன். 

அவரிடம் இதுவரை கேட்டதேயில்லை. கேட்டுவிடலாம் என்று தோன்றியது.  

“ஒரு கேள்வி சார்...தப்பா எடுத்துக்காதீங்க” என்றேன். 

“கேளுப்பா” என்றார். 

“ஏன் நீங்க கல்யாணமே பண்ணிக்கல?” கேட்டே விட்டேன்.

ஒரு வினாடி அமைதியாக இருந்தார். தோள் மீது கை போட்டு “ஏன்?  ஏதாச்சும் பொண்ணு பாத்திருக்கியா? பேண்ட் போட்ட புள்ளையா?” என்று கேட்டுவிட்டு கெக்கேபிக்கே என்று சிரித்தார். 

அதற்கு மேல் அவரிடம் என்ன கேட்பது?  “நீங்க உம்ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க..தூள் கெளப்பிடலாம்” என்றேன். 

இரண்டு பேருமே  சிரித்துக் கொண்டோம். 

அந்தக் கேள்வி மட்டும் பதில் இல்லாமல் இருவருக்குமிடையில் அலைந்து கொண்டிருந்தது.