பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்கள் வீட்டில் புறா ஒன்று இருந்தது. சாம்பல் நிறப் புறாவின் கழுத்தில் மட்டும் மினுமினுக்கும் பச்சை இருந்தது. அந்தப் புறாவை சொந்த்தக்காரர் ஒருவர் வீட்டில் இருந்து பிடித்து வந்திருந்தேன். அப்பொழுது அது பறக்க முடியாத குஞ்சுப் புறாவாக இருந்தது. புறா எந்நேரமும் “ங்கொட்றய்க்...ங்கொட்றய்க்” என்று கத்திக் கொண்டே இருக்கும் என்பதால் அந்தச் சத்தம் அபசகுணம் என்று அப்பா எதிர்ப்பு தெரிவித்தார். அபசகுணம் என்பதை விடவும் அதை அநியாயத்திற்கு கொன்றுவிடுவேன் என்று அப்பா எதிர்த்தார்.
அப்பா எதிர்த்ததிலும் அர்த்தம் இருக்கிறது. இதற்கு சில வருடங்களுக்கு முன்பாக பறக்க முடியாத சிட்டுக்குருவி குஞ்சுகளை தாய்க்குருவியிடம் திருடி வந்து வீட்டில் வைத்திருந்தேன். அடுத்த இரண்டு நாட்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பத்திரமாக பார்த்துக் கொள்ள முடிந்தது. ஆனால் மூன்றாவது நாளான திங்கட்கிழமை அந்தக் குஞ்சுகளை வீட்டின் மூலையில் வைத்துவிட்டு பள்ளிக்குச் சென்றுவிட்டேன். வந்து பார்த்த போது எறும்புகள் மொய்த்து அந்தக் குஞ்சுகளை கொன்றிருந்தன. அதை மனதில் வைத்துதான் அப்பா எதிர்த்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி வீட்டின் ஒரு மூலையில் வைத்துக் கொள்வதாக அனுமதி வாங்கினேன். நீண்ட மறுப்புக்கு பின்பு வேண்டா வெறுப்பாக சரி என்றார். சந்தோஷமாக இருந்தது என்றாலும் பயமாகவும் இருந்தது. இந்தப் புறா இறந்துவிட்டால் வீட்டில் எதையுமே அனுமதிக்க மாட்டார் என்று தெரியும். அதனால் அதீத கவனம் எடுத்துக் கொண்டேன். புறாவும் எனக்கு பெரிய சிரமம் வைக்கவில்லை. நன்றாகவே வளர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புறா இருக்கும் இடத்தில் நாற்றம் வீசுகிறது எனவும், இந்த நாற்றத்திற்கு பாம்பு கூட வந்துவிடும் என்று அம்மா பயமூட்டுவார். கர்மசிரத்தையாக கழுவிவிட்டாலும் அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் நாற்றமடிக்க ஆரம்பித்துவிடும்.
கொஞ்சம் பழகிய பிறகு புறா கூண்டுக்குள்ளிருந்து வெளியே வந்து சுற்ற ஆரம்பித்தது. முதன் முதலாக அது வீட்டை விட்டு பறந்து போன போது பதட்டமாக இருந்தது. திரும்பி வராமல் போய்விடக் கூடும் என பயந்து கொண்டிருந்தேன். ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை. அதன் பிறகு எனக்கான வேலை வெகுவாக குறைந்துவிட்டது. காலையில் ஊர் சுற்றக் கிளம்பினால் மாலைதான் வீடு சேரும். அதுவாக கூண்டுக்குள் சென்றவுடன் மூடி வைத்தால் போதும். செம ஈஸி.
எங்கள் ஆயாவுக்கு புறாவை பற்றி கொஞ்சம் தெரிந்திருக்கக் கூடும் என நினைக்கிறேன். இந்த ஒற்றைப் புறா வேறு ஏதேனும் புறாவை துணையாக அழைத்து வந்துவிடும் என்றார். படு உற்சாகமாகிவிட்டேன். வீட்டில் நிறைய புறாக்கள் சேர்ந்துவிடும் என்ற மிதப்பில் திரிந்தேன். தினமும் ஏதாவது புதுப் புறா வந்திருக்கிறதா எனப் பார்ப்பது வழக்கமாகியிருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பகலில் சில புறாக்கள் வீட்டு மீது வந்து அமரும் ஆனால் இரவில் எதுவும் வரவில்லை.
இதையே எத்தனை நாட்களுக்குத்தான் பார்த்துக் கொண்டிருப்பது? ‘த்ரில்’ காட்ட வேண்டும் என புறா விரும்பியிருக்கக் கூடும். ஒரு அசுபயோக தினத்தில் எங்கள் புறா கம்பி நீட்டிவிட்டது. இரவு எத்தனை நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. கிட்டத்தட்ட அழத் துவங்கியிருந்தேன். ஆயாவிடம்தான் ஆலோசனை கேட்டேன். “கூட்டிட்டு வர்றதுக்கு பதிலா ஓடி போயிடுச்சா” என்று பொக்கை வாயில் சிரித்தார். செமக் கடுப்பாக இருந்தது. “லொள்ளு புடிச்ச கிழவி சிரிக்குது பாரு” என்று மனதுக்குள் திட்டிவிட்டு வீதி வீதியாக ஓடினேன். நாய் பூனை என்றால் வீதிகளில் திரிய வாய்ப்பிருக்கிறது. புறாவை எங்கே தேடுவது? எந்தப் பயனுமில்லை.
நான்கைந்து நாட்களாகியும் புறா திரும்பவேயில்லை. அவ்வளவுதான் என்று நினைத்த போது காலேஜ்காரர் வீட்டில் சில புறாக்களோடு சுற்றுவதை ஆயா மோப்பம் பிடித்துவிட்டார். காலேஜ்காரர் என்றால் ஓனரெல்லாம் இல்லை- கல்லூரியில் ஏதோ அலுவலகப் பணியாளர். அவரின் மனைவியிடம் புறாவைப் பற்றி கேட்பதற்காக அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன். வெகுநேரமாகியும் கதவைத் திறக்கவேயில்லை. திரும்பிவிடலாம் என்று நினைத்த போது கதவு திறக்கப்பட்டது. அந்தப் பெண்மணி ஆடைகளை சரி செய்து கொண்டிருந்தார்.
“எங்கள் புறா இங்கே வருதுங்களா?” என்றேன்
என் மீது மிகுந்த கடுப்பானவராக “அதெல்லாம் ஒன்றுமில்லை” என்று சொல்லிவிட்டு கதவைச் சாத்திக் கொண்டார். நேரங்கெட்ட வேளையில் நான் அவரை தொந்தரவு செய்திருக்கக் கூடும். அதன் பிறகு ஓரிரு முறை அந்தப் புறாவை அவரது வீட்டில் பார்த்திருக்கிறேன். எவ்வளவு கெஞ்சியும் அந்தப் புறா என்னைத் திரும்பிப் பார்க்கவேயில்லை.புறாவை கிட்டத்தட்ட மறந்திருந்தேன்.
ஓரிரு வாரங்களுக்குப் பிறகு பள்ளி முடித்து வந்த போது இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. புறாவை கூண்டுக்குள் பார்த்தேன். மதிய நேரத்தில் வீட்டிற்கு வந்த புறா அதன் பழைய கூண்டுக்குள் சென்றதாகவும் அதை மூடி வைத்துவிட்டதாகவும் ஆயா பொக்கை வாயில் சிரித்தார். ஆனால் இப்பொழுது அவர் மீது பிரியம்தான் வந்தது.
முதல் வேலையாக இருவரும் அடுத்த கட்ட சதி வேலையில் ஈடுபட்டோம். புறாவின் இறகுகளை பிடுங்கிவிடுவது என்று ஆயா முடிவு செய்தார். கூண்டைத் திறந்து புறாவை நான் பிடித்துக் கொள்ள ஆயா ஒவ்வொரு இறகாக பிடித்து இழுத்தார். புறாவின் இதயத்துடிப்பை வேகமாகிக் கொண்டிருந்தது. இறக்கையில் இருந்த அதன் இறகுகளை மொத்தமாக பிடுங்கியவுடன் புறாவை கீழே விட்டேன். அது பறக்க முடியாமல் அங்கும் இங்குமாக ஓடியது. ஆனால் அதைத் துரத்தி பிடிப்பதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. இனி புறாவால் எங்கும் ஓட முடியாது என்பது நிம்மதியாக இருந்தது.
அடுத்த சில நாட்களுக்கு புறா இப்படியேதான் சுற்றிக் கொண்டிருந்தது. காலாண்டுத் தேர்வெல்லாம் முடிந்து வகுப்புகள் ஆரம்பித்திருந்தன. பள்ளி, டியூசன் முடித்து வருவதற்கு தினமும் இரவும் எட்டு மணி ஆகிவிடும். அன்றும் வழக்கம் போல வந்த போது ஆயா திண்ணையில் அமர்ந்திருந்தார். அம்மா சமையலறையில் இருந்தார். கை கால் கழுவிவிட்டு சாப்பிட வரச் சொன்னார். இட்லியும் கறிக்குழம்புமாக மனம் தூள் கிளப்பியது.
தின்று முடித்த பிறகு புறாவின் ஞாபகம் வந்தது. ஓடிப் பார்த்த போது அங்கு புறா இல்லை. ஆயாவிடம் கேட்டேன்.
“நாக்கை சப்புக் கொட்டிட்டு திங்கும்போது தெரியலையா?” என்று சிரித்தார். தூக்கி வாரிப்போட்டது.
“அது கோழி இல்லையா?” என்று கேட்டுவிட்டு “என் புறாவை ஏன் கொன்னீங்க” என்று சண்டையைத் துவக்கினேன்.
“சரசாயா அத்தையோட நாய் கொன்னு போடுச்சு” என்றார். நான் நம்பவில்லை. நாய் பிடித்த இடம் என்று ஒன்றைக் காட்டினார்கள். ரத்தக்கறை இருந்தது. பாவமாக இருந்தது. அந்த நாயைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என முடிவு செய்து கொண்டேன். இருந்தாலும் அதை தின்றிருக்கக் கூடாது என்று தோன்றியது. தொண்டைக்குள் விரலை விட்டு வாந்தியெடுக்க முயன்று கொண்டிருந்தேன்.
அம்மா திட்டினார். வாந்தியெடுத்தால் அடி விழக் கூடும் என்று தோன்றியது. வாந்தியெடுக்கும் முயற்சியைக் கைவிட்டு படுக்கையில் குப்புற விழுந்து தூங்கிப் போனேன். அன்றைய தினம் கனவு முழுவதும் கலர் கலரான புறாக்களாக ஆக்கிரமித்தன. அவ்வளவுதான். புறாவுக்கும் எனக்குமான தொடர்பு அதோடு முடிந்து போனது.