Apr 3, 2013

ஒரு திகிலான இண்டர்வியூ


பெரிய அறை. 

‘குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும்’ என்ற உவமையைக் கேட்டு கேட்டு உங்களுக்கு சலித்து போயிருக்கலாம். ஆனால் அப்படியான நிசப்தம்தான் அந்த அறை முழுவதும் நிரம்பியிருக்கிறது. அறையின் அடுத்த மூலையில் இரண்டு பெண்கள் மட்டும் அமர்ந்திருக்கிறார்கள்.  “Yes” என்கிறார்கள். மந்திரித்துவிட்டதைப் போல நாங்கள் இரண்டு பேரும் அவர்களை நோக்கி மெதுவாக நடக்கிறோம். நாங்கள் என்றால் நானும் மகியும். என்னை சற்று தூரமாக அமரச் சொல்லிவிட்டு மகியை அவர்களுக்கு முன்பாக அமரச் சொல்கிறார்கள். அவனது கண்களில் குழந்தமையை மீறிய மிரட்சி தெரிகிறது. 

புன்முறுவலுக்கு பிறகு கேள்விகளை ஆரம்பிக்கிறார்கள். 

ஒரு இண்டர்வியூ ஆரம்பமாகிறது.

                                                                         ***

மகி- இந்தப் பெயருக்கான காரணத்தை முன்பே சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனது பெயரின் முதல் எழுத்தான ‘ம’வையும் மனைவி பெயரின் முதலெழுத்தான் ‘கி’யையும் இணைத்து வைத்த பெயர்- மகி நந்தன். மூன்றரை வயதாகிறது. எல்லா குழந்தைகளையும் போலவே அவனுக்கும் சில திறமைகள் இருக்கிறது. எல்லா குழந்தைகளையும் போலவே அவனிடமும் ஏகப்பட்ட குறும்புகள் இருக்கிறது. 

இத்தனை நாட்களாக ஒரு ‘ப்ளே குரூப்’ பள்ளிக்குச் சென்று வந்தான். அந்தப் பள்ளியில் யூ.கே.ஜி வரையிலும்தான் இருக்கிறது. அதற்கு பிறகு ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு வேறொரு பள்ளிக்குதான் அனுப்ப வேண்டியிருக்கும்.

வேறொரு நல்ல பள்ளியில் நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டுமானால் ஒரு லட்சம் வரைக்கும் நன்கொடை தர வேண்டும் என்று பயமுறுத்தினார்கள். அதற்கு பதிலாக எல்.கே.ஜியிலேயே சேர்த்துவிட்டால் குறைவான நன்கொடையில் தப்பித்துவிடலாம் என்றார்கள். அதுவும் நல்ல ஐடியாவாக இருந்தது. இதன் பிறகுதான் எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்ற குழப்பம் வந்தது. அடுத்த பத்து பதினைந்து நாட்களுக்கு பொழுது சாய்ந்து பொழுது எழுந்தால் பிரம்மஹத்தி தோஷம் போல இதுதான் என்னை விட்டு அகலாத நினைப்பாக இருக்கும்.

ஆசை யாரை விடும்? சரளா பிர்லா அகடமியில் ஆரம்பித்து கர்நாடக அரசின் கவர்மெண்ட் பள்ளிகள் வரை ஒவ்வொரு பள்ளியாக ஏறி இறங்கினேன். சரளா பிர்லாவில் வருடம் ஐந்தரை லட்சம் வரைக்கும் ஃபீஸ் வரும் என்றார்கள். “இந்த ஸ்கூலில் வாஸ்து சரியில்லை” என்று ஒரே ஓட்டம்தான். வேறொரு பள்ளியில் ஒரு லட்சம் நன்கொடை கேட்டார்கள். “அந்தப் பள்ளியில் வாசற்படி சரியில்லை” என்று தப்பித்துவிட்டேன். சுற்றுவட்டாரத்தில் கால் படாத பள்ளிகளே இல்லை என்ற நிலைமைக்கு பிறகு வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கும் ஒரு பள்ளியில் சேர்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தோம். மாட்டுச் சந்தையில் கைகளின் மீது துணியைப் போட்டு பேரம் பேசுவது போல பேசி எனக்கும் அவர்களுக்கும் ஒத்து வரக் கூடிய ஒரு நன்கொடைக்கு சம்மதம் சொல்லி டோக்கன் அட்வான்ஸாக ரூ.10001 ஐ கொடுத்து அட்மிஷனும் போட்டு வைத்துவிட்டேன். இது நடந்து கிட்டத்தட்ட ஐந்தாறு மாதங்கள் இருக்கும்.

அதன் பிறகு இரண்டு இன்ஸ்டால்மெண்டில் கொஞ்சம் ஃபீஸூம் கட்டியாகிவிட்டது. இதெல்லாம் முடிந்து இத்தனை நாட்களுக்கு பிறகாக ‘உங்கள் மகனுக்கு பள்ளியில் இண்டர்வியூ இருக்கிறது வாருங்கள்’ என்று எஸ்.எம்.எஸ் அனுப்பினால் வயிற்றில் புளி கரையுமா? கரையாதா?

கரைந்த புளியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நானும் மகியும் பள்ளிக்குள் போன போது பார்த்ததுதான் முதல் பத்தி.
                               
                                                                              ****

What is your name?

I Makinandhan

What is your father's name?

My appa Manikandan

How old are you?

----------

How old are you?

“உன் வயசு என்னன்னு கேட்கிறாங்க தங்கம்” என்று நான் மொழிபெயர்க்க, அந்த அம்மையார்களில் ஒருவர் என் முழியை பெயர்ப்பது போல முறைத்தார்

மூணு.
                                                                         ****

பையன் ஆங்கிலத்தில் சிரமப்படுகிறான் என்றார்கள்.  

“நாங்கள் வீட்டில் தமிழில்தான் பேசுவோம்” என்றேன். 

“மாற்றிக் கொள்ளுங்கள்” என்றார். 

வேறு வழி? “ஸ்யூர் மேடம்”

இதுவரை மூன்று கேள்விகள்தான் கேட்டிருக்கிறார்கள். மூன்றுக்குமே அரைகுறையாகத்தான் பதில் சொல்லியிருக்கிறான். அட்மிஷன் இல்லையென்று சொல்லிவிடுவார்களோ என்று பயமாக இருந்தது. அட்மிஷன் இல்லையென்று முன்பே சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஏதாவதொரு பள்ளியில் இடம் பிடித்துவிடலாம். கடைசி வரைக்கும் எதுவுமே சொல்லாமல் மார்ச் மாதத்தில் அட்மிஷன் இல்லை என்று சொல்லிவிட்டால் எங்கு போய் இடம் பிடிப்பது என்பதை யோசிக்கவே திகிலாக இருந்தது. ஒருவேளை டொனேஷன் தொகையை அதிகரிப்பதற்காக ஏதோ தகிடுதத்தம் செய்கிறார்களோ என்றெல்லாம் கற்பனைக் குதிரை தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது.

குதிரையை இழுத்து பிடித்து அறைக்குள் கொண்டு வந்து “இதெல்லாம் எதற்காக கேட்கிறீர்கள்” என்றேன். 

“சும்மா ஒரு ஃபார்மாலிட்டி. ஸ்டூடண்ட்ஸ் எப்படின்னு தெரிஞ்சுக்கிறது” என்றார். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.

அதை வகுப்பு ஆரம்பித்த முதல் நாளில் தெரிந்து கொள்ளலாமே என்று தொண்டைக்குழிக்குள் குதித்த வார்த்தைகளை கஷ்டப்பட்டு விழுங்கிக் கொள்ள வேண்டியதாக இருந்தது.
                                       
                                                                *****

“மகிக்கு வேறு என்ன தெரியும்?” என்றார். “வேறு ஏதாச்சுமாவது தெரியுமா?” என்ற தொனியில் அதை புரிந்து கொண்டேன். 

“தலைநகரங்களைக் கேளுங்கள்”

“Capital of Karnataka"

Bangalore

"Capital of Bihar"

Patna

"Capital of United Kingdom"

London

எனக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. டீச்சர்களுக்கும்தான். “வெரிகுட்” என்றார்கள்.

நீங்கள் கிளம்பலாம் என்றார்கள்

அப்பாடா என்றிருந்தது. 

ஆனால் மகி எப்பவும் போலத்தான் இருந்தான்.
                      
                                                              *****

வெளியே வந்த போது மழை கொட்டிக் கொண்டிருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு மழையை பார்த்தேன். தேன் இல்லை தோம்- பார்த்தோம். பெங்களூர்வாசிகள் மழையைப் பார்த்து ஒரு வருடமே இருக்கும். இந்த ஊர் அநியாயத்திற்கு காய்ந்து விட்டது. பக்கத்தில் இருக்கும் பெரிய ஏரிகள் கூட வெடித்து பிளந்து கிடக்கின்றன. மகிக்கு நினைவு தெரிந்து முதன் முதலாக மழையைப் பார்க்கிறான். படு உற்சாகமாகிவிட்டான். 

“அப்பா ஒரு குளி குளிச்சுட்டு போய்டலாமா?”

“மழையில் குளிச்சா சளி பிடிச்சுக்குண்டா”

“அஞ்சு நிமிஷம் மட்டும்”

“ஓகே. ஆனா அம்மாகிட்ட சொல்லிடாத”

“நீங்க சொல்லிடாதீங்க” - சொன்னபடியே குதிக்க ஆரம்பித்துவிட்டான். 

இரண்டு பேரும் நனைந்து கொண்டிருக்கிறோம். இந்த பருவத்தின் முதல் மழை இது. இருவருக்குமே சளி பிடிக்கக் கூடும். நாளைக்கு என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். இந்த நொடி சந்தோஷமாக இருக்கிறது. அது போதும்.