Apr 2, 2013

அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்


கணேஷூக்கு என்னாச்சு என சிலர் கேட்டிருக்கிறார்கள். எதிர்வீட்டு பில்டரிடம் விசாரிக்க வேண்டியிருந்தது.  கணேஷை அவனது சொந்த ஊருக்கே அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்று சொன்னார். அங்கு வைத்தே சிகிச்சை செய்துகொள்வதாக முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. வேறு தகவல்கள் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

பாலு, பத்மபிரியா ஆகிய இருவரும் கணேஷூக்காக பணம் வசூல் செய்யலாமே என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். தூக்கிவாரிப் போட்டது. இதே போன்று  ‘முஸ்லீம்ஸ் ஏமாத்திடுவாங்க’ கட்டுரை எழுதிய போதும் நியாமத்துக்காக பணம் வசூல் செய்யலாமே என சிலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். பந்தாவாக ‘இது போன்ற செயல்கள் எனக்கு ஒத்துவராது’ என்று சொல்லிவிடலாம். 

உண்மையைச் சொன்னால் பணம் கேட்பதற்கான முகராசி எனக்கு இல்லை. யார் கேட்டாலும் மற்றவர்கள் பணம் கொடுத்துவிடுவார்கள் என்று நம்புவது மடத்தனம். கோயில் தெருவில் கூட ஐந்து பிச்சைக்காரர்கள் இருந்தால் யாரோ ஒருவருக்குத்தான் அதிகமாக பணம் சேரும். பிச்சையை விடுங்கள். பதினெட்டு சதவீதம் வட்டி கட்டுவதற்கு தயாராக இருந்தாலும் கூட இரண்டு லட்ச ரூபாய் பெர்சனல் லோன் வாங்குவது எல்லோருக்கும் சாத்தியமானதில்லை.

ஓரிரு வருடங்களுக்கு முன்பாக பிரவீண் என்ற சிறுவன் கிட்னி பெயிலியரால் அவதிப்பட்டான். எங்கள் ஊரைச் சார்ந்தவன்தான். அவரது அப்பாவுக்கும் பெரிய வேலை எதுவும் இல்லை. எலெக்ட்ரீசியனாகவும், ப்ளம்பராகவும் கிடைத்த வேலையைச் செய்து கொண்டிருப்பார். இந்த வருமானத்தை வைத்துக் கொண்டு டயாலிசிஸிக்காக மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக பல லட்ச ரூபாய் தேவைப்படும் என்று சொன்னார்கள். அப்பொழுதும் இதே நிசப்தத்தில் எழுதிய போது நூறு ரூபாய் கூட சேர்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை. நண்பர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பி கொஞ்சம் தேற்றிய போது அது ஒரு சில டயாலிசிஸூக்கு தேவையான அளவுக்குத்தான் இருந்தது. முதலில் மாதம் ஒரு டயாலிசிஸ் என்று செய்தார்கள் பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அதன் பிறகு வாரம் ஒரு டயாலிசிஸ் என்று காலத்தின் அளவு குறைந்து கொண்டே வந்து மொத்தமாக அவனை காலன் வாரிக்கொண்டுவிட்டான்.

இன்னொரு சமயம் மு.ஹரிகிருஷ்ணன் தான் ஆரம்பிக்கவிருக்கும் கூத்துப் பள்ளிக்காக உதவி கோரி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.  அவரும் வசதியான மனிதர் இல்லை. ஜிண்டால் இரும்புத்தொழிற்சாலையில் தினக் கூலியாக இருக்கிறார். அவரது அப்பா ஒரு கூத்துக் கலைஞர். குடும்பம் வேலை என அத்தனை சிரமங்களுக்கும் இடையில் இந்த பள்ளிக்காக அலைந்து கொண்டிருக்கிறார். அவருக்காக சிறு தொகை சேர்க்க இயலும் என்று நம்பி நிசப்தத்தில் எழுதிய போதும் பிரவீனுக்கு கிடைத்த அதே பலன்தான் கிடைத்தது. 

அதோடு சரி. பணம் கேட்பதை நிறுத்திக் கொள்வதுதான் உசிதம் என்று முடிவு செய்துவிட்டேன். 

இதை புலம்பலாகவோ அல்லது புகாராகவோ எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இதுதான் நிதர்சனம். இதுதான் எதிர்பார்த்தது. பொதுவெளியில் பணம் கேட்பதற்கு Credibility என்பது மிக அவசியம். அதைத்தான் முகராசி என்று எழுதியிருந்தேன். அதை அவ்வளவு சீக்கிரமாக அடைந்துவிட முடியாது. நம்மால் முடிந்தால் உதவி செய்ய வேண்டும். முடியாவிட்டால் அமைதியாக இருந்து கொள்வதுதான் நல்லது. 

புத்தகம் எழுதினால் என்ன வருமானம் வரும் என்று கேட்கும் நண்பர்கள்தான் எனக்கு இருக்கிறார்கள். கவிதை பிரசுரமானதற்கு எத்தனை ரூபாய் பணம் அனுப்பினார்கள் என்று கேட்பவர்கள்தான் சுற்றி இருக்கிறார்கள். எல்லாவற்றிற்குமான valuationஐயும் பணத்தின் வழியாகவே செய்வது வழக்கமாகிவிட்டது. தவறென்று எதுவும் இல்லை.

வாழ்க்கையை நாம் Materialistic ஆக வாழப் பழகிக் கொண்டோம். வாழ்க்கையையும் உழைப்பையும் பணமாகவோ, பொருளாகவோ அல்லது சொத்தாகவோ Convert செய்து கொள்வதற்கான சூத்திரத்தை தேடுவதுதான் நமது ஆதாரப்புள்ளியாகியிருக்கிறது.

கவிஞர்கள் வசுமித்ரவும், மனோ.மோகனும் சேர்ந்து ஒரு நல்ல காரியத்திற்காக பணம் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். ஐந்தாயிரம் ரூபாயாவது கொடுத்துவிட முடியும் என்று உறுதியளித்திருந்தேன். குறைந்தபட்சமாக கல்கியில் ரோபோடிக்ஸ் தொடர் எழுதியதற்காக வரும் வருமானத்தையாவது கொடுத்துவிடுகிறேன் என்றும் சொல்லியிருந்தேன். ம்ஹூம்.  பிறகு அவர்களும் கேட்கவில்லை. நானும் கொடுக்கவில்லை.  ‘வீடு கட்டுவதில் ரொம்ப சிரமம் வந்து சேர்ந்துவிட்டது’ என்று எனக்கு நானே Justification கொடுத்துக் கொண்டேன்.

அவ்வளவுதான்.