Apr 20, 2013

சென்னையில் ஒரு அப்பாடக்கர்


சென்னை வர வேண்டியிருந்தது. ஒரு மணி நேரத்து வேலைதான். இரண்டு பேர்களைப் பார்க்க வேண்டும். இரண்டு பேரும் வானகரம் பக்கத்திலுள்ள அயனம்பாக்கத்தில் ஒரே அலுவலகத்தில்தான் இருக்கிறார்கள். இரண்டு பேரில் முதலாமவரை காலை பத்து மணிக்கு பார்ப்பதாகத் திட்டம். 

அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் கோயம்பேட்டில் இறங்கியாகிவிட்டது. முன்பெல்லாம் சென்னை வரும் போது நண்பர்களின் அறைக்கு போய்விடுவேன். இப்பொழுது எல்லோருக்கும் என்னைப் போலவே கழுதை வயதாவதால் கல்யாணம் கட்டி புள்ளை குட்டிகளோடு சந்தோஷமாகவோ துக்கமாகவோ இருக்கிறார்கள். அந்நேரத்தில் கதவைத் தட்டி கொடுமைப்படுத்த வேண்டியதில்லை என வாடகை அறை எடுத்துக் கொள்வது வாடிக்கையாகிருக்கிறது. 

தி.நகர் ரத்னா கஃபே விடுதியில் நூற்றைம்பது ரூபாய் கொடுத்தால் குளிப்பதற்காக ஏ.சி.ரூம் கொடுக்கிறார்கள். ஆனால் முக்கால் மணி நேரத்தில் வெளியேறி விட வேண்டும். அவ்வளவுதான் டைம் லிமிட். அங்கிருந்து 27 சி பேருந்தைப் பிடித்தால் நேராக வானகரத்தில் இறங்கிக் கொள்ளலாம். இட்லியையும் குடல்கறியையும் ஒரு கடையில் முழுங்கிவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் அயனம்பாக்கம் வந்து சேர்ந்துவிட்டேன்.

நம் ஆட்களைப் பற்றித்தான் தெரியுமே! பத்து மணிக்கு பார்க்கச் சொன்ன மாமனிதர் பன்னிரெண்டு மணிக்கு பார்த்தார். தூக்கம் கெட்டால் ஹார்மோன்கள் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. இதில் இரண்டு மணி நேரம் காக்க வைத்து வேறு கடுப்பேற்றியிருக்கிறார்கள். எல்லாம் சேர்த்து ஏதாவது எகிறிவிடுவேனோ என்று தயங்கித் தயங்கியே பேசிக் கொண்டிருந்தேன். அப்படியாக எதுவும் நடக்கவில்லை. அவர் பேசி முடித்துவிட்டு அடுத்த மனிதரை மாலை நான்கு மணிக்குத்தான் சந்திக்க முடியும் என்றார். அவர் அவ்வளவு பிஸிஸிஸியாம். 

இந்தியாவில் மட்டும்தான் இப்படியெல்லாம் அழிச்சாட்டியம் செய்வார்கள். பெங்களூரில் இருந்து வந்தாலும் சரி பெர்லினில் இருந்து வந்தாலும் சரி, அவனைக் காக்க வைத்துத்தான் தனது கெத்தை காட்டுவார்கள். இரண்டு பேரும் ஒரே இடத்தில்தான் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் காலை பதினோரு மணிக்கு என்னை அனுப்பி விட்டிருக்க முடியும். ம்ஹூம். தொலையட்டும்.

எனக்கு சென்னை வருவதென்றால் உற்சாகம் பீறிட்டுவிடும். பேருந்து நிலையத்திலேயே ஆட்டோக்காரர்கள் ஏமாற்றினாலும், வெயில் வகைதொகையில்லாமல் கருக்கினாலும், நான்கு மரங்களை மட்டும் வரிசையாக நட்டி வைத்துவிட்டு மனசாட்சியே இல்லாமல் ‘வனத்துறை’ என்று பந்தாவாக எழுதி வைத்திருந்தாலும், மேம்பாலங்களுக்குக் கீழே குப்பைகள் நிரம்பிக் கிடந்தாலும், அந்தக் குப்பைகளுக்குள்ளேயே நாய்களோடு மனிதர்கள் படுத்திருந்தாலும் இந்த ஊர்தான் எனக்கு சர்க்கரைக் கட்டி. 

ஆனால் திருமணத்திற்கு பிறகு சென்னை வருவது அருகிப் போய்விட்டது. “சென்னை போகிறேன்” என்று வாயெடுத்தாலே “எதுக்குகுகுகு?” என்று அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு இழுக்கிறார்கள். அந்த இழுவையை நிறுத்துவதற்கு போதும் போதும் என்றாகிவிடுவதால் இப்பொழுதெல்லாம் கேட்பதேயில்லை. ஏதாவது ஒரு காரணம் வசமாகச் சிக்கினால் மட்டுமே ஏமாற்றிவிட்டு வர முடிகிறது. இப்படித்தான் சென்ற முறை ஏதோ காரணம் சொல்லி ஏமாற்றிவிட்டு வந்திருந்தேன்.

வெள்ளிக்கிழமை இரவில் பேருந்து பிடித்து சனிக்கிழமை காலையில் இந்த மண்ணை மிதித்து அதே ரத்னா கஃபேயில் அறை எடுத்து தங்கியிருந்த போது சனிக்கிழமை மாலையிலேயே “பையனுக்கு லைட்டா காய்ச்சல். ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் உன்னை கேட்டுட்டே இருக்கான்” என்று போனில் சொன்னார்கள். யார் என்னைக் கேட்டிருந்தாலும் அவ்வளவு சீக்கிரமாக போயிருக்க மாட்டேன். அதுவே பையன் கேட்டால் இதைவிட மெதுவாக போக மாட்டேன்.

அடித்துப் பிடித்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் போய் கதவைத் தட்டினால் சர்வசாதாரணமாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். தொட்டிலை விலக்கி அவன் முகத்தை பார்த்து “ரொம்பக் கேட்டானா?” என்றால், “ஆமா ரெண்டு தடவ கேட்டான்” என்று அசால்ட்டாகச் சொன்னார்கள். “ஜஸ்ட் ரெண்டு தடவைதானா?” என்று கேட்டு முடிப்பதற்கு அவளும் தூங்கிவிட்டாள்.  வெறும் இரண்டு தடவை அவன் கேட்டதற்காக என் சென்னை பயணத்திட்டத்தில் மண் அள்ளிப் போட்டுவிட்டார்கள். அதன் பிறகு ஏமாற்றுவதற்கான நல்ல தருணத்திற்காக காத்திருந்தேன். பல மாதங்களுக்கு பிறகாக இப்பொழுது வாய்த்திருக்கிறது. அதுவும் சென்னையில் இப்பொழுது புத்தகக் கண்காட்சி வேறு நடக்கிறது. 

படு உற்சாகமாக கிளம்பியிருந்தேன். வரும் போதே “உடான்ஸ் போன் எல்லாம் செய்ய வேண்டாம்” என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கும் செருப்புத் தேயும் வரை சுற்றிவிட வேண்டும் என கனவு கண்டிருந்தேன். நேற்றிரவு பேருந்தில் வரும் போது ஜன்னல் கம்பியில் இடித்து முன் மண்டை புடைத்துக் கிடக்கிறது. சென்னை மட்டும்தான் நினைப்பில் இருப்பதால் அதெல்லாம் பிரச்சினையாகவே தெரியவில்லை. இரண்டு முறை தேய்த்துக் கொண்டால் சரியாகிவிடும். 

வானகரத்தில் இருக்கும் வானரங்கள்தான் காய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது கூட “நான்கு மணிக்குத்தான் பார்க்க முடியுமா? முன்னாடியே பார்க்க முடியாதா?” என்று கேட்டேன். மெயில் அனுப்பியிருக்கிறோம். பதிலை பார்த்துவிட்டுச் சொல்கிறோம் என்றார்கள். ஒரே கட்டடத்தில் இருந்தாலும் கூட நேரில் கேட்க முடியாதாம். ஏற்கனவே சொன்ன “அவ்ளோ பிஸிஸிஸி”யாம். பசிக்க ஆரம்பித்திருக்கிறது. அப்பாடக்கர்களிடம் நம்மை அப்பாடக்கராக நிரூபிக்கும் தருணங்கள் சுவாரசியமானவை. அப்படியான ஒரு தருணத்திற்காக காத்திருக்கிறேன்.