Apr 4, 2013

வாத்தியார்


எம்.டெக் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது விவேகானந்த சண்முகநாதன் என்னும் பேராசிரியர் எங்கள் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்திருந்தார். ரோபோடிக் குறித்தான பி.ஹெச்.டியை மும்பை ஐ.ஐ.டியில் முடித்த கையோடு எங்கள் கல்லூரியில் வாத்தியார் ஆகிவிட்டார். அது அவருக்கு முதல் வேலை.

கலைந்த கேசம், பழைய மூக்குக்கண்ணாடி, கசங்கிய சட்டை-பேண்ட், சுமாரான செருப்பு என்று இருந்த அவரை பேராசிரியர் என்று சொன்னால் யாரும் அவ்வளவு எளிதில் நம்பமாட்டார்கள். அவர் முதன்முதலாக வகுப்புக்கு வந்தபோதும் அதே நிலைமைதான். அசால்ட்டாக அமர்ந்திருந்தோம். 

வழக்கமான வாத்தியார்களின் பில்ட் அப்புகளான இமயமலையை நெம்புகோலை வைத்து நெம்பியவன், பசிபிக் கடலை பெப்ஸி பாட்டிலில் அடைத்தவன் என்றெல்லாம் எதுவும் இல்லாமல் நேரடியாக பாடத்தை ஆரம்பித்துவிட்டார். சுமாரான தோற்றத்தில் வந்த மனிதர் வந்தும் வராமல் சாக்பீஸை எடுத்து கரும்பலகையில் எதையோ எழுத ஆரம்பித்ததும் எங்களுக்கெல்லாம் கடுப்புதான். ஆனால் அவர் அதையெல்லாம் எதுவுமே கண்டு கொள்ளாமல் இரு கால்களால் நிற்கும் ரோபோவை வரைந்து கொண்டிருந்தார். ‘ஓவிய வகுப்பு நடக்கிறது’ என்று யாரோ பின்னாலிருந்து கூவியதையும் அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

படம் வரைந்து முடித்தவுடன் “இந்த ரோபோவின் புவியீர்ப்பு மையம் எங்கே இருக்கிறது?” என்றார். வகுப்பில் அமைதி நிலவியது. எந்தப் பிடிமானம் இல்லாவிட்டாலும் இரு கால்களையும் சற்றே அகட்டி நின்று ‘பேலன்ஸ்’ செய்யும் கண்டக்டர்களோடு இந்த ரோபோவை ஒப்பிடச் சொன்னார். நிமிர்ந்து உட்கார்ந்தோம். அதே கான்செப்ட்தான் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சட சடவென ரோபோவின் நுட்பங்களை சர்வசாதாரணமாக விளக்கத் துவங்கினார். அப்பொழுதே “இவுரு ஆளு பெரிய ஆளுடா” என்ற எண்ணம் வந்துவிட்டது.

ரோபோடிக்ஸ் பற்றிய ஒவ்வொரு நுட்பத்தையும் வாழ்வியல் உதாரணங்களோடு அவர் விளக்கிய போது அதுவரை வானத்தில் மிதந்து கொண்டிருந்த ரோபோடிக்ஸ் உலகம் எங்களின் கைகளுக்குள் சிக்கத் துவங்கியது என்பதுதான் உண்மை.

ரோபோடிக்ஸ் வடிவமைப்பில் உராய்வு, அதிர்வுகள் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். அதற்கும் ஒரு அட்டகாசமான உதாரணத்தை கொடுத்தார். ஒரு மரத்தையோ அல்லது இரும்பையோ மெதுவாக அதே சமயம் சீரான வேகத்தில் இருபது முறை கொட்டினால் அதிர்வுகளின் காரணமாக கையில் அரிப்பு உருவாகும். இல்லையா? ஆனால் இதையேதான் மரங்கொத்திப்பறவை ஒவ்வொரு நாளும் செய்கிறது. மரம் கிடைக்கும் போதெல்லாம் கொத்தத் துவங்கிவிடுகிறது. ஆனால் அதற்கு ஏன் ஒன்றும் ஆவதில்லை? சிம்பிள் மேட்டர்தான். மரங்கொத்திப்பறவையின் தலையில் இருக்கும் ’பூ’ அதிர்வை உள்வாங்கிக் கொள்கிறது. Counter Balance.

இதை தியரிட்டிக்கலாக வாயினால் சொல்லிவிடுவது சுலபம். ஆனால் அதை எப்படி நிரூபிப்பது? அடுத்த அரை மணி நேரத்திற்கு Sin Ɵ, Cos Ɵ வை யெல்லாம் வைத்து சமன்பாடுகளாக எழுதித்தள்ளினார். ஒரு மரங்கொத்தி மரத்தை கொத்துவதைக் கூட இப்படியெல்லாம் நிரூபிக்க முடியுமா என்று பிளந்த எனது வாய்க்குள் கொசு ஒன்று புகுந்து வெளியேறியது.

இதெல்லாம் இப்பொழுது எதற்கு? 

காரணமிருக்கிறது. இது ஏற்கனவே எழுதியதுதான். கல்கியில் வந்த ‘ரோபோடிக்ஸ்’ குறித்தான தொடரின் கடைசி அத்தியாயத்தில் எழுதியது. இந்த அத்தியாயம் வெளிவந்து ஐந்தாறு மாதங்கள் ஆகிவிட்டது.  அவர் இதையெல்லாம் படித்திருக்க மாட்டார் என நினைத்திருந்தேன்.

சில நாட்களுக்கு முன்பாக விவேக் சாரின் அண்ணன் ஒருவர் யதேச்சையாக கிடைத்த பழைய கல்கி இதழில் இவரது பெயரை பார்த்துவிட்டு ஸ்கேன் செய்து அவருக்கு அனுப்பியிருக்கிறார்.

என்னைப் பற்றி அவரோடு தொடர்பில் இருக்கும் எனது நண்பர்களிடம் விசாரித்திருப்பார் போலிருக்கிறது. நண்பன் ஒருவன் “விவேக் சார் உன்னிடம் பேச விரும்புகிறார்” என அவரது எண்ணைக் கொடுத்தான். 

அழைத்தேன். 

ஏதேதோ பேசினார். பெரும்பாலும் என்னைப் பற்றிய விசாரிப்புகள்தான். அவருக்கு நான் கல்கியில் அவரைப் பற்றி எழுதியது தெரியாது போலிருக்கிறது எனத் தோன்றியது. நானாக சொன்ன போது. “பார்த்தேன். சந்தோஷமா இருந்துச்சு” என்றார். அவ்வளவுதான். 

“என்னிடம் பேசணும்ன்னு சொன்னீங்களா?” என்றேன்.

“ஆமா. ரோபோடிக்ஸ் பத்தி கட்டுரையெல்லாம் எழுதறே...காலேஜூக்கு வந்தா பசங்ககிட்ட அது பத்தி கொஞ்சம் பேசலாம்ல” என்றார்.

அவரை பற்றி எழுதியதைப் பற்றி பேசுவதற்காகத்தான் அழைக்க விரும்பியிருப்பார் என நினைத்திருந்தேன். ஆனால் அந்த கட்டுரை அவருக்கு எந்தச் சலனத்தையும் உருவாக்கியிருக்கவில்லை. அது அவருக்கு இன்னொரு சாதாரண நிகழ்வு. அவ்வளவுதான். என்னிடம் பேச விரும்பியது கூட தனது தற்போதைய மாணவர்களுக்கு ‘இவன் பயன்படுவானா?’ என்று பார்ப்பதற்குதான்.

சற்று ஏமாற்றமாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தது. இப்படியான ஆசிரியர்களிடம் படித்ததற்காக பெருமைப்படத்தானே வேண்டும்? மேன்மக்கள் எப்பொழுதுமே மேன்மக்களாகத்தான் இருக்கிறார்கள்.

“கண்டிப்பா வர்றேன் சார்” என்று சொல்லியிருக்கிறேன்.