சில நாட்களுக்கு முன்பாக எங்கள் பகுதியில் ஒரு ஃபேஷன் ஷோ நடந்தது. குழந்தைகளுக்கான நிகழ்ச்சி அது. பத்து வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு மட்டும்தான் பங்கேற்க அனுமதியளித்திருந்தார்கள். மேக்கப், ரிகர்சல் என சகலத்தையும் வீட்டில் தயார் செய்து கொண்டு வந்து விட வேண்டும். பார்வையாளர்களாக பெற்றோர்களை அனுமதித்திருந்தார்கள். குழந்தைகளுக்கு எந்த சங்கோஜமும் இருந்ததாக தெரியவில்லை. மேடை பயம் இல்லாமல் அப்படியும் இப்படியும் வளைத்து நெளித்து நடந்து கலக்கிக் கொண்டிருந்தார்கள்.
ஆண் குழந்தைகளுக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. கிருஷ்ணர் வேஷம், வேட்டி துண்டு, பைஜாமா, டீ சர்ட்-ஜீன்ஸ் என்ற வழக்கமான காம்பினேஷன்கள்தான். ஆனால் பெண் குழந்தைகள் பிரித்து மேய்ந்துவிட்டார்கள். துணியிலிருந்து, மேக்கப் வரைக்கும் ஏகப்பட்ட வகையறாக்கள். தோள் வரைக்கும் நீண்ட காது வளையங்களில் ஆரம்பித்து கால் தண்டை வரைக்கும் ஒவ்வொரு உறுப்புக்கும் விதவிதமான அணிகலன்கள். பார்வையாளர்களுக்கு தெரியும் படி அதை தனித்து காட்டுவதற்கான அங்க அசைவும் அவர்களுக்கு தெரிந்திருந்தது.
அந்த நிகழ்ச்சியின் நிழற்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது அம்மாவுக்கு உச்சந்தலையில் முடி நட்டுக் கொண்டது. “அநியாயம், அக்கிரமம்” என்று வரிசையாக சொல்லிக் கொண்டிருந்தார். “அதெல்லாம் இப்போ சகஜம் அத்தை” என்று சமாதான படலங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தது. “இப்பவே இப்படியெல்லாம் துணி போட்டு பழக்கலாமா?” என்று கேட்டு வாய் மூடவில்லை. இன்னொரு படம் கண்களில் பட்டுவிட்டது. அந்தப் படத்தில் பெண் குழந்தையின் தொப்புளைச் சுற்றி கோலமிட்டு வைத்திருந்தார்கள். சோலி சுத்தம்.
அம்மாவின் காதில் புகை வர ஆரம்பித்துவிட்டது. இனி இந்தப் படங்களை பார்ப்பது என்பது பூகம்பத்தை விலைக்கு வாங்கி வருவதற்கு சமம் என்று “அவ்வளவுதான்” என்று சொல்லி லேப்டாப்பை மூடி வைத்தாலும் தூவானம் விடாமல்தான் இருந்தது. “சினிமாக்காரங்களை பார்த்து கெட்டுப் போயிட்டாங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்த மாதிரி விவகாரங்களை வீட்டில் வெளிப்படையாக பேச தைரியம் இல்லை. அமைதியாக இருந்துவிடுவேன். இப்பொழுதும் அப்படித்தான்.
யோசித்துப் பார்த்தால் பிரபுதேவா ஆம்லெட் சுட்டது, கேப்டன் பம்பரம் விட்டதையெல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டு பேசுகிறார் என நினைக்கிறேன். சினிமாக்காரர்களையே எத்தனை நாளைக்குத்தான் குற்றம் சொல்வது? தொப்புள் நம் வயிற்றில் இருக்கும் சாதாரண தழும்புதான் என்றாலும் சங்ககாலத்திலிருந்தே நம் ஆட்கள் அதை வர்ணிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் காலத்தில் சினிமாக்காரர்கள் அந்த ஆர்வம் அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.
நடிகைகளின் இடுப்புப்பிரதேசங்களை மட்டும் கலர் படங்களாக போட்டு “இது யாருடைய இடுப்பு என்று கண்டுபிடியுங்கள்” என்ற போட்டிகளில் ஆரம்பித்து நடுப்பக்க கவர்ச்சி ஃப்ளோ-அப் வரைக்கும் பல்வேறு முறைகளில் இடுப்புகளையும், தொப்புள்களையும் விதவிதமாக ரசிக்கும் மனநிலையை ‘கண்டினியூ’ செய்து கொண்டிருக்க பத்திரிக்கைகளும் உதவிக் கொண்டிருக்கின்றன.
உண்மையில் ஆம்லெட், பம்பரம் எல்லாம் ஜூஜூபி சமாச்சாரங்கள். அதையெல்லாம் தாண்டி நாம் வெகுதூரம் போய்க் கொண்டிருக்கிறோம். இணையத்தில் தொப்புளுக்கான அலங்காரங்களைத் தேடினால் படங்களாக கொட்டுகிறது. பெண்களின் தொப்புள் படங்களைப் பிரசுரம் செய்வதற்காகவே ஏகப்பட்ட இணையதளங்கள் இருக்கின்றன. தொப்புளில் வளையம் போடுவது, கம்மல் மாட்டுவது, அதைச் சுற்றிலும் கோலம் என்பதையெல்லாம் அசால்ட்டாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை சினிமாக்காரர்கள் ஆரம்பித்து வைத்தார்கள், குமுதம் தூக்கிப் பிடித்தது, விகடனின் டைம்பாஸ் தொடர்கிறது என்றெல்லாம் சொன்னால் அது டூ மச்.
‘தொப்புள் அலங்காரத்தை’கடவுளர்களின் காலத்திலேயே தொடங்கிவைத்துவிட்டார்கள். இன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்தால் அதற்கு முன்பே கூட யாராவது ஆரம்பித்திருக்கக் கூடும். ஆழ்வார்களின் பாடல்களில் இருந்தே கூட உதாரணத்தை காட்ட முடியும்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் பேயாழ்வார். டாப் 3 ஆழ்வார்களில் ஒருவர். மைலாப்பூரில் வாழ்ந்தவர். அவரது பாடல் ஒன்று கீழே-
ஆங்கு மலரும் குவியுமாம் உந்திவாய்
ஓங்கு கமலத்தின் ஒண்போது- ஆங்கைத்
திகிரி சுடர என்றும்; வெண் சங்கம் வானில்
பகரும் மதிஎன்றும் பார்த்து;
திருமாலின் ஒரு கையில் சக்கரமும் இன்னொரு கையில் சங்கும் இருக்கிறது. அவரின் தொப்புளில் செருகி வைக்கப்பட்டிருக்கும் தாமரையானது ஒரு சமயம் அவரது கையில் இருக்கும் சக்கரத்தைப் பார்த்து சூரியன் என நினைத்து மலர்கிறதாம். அடுத்த கணமே அவரது இன்னொரு கையில் இருக்கும் சங்குவை பார்த்து நிலா வந்துவிட்டது என நினைத்து குவிகிறதாம்.
பாருங்கள், கிருஷ்ணரே தனது தொப்புளை தாமரைப் பூ வைத்து டெகரேட் செய்திருக்கிறார். த்ரிஷாக்களையும், தமன்னாக்களையும் குற்றம் சுமத்தி என்ன பயன்?
இன்றைக்கு ராமநவமி. பிறந்தநாளன்று இதற்கு மேல் கிருஷ்ணரை கலாய்த்தால் ஏதாவது ‘ராவுடி’செய்துவிடுவார் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.
Happy Birthday Rama!