Apr 1, 2013

நியாயமாரே....


நடுச்சாமம். கடும்பசி. வீட்டில் சட்டிபானையை உருட்டினால் எதுவும் இல்லை. அந்த நேரத்தில் யார் வீட்டுக் கதவையாவது உரிமையோடு தட்டுவதற்கு ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா?. 

கோணங்கியின் மதினிமார் கதையில் வரும் செம்புகம் அந்த மாதிரியான ஆள்தான். செம்புகம் ட்ரவுசர் போட்டுத் திரியும் சிறுவன். அவனது அப்பா கிருட்ணத் தேவர் கிணறு தோண்டுவதற்காக வெளியூர்களுக்குச் சென்றுவிடுவார். அவர் சென்ற பிறகு செம்புகத்தை அந்த ஊரில் இருக்கும் மதினிமார்கள்தா தாங்கித் தாங்கி வளர்த்துவார்கள். அந்தக் கதை விவரிக்கும் மதினிமார்கள், தேவரின் முடிவு, வெளியூர்களில் சுற்றிவிட்டு செம்புகம் திரும்ப வரும் போது அந்த ஊரின் நிலைமை என்பதெல்லாம் வேறு விஷயங்கள். செம்புகம் என்ற சிறுவன் பல வீட்டுச் சோறு தின்று வயிறு வளர்க்கிறான். இப்போதைக்கு இதை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

நாஞ்சில்நாடனின் இடாலக்குடி ராசாவும் கிட்டத்தட்ட இதே கேரக்டர்தான். ராசாவுக்கு நாற்பது வயதுக்குரிய தோற்றம். எந்தச் சமயத்தில் மூளை வளர்ச்சி நின்று போனது என்று தெரியாது. ஊர் ஊராகச் சுற்றுபவன். அவன் எப்பொழுது வருவான் போவான் என்றெல்லாம் தெரியாது. ஆனால் ஒவ்வொரு ஊருக்கு போகும் போதும் ஏதாவது ஒரு வீட்டில் நுழைந்து அக்கா, சித்தி, அத்தை என்று ஏதாவதொரு முறை வைத்து “ராசாவுக்கு சோறு போடு” என்று அதிகாரம் செய்து தின்றுவிட்டு சுற்றுவான்.

சென்ற தலைமுறை வரைக்கும் இப்படியான கேரக்டர்கள் சாத்தியமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் இப்படியான மனிதர்களை பார்ப்பதில் பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால் சமீபகாலமாகத்தான் சிட்டுக்குருவிகளைப் போல இவர்களும் காணாமல் போய்விட்டார்கள் போலிருக்கிறது அல்லது என்னைப் போன்று சொந்த ஊரை விட்டு வெளியேறியவர்கள் இத்தகைய சிட்டுக்குருவிகளிடமிருந்து தங்களை துண்டித்துக் கொண்டிருக்கக் கூடும்.

ஆறாம் வகுப்பு படிக்கும் வரைக்கும் போது சாமியப்பன் என்ற மனிதர் எங்கள் ஊரில் சுற்றித் திரிந்தார். அவருக்கு அறுபது வயதைத் தாண்டியிருக்கும். அவர் எந்த ஊர் என்றெல்லாம் தெரியாது. ஏதோ ஒரு சொத்துத் தகராறில் அவரது குடும்பம் எங்கள் ஊரில்  அவரை விட்டுவிட்டுச் சென்றதாகச் சொல்வார்கள். அவ்வளவுதான் அவரைப் பற்றிய தகவல். அவரை முழுமையான பைத்தியம் என்று சொல்ல முடியாது. சில சமயம் தனக்குத்தானே பேசிக் கொள்வார். சில சமயங்களில் தெளிவாக பேசுவார். 

பல ஆண்டுகளாக சிரைக்காத தாடியும் மீசையும் அவரை பயமூட்டும் மனிதராக மாற்றி வைத்திருந்தன. சாமியப்பனுக்கு சில விநோத பழக்கங்கள் இருந்தன. பழைய துணிகளை மூட்டை கட்டி தலையில் சுமந்து கொண்டே திரிவார். இந்தத் துணிகளைத்தான் காலில் ஷூ போல கட்டிக் கொள்வார். அவரது ஒரு கையில் ஊன்றுகோலும் இன்னொரு கையில் மண்சட்டியும் இருக்கும். அந்த மண்சட்டியில் எப்பவும் ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். பெண்கள் நிரப்பிக் கொண்டே இருப்பார்கள். தனது அரைசாண் வயிறு நிரம்பியவுடன் அந்தச் சட்டியைக் கீழே வைத்து தானும் அருகிலேயே அமர்ந்து கொள்வார். ஏதாவது தெருநாய் வந்து அந்தச் சட்டியை உருட்டிக் கொண்டிருக்கும். சட்டி காலியானவுடன் ஏதாவது ஒரு வீட்டிற்கு முன்பாக நின்றுவிடுவார். மீண்டும் சட்டி நிரம்பும். இன்னொரு நாய் உருட்டும். இப்படித்தான் அவரது வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

சாமியப்பன் பீடி குடிக்கும் ஸ்டைல் அலாதியானது. கீழே கிடக்கும் துண்டு பீடிகளை எல்லாம் சேகரித்து வைத்துக் கொள்வார். எல்லாவற்றின் தூள்களையும் ஒரு அரச மரத்தின் இலையிலோ அல்லது வேறு ஏதோ ஒரு இலையிலோ போட்டு பெரிய பீடி ஒன்றை தயார் செய்துவிடுவார். ஏதாவது ஒரு இடத்தில் வானத்தை பார்த்து மல்லாக்க படுத்துக் கொண்டு ஒரு கையை தலைக்கு கீழாக வைத்தவாறு கால் மீது கால் போட்டபடியே ரசித்து உறிஞ்சிக் கொண்டிருப்பார். அப்பொழுது கோவணத்திற்கு வெளியே ‘எல்லாம்’ தெரிந்து கொண்டிருக்கும். ஆண்கள் பல்லைக் கெஞ்சிக் கொண்டு போவார்கள். குழந்தைகள் கை கொட்டி சிரிப்பார்கள். பெண்கள் தலையில் அடித்தவாறோ அல்லது சபித்தவாறோ வெட்கப்படுவது போல ஒதுங்கிப் போவார்கள். ஆனால் சாமியப்பன் அந்தச் சமயத்தில் யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். 

அப்பொழுதெல்லாம் எங்கள் ஊரில் வீதிக்கு இரண்டு மூன்று வேப்பமரங்கள் இருக்கும். வாய்க்காலில் தண்ணீரும், தண்ணீரில் மீன்களுமாகத் துள்ளிக் கொண்டிருக்கும். கொழுத்த மீன் வேட்டைக்கு பிறகு கொக்குகள் இந்த வேப்ப மரங்களில்தான் குடியிருக்கும். நரிக்குறவர்கள் துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு சுற்றுவார்கள். மரங்களின் கீழாக அமர்ந்து துப்பாக்கியில் ரவையை நிரப்பி கொக்குகளைச் சுட்டு எடுத்துச் செல்வார்கள். நரிக்குறவர்கள் துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு ஊருக்குள் நுழைந்தால் சிறுவர்களுக்கு உற்சாகமாகிவிடும். அவர்களுடனேயே ஒவ்வொரு மரமாகச் சுற்றத் துவங்குவோம். வேட்டையாடும் கொக்குகளை உணவு விடுதிகளில் விற்றுவிடுவதாகவும் அதனை அவர்கள் கோழிக்கறி என்ற பெயரில் உணவாக்கிவிடுவதாகவும் ஊருக்குள் பேசிக் கொள்வார்கள்.

நரிக்குறவர்களின் துப்பாக்கியிலிருந்து ஒரு தோட்டாவின் சத்தம் கேட்டவுடன் சாமியப்பன் ஓடி வந்துவிடுவார். கொக்குகளை வேட்டையாடக் கூடாது என்று பிரச்சினை செய்வார். ஆனால் நரிக்குறவர்கள் கேட்கமாட்டார்கள். “போடா பைத்தியம்” என்று விரட்டுவார்கள். சில சமயம் கற்களை எடுத்து வீசுவார்கள். ஓரிரு சமயங்கள் துப்பாக்கியை சாமியப்பனின் நெஞ்சை நோக்கி குறிபார்ப்பார்கள். ஆனால் சாமியப்பன் அசரமாட்டார். பிறகு உடன் சுற்றும் சிறுவர்களை நரிக்குறவர்கள் உசுப்பேற்றிவிடுவார்கள். “அவனை துரத்தினால்தான் சுடுவோம்” என்பார்கள். துப்பாக்கி சுடுவதை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் கற்களை பொறுக்கிக் கொண்டு “ஹோ”வென கூச்சலிட்டு துரத்துவோம். சில பொடியன்கள் சாமியப்பன் மீது கற்களை வீசியும் விடுவார்கள். அவர் வலி தாளமுடியாமல் கதறிக் கொண்டே ஓடுவார். அந்தக் கதறலில் எந்த அர்த்தமுள்ள வார்த்தையும் இருக்காது. வெறும் வலியின் வாதை மட்டுமே இருக்கும். அப்பொழுது அது பெரிய வெற்றியாக தெரிந்தாலும் இப்பொழுது யோசித்தால் பரிதாபமாக இருக்கிறது. யாரோ வீசிய கல் ஒன்று அவரது தொடையைக் கீறி ரத்தம் பெருக்கெடுத்த போது அவர் கதறியது இன்னமும் கூட ஞாபகத்தில் இருக்கிறது.

இரவில் யார் வீட்டு வாசலில் வேண்டுமானாலும் சாமியப்பன் படுத்துக் கொள்வார். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். அவர் எழுவதற்கு தாமதமானால் அந்த வீட்டில் வாசல் தெளிப்பதும் கோலம் போடுவதும் வேண்டுமானால் தாமதாகுமே தவிர அவரை யாரும் எழுப்பியதில்லை. இப்படி திரிந்து கொண்டிருந்த சாமியப்பன் ஏதோ ஒரு திருமண மாதத்தில் புதுத் தம்பதி தங்கியிருந்த ஒரு வீட்டின் முன்பாக படுத்துக் கொண்டார். அது ஒரு கோடை காலம். எங்களுக்கு பள்ளி விடுமுறையாக இருந்தது. அடுத்த நாள் காலையில் அந்த வீட்டின் முன்பாக ஒரே களோபரம். சாமியப்பனை சுற்றி நின்று ஆளாளுக்கு தாறுமாறாகத் திட்டினார்கள். அப்பொழுது ஊத்தை பற்களோடு கூட்டத்தை வேடிக்கை பார்க்கச் சென்ற போது சிறுவர்களை விரட்டிவிட்டார்கள். அப்பொழுது சாமியப்பன் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்து கொண்டிருந்தது. சிலர் அடிப்பதற்கு கையை ஓங்கிக் கொண்டிருந்தார்கள். அவர் ஏதோ மறுப்பு தெரிவித்தவாறு இருந்தார். ஆனால் எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பெரியவர்களுக்கு பயந்து ஓடிவிட்டோம்.

சரவணன் இந்த மாதிரியான விவகாரங்களில் மோப்பம் பிடித்துவிடுவான். “சாமியப்பன் அந்த வீட்டு படுக்கையறையை எட்டிப்பார்த்துவிட்டதாக” சொன்னான்.  வேறு யாரிடமிருந்தும் எந்த வார்த்தையும் வாங்க முடியவில்லை. சாமியப்பனுக்கு ஆதரவாக சிலரும் எதிராக சிலரும் பேசிக் கொண்டிருப்பதாகவும் சரவணன்தான் சொன்னான். ஆனால் முழுமையான விவரம் தெரியவே இல்லை. 

சாமியப்பனை விட்டுவிட்டு அந்த அறைக்குள் என்ன நடந்திருக்கும் என்று எங்களின் பேச்சு திசை மாறிவிட்டது. அப்பொழுது அதுதான் கிளர்ச்சியான விஷயமாக இருந்தது. சில நாட்களுக்கு பிறகே சாமியப்பனை ஊருக்குள் காணவில்லை என உணரத்துவங்கினோம். விசாரித்த போது அந்த அந்த நாளிலிருந்தே சாமியப்பனை எங்கள் ஊருக்குள் பார்க்க முடிந்ததில்லை என்றார்கள். அவர் வாய்க்காலில் விழுந்துவிட்டதாகவும் வேறு ஊருக்கு போய்விட்டதாகவும் சொன்னார்கள். எது நிஜம் என்று தெரியவில்லை. ஆனால் சாமியப்பன் இல்லாத ஊரில் ஒரு வெறுமை படரத் துவங்கியிருந்தது. அந்த வெறுமை சாம்பல்துகளைப் போல ஊரெங்கு படர்ந்து கிடந்தது.

இது நடந்து இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்பொழுது ஊருக்குள் சாமியப்பன் படுத்துக் கிடந்த வேப்பமரங்களும் இல்லை, கொக்குகளும் இல்லை.