Apr 18, 2013

கடப்பாரை எல்லாம் பல்குச்சி மாதிரி...


இரண்டு நாட்களுக்கு முன்பாக அலுவலகத்தில் ஒரு நேர்முகத் தேர்வு. நிறைய ஆட்களை எடுக்கவில்லை. டீமுக்கு ஒரு Fresher தேவையென்று சொல்லியிருந்தார்கள். ஒரேயொரு Fresher. அவ்வளவுதான். 

வந்திருந்த ஏழெட்டு பேர்களில் இருந்து ஒருவனை தேர்ந்தெடுக்க வேண்டும். வழக்கமாக இண்டர்வியூ எடுக்கும் ஆள் ‘கட்’அடித்துவிட்டதால் என்னை எடுக்கச் சொல்லியிருந்தார்கள். என் மீது நம்பிக்கை இல்லாமலோ என்னவோ கூடவே இன்னொருத்தனையும் அனுப்பியிருந்தார்கள்.  வந்தவன் பெங்காலி. கொஞ்சம் ஏமாந்தாலும் தலைக்கு மேல் ஏறி அமர்ந்துவிடுவான்.அதேசமயம் எந்த தயவுதாட்சண்யமும் இல்லாமல் யார் முகத்தில் வேண்டுமானாலும் கருணையில்லாமல் குத்துவான். 

எனக்குத் தெரிந்த இரண்டு பெங்காலிகளுமே தாறுமாறாக நிராகரிக்கிறார்கள். ஒன்று இவன். இன்னொருவர் பிரணாப் முகர்ஜி.

நிராகரிக்கும் குணமுள்ளவன் என்பதற்காகவே இவனையும் நேர்காணலுக்காக அனுப்பி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. நேர்முகத் தேர்வுகளில் அனுபவசாலிகளை நிராகரிப்பது சுலபமான காரியம். அவர்களுக்கும் அது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. ‘இது ஒன்றுதான் உலகத்திலேயே கம்பெனியா?’என்று வேறு இடம் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் புதியவர்களை நிராகரிப்பது கொஞ்சம் சிக்கலானது. Emotional ஆக சற்று வலிமையாக இருக்க வேண்டும்.

இந்த இண்டர்வியூவிற்கு போவதில் விருப்பமே இல்லாமல்தான் இருந்தேன். “வேண்டாம்” என்று சொல்வதற்கு வாயே வருவதில்லை. அதுவும் இவர்கள் சென்ற வருடம் மே மாதம் படிப்பை முடித்துவிட்டு இந்த வருடம் ஏப்ரல் வரைக்கும் வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில் வேலையில் சேராவிட்டால் இந்த வருடம் படிப்பை முடிப்பவர்களும் வரும் ஜூன் மாதத்திலிருந்து இவர்களோடு போட்டியில் குதித்துவிடுவார்கள்.

ஏற்கனவே “ஒரு வருஷமா வேலை கிடைக்கலையா?” என்ற கேள்வியை பக்கத்து வீட்டுக்காரர்களும் மற்றவர்களும் கேட்டுக் கேட்டு வெறுப்பேற்றி வைத்திருப்பார்கள். ஜூன் மாதத்திலிருந்து இண்டர்வியூவிலும் அதே கேள்வியைக் கேட்டு சாவடிப்பார்கள்.

ஆனால் பெங்காலி இப்பொழுதே அந்தக் கேள்வியை ஆரம்பித்துவிட்டான். அறைக்குள் வந்தவுடனே “இதுவரைக்கும் எத்தனை கம்பெனிக்கு இண்டர்வியூக்கு போயிருக்க?” “அத்தனை கம்பெனியும் நிராகரித்த உன்னை நாங்க ஏன் எடுக்கணும்?” என்று மனசாட்சியே இல்லாமல் ராகிங் செய்து கொண்டிருந்தான். இவனது கேள்வியிலும் முகத்தின் அஷ்டகோணல்களிலுமே பெரும்பாலானவர்கள் வெறுத்து போனார்கள். நான் அந்த அறைக்குள் வாயே திறக்காமல் அமர்ந்திருந்தேன். ஏதாவது கேட்பதற்காக வாய் திறக்கும் போதெல்லாம் பேச்சுக்குள் பேச்சாக குரலை உயர்த்தி வேறொரு கேள்வியை எழுப்பினான். அவனது சத்தத்தில் எனது கேள்வி நசுங்கி ஒடுங்கிக் கொண்டிருந்தது. இனிமேல் கேட்க வேண்டியதில்லை என முடிவு செய்து கொண்டேன்.

இப்படி ஐந்தாறு பேரை நிராகரித்துவிட்டான். நாங்கள் யாரையாவது தேர்ந்தெடுத்து அனுப்பினால் மேனேஜருடன் அடுத்த ரவுண்ட் நேர்காணல் இருக்கும். ஆனால் இவன் செய்யும் சேட்டையைப் பார்த்தால் அத்தனை பேரையும் நிராகரிக்கும் மனநிலையில் இருப்பது போலத் தோன்றியது. கிட்டத்தட்ட இண்டர்வியூ முடியும் நிலைக்கு வந்திருந்தது. ஓன்றிரண்டு மட்டும் பேர் வெளியே காத்திருந்தார்கள். மற்றவர்களையெல்லாம் துரத்தி விட்டிருந்தான்.

இப்பொழுது ஒரு பையனை அழைத்தார்கள். மலையாளி. கொச்சினைச் சார்ந்தவன். கோயமுத்தூரில் படித்தானாம். 

பெங்காலி வழக்கம் போலவே சுட ஆரம்பித்தான். ஆனால் அந்தப்பையன் இவனின் கேள்விகளுக்கு சலித்துப் போகவில்லை. ஆரம்பத்தில் பதவிசாக பதிலளித்தவன், இவனது முரட்டுத்தனத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் பதில்களை கொடுக்க ஆரம்பித்திருந்தான். 

“இதுவரை உனக்கு ஏன் எந்த வேலையும் கிடைக்கவில்லை?” என்றான் பெங்காலி.

“நான் எந்த நேர்காணலுக்குமே தயாரிப்பு செய்து கொண்டு போனதில்லை” என்றான். 

“அப்போ இன்னைக்கும் அசால்ட்டாகத்தான் வந்திருக்கியா?” என்றான் பெங்காலி.

“அதை நீங்க செக் செஞ்சுட்டு சொல்லுங்க”. பெங்காலியின் முகத்தில் ஒரு அறைவிட்டது போலிருந்தது. அவன் முகம் சிவந்து பொயிருந்தான்.

பிறகு டெக்னிக்கலாக கேள்விகளைக் கேட்டான். அவனுக்கு பெரும்பாலும் பதில் தெரிந்திருந்தது. “யூ ஆர் டூயிங் வெல்” என்று நான் சொன்னது பெங்காலியின் ஈகோவை தொட்டிருக்கக் கூடும்.

இன்னும் சில கேள்விகள். இன்னும் சில பதில்கள்.  

“ஐயாம் கோயிங் டூ ரிஜக்ட் யூ” என்றான். அந்தப் பையன் பெரிதாக அதிரவில்லை.

“ஏன்?” என்று கேட்டான்.

“அதைச் சொல்ல முடியாது. நீ எனக்குத் தேவையில்லை” என்றான். பையன் பயங்கரமாக கோபமாகியிருந்தான். இவனை ஒரு அடி அடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கக் கூடும்.

சிரிப்பது போல முகத்தை வைத்துக் கொண்டு எழுந்தான். வெல்கம் என்பதற்கு பதிலாக கன்னங்களை உப்பலாக வைத்துக் கொண்டு “பெல்கம், பெல்கம்” என்று பெங்காலி மாதிரியே உச்சரித்துவிட்டு வெளியேறினான். 

எனக்கு அவனை பார்ப்பதற்கு ‘தடிமாட்டு’ வில்லனை அடித்துவிட்டு பேக்ரவுண்ட் மியூசிக்கோடு வெளியேறும் தனுஷ் மாதிரியே தெரிந்தது.  விசிலடிக்க வேண்டும் போலிருந்தது.பெங்காலியின் முகத்தில் ஈயாடவில்லை. என்னைத் திரும்பிப் பார்த்தான். சிரிப்பை அடக்க முயற்சி செய்தேன். முடியவில்லை.

இண்டர்வியூ முடிந்தது. 

மேனேஜர் எங்களை அழைத்துக் கேட்டார். யாருமே சரியில்லை என்றான் பெங்காலி. சரியென்று சொல்லிவிட்டு மேனேஜர் நகர்ந்தார். அவர் கொஞ்ச தூரம் போனதும் ஓடிப்போய் அந்த மலையாளப் பையன் பெயரைச் சொன்னேன். காரணத்தையும் சொன்னேன். சிரித்துக் கொண்டு சரி என்றார்.

நேற்று காலையில் அந்தப் பையன் வந்திருந்தான். மேனேஜருடனான இண்டர்வியூ என்றான். இன்று காலையில் மேனேஜர் அழைத்து “அந்தப் பையனை செலக்ட் செஞ்சுட்டோம்” என்றார். சிரித்துக் கொண்டேன்.  

இந்த மேட்டர் பெங்காலிக்கு தெரியுமா என்று தெரியவில்லை.