சிக்பேட் சென்றிருந்தோம். பெங்களூரின் ரங்கநாதன் தெரு. ஆனால் ர.நா தெருவை விடவும் பல விதத்தில் பெட்டர். முக்கியமான அம்சம்- ஏரியா முழுவதுமே மார்வாடி பெண்களால் நிரம்பியிருக்கும். துணியெடுப்பதற்காகச் சென்றிருந்தோம். தீபாவளி ஜோக்குதான். மணிக்கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பொறுமை இன்ஸ்டால்மெண்டில் செத்துக் கொண்டிருந்தது. “நீங்க பாருங்க. நானும் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினேன்.
அந்தத் தெருவில் பார்ப்பதற்கு ஏகப்பட்டது இருக்கிறது என்று சொன்னால் அதை சிங்கிள் மீனிங்கிலேயே புரிந்து கொள்ளலாம். படம் ஓடாத விஜயலட்சுமி தியேட்டர், பழைய ஆஞ்சநேயர் கோயில், கடைகளாக மாற்றப்பட்ட அந்தக் கால பங்களாக்கள், பிச்சையெடுப்பவர்கள், பேல் பூரி விற்பவர்கள், நகர்ந்து கொண்டேயிருக்கும் பெருங்கூட்டம், வியாபாரிகள், சின்னஞ்சிறு கடைகள் என பொழுது போவது தெரியாமல் ரசித்துக் கொண்டிருக்கலாம். ஒருவேளை இதையெல்லாம் பார்த்து முடித்துவிட்டால் வடநாட்டு வலது Saree பெண்களையும் கொஞ்ச நேரம் ரசிக்கலாம்.
முப்பது அடி அகலம் கூட இல்லாத அந்தச் சாலை பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது என்பது பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கிக் கொண்டேயிருக்கும். இந்தத் தெருவில் வந்து புடவை எடுத்துப் போய் எங்கள் ஊர்ப்பக்கம் வியாபாரம் செய்யும் பெண்கள் இருக்கிறார்கள். இந்த இடத்தில் இருந்துதான் தென்னிந்தியாவின் பல பாகங்களுக்கு மோட்டார்களும் பம்ப்புகளும் பயணிக்கின்றன. இந்த ஏரியாவில்தான் எலெக்டிரிகல் சாமான்கள் சல்லிசு. இந்தத் துக்கினியூண்டு நகைக்கடைகளில்தான் கிலோக்கணக்கில் தங்க பிஸ்கெட்கள் பதுங்கியிருக்கின்றன என்பதெல்லாம் தீரவே தீராத வியப்புகள்.
இந்தத் தெருவை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் கதிர்பாரதி அழைத்திருந்தார். கல்கியில் உதவி ஆசிரியராக இருக்கிறார். சமீபத்தில் அவரது ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. ஆளாளுக்கு அந்தத் தொகுப்பை சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது கெட்டநேரம் அல்லது விதி வலியது. ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ கவிதைத் தொகுப்பை வாசித்துவிட்டாராம். தொகுப்பில் இருக்கும் மரணம் மற்றும் தற்கொலை சார்ந்த கவிதைகள் மிகுந்த சோர்வை தந்துவிடுவதாகச் சொன்னார். நல்லதோ கெட்டதோ, இன்னொருவர் நமது தொகுப்பை பற்றி பேசுவதே பெரிய விஷயம். சந்தோஷமாக இருந்தது.
அதோடு விட்டுவிட முடியாதல்லவா? மரணத்தையும், தற்கொலையையும் என்னால் தலை முழுகிவிட முடியுமா என்று பார்ப்பதுதான் உத்தமம். யோசித்துப் பார்த்தால் மரணத்தையும், தற்கொலையையும் இதுவரை தவிர்க்கவே முடிந்ததில்லை. இவை இரண்டும் ஏதாவது ஒரு விதத்தில் கண்களையும் மனதையும் உறுத்திக் கொண்டேயிருக்கிறது. கர்நாடக காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலைவிடவும் அறிவழகனும் அபிராமியும் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதுதான் ஞாபகத்தில் நிற்கிறது. அஞ்சலி ஊர் திரும்பியதை விடவும் யாரோ ஒரு பெண் குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் அமிழ்த்திக் கொன்றதுதான் மனதில் பதிந்து கிடக்கிறது.
ஒருவன் தனது வாழ்வை அவசரமாக முடித்துக் கொள்வதில் இருக்கும் புதிர்களும், மற்றவர்கள் வலுக்கட்டாயமாக இன்னொரு மனிதனின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் இருக்கும் பெருந்துக்கமும் ஏதாவது ஒரு விதத்தில் சலனப்படுத்துகிறது. ஒன்றுமில்லை- சாதாரணமாக என்.விநாயகமுருகனின் ‘கோவில் மிருகம்’ தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்த போது பின்வரும் கவிதைதான் மற்ற எந்தக் கவிதையை விடவும் பாதித்தாக இருக்கிறது.
நீண்ட ரப்பர்க்குழாயின்
ஒரு முனை
வாயினுள் இறங்குகிறது
வலுக்கட்டாயமாக
உப்புக்கரைசலை ஊற்றுகிறார்கள்
இன்னொரு முனையில்
யாரோ
தலையை அமுக்கு
வயிற்றை பிதுக்கியதில்
விழிகள் வெளியே விழுகின்றது
மலக்கரைசல் உகந்தது
ஏதோவொரு குரல்
ஈனஸ்வரத்தில் ஒலிக்கிறது
குடல் அறுத்துக்கொண்டு
வருவது போல கேட்கிறது
ஓங்கரிப்பு
பேசாமல் வாழ்ந்தோ
செத்தோ தொலைத்திருக்கலாமென்றே
தோன்றுகிறது
தற்கொலைக்கு பிறகு நடக்கும்
கொலையொன்றில்
வி.முவின் 'கோவில் மிருகம்’தொகுப்பில் இருக்கிறது இந்தக் கவிதை. தொகுப்பு வெளி வந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இப்பொழுது விநாயகமுருகன் கவிதை எழுதுகிறாரா என்று தெரியவில்லை. ஒருவேளை எழுதாமல் இருந்தால் பிடித்து எழுதச் சொல்ல வேண்டும்.
தற்கொலையை விடுங்கள். கொலைகளைத் தவிர்க்க முடிகிறதா நம்மால்? ஆலடி அருணாவில் ஆரம்பித்து பொட்டு சுரேஷ் வரைக்குமான அரசியல் கொலைகள், சவூதியில் தலை துண்டிக்கப்பட்ட ரிஷானாவிலிருந்து திஹாரில் கொல்லப்பட்ட அப்சல் குரு வரைக்குமான சட்டக் கொலைகள், கள்ளக்காதல் கொலைகள், ஆதாயக் கொலைகள், ராஜபக்ஷேவின் கொலைகள் என ஏதோவொரு கொலை நம்மை அதிர்ச்சியூட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
அரிப்பெடுத்த கையை வைத்துக் கொண்டு சும்மா இராமல் Genoide என்று இணையத்தை துழாவிய போது நாஜிக்கள் செய்த கொலைகளைப் பற்றிய ஒரு கட்டுரை கிடைத்தது. இன்னும் கொஞ்சம் தகவல் சேகரிப்பதற்காக அவர்களது கொடுமைகள் குறித்தான சில நிழற்படங்களைத் தேடும் போது கீழே இருக்கும் இரண்டு படங்களையும் பார்த்துவிட்டேன். தூக்கமே தொலைந்துவிட்டது.
முதல் படத்தில், ஒரு யூதரை பிணக்குழிக்கு விளிம்பில் அமர வைத்திருக்கிறார்கள். குழிக்குள் ஏற்கனவே கொல்லப்பட்ட பிணங்கள் கிடக்கின்றன. இந்த யூதரை இப்பொழுது கொல்லப்போகிறார்கள். அவரது கண்களைக் கூட கட்டவில்லை. அவருக்கு பின்புறமாக ஒருவன் துப்பாக்கியை குறி பார்த்துக் கொண்டு நிற்கிறான். இன்னும் ஓரிரண்டு வினாடிகள்தான். யூதர் தனது கையை இறுக மூடியிருக்கிறார். கண்கள் யாரையோ பார்த்துக் கொண்டிருக்கின்றன. அந்தக் கண்களில் தெரியும் மிரட்சியை பாருங்கள்.
அடுத்த படத்தில் இன்னும் கொடுமை. ஒரு தாய் தனது மகளை தூக்கிக் கொண்டு முன்புறமாக நகர எத்தனிக்கிறார். அந்தக் குழந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கக் கூடும். கருணையேயில்லாத ஒரு இராணுவ வீரன் அவர்களை துப்பாக்கி கொண்டு குறி பார்க்கிறான். தனது உயிர் முதலில் போகட்டும் என்று அந்தக் குழந்தையை அவனிடமிருந்து முழுமையாக மறைத்திருக்கிறார். இன்னும் ஒரே வினாடிதான். அவர் சுருண்டு விழப் போகிறார்.
இரண்டு படங்களிலிருக்கும் பரிதாபப்பட்ட ஜீவன்களின் கடைசி வினாடி மனநிலையை நினைத்து பார்க்கவே திகிலூட்டக் கூடியதாக இருக்கிறது. சுடப்படுவதற்கு முன்பான மனநிலையில் அந்த மனிதன் எதை நினைத்திருப்பார்? அந்தக் கண்கள் யாரைப் பார்க்கின்றன? அந்தப் பெண்மணி தனது கடைசி வினாடி பயத்தில் என்ன செய்திருப்பாள்? அந்தக் குழந்தை கண்களை மூடியிருக்குமா? அல்லது தனது அம்மா இறப்பதை பார்த்துவிட்டு மூச்சடைத்து போயிருக்குமா? இன்னும் ஏகப்பட்ட கேள்விகளை நாமாகவே உருவாக்கிக் கொள்ளலாம்.
ஆனால் எப்பொழுதுமே மரணம் சார்ந்தும் தற்கொலை சார்ந்தும் எழும் கேள்விகளுக்கு பதிலே கிடைப்பதில்லை. இந்த மரணங்கள் உண்டாக்கும் கேள்விகளும் அதே வகைதான்.