Apr 13, 2013

சூப்பர் சீனியர்

பள்ளியில் ஒரே ஒரு வருடம்தான் சீனியர். 1998 ஆம் ஆண்டு +2 முடித்துவிட்டு, 2002 ஆம் ஆண்டு பி.இ. முடித்தவர். இப்பொழுது ஐ.டி.நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். கணக்குப் பார்த்தால் பதினோரு வருட அனுபவம்தான். இந்த அனுபவத்திற்கு ஐ.டி நிறுவனத்தில் டீம் லீடராக இருக்கலாம் அல்லது அதிகபட்சமாக இளநிலை மேலாளராக இருக்கலாம். ஆனால் இவர் முதுநிலை மேலாளராக இருக்கிறார். அட்டகாசமான பதவி. அதுவும் சோட்டா மோட்டா நிறுவனத்தில் இல்லை. உலகின் மிகப் பெரிய நெட்வொர்க்கிங் நிறுவனத்தில். 

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அவர் தனித்துவமானவர்தான். எத்தனை கூட்டமாக இருந்தாலும் தன்னை கவனிக்க வைத்துவிடக் கூடிய கில்லாடி. கொஞ்சம் முந்திரிக்கொட்டையும் கூட. அப்பொழுது எட்டாவது அல்லது ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தோம். பள்ளி ஆண்டுவிழாவில் நாடகம் போடுவதற்கான அணியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். நடராஜன் என்ற தமிழ் பண்டிட்தான் தேர்தெடுக்கும் குழுவின் தலைவர். சீனியரும் ஒரு குழுவை அழைத்து வந்திருந்தார். சீனியர் டீமை அழைத்தார்கள். எடுத்தவுடனே “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை அண்டர்வேரை...” என்று குறளை கொலை செய்தார்கள். முதல் முறை வாத்தியார் சரியாக கவனிக்கவில்லை போலிருக்கிறது. வெற்றிலை எச்சிலை உமிழ்ந்துவிட்டு “திரும்பச் சொல்” என்றார். சீனியர் படு உற்சாகமாக அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். அவ்வளவுதான் அடுத்த கால் மணி நேரத்துக்கு வாத்தியாரும் சீனியரும்  ஆலமரத்தை சுற்றிச் சுற்றி கபடி விளையாடினார்கள். கடைசியில் வாத்தியார்தான் வென்றார். சீனியரை ஒரு மூலையில் தள்ளி மிதித்து பிழிந்துவிட்டார். அந்த அளவிற்கு சீனியர் தனித்துவமானவர்+ஆர்வக் கோளாறு.

என்னதான் தனித்துவமானவர் என்றாலும் பத்து வருடங்களில் ஐ.டி நிறுவனத்தில் இவர் அடைந்திருக்கும் வளர்ச்சி அசுரத்தனமானதாக இருக்கிறது. ஒரு பொது நண்பரின் மூலமாக பல வருடங்களுக்கு பிறகாக கடந்த மாதத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டோம். நிறைய மாறியிருக்கிறார். இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. செய்து கொள்ளும் ஐடியாவும் இல்லை என்றார். காரணம் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை.

இப்பொழுது மிக அற்புதமாக பேசி பழகியிருக்கிறார். பேசுவதன் மூலமாகவே ஒருவரை ‘மெஸ்மெரிசம்’ செய்வது எப்படி என்ற கலையை கற்றுக் கொண்டவரைப் போல பேசிக் கொண்டேயிருக்கிறார். நாம் ஏதாவது பதில் பேசத் துவங்கினால் கண்களை ஊடுருவுகிறார். நம் மூளையை கண்களின் வழியாகவே வாசித்துவிடுவாரோ என்று பேச்சை ‘கட்’ செய்துவிட்டு அவர் பேசுவதை கவனிக்கச் செய்துவிடுகிறார். கார்போரேட் கலாச்சாரம் சொல்லித்தரும் ஒரு முக்கியமான கலை- தன்னை மற்றவர்கள் நம்பச் செய்வது குறித்தானது. “என்னை விட்டால் இந்த உலகத்தில் ஆளே இல்லை” என்று பேசுவார்கள். ஆனால் பேச்சோடு நின்று கொள்ளாமல் அதை நம்பவும் வைத்துவிடுவார்கள். சீனியரும் அப்படியான ஆசாமியாக உருமாறியிருக்கிறார். அவர் எப்படியிருந்தாலும் சரி, அவரது வளர்ச்சியின் சூட்சுமத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பினேன். ஆனால் கொஞ்ச நேரம் பேசிய பிறகு இதையெல்லாம் பேச்சின் மூலம் கற்றுக் கொள்ள முடியாது என்று தோன்றியது. ரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும்.

சீனியரின் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டது. இந்தியாவில் அதன் கிளை முதன்முதலாக தொடங்கப்பட்ட போது சேர்ந்த பத்து பதினைந்து ஆட்களில் இவர்தான் Junior most. ஆரம்பத்தில் அத்தனை பேருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்திருக்கிறார். அங்கு பணிபுரிந்த ஒவ்வொருவருமே இவரது வளர்ச்சியில் ஏதாவது ஒருவிதத்தில் பங்களிக்க ஆரம்ப காலத்திலேயே மடமடவெனெ மேலே ஏறிவிட்டார். 

நிறுவனமும் ஒன்றும் சளைத்ததில்லை. இந்தியாவில் நிறுவனத்தை நன்றாக காலூன்றச்  செய்ய வேண்டும் என அந்த நிறுவனமும் இவர்களைத் தாங்கி தாங்கி வளர்த்திருக்கிறது. சகலமும் சாதகமாக இருக்கவே சீனியரும் படிப்படியாக நிறுவனத்தின் பல செயல்பாடுகளை தனது கட்டுப்பாட்டிற்கு எடுத்து வந்துவிட்டார். இப்படி நிறுவனம் வளர வளர இவரும் வளர்ந்து கொண்டே இருந்திருக்கிறார். ஏதோ ஒரு வருடத்தில் பெருந்தலைகள் நிறையப் பேர் நிறுவனத்தை விட்டு விலகிவிட இவருக்கு டபுள் ப்ரோமோஷன் கொடுத்துவிட்டார்கள். அதன் பிறகு அடித்த காற்று இவரை இன்றைய உச்சாணிக் கொம்பில் நிறுத்தியிருக்கிறது. வெறும் காற்று மட்டும் என்று சொல்ல முடியாது. கார்போரேட் நிறுவனங்களுக்கு என்னதான் செல்லப்பிள்ளையாக இருந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் திறமை வேண்டும். இல்லையென்றால் கறிவேப்பிலையாக தூக்கி வீசிவிடுவார்கள்.

“கம்பெனிக்குள்ள பாலிடிக்ஸ் இல்லையாண்ணா?” என்றேன். சிரித்தார்.

“அதெப்படி இல்லாம இருக்கும். நாற்பது ஐம்பது வயசு ஆளுங்களுக்கு முப்பது வயசு பையனோட சரி சமமா உட்கார்ந்து பேசவே பிடிக்காது. எப்படியாச்சும் மட்டம் தட்டுவாங்க. நாம நல்லா வேலை செய்யலைன்னா கேட்கவே வேண்டியதில்லை- எப்படியும் நம்மை முடிச்சுடுவாங்க. நல்லா வேலை செஞ்சா ‘சரியில்ல’ன்னு சொல்லுவாங்க” என்றார்.

நான் “ம்ம்” கொட்டிக் கொண்டேன்.

“ஒரே வயசுக்காரங்களும் அப்படித்தான். நம்ம வயசுக்காரன், நம்ம கூடவே சுத்திட்டு இருந்தவன் நம்மை விட்டுட்டு மேலே போறான்னு தெரிஞ்சா டார்ச்சராகத்தான் செய்வாங்க” என்று பேசிக் கொண்டிருந்தார்.

இதற்கும் ஒரு “ம்ம்” சொல்லிக் கொண்டேன்.

“ஆனா கான்செப்ட் ரொம்ப சிம்பிள். ஆபிஸ்ல மட்டும் இல்ல எங்கேயுமே நாம ஒண்ணு செஞ்சா அஞ்சு பேரு பாராட்டினா பத்து பேரு தூத்துவாங்க. பத்து பேர் என்ன சொன்னாலும் கண்டுக்காம விட்டுடணும். அஞ்சு பேரு என்ன சொன்னாலும் காது கொடுத்து கேட்கணும்” என்றார்.

புரிந்த மாதிரியும் இருந்தது புரியாத மாதிரியும் இருந்தது. தலையாட்டிக் கொண்டேன்.

சிக்கன் பிரியாணிக்கு அவர்தான் பில் கொடுத்தார். நான் ஃபார்மாலிட்டிக்குக் கூட பர்ஸை வெளியே எடுக்கவில்லை. என்ன பிரச்சினைக்கும் சொல்யூசன் வைத்திருக்கும் மனிதரை முதன் முதலாக பார்ப்பது போன்ற ஒரு பிரமையை உருவாக்கியிருந்தார். பீடாவை எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம்.

பார்க்கிங்கில் அவர் தனது காருக்குள் போவதற்கு முன்பாக கேட்க வேண்டும் என்று தோன்றியது. 

“அம்மா அப்பா ஊர்லேயே இருக்காங்களாண்ணா?” என்றேன்.

“இல்ல மணி. காலேஜ் படிக்கும் போது அப்பா இறந்துட்டாரு. அம்மா ரெண்டு வருஷம் முன்னாடிதான் இறந்தாங்க. பெங்களூர்லதான்” என்றார். அதைச் சொன்னபோது அவரிடம் பெரிய வருத்தமும் இல்லை சலனமும் இல்லை. பெங்களூரில் தனி ப்ளாட், தனிமை என்று தனிக்கட்டையாகவே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். அதையேதான் அவரும் விரும்புகிறார் போலிருந்தது. 

“எப்படி தனியா இருக்கீங்க?” என்றேன். 

“எல்லோரும் கூட இருந்தா நாம தனியா இல்லைன்னு அர்த்தம் இல்லை, யாருமே கூட இல்லைன்னாலும் நாம தனியா இருக்கோம்ன்னு அர்த்தம் இல்லை” என்றார். அதில் ஒரு நக்கல் கலந்திருந்தது.

“ஸ்ஸ்ப்பா...முடியல” - என்னையும் மீறி சொல்லிவிட்டேன்.

“போடா டேய்...கேள்வி கேட்காம லைஃபை எஞ்சாய் பண்ணிப்பழகு” என்று சொல்லிய படியே வண்டியை எடுத்தார். 

வழிந்து கொண்டு நின்றிருந்தேன். 

அவர் கிளம்பிவிட்டார். சில கணங்கள் அவரது காரை பார்த்துக் கொண்டிருந்தேன். ரொம்ப சிம்பிளாக சில நல்ல விஷயங்களைச் சொல்லிவிட்டு போயிருப்பதாகத் தோன்றியது.