Apr 12, 2013

சப்ப்ப்ப்ப்...


நேற்று ஊருக்கு போக வேண்டியிருந்தது. யுகாதி அல்லவா? உள்ளூர் விடுமுறை. அதனால் கிளம்பிவிட்டேன். ஊருக்கு போய்ச் சேரும் போதே மாலை நான்கு மணி ஆகிவிட்டது. பெங்களூரே காய்கிறது. தமிழ்நாட்டைக் கேட்கவும் வேண்டுமா? வியர்வை வழிந்து கண்களை எரித்து, வாயில் உப்புக்கரித்து ஒரு வழியாக்கிவிட்டது. ஊரில் அரை மணி நேரத்து வேலைதான். முடித்து விட்டு உடனே கிளம்பினால் வீட்டிற்கு வந்து சேரும் போது இடுப்பை  ‘காணாமல் போனவர்களின் பட்டியலில்’ சேர்க்க வேண்டியதாகிவிடும் என்பதால் ஆன்லைனில் டிக்கெட்டை பதிவு செய்துவிட்டு ஊர் சுற்றக் கிளம்பிவிட்டேன். இந்த மாதிரி ஊருக்கு போகும் போது ஆன்லைனுக்கு வராமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் விதி யாரை விட்டது? என்னையும் பிடித்துக் கொண்டது. அதைத் தனியாக சொல்கிறேன்.

திருப்பூரில்தான் தனியார் பேருந்து ஏற வேண்டியிருந்தது. பத்து மணிக்கு என்று டிக்கெட்டில் போட்டிருந்தால் குறைந்தபட்சம் அரை மணி நேரம் தாமதமாக வரலாம் என்றாலும் பத்து மணிக்கெல்லாம் வந்து சேர்ந்துவிட்டேன். பேருந்தின் தலை மீது சரக்குகளை ஏற்றிக் கட்டிக் கொண்டிருந்தார்கள். லாரியில் ஏற்ற வேண்டிய அளவுக்கு சரக்கு இருக்கும். இந்த மாதிரியான ஆம்னி பேருந்துகளில் பயணிகள் மூலம் வரும் வரும்படியை விடவும் சரக்குகளின் மூலம் வரும் வரும்படி அதிகமாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த சரக்குகள் வழியாக கள்ளக்கடத்தலும் நடப்பது உண்டாம். 

சரக்கு சரக்கு என்றால் வேறொரு சரக்கும் ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. பேருந்து நின்றிருந்த சாலையிலேயே ஒரு டாஸ்மாக் ஜெகஜோதியாக இருந்தது. தீபாவளி சமையங்களில் துணிக்கடையில் இருப்பதைப் போல அவ்வளவு கூட்டம். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மட்டும்தான் சீஸன் பற்றிய எந்தக் கவலையும் இல்லாத கடை போலிருக்கிறது. இரவு பத்து மணி ஆனதும் கடையை பூட்டி மைனர் குஞ்சுகளை வெளியே அனுப்பிவிடுகிறார்கள். பிறகுதான் கச்சேரியே ஆரம்பமாகிறது. வெளியே பல பஞ்சாயத்துகள் நடக்கத் துவங்குகின்றன. நான் பேருந்தில் ஏறிக் கொண்டேன்.

பேருந்தில் அவ்வளவு ஸீட்களும் நிரம்பவில்லை. ஆங்காங்கே இடம் காலியாக இருந்தது. இருந்த கூட்டத்தில் ஒரேயொரு பெண். அழகாக இருந்தாள். ஜன்னலோர ஸீட்டில் அமர்ந்திருந்தாள். மேலே சரக்குகளை கட்டி முடித்த பிறகு பேருந்துக்குள் ஒவ்வொருவராக ஏறினார்கள். ஒரு பையன் கையில் பேப்பரை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் அவரவர் இடத்தில் அமர்ந்திருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே வந்தான். ஒருவர் மட்டும் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமராமல் இடம் மாறி அமர்ந்திருந்தார். பையன் இடம் மாறி அமரச் சொன்னான். காற்று வராது, வண்டி குலுங்கும் என்று ஏதேதோ காரணங்களைச் சொன்னார்.  “சார் சாப்ட்டிருக்கீங்களா?” என்றான்.  ‘தண்ணியடித்திருக்கிறீர்களா’ என்று அர்த்தம். அவர் வழிந்தார். பிரச்சினை எதுவும் வராது என்று அவனை நகரச் சொல்லி சைகை காட்டினார். அவன் பெரிதால அலட்டிக் கொள்ளவில்லை. அடுத்த ஸீட் ஆசாமியிடம் நகர்ந்துவிட்டான்.

சாப்பிட்டிருந்தவருக்கு முப்பத்தைந்து வயது இருக்கலாம். டிப் டாப் ஆசாமி. நீல நிற சட்டையும், ஜீன்ஸூம் அணிந்திருந்தார். சாப்பிட்டிருந்ததாலோ என்னவோ வியர்வை பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. ஏதோ பாடத்துவங்கினார்.அவரைப் பற்றிய பிரக்ஞையில்லாமல் ஆளாளுக்கு அவரவர் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். என்னிடம் 1928 ஆம் ஆண்டில் முதன் முதலாக அச்சிடப்பட்ட  “யாழ்ப்பாண வைபவ விமர்சனம்” என்றொரு புத்தகம் இருந்தது. யாழ்ப்பாணத்தின் வரலாற்று நூல். 1920 ஆம் ஆண்டுகளில் புழக்கத்தில் இருந்த மொழியமைவு, அதே Font. வாசிப்பதற்கு மிகுந்த சிரமமாக இருந்தது. ஆனால் நான்கைந்து பக்கங்களை கஷ்டப்பட்டு புரட்டிய போது விளக்குகளை அணைத்தார்கள். புத்தகத்தை பைக்குள் வைத்துவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்த போது பெருமாநல்லூரை தாண்டிக் கொண்டிருந்தோம். தூங்கத் துவங்கிவிட்டேன்.

எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. பேருந்துக்குள் விளக்கு எரியத் துவங்கியது. கசகசவென சப்தம் கேட்டது. நான்கைந்து பேர்கள் சாப்பிட்டவரை சூழ்ந்திருந்தார்கள். மற்றவர்கள் ஓணான்களை போல இருந்த இடத்தில் இருந்தவாறே தலையை உயர்த்தி பார்க்கத் துவங்கினார்கள். இன்னமும் சிலருக்கு தூக்கம் கலையவில்லை. நானும் சாப்பிட்டவரின் அருகில் சென்றேன். சாப்பிட்டவர் அந்த பெண்ணிடம் ஏதோ சில்மிஷம் செய்துவிட்டாராம். அவள் அழுது கொண்டிருந்தாள். என்ன செய்தார் என்று தெரியவில்லை. சுற்றியிருந்த நான்கைந்து பேர்களில் சிலர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லலாம் என்றார்கள். 

“காசு கொடுத்துட்டு தப்பிச்சுடுவான் சார்” என்றார் யாரோ ஒருவர்.

“பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கான்” என்றார் இன்னொருவர்.

சாப்பிட்டவன் “அப்ழித்ஜான்ன்ன் பழ்வேண்ண்ண்” என்று ஏதோ குழறினான்.

ஒருவர் அடிப்பதற்காக எத்தனித்தார். “செத்துட போறான்”என்று மற்றொருவர் தடுத்துவிட்டார். இத்தனை ரகளையிலும் பேருந்து போய்க் கொண்டிருந்தது. சாப்பிட்டிருந்தவன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் உளறிக் கொண்டே வந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் சுற்றியிருந்தவர்கள் மீது வாந்தியெடுப்பது போன்ற பாவனையைச் செய்தான். ஆளாளுக்கு பம்மத் தொடங்கிவிட்டார்கள். அந்த இரவில் அவன் வாந்தியின் நாற்றத்தோடு பெங்களூர் வரைக்கும் வருவது யாருக்குமே சாத்தியப்படாத காரியம்தான். அந்தப் பெண்ணை இடம் மாறி அமரச் சொன்னார்கள். அந்தப் பெண்ணும் அமர்ந்து கொண்டாள்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் “ழேய்ய்ய்ய்...டிரைவர் வண்ழியை நிறுத்து” என்றான். அவனை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றாலும் தூக்கத்தை கெடுப்பதாக “ப்ச்ச்” சப்தங்கள் எழும்பின. அடுத்த சில நிமிடங்களில் அழிச்சாட்டியத்தை அதிகரித்தான். “அடிச்சிடுவீங்களாடா? நான் யார் தெழியுமா?” என்றெல்லாம் டயலாக் அடித்துக் கொண்டிருந்தான். 

அடுத்த சில நிமிடங்களில் வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு டிரைவர் அவனிடம் வந்தார். அனேகமாக சேலம் தருமபுரிக்கு இடையிலான மலைப்பகுதியாக இருந்திருக்கக் கூடும். சுற்றிலும் அப்படித்தான் தெரிந்தது. 

டிரைவரும் ஒரு குட்டி மலையாகத்தான் தெரிந்தார். நீல நிற பைஜாமா அணிந்திருந்தார். பேருந்தில் இருந்தவர்கள் “இறக்கிவிட்டுடுங்க சார்” என்றார்கள்.

“பாவங்க...இந்த ஃபாரஸ்ட்டில் இறக்கினால் ரொம்ப சிரமப்படுவான்” என்றார். அப்பவும் அவன் அமைதியாக இருக்கவில்லை. “இறக்கிவிட்டுட்டு போய்டுவீங்களா?” என்றான். டிரைவர் என்னமோ சொல்லிக் கொண்டிருந்தார்.  அவன் கேட்பதாகவே தெரியவில்லை.பதிலுக்கு பதில் பேசிக் கொண்டிருந்தான். எழ முடியாமல் எழுந்து நின்று ஏதோ சொல்லத் துவங்கினான். டிரைவருக்கு கோபம் வந்தது அவரது முகத்திலேயே தெரிந்தது.

“சப்ப்ப்ப்ப்” ஓங்கி ஒரு அறை விழுந்தது. சுருண்டு விழுந்தான். அவன் சுதாரிப்பதற்குள் இன்னொரு குத்து மூக்கு மீது இறக்கினார்.

“பஸ்ல இத்தனை பேரு இருக்காங்க இல்ல? மூடிட்டு இருக்க முடியாதா? சாவடிச்சுடுவேன்...யாருகிட்ட?” என்றவாறே இன்னொரு அறையும் விட்டார். 

இப்பொழுது உளறுவதற்கு பதிலாக ஊளைவிடத் துவங்கியிருந்தான். “வாயை மூடுடா..” என்று இன்னொரு அதட்டு அதட்டினார். பேருந்தே ஒரு கணம் அதிர்ந்து ஒடுங்கியது. அவ்வளவுதான். அடங்கிவிட்டான். எந்த சப்தமும் இல்லாமல் கிடந்தான். 

விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆளாளுக்கு தூங்கியிருந்தார்கள்.  அதிகாலையில் பெங்களூருக்குள் நுழைந்தவுடன் பேருந்துக்குள்  மீண்டும் விளக்குகள் எரியத்துவங்கின. சாப்பிட்டவரைப் பார்த்தேன். பெட்டிப்பாம்பு போல சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தான். முன்வரிசையில் அந்தப் பெண்ணும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.  எனது நிறுத்தம் வந்தது. இறங்கும் போது டிரைவரை பார்த்து சிரித்தேன். அவரும் மெதுவாக சிரித்து வைத்தார். பெங்களூர் காற்று சிலுசிலுத்துக் கொண்டிருந்தது.