Apr 11, 2013

கவிதையின் கால் தடங்கள்

அந்திமழை.காம் தளத்தில் செல்வராஜ் ஜெகதீசன் நவீன கவிதைகளை தொகுத்து ஒரு தொடர் எழுதி வருகிறார். தொடரின் பதின்மூன்றாம் அத்தியாயத்தில் எனது சில கவிதைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நன்றி.

நிசப்தத்தை வாசிப்பவர்களின் பார்வைக்காக இங்கேயும் பகிர்கிறேன். 

                                                           ****

“ஒரு கவிதை உங்களை ஏதாவது செய்ய வேண்டும்.
சந்தோசப்படுத்த வேண்டும் அல்லது கலவரப்படுத்த வேண்டும்.
குறைந்த பட்சம் வாழ்வைப் பற்றி யோசிக்க வைக்கவாவது வேண்டும்.”
                                                                                                        -விக்ரமாதித்யன்

                                            வா. மணிகண்டன் கவிதைகள்

“ஆத்மாநாம், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் என் கவிதைக்கான தடத்தினைப் பதித்து வைத்திருக்கிறார்கள். இந்தத் தடத்தில் எனக்கான தனித்துவத்தோடு நகர்தல் என்பது என் கவிதைக்கான சவாலாக இருக்கிறது.”
                                                                                                         - வா. மணிகண்டன்.

கவிதைகள் குறித்த கட்டுரைகளைத் தேடும் போது எதிர்ப்பட்டது வா. மணிகண்டனின் வலைப்பூ: www.nisaptham.com.  அவரது கவிதைகளோடு. சுந்தர ராமசாமி, சுகுமாரன், கலாப்ரியா உள்ளிட்ட நிறைய ஆளுமைகள் குறித்த நல்ல பல கட்டுரைகள் கொண்ட மணிகண்டனின் இந்த வலைப்பூ, எந்த ஒரு கவிதை ஆர்வலனும் கண்டிப்பாக படித்து இன்புற வேண்டுமென்று சிபாரிசிக்கிறேன்.


வா. மணிகண்டன் கவிதைகளில் சில:

(01) 
பிரியம் படிந்த வாக்குமூலம்

இன்று -
குளிக்கும் போதும்
வலது காலின் பெருவிரலில்
ஒரு கல் தடுக்கிய நொடியும்
உன்னை நினைக்கவில்லை.

நினைத்ததை விட
நினைக்காத நேரத்தை
சொல்வது
எளிதெனக்கு.


(02)
ஆத்ம திருப்தி

தட்டானின் வாலைப்பிய்த்து
புல் செருகி பறக்க விடுங்கள்.
அதற்கு ராக்கெட் என்று பெயர்.

பொன்வண்டின் கழுத்தில்
நூலினைக் கோர்த்து கட்டி வையுங்கள்
அடுத்த இரவில் வண்ண முட்டைகளிடும்.

ஈர மணலில் கிடக்கும்
நாயின் மீது ரத்தம் தெறிக்கக் கல்லெறியுங்கள்
வழியில் ஊளையிட்டு ஓடும்.

பெண்ணொருத்தி குளிக்கும்போது
அவளுக்குத் தெரியும் படியாக எட்டிப்பாருங்கள்
அவள் திட்டுவது காதில் விழட்டும்.

கோழியின் கழுத்தை
வட்டமாகத் திருகி கொல்லுங்கள்
ரத்தம் வெளியேறாத கறி
சுவை மிக்கது.

தேடுங்கள்.

ஆத்ம திருப்தி எப்படி வேண்டுமானாலும்
கிடைக்கும்.

(03)
சில கணங்கள்

சில கணங்கள்
விருப்பமற்றுக் கடக்கின்றன.

ஸ்பரிசமாக/
ஆழமான கீறலாக

அல்லது

அம்மாவின்
துளிக் கண்ணீராக.


(04) 
நீ இல்லையென்னும் வெறுமை

நீ இல்லாத என் உலகத்தில் எதுவும் மாறப்போவதில்லை.
உனக்கான என் துக்கம்
ஏதாவது ஒரு நிலத்தில் அழலாம்
உனக்கான என் பிரியம்
என் விரல்களைப் பற்றிப் புலம்பலாம்
உன் பதிலுக்கான என் கேள்விகள்
செல்வதற்கான இடம் தெரியாமல் திணறலாம்.

உன்னோடு பேசாத தினம் அழிந்து விடப் போவதில்லை.
என்றாலும்
நீ இல்லையென்ற வெறுமையை என்ன செய்வதென்று
யோசிக்கிறேன்.

(05)
மழைச்சாலை

மழை நனைத்த
சாலையில்
விழுகிறது விளக்கொளி.

நசுக்கப்பட்ட
மலரொன்றின்
முனகலையும் கறையையும்
தவிர
வேறெதுவுமில்லை.

(06)
கரைந்த சொற்கள்

இந்தக்
குளத்தின் ஆழத்தில் -
விறைத்த பிணத்தின்
விழிகளெனக் கிடக்கின்றன.

பேசிக் கரைத்த
சொற்கள்.

(07)
எழுதிவிட முடியாத கவிதை

ஒவ்வொரு கணமும்
கனக்கிறது

உடைக்கவே முடியாத
மௌனம்.
மின்னல் முறிவது போல்
வந்து செல்லும்
முத்தத்தின் ஞாபக
மிச்சங்கள்.
மடங்கிய காகித நுனிக்குள்
சிக்கியிருக்கும்
குங்குமத் துகள்.


யாராலும் எழுதிவிட முடியாத
ஒரு கவிதை இன்னும் இருக்கிறது.

(08)
திசைகளைச் சேகரிப்பவன்

அறைக்குச் செல்லும் வழியெங்கும்
சப்தங்களைப் பொறுக்கிக் கொள்கிறேன்
ஈரானியச் சாயல் பெண்ணொருத்தியின்
சொற்கள்
மஞ்சள் வாலாட்டிக் குருவியின் கீச்சொலி
கொஞ்சம் சைரன்
மீதத்திற்கு
டீக்கடைப் பாட்டு

எப்படியும் சேர்ந்து விடுகின்றன சப்தங்கள்.

சேர்த்த சப்தங்கள் மீது கவனம் பொருத்தி
அவை
தொலைந்துவிடாமல் செல்கிறேன்

ஞாயிற்றுக் கிழமையின் பகலொன்றில்
பறக்க
வேறு திசைகள் என்னிடமில்லை.


(09)
பெருமழை

துரோகமும்
அவநம்பிக்கைகளின் கசப்புகளும்
வழிந்துகொண்டிருக்கும்
என் வீட்டின் மீது தான்
பெய்துபோனது
காதல் கடவுளின்
நேற்றைய
பெருமழை.

(10)
அடர்வனப் பறவைகள்

இந்த
அடர்வனத்தின்
ஒவ்வொரு பறவையும்
உங்கள்
அம்பு நோக்கியே
வரும் என்கிறீர்கள்
உங்களைவிடவும்
அந்தப்
பறவைக்குத் தெரிந்திருக்கிறது
வானம் பெரிதென.

(11)
 ஒரு சொல் அல்லது வாக்கியம்

நேற்று காலை 10.30 மணியளவில்
இறந்ததாகக் கருதப்படும்
சௌமியாவைக்
குளிர்ந்த மெழுகெனப்
பிணவறையில்
கிடத்தி வைத்திருக்கிறார்கள்
இரத்தம் வழிந்திருக்கவில்லை
என்றாலும்
முகத்தில் ஈக்கள் அமர்ந்திருக்கின்றன
மாத்திரைகளோ
விஷப் புட்டியோ
பூச்சி மருந்தோ
இல்லாத
உள்ளறையில்
நாற்காலியில் அமர்ந்தவாறு
கிடந்தவளை
யாரேனும் கொன்றிருக்கலாம்
எனச் சந்தேகிக்கிறார்கள்

பிணவறைக்கு வெளியில்
மண்டை உடைபடும் ஓசை
கேட்டுக்கொண்டிருந்தபோது
அவளோடான
முதல் பரிசம்
முதல் முத்தம்
முதல் சண்டையை
நினைத்துக் கொண்டிருக்கிறான்
அவன்
விசாரிக்க வேண்டும்
என
அழைக்கிறார் காவலர்
ஒரு காகத்தையும்
ஒரு ஓணானையும்
பார்த்துக்கொண்டே
பின் தொடர்கிறான்
எப்பொழுதும்
ஒரு சொல்
அல்லது
ஒரு வாக்கியம்தான்
உறவின் விரிசலுக்குக் காரணமாகிறது
என
சௌமியா சொன்னதைத்
திரும்பத் திரும்ப
நினைத்துகொண்டு.