Mar 31, 2013

குத்துங்க எசமான் நல்லா குத்துங்க



வீட்டைச் சுற்றி சுற்றி “புஸ்ஸ்ஸ்ஸ்” “புஸ்ஸ்ஸ்” என்று சப்தமாக கேட்கிறது. விடிந்தால் இந்த சப்தம்தான் சுப்ரபாதம். தூங்கச் செல்லும் போதும் இதுதான் தாலாட்டு. இந்தச் சப்தங்களிலிருந்து இப்போதைக்கு தப்பிக்க முடியாது போலிருக்கிறது. வேறொன்றுமில்லை. பெரிய அனகோண்டாக்கள் பூமியை பதம் பார்க்கின்றன. Borewell என்ற பெயரில் குத்தி குதறுகிறார்கள். இந்த ஊரில் பூமியின் உடல் முழுவதும் பொத்தல்களால் நிரப்படுகிறது.

யாரையும் விரல் நீட்டி குற்றம் சாட்ட முடிவதில்லை. காவிரி காய்ந்து கிடக்கிறது. சுற்றிச் சுற்றி ஏரிகள் வறண்டு கொண்டிருக்கின்றன. பல வருடங்களுக்குப் பிறகாக வெப்பமானியின் அளவுகள் எகிறிக் கொண்டிருக்கிறது. கடும் வெப்பம் தண்ணீர் பிரச்சினையை தலைவிரித்து ஆடச் செய்கிறது. காசு கொடுத்து வாங்க வேண்டுமானால் ஒரு ட்ராக்டர் டேங்க் தண்ணீருக்கு அறுநூறு ரூபாய் வரை விலை சொல்கிறார்கள். வழியே இல்லாமல் போர்வெல்காரர்களை அழைக்கிறார்கள்..

ஒரு வருடத்திற்கு முன்பாக ஐந்நூறு அடி தோண்டினால் தண்ணீர் வந்த இடங்களில் இன்று ஆயிரம் அடிகளைத் தாண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் அடிகள் தோண்டிய இடங்களில் இப்பொழுது சுத்தமாக நம்பிக்கை இழந்துவிட்டார்கள். கொஞ்ச நஞ்ச நம்பிக்கையோடு தோண்டும் அத்தனை போர்வெல்லும் வெற்றி என்றெல்லாம் சொல்ல முடிவதில்லை. பல குழிகளில் தண்ணீரே வருவதில்லை. சில குழிகள் ஆறுமாதங்களுக்கு பிறகாக முற்றாக வறண்டுவிடுகிறது. 

ஒரு வீட்டில் போர்வெல் போட்டிருக்கும் இடத்திலிருந்து பத்து அடி தள்ளி பக்கத்துவீட்டுக்காரன் தோண்டுகிறான். பத்து அடி தூரத்துக்கு ஒரு குழியைத் தோண்டினால் பூமாதேவியும் என்னதான் செய்வாள்?

வெயில் அடித்து நொறுக்கும் ஊர்களில் நிலத்தை ஈரமாக்கும் அளவுக்குக் கூட மழை இருப்பதில்லை. இருந்த மரங்களையெல்லாம் சாலைகளை அகலமாக்குகிறோம் பேர்வழி என்று வெட்டி சாய்த்தாகிவிட்டது. மிச்ச மீதி இருந்த மரங்களும் செடிகளும் வறண்டு கிடக்கின்றன. பசுமை போர்த்தியிருந்த அக்கம்பக்கம் மலைத்தொடர்கள் அத்தனையும் காய்ந்து சருகுகளால் நிரம்பிக் கிடக்கின்றன. இப்பொழுதெல்லாம் ஒரு மாபெரும் மலையை எரித்து சாம்பலாக்குவதற்கு ஒரேயொரு வத்திக்குச்சி போதுமானதாக இருக்கிறது. அந்த அளவிற்கு காய்ந்து கிடக்கிறது.

இந்த வருடம் மழை எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. சென்ற வருடம் பெய்யாத மழையின் கோரம் இந்த பங்குனி சித்திரையில் படம் காட்டுகிறது. ஒருவேளை இந்த வருடமும் மழை பொய்த்துவிடுமானால் அடுத்த வருட பங்குனி சித்திரையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அரசாங்கங்களுக்கு நகரங்கள் செல்லப்பிள்ளைகள். ஓரளவுக்கு சரிகட்டிவிடுவார்கள். ஆனால் யோசித்து பார்த்தால் தங்களின் செல்லப்பிள்ளைகளுக்காக கிராமங்களின் அடிவயிற்றில்தான் கையை வைப்பார்கள். அங்கிருக்கும் தண்ணீரை உறிஞ்ச முடியும் அளவிற்கு உறிஞ்சி நகரங்களுக்கு கொடுத்துவிடுவார்கள். கிராமங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. 

ம்ம்.விடுங்கள். இதையெல்லாம் ஆயிரம் பேர் பேசியாகிவிட்டது. வரித்து வரித்து எழுதிவிட்டு டாய்லெட்டுக்குள் புகுந்து Flush செய்தால் ஆறு லிட்டர் தண்ணீர் குழிக்குள் போகப் போகிறது. அவ்வளவுதான் நம் விழிப்புணர்வு.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக பக்கத்துவீதியில் போர்வெல் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரே இடத்தில் தொடர்ந்து குத்துகிறார்களே எத்தனை ஆழம்தான் போட்டிருப்பார்கள் என்று விசாரித்துவரலாம் என்று போனால் வெற்றிகரமாக ஆயிரத்து நூறு அடிகளைத் தாண்டிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் பக்கத்தில் போய் தண்ணீர் வருகிறதா என்று பார்க்க விரும்பினேன். தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் நான்கு வயது சிறுவன்  கூட அதைவிட வேகமாகவும் அதிகமாகவும் ஒண்ணுக்கடிப்பான் என்று தோன்றியது.