Mar 14, 2013

காலேஜ் பசங்கன்னா கடலை போடுறவங்கன்னு நினைச்சீங்களா


ஸ்ரீலங்காவின் போர்க் குற்றங்களை முன்வைத்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பித்த போது அவர்களின் மீது அவ்வளவாக நம்பிக்கையில்லை. இந்த போராட்டங்களை இரண்டொரு நாளைக்கு விடுமுறை எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு ஓய்ந்துவிடுவார்கள் என்று தோன்றியது. அதுவும் இப்பொழுது தேர்வுக்காலம் வேறு. Internal, Practical என ஆயிரத்தெட்டு காரணங்களை காட்டி துள்ளும் மாணவர்களை ஒடுக்கிவிடுவார்கள் என்றல்லாம் அசால்ட்டாக இருந்ததை மறுக்க முடியாது. 

நமது வரலாறும் இந்த எதிர்மறை எண்ணங்களுக்கு வலு சேர்ப்பதாகவே இருந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு மாணவர்கள் பெரிய அளவில் போராடியதாகத் தெரியவில்லை. அதற்கு ஓரிரண்டு காரணங்கள்தான் எனக்குத் தெரிகிறது. அதில் முக்கியமானது இந்தச் சமூகம் மொன்னையாகிவிட்டது என்பது.  “எவன் எப்படிப் போனால் என்ன..நம்ம பொழைப்ப பார்ப்போம்” என்ற மிடில்கிளாஸ் மனோபாவம் கிட்டத்தட்ட பரவலாகிவிட்டது. மாணவர்கள் போராட முயன்றாலும் கூட போராட்டத்தை ‘ஓட்டு பொறுக்கி’ அரசியலாக்கி அநியாயமாக சிதைத்துவிடுவார்கள். மீறிப் போராடினாலும் கூட அரசாங்கமும் கல்லூரி நிர்வாகங்களும் மூர்க்கத்தனமாக வேட்டையாடிவிடுவார்கள். இதுதான் காலம்காலமாக நடந்து வந்திருக்கிறது.

ஆனால் இப்பொழுது அத்தனை சிரமங்களையும் தாண்டி மாணவர்கள் அலை அலையாக களத்தில் இறங்குவதும் ஒவ்வொரு கல்லூரியாக உண்ணாவிரதமிருப்பவர்களின் பட்டியலில் சேர்வதும் உற்சாகமானதாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும் செய்தித்தளங்களிலும் மாணவர்களின் போராட்டம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வது ஆச்சரியமூட்டுகிறது. நிழற்படங்களில் மாணவர்களின் உணர்ச்சி மிகுந்த முகங்களை பார்க்கும் போது வருடிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது என்பதுதான் உண்மை. இதே வயதை தாண்டி வந்திருக்கிறேன். இதே போன்ற அரும்பு மீசையுடைய பருவம் எனக்கும் வந்து போயிருக்கிறது. ஆனால் அப்பொழுதெல்லாம் மிகுந்த சுயநலமிகுந்தவனாக, தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தவனாக இருந்திருக்கிறேன் என்பதெல்லாம் இந்த நிழற்படங்களை பார்க்கும் நினைவில் வந்து வெட்கமடையச் செய்கிறது.

மாணவர்களின் இந்தப் போராட்டத்தின் நோக்கங்கள் என்ன, போராட்டம் வெற்றியடையுமா என்பதையெல்லாம் இரண்டாம்பட்சமாக எடுத்துக் கொள்ளலாம். அவற்றையெல்லாம் விடவும் இப்பொழுது மாணவர்களிடையே பரவும் உணர்வெழுச்சியும், விழிப்புணர்வும்தான் முக்கியமானவையாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாக மழுங்கிக் கிடந்த ஒரு சமூகத்திலிருந்து உத்வேகத்துடன் தலையெடுக்கும் ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பதாகத்தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யோசித்துப் பாருங்கள். களமிறங்கியிருக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் வீட்டிலிருந்தும், சமூகத்திலிருந்தும், கல்லூரியிலிருந்தும் எத்தனை அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் எந்த அழுத்தமும் இவர்களை சலனப்படுத்த முடியவில்லை என்பதே ஆறுதல்தானே. ஒரு இடத்தில் அழுத்தினால் இன்னொரு இடத்தில் எழுகிறார்கள். ஒரு கல்லூரியை ஒடுக்கினால் இன்னொரு கல்லூரியில் களமிறங்குகிறார்கள். இவர்களுக்கு யாரும் தலைவரில்லை. இவர்களுக்கும் யாரும் வழிகாட்டவில்லை. ஆனாலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

போராட தெம்பிருக்கும் ஒரு தலைமுறை உருவாவதே கொண்டாட்டத்திற்குரிய அம்சம். இதை நிச்சயம் கொண்டாட வேண்டும். இத்தனை வருடங்களாக பம்மிக் கொண்டிருந்த இந்தச் சமூகத்தில் ஒரு தீக்குச்சியை உரசிப் போட்டிருக்கிறார்கள். இந்தத் தீக்குச்சி வீரியமான தீக்குச்சியாகத்தான் தெரிகிறது. தண்ணீர் ஊற்றும் வேலையை அரசாங்கம் செய்துவிடக் கூடாது என்றும் எந்த அரசியல்வாதியும் இதன் Credit ஐ எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கிவிடக் கூடாது என்றும் பிரார்த்திப்பதைத் தவிர வேறு ஏதேனும் துரும்பை எடுத்துப் போட முடியுமா என்று தெரியவில்லை.

பாரதியின் வரிகள்தான் இப்பொழுது மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.

அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ.

இதை ஃபேஸ்புக்கில் இன்னொரு ஸ்லாங்கில் எழுதியிருந்தேன். அதேதான் இங்கும்...

"காலேஜ் பசங்கன்னா கலர்கலரா ட்ரஸ் போட்டு வெறுக்க வெறுக்க கடலை போடுறவங்கன்னு நினைச்சீங்களா....எகிறுன்னா எதிர்ல நிக்கிறவன் பொறி கலங்கிடும்..."