Mar 14, 2013

அடயேப்பா! ஆப்பிரிக்காவிலிருந்து...


ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. கடிதம் என்றவுடன் வாசகர் கடிதம் என்றெல்லாம் பயந்துவிட வேண்டாம். மேலே படியுங்கள்.

உங்களுக்கு பின்வருமாறு ஒரு கடிதம் வருகிறது

அனுப்புநர்

திரு.பின் முடா,
பணப் பரிமாற்ற மேலாளர்,
பாங்க் ஆப் ஆப்பிரிக்கா,
பர்கினா பாஸோ.

                                                        அதிரகசியம்

அன்பு நண்பருக்கு,

பின்வரும் பணப் பரிமாற்றத்திற்கு உதவக்கூடிய நேர்மையான, நம்பகத் தன்மையுடைய பிரமுகர் குறித்து இணையத்தில் தேடும் போது  தங்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன.

எங்களது வங்கியில் உள்ள சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை நீண்ட நாட்களாக யாரும் சொந்தம் கொண்டாடாததால் வங்கியின்  கருவூலத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளார்கள். இந்தப் பொறுப்பு பரிமாற்ற மேலாளர் என்ற முறையில் என்னிடம் வந்துள்ளதால் நான் சற்று  ஆராய்ந்து பார்த்தேன். அதில் இந்தப் பணத்திற்குரியவர் திரு. சல்லா காத்தீஃப் என்ற லெபனானிய தொழிலதிபர் என்று தெரிந்தது.

திரு.சல்லா அவர்கள் 2003 ஆம் ஆண்டு, டிசம்பர் 25 ஆம் நாள் நிகழ்ந்த பெனின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டார். வங்கியின் விதிமுறைகளின்படி இந்தத் தொகையினை சல்லாவின் மிக நெருங்கிய ரத்த உறவினருக்கு மட்டுமே கொடுக்க இயலும். துரதிர்ஷ்டவசமாக அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அதே விபத்தில் பலியாகிவிட்டனர். 

வங்கியின் விதிமுறைகளின் படி ஐந்து வருடங்கள் யாரும் உரிமை கோராத தொகை கருவூலத்திற்கு மாற்றலாகிவிடும். இவ்வளவு பெரிய தொகை  வங்கியின் கருவூலத்தில் யாருக்கும் பயனற்று போகவேண்டாம் என்பதால் தங்களோடு ஒரு வணிக ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன்.

தங்களை திரு.சல்லாவின் நெருங்கிய உறவினராக நிரூபிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நான் கவனித்துக் கொள்கிறேன். தங்களுக்கு 40% தொகையும், 5% மற்ற செலவினங்களுக்கும் போக மீதமிருக்கும் 55% தொகையினை நான் பெற்றுக் கொள்வேன். இந்தப் பரிமாற்றம் முடிந்த  உடனேயே நானும், என் குடும்பத்தாரும் தங்களின் நாட்டிற்கு வந்து என் பங்குத் தொகையினை பெற்றுக் கொள்கிறோம்.

இது வங்கி விவகாரம் என்பதாலும், பெரும் தொகையின் காரணமாகவும் தாங்கள் இத்தகவல்களை மிக ரகசியமாக வைத்துக் கொள்வீர்கள் என்று  நம்புகிறேன்.

மேலும் இந்தப் பரிமாற்றம் நூறு சதவிகிதம் இரு சாராருக்கும் பிரச்சினையற்றது. நீங்கள் கொடுக்கப் போகும் தங்களின் வங்கிக் கணக்கு முதலான தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.

என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். 

தங்களிடம் இருந்து நல்ல பதிலை எதிர்பாக்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
பின் முடா.
                                                       
                                                         ***

உங்களின் பதில் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

கண்டு கொள்ளாமல் அழித்துவிடுபவர்கள் தெளிவானவர்கள். என்னதான் நடக்கும் என்று ஒரு பதிலை கவனமாக தட்டிவிடுபவர்கள் கொஞ்சம் தைரியசாலிகள். பரபரப்போடு தன் நிலை மறந்து பறந்து கொண்டே பதில் அனுப்புபவர்கள் பாவமான ஜென்மங்கள். ஏன் பாவ ஜென்மங்கள் என்பது இன்னும் ஓரிரு பத்திகள் தள்ளி பார்க்கலாம்.

மின்னஞ்சல் உபயோகப் படுத்துபவர்கள் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு மின்னஞ்சலையாவது இத்தகைய தகவலுடன் பெறுகிறார்கள்.  

இந்த கணிணிமயமாக்கப்பட்ட உலகத்தில், தகவல்களை எப்படியெல்லாம் உபயோகப்படுத்துவார்கள் என்று கற்பனை செய்வதும் ஆராய்ந்து பார்ப்பதும் கற்பனையின் எல்லைகளுக்குள்ளாக வராத விஷயங்கள். நம் தகவல்களை வைத்து 'இதை'த்தான் செய்வார்கள் என்று நாமாக 'எதை'யாவது முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் நாம் முடிவு செய்த விளைவு 0.1 சதவிகிதம் சரியாக இருக்கலாம். மீதம் 99.9 சதவிகிதம் நாம் யோசிக்கவே முடியாத சாத்தியங்கள் இருக்கின்றன.

பிறரின் தகவல்களை சேகரிப்பதற்கென்றே இணையத்தில் பணிபுரிபவர்களும் அதற்காக கை நிறைய சம்பளம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். இலட்சக்கணக்கானவர்களின் தகவல்களை வைத்து என்ன என்னவெல்லாம் செய்யலாம் என்பது இணைய ஆண்டவருக்குத்தான் வெளிச்சம்.

மேற்சொன்ன வகையான மின்னஞ்சல்களின் தொடக்கம் '419 ஊழல்கள்' என்பதில் ஆரம்பிக்கிறது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் நைஜீரிய எண்ணெய் நிறுவனம் வணிக ரீதியாக சரியத்துவங்கியது. அந்தச் சமயத்தில் மேற்கண்ட தகவலின் சாராம்சம் உள்ள கடிதங்களை சிலர் அஞ்சல், பேக்ஸ் முதலிய ஊடகங்கள் மூலமாக அனுப்ப ஆரம்பித்தார்கள். 

முதலில் மேற்கண்ட சாராம்சத்தில் கடிதம் அனுப்புவார்கள். கடிதத்தை பெற்றுக் கொண்டவர் பதில் அனுப்பினால்,அவர்களுக்கு, பத்திரத்தாளில் ஸ்டாம்ப் ஒட்டி கையொப்பமிட்ட கோப்புகள் வரும். கூடவே உங்களை பணம் வந்தடைவதற்கான அனைத்து ஆயத்த வேலைகளும் நடக்கின்றன என்ற கடிதமும் வரும். நாமும் வீட்டில் கட்டில் மெத்தை வாங்குவதில் ஆரம்பித்து பிஜி தீவுக்கு ஒரு சுற்றுலா செல்வது வரையிலும் திட்டமிட்டுக்  கொண்டிருக்கும் வேளையில் அடித்து பிடித்து இன்னொரு அவசரத் தபாலோ அல்லது தந்தியோ வரும்.

"எல்லாக் காரியங்களும் கை கூடி வரும் நிலையில் நீங்கள் எங்கள் நாட்டு வங்கியில் குறைந்தது இருபதாயிரம் டாலர்களாவது வைப்பாக வைத்திருக்க வேண்டும் என விதிமுறையை மாற்றிவிட்டார்கள். இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பத்தாயிரம் டாலர்களை தயார் செய்துவிட்டேன். மீதித்தொகைக்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யவும்".

கொஞ்சம் உஷாராகி பதில் அனுப்பாமல் விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இன்னொரு கடிதத்தை தபால்காரர் கொண்டுவருவார்.  "தங்களை நம்பி செய்த காரியங்களில் எங்கள் செலவு இரண்டாயிரம் டாலர்கள் ஆகியிருக்கிறது. குறைந்தபட்சம் இத்தொகையை அனுப்பி வைக்கவும். இல்லையெனில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற மிரட்டல் தொனியோடு முடியும். 

மீண்டும் நாட்களை கடத்துகிறீர்கள். இன்னொரு தந்தி "உங்கள் நாட்டில் இருக்கும் எங்கள் பிரதிநிதி உங்களைப் பார்க்க வருவார். தயாராக இருக்கவும்" என்ற சாராம்சத்தில் வரும். இப்பொழுதுதான் ஆப்பசைத்து வாலைச் சிக்க விட்டுவிட்டோமோ என்று நம் ஆளுக்கு ஆட்டம் காண ஆரம்பிக்கும்.

அப்படி செய்து இப்படி செய்து உங்கள் திறமைகளை எல்லாம் காண்பித்து அவர்களுக்கு நீங்கள் பணம் கொடுக்காமலேயே சமாளித்து விட்டீர்களேயானாலும் கூட, அவர்கள் மனவியல் ரீதியாக கொடுக்கும்  நெருக்குதலில் திணறிவிடுவீர்கள். இந்த ஊழலில் பாதிக்கப்பட்டவர் கொலைக்குள்ளாகும் வரைக்கும் இழுத்துச் சென்ற நிகழ்வுகளும் இருக்கின்றன. தற்கொலையில் முடிந்த நிகழ்வுகளும் உண்டு.

இவ்வகை ஊழலில் வேறு மாதிரியான கவர்ச்சி வகைகளும் உண்டு. நீங்கள் லாட்டரி ஜெயித்திருக்கீறீர்கள், அழகான பெண்ணுடனான டேட்டிங்க்கு தயாராகுங்கள் என்று ஏகப்பட்ட வகை வகையாக வலை விரிக்கிறார்கள்.

நைஜீரியாவில் தவறான தகவல்களைக் கூறி மற்றவர்களை ஏய்ப்பதற்கு எதிரான சட்டவிதியின் எண்:419. இந்த சட்டவிதியின் புகழ் இப்படி '419 ஊழல்கள்' என்று பரவி விட்டது.

கட்டுரையின் முன்பே குறிப்பிட்டது போல், இவை எல்லாம் சில 'சாம்பிள்' வழிமுறைகள்தான். ஒருவரின் தககவல்களை வைத்து என்ன தகிடுத்தத்தம் வேண்டுமானாலும் செய்ய முடியும். 'பாய்ஸ்' படத்தில் செந்தில் சொல்வது போல "Information is Wealth". முடிந்த வரை நம் இன்பர்மேஷனைக் கொடுத்து அடுத்தவனை பணக்காரனாக்காமல் வைக்கலாம்.

                                                           ***
சைபர் சாத்தான்கள் புத்தகத்திலிருந்து ஒரு கட்டுரை. இந்த நூலை விலையில்லாமல் மின் நூலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.