Mar 15, 2013

பரதேசி


பரதேசி பார்த்துவிட்டீர்களா? பார்க்கும் ஐடியா இருக்கிறதா? பாலாவின் ‘சேது’ படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு கதறியபடி ஓடி வந்தேன். ‘நந்தா’ பார்த்துக் கொண்டிருக்கும் போது  ‘இந்தப் படத்தை முழுமையாக பார்த்தால் தியேட்டருக்கு வெளியில் நிற்கும் யாருடைய குரல்வளையையாவது கடித்துவிடுவேன்’ என்று பயந்து பாதியிலேயே கிளம்பிவிட்டேன். பாலாவின் எந்தப்படத்தையும் என்னால் முழுமையாக பார்க்க முடிந்ததில்லை- விஜயகாந்த்-ஜெயலலிதா மொழியில் சொன்னால் “திராணி இல்லைங்க”.

Wait is...இது ‘பரதேசி’ படத்திற்கான விமர்சனம் இல்லை. விமர்சனம் என்று நினைத்து இந்தப் பக்கத்தை திறந்த புதியவர்கள் மன்னிக்க. விமர்சனம் இல்லையென்றால் வேறு என்னதான் கிறுக்கியிருப்பான் என்று பார்த்துவிட  விரும்பினால் மட்டும் மேலே வாசியுங்கள். 

பாலாவின் படங்களை பார்ப்பதற்கு முன்பாக அந்தப் படங்களின் கதை பற்றி எதுவும் தெரியாது. குத்துமதிப்பாக தியேட்டரில் அமர்ந்திருப்பேன். ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் ஜாலியாக ஓடிக் கொண்டிருக்கும் பாலாவின் கேமராவுக்கு திடீரென்று கிறுக்கு பிடித்து முரட்டுத்தனமாக கதறடிக்க ஆரம்பித்துவிடும்.  “அய்யோ இப்படி இருக்கும்ன்னு தெரியாமல் போய்விட்டேன்” என்று எனக்கு நானே ஆறுதல் படுத்திக் கொண்டு ஓடி வந்துவிடுவதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. இதற்குமேல் பாலாவின் ஒரு படம் கூட பார்க்கப் போவதில்லை என்று எப்பவோ முடிவு செய்தாகிவிட்டது. இந்த முடிவு சாபமாக அமைந்துவிட்டது போலிருக்கிறது. பாலாவின் படம் என்றில்லை வேறு எந்தப் படமுமே பார்ப்பதில்லை.

பரதேசியின் கதை என்னவென்று தெரியும். ஊட்டி, வால்பாறை ஆகிய இடங்களில் இருக்கும் தேயிலைத் தோட்டங்களில் அந்தக் காலத்தில் தொழிலாளர்கள் அனுபவித்த வேதனைதான் படத்தின் கரு என்று சொன்னார்கள். டேனியலின் “எரியும் பனிக்காடு” நாவலை வாசித்துவிட்டு  “இந்த நாவல் மிகவும் அலைகழித்துக் கொண்டிருக்கிறது” என்று அதன் மொழிபெயர்ப்பாளர் முருகவேளிடம் சொன்ன போது “பரதேசி என்று படமாக எடுக்கிறார்கள்” என்று சொன்னார். அதுவும் பாலாதான் இந்தப்படத்தை எடுக்கிறார் என்று சொன்ன போது தூக்கிவாரிப்போட்டது. எந்தக் கதையாக இருந்தாலும் படம் பார்ப்பவனை கண்களை கசக்காமல் பாலா வெளியே அனுப்ப மாட்டார். அவரிடம் இந்த மாதிரி கதை எல்லாம் கிடைத்தால் சும்மா விடுவாரா? அம்மியில் வைத்து அரைத்துதான் தியேட்டரை விட்டு வெளியே அனுப்புவார் என்று நினைக்கிறேன்.

படமே பார்க்காமல் இரண்டு பத்திகளுக்கு மேல் உங்களிடம் இழத்தடிப்பதில் நியாமில்லை என்பதால் இதோடு நிறுத்திக் கொள்வதுதான் உத்தமம். “படம் பார்க்கல சரி! அப்புறம் எதுக்கு பரதேசின்னு டைட்டில்? இருக்கிறவனை ஏமாத்தறதுக்கா?” என்று யாராவது கேட்டுவிடாதீர்கள். உண்மையில் பரதேசியின் ரியாலிட்டி ட்ரெய்லர் பற்றி எழுதத்தான் ஆரம்பித்தேன். ஆனால் அதுபற்றி ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் மனிதத்தன்மையற்ற செயல் என்கிறார்; இன்னொருவர் பாவச்செயல் என்கிறார்; மற்றொருவர் பெருங்குற்றம் என்கிறார். எனக்கு அதையெல்லாம்வற்றையும் விட பாலா என்னும் திரைக்கலைஞன் எதிர்பார்க்கும் Perfectionism தான் தெரிகிறது. அடிக்கிறார் உதைக்கிறார் என்பதையெல்லாம் விடவும் “நடித்துக் காட்டுகிறார்” என்பதைத்தான் தனித்து பார்க்கிறேன். இதோடு நிற்கட்டும். என்னுடைய சோகக் கதை ஒன்றை சொல்லிவிடுகிறேன்.

பெங்களூரில் புதுவீடு கட்டியிருக்கிறோம் அல்லவா? புது வீட்டுக்கு அழுக்குக் கூடை, குப்பை கூடை எல்லாம் வாங்க வேண்டும் என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். அவரை கடைக்கு அழைத்துப் போகும் பொறுப்பு வந்துவிட்டது. பைக்கிலேயே போய்விடலாம் என்றேன். எல்லாவற்றையும் வாங்கி ஆட்டோவில் எடுத்துவந்தால் இருநூறு ரூபாய் செலவாகும் பரவாயில்லையா என்றார். என்னை எந்த இடத்தில் அடிக்க வேண்டும் என்று அம்மாவுக்குத் தெரியும். முப்பது வருடங்களாக பார்க்கிறார் அல்லவா. கஞ்சப்பயல்களிடம் ஜெயிக்க வேண்டுமென்றால் பணத்தைப் பற்றி சொல்லித்தான் அடிக்க வேண்டும். ஆயிரம் ரூபாய்க்கு சாமானங்கள் வாங்கினால் அவற்றைத்  தூக்கி வர ஆட்டோ கூலி இருநூறு ரூபாய் என்பது அதிகமாகத் தெரிந்தது. இருநூறு ரூபாய்க்கு பதிலாக காரில் அழைத்துச் சென்றுவிடலாம் என்று தோன்றியது. அது தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் கார். பெங்களூர் சிட்டிக்குள் சுற்றுவதாக இருந்தால் காரை எடுப்பதில்லை. தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் என்பதால் வெள்ளைச்சட்டை மாமாக்களுக்கு மூக்கு அரிக்க ஆரம்பித்துவிடும் என்று பயமாக இருக்கும்.

இது நடந்தது கடந்த ஞாயிற்றுக்கிழமை. வேறு வழியில்லாமல் காரை வெளியில் எடுத்தேன். அம்மாவை அழைத்துக் கொண்டு மடிவாலாவில் இருக்கும் டோட்டல் மாலுக்குத்தான் சென்றிருந்தோம். கூடவே தம்பியும் வந்திருந்தான். டோட்டல் மாலில் இப்பொழுது பார்க்கிங்கிற்கு தனியிடம் வைத்திருக்கிறார்கள். கார்களுக்கு இருபது ரூபாய் பார்க்கிங் கட்டணம். டோக்கன் போடும் இடத்தில் செக் போஸ்ட் மாதிரி ஒரு குச்சியை வைத்திருக்கிறார்கள். டோக்கனை வாங்கிக் கொண்டு மெதுவாக காரை நகர்த்தினேன். வண்டி அந்த இடத்தை தாண்டும் முன்பாகவே “டொம்” என்று சப்தம் கேட்டது. யாரோ காரின் பின்னாடி இடித்துவிட்டார்கள் என்று பதறியடித்து இறங்கினால் செக்போஸ்ட் குச்சி அடித்திருக்கிறது. வண்டியில் கொஞ்சம் பெய்ண்ட் விட்டுப்போனது. அவர்களிடம் கேட்டால் “அது ஆட்டோமேடிக் சென்சார் சார்; நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றார்கள். எப்படியும் ஆயிரம் ரூபாயாவது செலவாகும் என்று புலம்பிக் கொண்டிருந்தேன். கெட்ட நேரம் அதோடு போகவில்லை.

“நான் வரவில்லை. நீங்கள் போய் வாங்கி வாருங்கள்” அம்மாவையும் தம்பியையும் கடைக்குள் அனுப்பிவிட்டு நான் வண்டியிலேயே அமர்ந்திருந்தேன். யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தேன். அடுத்த சில வினாடிகளில் அருகில் இருக்கும் சுவர் மீதிருந்து சிறு சிறு கற்கள் வண்டி விழத் துவங்கின. அந்தச் சுவர் மிக உயரமாக இருந்தது. யாரோ ஆட்கள் வேலை செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். போனை ‘கட்’ செய்துவிட்டு வண்டியை இடம் மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த கணத்தில் “படார்” என்ற சத்தத்துடன் வண்டி மீது ஏதோ விழுந்தது. இப்பொழுது விழுந்தது பெரிய கல் ஒன்று. விழுந்த இடம் காரின் முன் கண்ணாடி. சோலி சுத்தம். ஆயிரம் ரூபாயோடு இன்னொரு பத்தாயிரம் ரூபாய்க்கு பில் சேர்க்க வேண்டியதுதான். இப்பொழுதும் பார்க்கிங்க்காரர்களை அழைத்து சத்தம் போட்டேன். சத்தம் போட்டேன் என்பதைவிடவும் சண்டைபோட்டேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

“மேலே புறா இருக்கு சார். கல்லை தள்ளிவிட்டிருக்கு. நாங்க எதுவும் செய்ய முடியாது” என்று கையை விரித்துவிட்டார்கள். 

“இது உங்க இடம்தானே? நீங்கதானே பொறுப்பு” என்றேன்.

“நிர்வாகம் எதுவும் தராது சார். வேண்டுமென்றால் என் சம்பளத்திலிருந்து தருகிறேன்” என்று மேனேஜர் செண்டிமெண்டெலாக அட்டாக் கொடுத்தார்.

கொதித்துக் கொண்டிருந்தேன். அம்மா வந்தார். கோபத்தையெல்லாம் அவரிடம் காட்டினேன். 

“பக்கத்திலேயே ஏதாச்சும் கடையில வாங்கியிருக்கலாம். அரைக்காசு மிச்சமாகும்ன்னு இங்க வந்து இப்போ பாருங்க” என்றேன்.

“புதுவீடு கட்டினதுனால மத்தவங்க கண்ணு பட்டிருக்கும். அதனாலதான் இப்படியெல்லாம் நடக்குது. இதோட போச்சுன்னு விடு” என்று ஈஸியாக எடுத்துக் கொண்டார். இதற்குமேல் யாரிடம் பேசியும் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று புரிந்தது. காரை கிளப்பும் போது அந்த மேனேஜர் அருகில் வந்து ஏதோ சொல்ல முயன்றார். நான் நிற்காமல் வண்டியை நகர்த்தினேன். 

அம்மா, “ஏதோ சொல்லுறாரு பாரு” என்றார். 

“அவன் கிடக்கிறான். பரதேசி” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

வெறும் பத்தாயிரம் ரூபாய்க்காக இத்தனை கோபமும் வெறியும் வருகிறது. கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுத்து, தனது வாழ்க்கையே சினிமாதான் என்றிருக்கு பாலா தான் விரும்பும்  ‘தத்ரூப’காட்சிகளுக்காக நடிகர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை ஏதோ ஒருவிதத்தில் என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது.