Mar 8, 2013

அமத்தாவின் வப்புஸ்


சிறுவயதில் அமத்தா ஊரில்தான் அதிகம் இருந்தேன். நம்பியூருக்கு பக்கம் வடுகபாளையம்தான் அமத்தாவிற்கு புகுந்த ஊர். எங்கள் ஊருக்கும் அமத்தா ஊருக்கும் இடையில் அதிக தூரமில்லை. முப்பது கிலோமீட்டருக்குள்தான் இருக்கும். இப்பொழுதாக இருந்தால் இது பெரிய தூரமே இல்லைதான் ஆனால் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக அப்பாவிடம் டிவிஎஸ் 50 தான் இருந்தது. ஊருக்கு போவது வருவதென்றால் பஸ் பிடித்தால்தான் உண்டு. எப்பவாவது பஸ் பிடித்து அம்மா வந்தால் என்னை எங்கள் ஊருக்கு அழைத்துப் போவார் அல்லது அமத்தா அழைத்துப் போவார். மற்றபடி அமத்தா ஊரில்தான் வாசம். 

காலையில் எழுந்து பால் குடித்தவுடன் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். தோட்டத்தில்தான் நாள் முழுவதும் கரையும். காலை, மதிய உணவெல்லாம் கூட அங்குதான். இரவில் வீடு திரும்பிய பிறகு சமைத்து ஊட்டிவிடுவார். அப்பிச்சி கதை சொல்லச் சொல்ல தூங்கிவிடுவேன். இப்படி ஓடிக்கொண்டிருந்த இளம்பிராயத்தில் ஒரு புயல் அடித்தது. ஐந்து வயதுக்குப் பிறகாக எங்கள் ஊருக்கு நிரந்தரமாக என்னை கூட்டிச் செல்வதாக முடிவு செய்து விட்டார்கள். இனிமேல் நான் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்பது என்னை இழுத்துவருவதற்கான சாக்காக இருந்தது. ஆனால் எனக்கு அமத்தா ஊரை விட்டுச் செல்வதற்கு அத்தனை விருப்பமில்லை என்றுதான் ஞாபகம். வெள்ளாடுகளின் பின்னால் சுற்றுவதும், தோட்டத்து ஆட்கள் பிடித்துக் கொடுக்கும் தட்டான்களும், அமத்தாவோடு எடுத்துச் செல்லும் தூக்குப் பாத்திர சோறும், அப்பிச்சியின் கதைகளும் என்னை அமத்தாவின் ஊர் நோக்கியே இழுத்துக் கொண்டிருந்தன. ஆனால் விதியை வெல்ல முடியாதல்லவா? வெற்றிகரமாக இழுத்துச் சென்று பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்.

நான் ஊருக்கு வந்த பிறகும் கூட அமத்தா என்னை அடிக்கடி பார்க்க வந்துவிடுவார். வரும் போதெல்லாம் சிலுவாடு சேர்த்த பணத்தை கொடுத்துவிட்டு போவார். அந்த வயதில் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என்பதெல்லாம் தேவையில்லாத பெரிய தொகை. உண்டியலில் போட்டு வைத்துக் கொள்வேன். சந்தையில் தேங்காய் விற்றது, வாழைக்காய் விற்றது என அமத்தாவிடம் எப்படியும் பணம் புழங்கிக் கொண்டிருக்கும். பணம் கொடுப்பது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறையும் நிறைய தின்பண்டம் வாங்கிவருவார். 

ஒருமுறை எங்கள் ஊருக்கு அமத்தா வந்திருந்தபோது யதேச்சையாக அம்மாவிடம் ஃபப்ஸ் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் ஃபப்ஸ் அறிமுகம் ஆகியிருந்தது என்பதால் அதன் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. அமத்தா அந்தப் பெயரை திரும்ப உச்சரிக்கச் சொன்னார். நான் ஃபப்ஸ் என்று சொன்னது அவருக்கு அது “வப்புஸ்” என்று கேட்டிருக்கும் போலிருக்கிறது. அதன் பிறகு ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும் போதும் வப்புஸ் வாங்கி வர ஆரம்பித்துவிட்டார். கொஞ்ச நஞ்சமல்ல- கிட்டத்தட்ட நூறு ரூபாய்க்கு வப்புஸ்தான் வாங்கி வருவார். 

எங்கள் ஊர் மலையாளத்தான் கடையில் மட்டும்தான் வப்புஸ் கிடைக்கும். வெஜ் வப்புஸ் இரண்டு ரூபாயாகவும். முட்டை வப்புஸ் இரண்டே கால் ரூபாயாகவும் இருந்தது. நூறு ரூபாய்க்கு என்றால் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட நாற்பது வப்புஸ் சேர்ந்துவிடும். அந்தக் காலத்தில் வீட்டில் ஃப்ரிட்ஜ் வாங்கும் வசதியெல்லாம் இல்லை. வப்புஸை ஒரு நாளைக்கு மேல் வெளியில் வைத்திருந்தால் கெட்டுவிடும் என்பதால் அன்றே தின்று தீர்க்க வேண்டும். வாங்கி வருவதோடு நில்லாமல் “தின்னு சாமி தின்னு சாமி” என்று அழிச்சாட்டியம் செய்வார். இப்பொழுதும் கூட ஒரு வப்புஸ் சாப்பிட்டால் வயிறு நிரம்பியது போலாகிவிடும். பத்து வயது பையனை நான்கைந்து வப்புஸ் தின்னச் சொன்னால் எப்படி முடியும்? ஆனால் அமத்தா விட மாட்டார். எவ்வளவுதான் தின்றாலும் கூட அடுத்த நாள் காலையில் பத்து பதினைந்து வப்புஸை குப்பையில் கொட்ட வேண்டியதிருக்கும். அதை அமத்தா பார்த்துக் கொண்டுதான் இருப்பார். ஆனாலும் அடுத்த முறையும் அதே அளவு வாங்கி குவித்துவிடுவார்.

இதன் பிறகு அமத்தா எங்கள் ஊருக்கு வருகிறார் என்று கேள்விப்பட்டாலே அன்றைய தினத்தின் கனவுகளில் வப்புஸுகள் பல்வேறு வடிவங்களில் வந்து பயமுறுத்தத் துவங்கின. நானும் தம்பியும் தலை தெறிக்க ஓடத் துவங்கினோம். எப்படியும் தப்பிக்க முடியாது என்ற நிலைமையில் கார்னர் செய்யப்பட்டு வப்புஸுகளால் எங்களது வயிறு நிரப்பப்படும். வாந்தி எடுப்பது போலவோ அல்லது வயிறு வலிப்பது போலவோ நடித்து உள்ளே போகும் வப்புஸூகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைக்கலாம் ஆனால் மொத்தமாக தவிர்க்க முடியாது.

அமத்தாவின் இந்த பாசவலை நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரையிலும் கூட தொடர்ந்தது. அதன் பிறகு கல்லூரி, வேலை என்று ஊர் ஊராகச் சுற்றத் துவங்கி விதவிதமான மனிதர்களை பார்க்கத் துவங்கி நாங்கள்தான் மாறிவிட்டோம். யாரை எப்படி ஏமாற்ற வேண்டும் எந்த இடத்தில் என்ன பொய்யைச் சொல்லவேண்டும் போன்ற சூட்சுமங்கள் கைவரப் பெற்றவர்களாக மாறியிருக்கிறோம். ஆனால் அமத்தா அப்படியேதான் இருக்கிறார். வயதாகிக் கொண்டிருப்பதால் மேலும் வெள்ளந்தியாகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளைப் புடவையும், வெற்றிலை குதப்பும் வாயும், மந்தமாகிப் போன காதும், மங்கிய பார்வையும் அமத்தாவை இன்னொரு குழந்தையாக மாற்றியிருக்கிறது. முன்பு போல பஸ் பிடித்து ஊருக்குச் வருவதில்லை. உடலில் தெம்பு குறைந்துவிட்டது. இப்பொழுதெல்லாம் தனது ஊரோடு இருந்து கொள்கிறார். 

ஆனால் சென்ற முறை நாங்கள் ஊருக்கு போயிருந்த போது பஸ் பிடித்து அமத்தா வந்துவிட்டார். அமத்தாவை ஆளாளுக்கு திட்டத் துவங்கிவிட்டார்கள். வயதான காலத்தில் பேருந்து பிடித்து வருவது நல்லதில்லை என்று அமத்தாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அத்தனைக்கும் அமத்தா சிரித்துக் கொண்டிருந்தார். எல்லோரும் திட்டிக் கொண்டிருக்கும் போதே தனது பையை பிரிக்கத் துவக்கினார். அதில் என்ன இருக்கும் என்று யூகிக்க முடிந்தது. யூகம் சரியானதாகவே இருந்தது. இப்பொழுதும் நாற்பது ஐம்பது வப்புஸூகளால் பை நிரம்பியிருந்தது. அதைப் பார்த்து எல்லோரும் சிரிக்கத் துவங்கினார்கள். ஆனால் அமத்தா அதையெல்லாம் கவனிக்கவில்லை. வப்புஸை எடுத்துக் கொண்டு என்னிடம்தான் வந்தார். “தின்னு சாமி” என்றார். இப்பொழுது தப்பிக்க வேண்டும் என்றோ அமத்தா டார்ச்சர் செய்வதாகவோ தோன்றவில்லை. கைகளால் அள்ளி எடுத்துக் கொண்டு அமத்தாவை பார்த்தேன். வாயெல்லாம் பல்லாக சிரித்தார். 

வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு அந்தப்பக்கமாக நகர்ந்து சென்று ஜன்னல் வழியாக அமத்தாவை பார்த்தப்போது மற்ற வப்புஸூகளை பத்திரப்படுத்திக் கொண்டிருந்தார். அமத்தா பற்றிய சிறுவயது ஞாபகங்கள் அத்தனையும் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது. மிக மூர்க்கமாக பாடுபட்ட உழைப்பாளி  இப்பொழுது கசங்கிய காகிதமாக உருமாறியிருப்பதாகத் தோன்றியது. ஒருகாலத்தில் அமத்தா ஏழெட்டு மாடுகளை அனாயசமாக இழுத்துச் செல்வதை பார்த்திருக்கிறேன். வெறித்தனமாக விவசாயம் செய்த அவர் இப்பொழுது நாற்பது வப்புஸுகளை அடுக்கக் கூட இயலாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அமத்தாவின் உருவம்தான் மாறியிருக்கிறது. குணத்திலும் பண்பிலும் அதே மாதிரி அல்லது முன்பைவிடவும் பக்குவப்பட்டவராக மாறியிருக்கிறார். அமத்தா அதே மாதிரியிருப்பதையும் நான் வாழ்க்கைக்காகவும், சம்பாதியத்திற்காகவும் முற்றாக மாறிக் கொண்டிருப்பதையும் நினைத்த போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அமத்தா வாழ்ந்தது வாழ்க்கையா அல்லது நான் வாழ்ந்து கொண்டிருப்பது வாழ்க்கையா என்ற குழப்பம் ஒரு கணம் வந்து போனது. யதேச்சையாக ஜன்னலை பார்த்தவர் நான் நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டு சிரித்தார். குழந்தை சிரிப்பதைப் போலவே இருந்தது. ஆனால் எனக்கு அப்பொழுது பதில் சிரிப்பு வரவில்லை. அழுகைதான் வந்தது. ஆனால் நான் அழுவதை தெரிந்து கொள்ளும் அளவுக்கு அமத்தாவுக்கு பார்வை இல்லை.

மகளிர் தின வாழ்த்துகள்!