Mar 12, 2013

லா....லா....லா...விக்ரமன்


லா..லா..லா என்று ஒரு பாடலை பேக்ரவுண்டில் பாடவிட்டால் விக்ரமன் படமேதான் என்று நக்கலடிப்பதை கவனித்திருக்கிறீர்களா? இப்பொழுது இது சர்வசாதாரணமாகிவிட்டது. நெகிழ்ச்சியான அல்லது ‘நெஞ்சு நக்கி’ விஷயங்களுக்கு இந்த டயலாக்கை அடிப்பதுதான் ட்ரெண்ட் போலிருக்கிறது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால் எனக்கு விக்ரமன் படங்களைப் பிடிக்கும். அதுவும் அவரது படங்களில் வரும் “லா...லா..லா” காட்சிகளுக்கு பெரும்பாலும் உருகிவிடுவேன். சென்ஸிடிவ்வான மனிதர்களுக்கு விக்ரமனின் படங்கள் ட்ரீட் என்றுதான் நினைக்கிறேன்.

பத்து வருடங்களை ரீவைண்ட் அடித்துப் பார்த்தால் பெரும்பாலான விக்ரமனின் படங்களை மற்றவர்களுக்காக நக்கலடித்துவிட்டு அந்த படத்தின் காட்சிகளுக்காக அழுதது ஞாபகம் வருகிறது. புதுவசந்தத்தில் ஆரம்பித்து விக்ரமன் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் குறைந்தபட்சம் ஒரு காட்சிக்காவது அழுதிருக்கிறேன். 

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது வானத்தைப் போல படம் வெளி வந்தது. வயதான வேடத்திற்காக விஜயகாந்த் ஒரு காமெடியான கெட்டப்பில் நடித்திருந்தார். அந்த கெட்டப்பில் விஜயகாந்த்தின் நிழற்படங்கள் ஏதாவது கிடைத்துவிட்டால் ஹாஸ்டல்வாசிகள் களோபரமாகிவிடுவார்கள். கூடிக் கூடி குபீர் குபீரென சிரிப்பார்கள். 

அந்தச் சமயத்தில் குமுதம் விகடனின் சினிமாச் செய்திகளில் வந்த விஜயகாந்த்தின் கெட்டப்பை வைத்து செமத்தியாக நக்கல் அடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் ஹாஸ்டலுக்குள் நக்கல் அடிப்பதோடு திருப்திப் பட்டுக் கொள்ளும் வயதில்லை அல்லவா. அதனால் படம் பார்த்துவிடுவது என முடிவு செய்து பெரிய குழுவாக படையெடுத்தோம். கவுண்ட்டரில் டிக்கெட் எடுப்பதில் இருந்தே அட்டகாசத்தை ஆரம்பித்துவிட்டார்கள். “அண்ணன் விஜயகாந்த் வாழ்க” “மதுரைத் தங்கம் சின்ன எம்.ஜி.ஆர்” என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்ததை பார்த்தவர்கள் எங்களை விஜயகாந்த்தின் ரசிகர்படை என்றுதான் நினைத்திருக்க வேண்டும். மற்றவர்கள் யாரும் எதுவும் சொல்லவில்லை.

படம் ஆரம்பித்த பிறகுதான் எங்களவர்கள் முகத்திரையை கழட்டினார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் “ஓ” போட்டு அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தார்கள். கூட வந்தவர்கள் கும்மாளமடித்தாலும் நான் படத்தோடு ஒன்றிப் போய்விட்டேன் என்பதுதான் உண்மை. நிறைய காட்சிகளில் அழுது கொண்டிருந்தேன். ஆனால் உடன் வந்திருப்பவர்களுக்கு நான் அழுவது தெரிந்தால் விஜயகாந்த்தை விட்டுவிட்டு என்னை ஊறுகாய் ஆக்கிவிடுவார்கள் என்பதால் அவ்வப்போது கூட்டத்தோடு சேர்ந்து கூச்சலிட வேண்டியிருந்தது. அலம்பல் தாங்கமுடியாமல் இடைவேளைக்கு சற்று முன்பாக தியேட்டர் மேனேஜர் வந்து எச்சரித்தார். அவருக்கும் “ஓ” போட்டதில் கடுப்பான அவர் “போலீஸைக் கூப்பிட வேண்டுமா” என்ற பிறகு அமைதியானார்கள்.

வானத்தைப் போல மட்டுமல்ல- விக்ரமனின் மற்ற படங்களான பிரியமான தோழியில் ஜோதிகாவின் பிரிவு, சூர்யவம்சத்தில் நடக்கும் பாசப்போராட்டம், உன்னை நினைத்து படத்தில் சூர்யாவை கழட்டிவிடும் லைலாவின் செய்கைகள் என விக்ரமனின் பெரும்பாலான “லா...லா..லா” காட்சிகள் என்னை அழச் செய்திருக்கின்றன. சரி இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

இதை ஆரம்பித்தது விக்ரமனுக்கு புகழ்மாலை சூட்டுவதற்காக அல்ல. அதற்கு யோக்கிதையும் கிடையாது. “பிறகு எதற்கு விக்ரமன் புராணம்?” என்ற அடுத்த கேள்வி எழுந்தால் பதில் சொல்ல வேண்டுமல்லவா? இந்த கட்டுரையின் கடைசியில் சொல்கிறேன். 

ஞாயிற்றுக் கிழமை கவிஞர் சாம்ராஜை பெங்களூரில் சந்தித்தேன். சாம்ராஜ் அடிப்படையில் கவிஞர். மதுரைக்காரர். கவிஞர் என்றாலும் தொழில்முறையில் சினிமாக் கலைஞர்.  ‘கற்றது தமிழ்’ராம் போன்றவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். இப்பொழுது பெங்களூருக்கும் சினிமா சமாச்சாரமாகத்தான் வந்திருக்கிறார். கன்னட சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் ஒருவர் பெங்களூர் பணக்காரர் ஒருவரிடம் கதை சொல்லியிருக்கிறார். அந்தப் பணக்காரரும் தமிழர்தான். அந்தக் கதையை தமிழில் படமாக எடுக்கப்போகிறார்களாம். அந்தக் கதையை பட்டி பார்த்து, டிங்கரிங் செய்து கொடுப்பதற்காக சாம்ராஜ்ஜை வரவழைத்து ரூம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு கட்டு வெள்ளைத்தாளை கட்டிலின் மீது வைத்து பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

கவிஞரை மட்டும் சந்தித்தால் கவிதையை பற்றி பேசலாம். சினிமாக்காரர்களை சந்தித்தால் நமது சினிமா அறிவை காட்டிவிட வேண்டுமல்லவா? சாம்ராஜ் சினிமாக்காரரும் கூட என்பதால் சீன், ஷாட் என்று ஆரம்பித்தேன். முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தாலே தெரியும் என்று எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு. சாம்ராஜ் என் மூஞ்சியைப் பார்த்து “கடைசியாக என்ன படம் பார்த்தீர்கள்?” என்றார். “தில்லாலங்கடி” என்றேன். அதற்கு அவர் “அடேயப்பா” என்றதை நீங்கள் அருகில் இருந்து பார்த்திருக்க வேண்டும். அதில் அத்தனை நக்கல் இருந்தது. இதோடு சினிமா பற்றிய டிஸ்கஷனை நிறுத்திக் கொள்வதுதான் நல்லது என்று அமைதியாகிவிட்டேன். 

சாம்ராஜ்ஜின் கவிதைத் தொகுப்பு “என்றுதானே சொன்னார்கள்” சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது. சமீபத்தில் நிறைய நண்பர்கள் இந்தத் தொகுப்பை பரிந்துரை செய்தார்கள். சாம்ராஜ்ஜிடம் இருந்தே ஒரு பிரதியை வாங்கிக் கொண்டேன். தொகுப்பில் இருக்கும் நல்ல கவிதைகளில் ஒரு கவிதையை சாம்பிளாக காட்ட வேண்டுமெனில் இந்தக் கவிதையை பாருங்கள்.

இப்படியாகுமெனில் 

“ஸேம் ஸேம் பப்பி ஸேம்”
என்று சின்ன வயதில்
ஒடியவள்.
  
எட்டு வயதில் முழங்காலுக்கு 
மேலான காயத்தை 
அப்பாவுக்கு காட்ட
மறுத்தவள்.

உடை மாற்றும் 
அறைக்குள் அம்மாவைக்கூட
அனுமதியாதவள்.

எக்ஸ்ரே
அறையிலிருந்து 
ஒடிவந்தவள்

அருவிகளில்
ஒரு பொழுதும் 
குளிக்காதவள்.

வெளிச்சத்தில் 
கணவனுடன் கூடச் 
சம்மதியாதவள்.

மரித்தலுக்கு பின்
அம்மணமாய் கிடக்கிறாள் 
மார்சுவரியில்.

ஈக்களும் கண்களும்
“அங்கேயே” மொய்க்க
இப்படியெல்லாம் ஆகுமெனில் 
அன்புலட்சுமி தற்கொலையே 
செய்திருக்கமாட்டாள்.

                                                     ********

“கவிதையெல்லாம் இருக்கட்டும் எதற்கு விக்ரமன் புராணம்?” என்று கேட்டு விடமாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படியே கேட்டால் சிம்பிளான பதில்தான். எனக்கு தெரியாத ஏரியாவே இல்லை என்ற சுய சொறிதல்தான்.