Mar 7, 2013

குழந்தைகளின் வலி


Pediatric Cancer Therapy யில் ஆராய்ச்சியாளாராக இருப்பதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.  மின்னஞ்சலே சுய அறிமுகத்தில்தான் தொடங்கியது. அந்தக் கடிதம் பத்து இருபது வரிகளைக் கொண்டிருந்தது. ஆனாலும் இந்த முதல் வரியை வாசித்தவுடன் மற்ற வரிகளில் கவனம் பதியவில்லை. குழந்தைகளுக்கும் கூட புற்றுநோய் வருகிறது என்பதுதான் மொத்த கவனத்தையும் சிதறடித்தது. பதில் அனுப்பும் போது “குழந்தைகளின் வலி/பிணி நீக்கும் ஒவ்வொருவருமே கடவுள்தான். நீங்கள் கடவுள்” என்று அனுப்பினேன். இவை பெரிய வார்த்தைகளோ அல்லது பொருந்தாத வார்த்தைகளோ இல்லை. இது புதிய வார்த்தைகளும் இல்லை- ஏற்கனவே பலரும் சொன்னதுதாம். ஆனாலும் அதுதான் உண்மையும் கூட. அதே சமயம் இது யோசித்து அனுப்பிய பதிலும் இல்லை.  அதுதான் மனதிற்குள் இருந்திருக்கும் போலிருக்கிறது. 

குழந்தைகளின் பசி, குழந்தைகளின் துக்கம், குழந்தைகளின் வாதை என்பனவற்றிற்கு இருக்கும் வீச்சு பெரியவர்களின் பசிக்கும் துக்கத்திற்கும் வாதைக்கும் இருப்பதில்லை. குழந்தைகளின் வலி உருவாக்கக் கூடிய சலனத்தை பெரியவர்களின் வலி பெரும்பாலும் உருவாக்குவதில்லை. மொத்த ஈழமும் அழிந்தபோது கூட சலனமுறாத சமூகம் கூட பன்னிரெண்டு வயது பாலச்சந்திரனுக்காக கொஞ்சம் சலனமுற்றிருக்கிறது.

வளர்ந்தவர்களுக்கு வலி என்பது பொறுத்துக் கொள்ளக் கூடிய வஸ்து. அவர்கள் ‘வலி என்பது ஆன்மீகம், வலி என்பது பெருந்துன்பம்’ என்று எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் குழந்தைகளுக்கு வலி என்பது வலி மட்டுமே. வேறு எதுவுமில்லை. அவர்களின் வண்ணக் கனவுகளையும் கற்பனைகளையும் சிதையச் செய்யும் அரக்கன் வலி. குழந்தைகளின் வலியை அருகில் இருந்து பார்ப்பதைவிட வேறொரு கொடுமை இருக்க முடியும் என்று தோன்றவில்லை. சிறு காயத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் கதறும் போது அவர்களை சமாதானப்படுத்துவதன் கஷ்டம் அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

மகனுக்கு சில மாதங்களுக்கு முன்பாக காய்ச்சல் வந்தது. காய்ச்சல் என்றால் ஓரிரண்டு நாட்களுக்கு தொடர்ந்து விட்டு விட்டு வந்து கொண்டிருந்தது. காய்ச்சல் ஆரம்பிக்கும் போது பாரசிட்டமால் கொடுப்பதும் கொஞ்ச நேரத்திற்கு காய்ச்சல் குறைவதுமாக வதைத்துக் கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்கு பிறகு காய்ச்சல் இருந்தால் இரத்தப் பரிசோதனை செய்துவிட்டு ரிசல்ட் எடுத்து வாருங்கள் என்று மருத்துவர் சொல்லியிருந்தார். அவர் கொடுத்திருந்த பரிசோதனை பட்டியலில் ஒரு கல்ச்சர் டெஸ்ட்டும் இருந்தது. கொஞ்சம் ரத்தத்தை எடுத்து அதில் கிருமிகள் ஏதேனும் வளர்கிறதா என்று பரிசோதிப்பார்களாம்.

நான்காம் நாள் அதிகாலையிலேயே காய்ச்சல் வந்திருந்தது. எட்டு மணிக்கெல்லாம் பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தோம். சோதனைக் கூடத்தில் இருந்த மனிதர் பொறுமையாக பேசினார். கல்ச்சர் டெஸ்ட்டுக்காக நான்கு மி.லி ரத்தம் தேவைப்படும் என்றும் குழந்தை ஒத்துழைத்தால் மட்டுமே ஒரே முறையில் ரத்தம் எடுப்பதும் சாத்தியம் என்றும் இல்லையென்றால் இரண்டு மூன்று முறை ஊசியால் குத்த வேண்டும் என்று சொன்னார். அடுத்த பத்து நிமிடங்களுக்கு மகியிடம் பேச்சுக் கொடுத்தேன். “மாமாவுக்கு கொஞ்சம் ரத்தம் கொடுத்துடலாம்” என்று திரும்பத் திரும்ப சொன்னபோது அவன் “சரி” என்று மட்டுமே சொன்னான். ஊசி குத்தித்தான் ரத்தம் எடுப்பார்கள் என்று புரிந்து கொள்ளாமல் சொன்ன “சரிகள்” அவை.  “லைட்டா வலிக்கும். பரவாயில்லையா?” என்ற போது அதற்கும் “சரி” என்றான்.

படுக்கையில் படுக்க வைத்து ஒருவர் கால்களை பிடித்துக் கொள்ள, இன்னொருவர் கைகளை பிடித்துக் கொள்ள, அவர் மகியின் வலது கையில் ஊசியை ஏற்றினார். கைகால்களை மற்றவர்கள் பிடித்துக் கொண்டிருந்ததால் அவனால் அசைக்க முடியவில்லை. அவனது கண்களும் வாயும் மட்டுமே அழுகையையும் அவனது வலியையும் உணர்த்தியபோது என்னையுமறியாமல் அழுகை வந்துவிட்டது. ஆனால் இத்தனை சிரமங்களையும் தாண்டி ஒரு மி.லி ரத்தம் மட்டுமே எடுக்க முடிந்தது. 

மூன்று மி.லி ரத்தத்துக்காக மீண்டும் ஒருமுறை குத்த வேண்டும் என்றார். இப்பொழுது மகியிடம் “இன்னொரு முறை ரத்தம் கொடுத்துடலாமா?” என்ற போது இப்பொழுதும் அவன் மறுக்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது.  “அப்பொழுது ரைட் ஹேண்டில் குத்தினார்கள். இப்பொழுது லெஃப்டில் குத்துவாங்க. பரவாயில்லையா?” என்றேன். “ம்ம்ம்..பரவாயில்லை” என்றான். மீண்டும் கைகால்களை அமுக்கி இடது கையில் குத்தும் போது அவனையும் மீறி அசைத்துவிட்டான். ரத்தக்குழாயில் சரியாக குத்த முடியவில்லை. இருந்தாலும் வலி வலிதானே. மீண்டும் கதறினான். 

இரண்டாவது முறை தோல்வியடைந்துவிட்டதால் இன்னொரு முறையும் குத்த வேண்டும் என்றார் சோதனைக் கூடத்துக்காரர். இப்பொழுது மகியிடம் கேட்கவில்லை. நானே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். “ஒரு மி.லி ரத்தத்தை வைத்து என்னென்ன பரிசோதனைகள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள். மீண்டும் காய்ச்சல் இருந்தால் நாளை வருகிறோம். அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டு வெளியே வந்தோம். அவனுக்கு வலியை மறக்க அதிக நேரம் தேவைப்படவில்லை.  “அப்பா எட்டு சக்கர லாரி போகுது; வொய்ட் கலர் ஸ்கார்ப்பியோ போகுது” என்று சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டான். காய்ச்சலும் அதன் பிறகு வரவில்லை. ஆனால் வலியில் துடித்த அவனது முகத்தை பார்த்த அந்த கணங்களை என்னால்தான் அடுத்த பல நாட்களுக்கு மறக்க முடியவில்லை.

ஒரு சிறு ஊசி குத்தலுக்கு மகன் அவதியுற்றதையே தாங்கிக் கொள்ள முடியாத போது, தனது குழந்தைகள் வலிகளாலும் வேதனைகளாலும்  நோய்மையாலும் துன்பப்படுவதை ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோரை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. தனது குழந்தை அனுபவிக்கும் கொடுமையை யாராவது தீர்த்துவிடமாட்டார்களா என்பதை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பெற்றோரைப் பொறுத்தவரை தனது குழந்தையின் வலி/பிணி நீக்கும் ஒவ்வொருவருமே கடவுள்தான். எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய நண்பரும் கடவுள்தான்.