ஒரு கேள்வி. விருப்பம் இருந்தால் பதில் சொல்லுங்கள்.
தினமும் எழுதுவது சலிப்பை தரவில்லையா? அப்படி எழுதாவிட்டால்தான் என்ன? ஏதாவது குறிக்கோள் இருக்கிறதா?
ஒரு கேள்வி என்று கூறிவிட்டு மூன்று கேள்விகளைக் கேட்டிருக்கிறேன்.
********
அன்புள்ள ரவீந்திரன்,
எதற்காக இந்தக் கேள்விகளைக் கேட்டிருப்பீர்கள் என ஜெர்க் ஆகிவிட்டேன். உண்மையில் இந்தக் கேள்விகள் யோசிக்கச் செய்கின்றன. கண்களைத் திறந்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!
சலிப்பைத் தரவில்லையா?
இந்தக் கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
தினமும் எழுதுவதற்கு ஆரம்பத்தில் ‘த்ரில்’ ஆக இருந்தது. வெளியில் சொல்லாத விஷயங்கள் மண்டைக்குள் நிறைய இருந்திருக்கும் போல. எதை எழுதப் போகிறோம் என்பதில் பெரிய சிரமம் இல்லை. ஆனால் எழுதி முடித்த பிறகு டிங்கரிங் வேலைக்கு அதிக நேரம் பிடித்தது. ஒரே பத்தியை குறைந்தபட்சம் இருபது முறையாவது வாசித்து திருத்தம் செய்வேன். இப்பொழுது உல்டாவாகியிருக்கிறது. எதை எழுதப் போகிறோம் என்பதற்கான தேடல்தான் அதிகமாக இருக்கிறது. எழுதுவது பற்றிய‘தீம்’கிடைத்துவிட்டால் அதிகபட்சம் முக்கால் மணி நேரம்தான் எழுத தேவைப்படுகிறது.
நான் எழுதுவதில் தேர்ந்தவனாகிவிட்டேன் என்று பிரஸ்தாபிப்பதற்காக இதைச் சொல்லவில்லை. எழுதியதைத் திரும்ப திரும்ப வாசிப்பதில் உருவான சோம்பேறித்தனம் மற்றும் ‘எல்லாம் சரியா இருக்கும்’ என்ற மூடநம்பிக்கை என்றுதான் இதை புரிந்து கொள்கிறேன்.
பத்திரிக்கைகளுக்கு எழுதுவதில் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. எழுதியது சரியாக இல்லாதபட்சத்தில் பிரசுரமாகாது. பிரசுரமாகாவிட்டால் ‘என்ன குறை’ என்று யோசித்து திருத்திக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் இணையத்தில் அது பெரிய drawback. என்ன எழுதினாலும் பிரசுரம் செய்து கொள்ளலாம். எப்படி எழுதினாலும் நான்கு பேர்களின் கண்களில் காட்டிவிடலாம். நன்றாக இல்லையென்றால் பெரிதாக சுட்டிக்காட்டமாட்டார்கள். “எப்படியோ தொலையட்டும்” என்று சைலண்டாக சென்றுவிடுவார்கள். நாமும் எழுதுவதெல்லாம் சரியாக இருக்கிறது என்று குருட்டுவாக்கில் திரிய நிறைய வாய்ப்பிருக்கிறது.
இப்பொழுது உங்கள் கேள்விக்கான பதில்- தொடர்ந்து எழுதுவதற்காக நான் சலிப்படையவில்லை. ஆனால் என்னையுமறியாமல் நான் குருட்டுவாக்கில் திரிவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை நிராகரிக்கவில்லை. இதுவரை நான் சலிப்படையவில்லையென்றாலும் உங்களுக்கு சலிப்பூட்டுவதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள். நம் இருவருக்குமே அது உதவும்.
எழுதாவிட்டால் என்ன?
எழுதாவிட்டால் ஒன்றும் இல்லை. குடி முழுகிவிடாதுதான்.
ஆனால் எழுதுவது ஒருவிதமான சுயநலம்தான். எழுத்தை Practice செய்து கொள்ளலாம். நூறு பேரைக் கொன்று அரை வைத்தியன் ஆவது போலத்தான் இது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் எதையாவது வாசித்தே தீர வேண்டிய கட்டாயம் உருவாகிறது. ஆழ்வாரோ, சைக்காலஜியோ , சீவகசிந்தாமணியோ- கொஞ்ச நேரமாவது வளைந்து படிக்கிறேன். இதுவும் selfishnessதானே? படித்ததை எனக்கு வாய்த்த மொழியில் எழுதுகிறேன். விரும்புபவர்கள் வாசிக்கிறார்கள்.அவ்வளவுதான் அதற்குமேல் ஒன்றுமில்லை.
குறிக்கோள் இருக்கிறதா?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எழுதி என்ன முதலமைச்சர் ஆகப்போகிறேனா? அல்லது லட்சக்கணக்கில் ராயல்டி வாங்கப் போகிறேனா?
ஒரு வெங்காயமும் இல்லை.
‘நிசப்தம்’ தளத்தை திறப்பவர்களை ஏமாற்றிவிடக் கூடாது என்ற கவனம் மட்டும் இருக்கிறது. ‘இதைத்தான் எழுதியிருப்பான்’ என்று வாசிப்பவர்கள் Predict செய்துவிடவும் கூடாது, ‘இப்படித்தான் எழுதியிருப்பான்’ என்று யூகிக்குமளவிற்கு ‘ஸ்டீரியோடைப்’ஆகவும் இருந்துவிடக் கூடாது என்ற பயம் மட்டும் அவ்வப்போது வருவதுண்டு. அதில்தான் குறிக்கோளாக இருக்கிறேன்.
இந்த மின்னஞ்சலை பிரசுரம் செய்வதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது நன நம்புகிறேன்.