வீட்டிற்கு எதிர்புறத்தில் கட்டடம் ஆகிக் கொண்டிருக்கிறது. 30x40 க்கு அளவிலான சிறிய சைட்தான். தமிழ்க்காரர் ஒருவர் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு வீடு கட்டித்தரும் பில்டரும் தமிழர்தான். பில்டர் சின்சியர் ஆசாமி. காலையில் ஆறு மணிக்கு வந்து கட்டத்திற்கு நீர் ஊற்றுவதில் ஆரம்பித்து இரவு ஏழு மணி வரைக்கும் தவமாய் தவமிருக்கிறார். இந்த சைட்டுக்கு வேலை செய்வதற்கு ஒரு குடும்பம் வந்திருக்கிறது. பெங்களூர் நகரத்தில் கட்டடவேலை செய்பவர்கள் பெரும்பாலும் வெளியூர்க்காரர்கள்தான். சைட்டுக்கு அருகிலேயே தற்காலிக குடிசை அமைத்து தங்கிக் கொள்வார்கள். அவர்களுக்கு தங்குவதற்கு வீடு கிடைத்த மாதிரியும் ஆயிற்று சைட் ஓனருக்கு வாட்ச்மேன் கிடைத்தது போலவும் ஆயிற்று. Mutual benefit.
அப்படித்தான் இந்த சைட்டுக்கும் குடி வந்திருக்கிறார்கள். கன்னடக்காரர்கள். கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என சிறு குடும்பம். அந்த ஒற்றையறை குடிசையில்தான் சாப்பாடு செய்வதும், படுத்து உறங்குவதும், குடும்பம் நடத்துவதும். அதே அறைக்குள்தான் சிமெண்ட் மூட்டையும் அடுக்கி வைத்திருப்பார்கள். கொடுமையான வாழ்க்கைதான். ஆனால் அவர்கள் இது பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாதது போலத்தான் தெரிகிறது. குழந்தைகளில் மூத்தவனான கணேஷ் படு அட்டகாசம். வந்த ஒரு வாரத்திலேயே எனது மகனும் கணேஷூம் நண்பர்களாகிவிட்டார்கள். மாலை நேரமானால் அவர்களின் நட்பை பிரித்து இவனை வீட்டிற்குள் எடுத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ‘கணேஷ் வீட்டிற்கு போறேன்’என்று அழுது ஊரைக் கூட்டிவிடுகிறான்.
கடந்த ஒருவாரமாக அலுவலகம் முடித்து வீட்டிற்கு வந்தவுடன் அம்மா புகார்ப்பட்டியல் வாசிக்கிறார். “தலை முழுவதும் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டான், கணேஷூடன் சேர்ந்து செருப்பை பிய்த்துவிட்டான், சாக்கடை தண்ணீரை காலில் மிதித்தான்” இப்படி ஏதாவது ஒரு கிரிமினல் குற்றம் அந்த பட்டியலில் நிச்சயம் இடம் பிடித்துக் கொள்ளும். இந்த மாதிரி சமயங்களில் பெரும்பாலும் காதில் விழாதது போல நடித்துவிடுவேன். மண்ணில் விளையாடுவதும், பொருட்களை நாசம் செய்வதும் குழந்தைகளுக்கான உரிமை. அதில் தலையிடுவதற்கு நமக்கு ரைட்ஸ் இல்லை என்பதுதான் என் நிலைப்பாடு. ஆனாலும் அம்மாவும் அப்பாவும் “இப்படியே செல்லம் கொடுத்தால் பையன் சொன்ன பேச்சு கேட்காமல் கெட்டுப்போவான்” என்று திகிலூட்டித்தான் உரையாடலை முடிப்பார்கள்.
நேற்று காலையில் எதிர் சைட் பில்டருக்கும், அவரது பக்கத்து இடத்துக்காரருக்கும் பெரும் தகராறு நடந்தது. பக்கத்து இடமும் காலி சைட்தான். தகராறுக்கான காரணம் ரொம்ப சிம்பிள். கொஞ்ச காலத்திற்கு முன்பெல்லாம் பெங்களூரில் வீடு கட்டுபவர்கள் தற்காலிக குடிசைகளை சாலையோரமாக போட்டுக் கொள்வார்கள். இப்பொழுது தற்காலிக குடிசையை சாலையில் அமைத்தால் கார்பொரேஷன்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம். அதனால் அருகாமையில் இருக்கும் காலி இடங்களில் குடிசை போட்டுக் கொள்கிறார்கள். வீடு கட்டி முடிந்தவுடன் குடிசையை இடித்து விடுகிறார்கள். பக்கத்தில்தான் காலி இடம் இருக்கிறதே என்று எதிர் சைட் பில்டர் குடிசையை அந்த காலி இடத்தில் போட்டு கணேஷ் குடும்பத்தை தங்கச் சொல்லிவிட்டார்.
இந்த விவகாரத்தில்தான் பிரச்சினை. நேற்று காலை ஏழு மணிக்கெல்லாம் அந்த பக்கத்து இடத்துக்காரன் பத்து இருபது பேர்களை அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். வந்திருந்தவர்கள் ஆளாளுக்கு குதித்தார்கள். “உங்க போன் நெம்பர் தெரியாது சார், இல்லைன்னா கண்டிப்பா பெர்மிஷன் வாங்கியிருப்பேன்” என்று பில்டர் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் யாரும் இல்லை. தாறுமாறாக வசைமாரி பொழிந்தார்கள். பில்டர் பேச முயன்றால் யாராவது ஒருவன் கையை உயர்த்திக் கொண்டு வந்தான். பில்டர் அடி வாங்கிவிடுவார் போலிருந்தது. சமாதானப்படுத்துவதற்காக அப்பா சென்றார். “பெரியவரே உங்க வேலையைப் பாருங்க” என்று எவனோ கத்த இதற்கு மேல் அங்கு இருப்பது மரியாதை இல்லை என்று அப்பா திரும்பி வந்துவிட்டார்.
பிறகு மொத்த நிகழ்வையும் ஜன்னல் வழியாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த தடியன்கள் குடிசைக்குள் புகுந்து ஒவ்வொரு சாமான்களாக தூக்கி வீசினார்கள். அவர்கள் வெளியே வீச வீச கணேஷின் அம்மாவும் அப்பாவும் பதட்டத்துடன் பொறுக்கி எடுத்துக் கொண்டார்கள். கணேஷூம் அவனது தங்கையும் மணல் மீது அமர்ந்து அழுது கொண்டிருந்தார்கள். பத்து நிமிடங்களில் மொத்த சாமான்களும் வெளியே வந்துவிட குடிசையை இடித்து தரைமட்டமாக்கினார்கள். பிறகு சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களுக்கு தங்களின் திமிரை காண்பிக்கும் விதமாக தாறுமாறாக கத்திவிட்டு வண்டிகளில் ஏறி புழுதியைக் கிளப்பிவிட்டுச் சென்றார்கள். வெற்றிகரமாக சில நிமிடங்களில் ஒரு குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
கணேஷின் அம்மா அப்பாவிடம் பில்டர் ஏதோ பேசினார். பிறகு பில்டரிடம் பேசுவதற்காக அப்பா வெளியே சென்றார். பில்டர் அவமானத்தினால் குறுகிப் போயிருந்தார். கைவசம் இருக்கும் தகரங்களை வைத்து சைட்டிலேயே கணேஷின் குடும்பம் இன்று ஒரு நாள் தங்கிக் கொள்வதாகவும் மறுநாள் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதாகவும் பில்டர் சொன்னாராம். நான்கு குச்சிகளை நட்டு அடுத்த அரை மணி நேரத்தில் குடிசையை தயார் செய்துவிட்டார்கள். இனி பிரச்சினை இருக்காது என்று தோன்றியது. வழக்கம் போல அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன்.
நேற்று அலுவலகம் முடிந்து கிளம்பும் போது ஆசுவாசமாக இருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை என்பது உற்சாகமாக்கியிருந்தது. பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது மகி மீதான அம்மாவின் புகார் பட்டியல் என்னவாக இருக்கும் என நினைத்த போது என்னையுமறியாமல் சிரிப்பு வந்தது. வீட்டிற்கு வந்த போது வீட்டிற்குள் வழக்கமான உற்சாகம் இல்லை. ஒவ்வொருவரும் அமைதியாக இருந்தார்கள். யாராவது யாரையாவது திட்டியிருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன். மகி சில நிமிடங்களுக்கு பிறகு அறைக்குள் இருந்து வெளியே வந்தான். அவன்தான் அந்த கனத்த அமைதியை உடைத்தான். “அப்பா கணேஷை ஆஸ்பிட்டல் தூக்கிட்டு போய்ட்டாங்க” என்றான். “கீழே விழுந்துட்டானா?” என்றேன்.
அப்பாதான் பதில் சொன்னார். தகரங்களை வைத்து அமைத்த தற்காலிக குடிசையில் மதிய நேரத்தில் கணேஷூம் அவன் தங்கையும் விளையாடிக் கொண்டிருந்தார்களாம். நான்கு குச்சிகள் ஏதோ ஒரு குச்சியை பிடித்து அசைக்க மேலிருந்த தகரம் சரிந்து கணேஷை வெட்டியிருக்கிறது. கைகளிலும் கால்களிலும் வெட்டுக்காயம் ஆகிவிட்டதாகவும் உடனடியாக பில்டர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுவிட்டதாகவும் சொன்னார். நேற்று வீட்டை இழந்தார்கள். இன்று மகனுக்கு விபத்து. அந்தக் குடும்பத்தை நினைக்க பரிதாபமாக இருந்தது. யாருக்கோ நடக்கும் பிரச்சினையின் அத்தனை வலிகளையும் அந்தக் குழந்தை சுமந்து கொண்டதாக தோன்றியது.
ஒன்பது மணிக்கு மேலாக பில்டர் வந்தார். கணேஷை பற்றி அவராகவே ஆரம்பித்தார். ரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டதாகவும் ஐ.சி.யூவில் இருப்பதாகவும் சொன்னார். “ஒண்ணும் பிரச்சினை இல்லீல்ல சார்?” என்றார் அப்பா. “இடது கை போயிடுச்சுங்க. இங்கேயே முக்கால்வாசி கட் ஆகிடுச்சு. எடுத்துட்டு போன போது கையை காப்பாத்தறது ரொம்ப சிரமம்ன்னு சொல்லிட்டாங்க. இப்போதைக்கு வேறெதுவும் சொல்ல முடியாதுன்னுட்டாங்க...பாவப்பட்ட ஜென்மங்கள்” என்றார்.
இந்தத் தகவலை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தலை மீது மண்ணை அள்ளிப் போட்டதும், செருப்பை பிய்த்ததும் அந்தக் கைதான் என்ற போது அழுகை வந்துவிடும் போலிருந்தது. ஒரு தற்காலிக குடிசைக்காக மூன்றரை வயது குழந்தை வாழ்க்கை முழுவதும் கை இல்லாமல் சிரமப்படப் போகிறது என நினைக்கும் போது ஏதோ தொண்டையை அடைத்தது. வேறு எதுவும் யோசிக்கத் தோன்றவில்லை. நிலாவை பார்த்துக் கொண்டு கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தேன். நிலாவும் மேகமும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன. கணேஷ் முகம் வந்து வந்து போனது.