வலைப்பதிவர்களிடையே ‘தொடர்பதிவுகள்’ என்பது ஒரு கட்டத்தில் மிகப்பிரபலமாக இருந்தது. ஞாபகமிருக்கிறதா?. தொடர் ஓட்டப்பந்தயம் போலத்தான். “எனக்கு பிடித்த ஆறு பதிவர்கள்” என்று யாராவது ஆறு பேரை குறிப்பிட்டால் அவர்கள் தமக்கு பிடித்த ஆறு பதிவர்களை கோர்த்துவிடுவார்கள். அந்த ஆறு பேரும் வேறு ஆறு பதிவர்களை சுட்டிக் காட்டுவார்கள். இப்படியே ஒரு ரவுண்ட் ஓடி முடிக்கும் போது கிட்டத்தட்ட அத்தனை பதிவர்களும் ஆட்டத்தில் பங்கு பெற்றிருப்பார்கள். வாசிப்பதற்கு ஜாலியாகவும் இருக்கும்; நமக்கு அறிமுகமில்லாத பதிவுகளை தெரிந்து கொள்வதாகவும் இருக்கும். இப்பொழுது அதெல்லாம் காணாமல் போய்விட்டது போலிருக்கிறது.
எழுத்தை பயிற்சி செய்வதற்கு வலைப்பதிவு நல்ல தளம் என்று நம்பலாம். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சுருக்கெழுத்துத் தளங்கள் வந்த பிறகு பத்தி பத்தியாக வலைப்பதிவுகளில் எழுதுவது வெகுவாக குறைந்துவிட்டது போலிருக்கிறது. இந்த சமூக வலைத்தளங்கள் மீதான Craze வலைப்பதிவுகள் மீதான ஈர்ப்பை குறையச் செய்திருக்கின்றன. இருந்தாலும் தமிழ் வலைப்பதிவுகளில் படம் காட்டிக் கொண்டிருக்கும் சிலரை தொடர்ந்து வாசிப்பதில் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கிறது.
என்னளவில் வலைப்பதிவு என்பது தொடர்ந்து எழுதுவதற்கான பயிற்சி பெறும் நல்ல களமாக இருக்கிறது. எழுதுவது என்பது தொடர்ந்த பயிற்சியினால் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன். நமக்கென்று எழுத்தில் ஒரு ‘ஸ்டைல்’ உருவாக குறைந்தபட்சம் பத்து வருட உழைப்பாவது தேவை. அதுவரைக்கும் அடிக்கும் பல்டிகள், குட்டிக்கரணங்கள் எல்லாம் ஒரு தடத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் முன்னாடியே கிடைத்துவிட்டால் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஆயிரம் அடி தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது எழுநூறு அடியிலேயே கிடைத்துவிட்டால் சந்தோஷப்படுவோம் இல்லையா? அப்படி.
மார்க்வெஸ் போன்று தனித்த ஸ்டைலை அடைவதற்கெல்லாம் பல ஆண்டுகள் ஆகக் கூடும். “உனக்கு மார்க்வெஸ் பற்றி என்ன தெரியும்” என்று யாராவது கையை உயர்த்தாமல் இருக்கக் கடவது. நானே சொல்லிவிடுகிறேன். அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. காப்ஃகா, மார்க்வெஸ், பாப்லோ நெரூடா போன்ற பெயர்களை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு அவ்வப்போது தெளித்துவிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு கொள்ளாமல் அடுத்த பத்திக்கு போய்விடுங்கள்.
இப்பொழுது சிலரை இழுத்துவிடுகிறேன். அவர்கள் ஆளாளுக்கு ஐந்தாறு பேரை கோர்த்துவிட்டால் இந்த ஆட்டம் ஒரு ரவுண்ட் அடிக்க வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் இந்தப் பதிவோடு படுத்துக் கொள்ளும். பார்க்கலாம்.
ஈரோடு கதிரின் எழுத்துக்கள் வழுக்கும் தன்மையானவை. ப்ரேக் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நான் ஸ்டாப் பயணம். அவருடைய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களைவிட கட்டுரை எழுத்துக்களை சுவாரசியமாக வாசிக்க முடியும். ஆனால் ஃபேஸ்புக் வந்த பிறகு வலைப்பதிவில் எழுதுவதை குறைத்துக் கொண்டார் போலிருக்கிறது. அவ்வப்போது வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருக்கும் அவரை இந்த ஆட்டத்திற்குள் இழுத்துவிடலாம்.
பழைய சம்பவங்களை மிகுந்த சுவாரசியத்துடன் எழுதும் ராஜநாயஹம் சீனியர் எழுத்தாளர். அரசியல், இலக்கியம் என கலந்து கட்டி அடிக்கும் இவரது தளத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்துவிடுவதுண்டு. அப்படி முடியாதபட்சத்தில் சேர்த்து வைத்து வார விடுமுறைகளில் வாசித்துவிடுகிறேன். இணையவெளியில் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்.
துள்ளலான நடையும் இயல்பிலேயே நகைச்சுவையும் கொண்ட எழுத்துக்களை வாசிக்க விரும்பும் போதெல்லாம் அதிஷாவின் தளத்திற்கு ஒரு நடை போய்வருவது வழக்கமாகியிருக்கிறது. கொஞ்ச நேரம் ஜாலியாக வாசித்துவிட்டு வரலாம்.
ரொம்ப காலமாக எழுதிக் கொண்டிருக்கும் சொக்கன் துளி கூட சுவாரசியம் குறையாமலும் எழுதிக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர் அசோகமித்திரனை ஒரே முறைதான் சந்தித்திருக்கிறேன். அப்பொழுது அவர் சிலாகித்த சில பெயர்களில் சொக்கன் பெயருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். அதன் பிறகு சொக்கனின் வலைப்பதிவை மொத்தமாக வாசித்து முடித்தேன்.