Mar 6, 2013

யாராலும் தீர்க்க முடியாத புதிர்கள்


பெங்களூர் அறிமுகமானவர்களுக்கு பெலந்தூர் ஏரி தெரிந்திருக்கலாம். தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. கூகிள் மேப்பில் பார்த்துக் கொள்ளலாம். அந்த ஏரியை ஒட்டியபடி ஒரு சாலை ஓடுகிறது அல்லவா? அதுதான் யெம்ளூர் சாலை. ஏரியைச் சுற்றியவாறு  நீளும் இந்தச் சாலை ஹெச்.ஏ.எல் சாலையுடன் இணையும் இடத்தில் ஒரு சிக்னல் இருக்கிறது.  கவனித்திருக்கிறீர்களா? அந்த சிக்னலில் இடதுபுறம் திரும்பியவுடன் கொஞ்சம் மேடாக இருக்கும். அது ஏன் மேடாக இருக்கிறது என்பதைச் சொல்லத்தான் இந்தப் பதிவு. ஓவர் பில்ட் அப்பாகத் தெரிகிறதா? சரி நேரடியாக சப்ஜெக்ட்டுக்கு சென்றுவிடலாம்.

அந்த மேட்டுக்கு கீழாக ஒரு பாதாளச்சாக்கடை ஓடுகிறது. நீண்ட நாட்களாக அது மூடாமல்தான் கிடந்தது. மூடாமல் கிடக்கும் பாதாளச்சாக்கடைக்குள்ளிருந்து என்ன கிடைக்குமோ அது சில மாதங்களுக்கு முன்பாக  கிடைத்தது. அது பீக் டைம். ஆளாளுக்கு திரவியம் தேடுவதற்காக ஓடிக் கொண்டிருந்த ஒன்பதரை மணி. அந்தச் சாலை முழுவதுமாகவே வாகனங்கள் நெருக்கிக் கொண்டிருந்தன. இன்ச் இன்ச்சாக நகர்ந்து கொண்டிருந்த வாகனங்களை ட்ராபிக் போலீசாரும் சட்ட ஒழுங்கு போலீஸாரும் துரத்திக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஒவ்வொரு வாகன ஓட்டியையும் “போடா டேய்” என்று கோபத்துடன் விரட்டியடித்தார்கள். என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள மூக்கு அரித்தது. அந்த இடத்திலிருந்து அரைக்கிலோ மீட்டருக்கு வண்டியை நகர்த்திச் சென்று ப்ளாட்பாரத்தில் நிறுத்திவிட்டு வந்தபோது பாதாளச் சாக்கடையருகே யாரையும் நெருங்கவிடவில்லை.  அந்த இடத்தில் ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது என்று மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது.

சுற்றி நின்றவர்கள் ஆளாளுக்கு அந்த மரணம் பற்றி ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேற்றிரவு நடந்து வந்தவன் பாதாளச்சாக்கடை இருப்பது தெரியாமல் விழுந்துவிட்டதாக ஒருவர் சொன்னார். யாரோ இவனை கொலை செய்து சாக்கடைக்குள் வீசிவிட்டதாக இன்னொருவர் சொல்லிக் கொண்டிருந்தார். போலீஸாரிடம் கேட்டால் சரியாகச் சொல்லக் கூடும். ஆனால் தமிழில் கேள்வி கேட்கும் ஒருவனுக்கு கன்னட போலீஸ்காரர் சரியான பதிலைச் சொல்வார் என நம்புவது முட்டாள்த்தனம் என்று தோன்றியதால் எதுவும் கேட்கவில்லை.

சாக்கடைக்கு அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோவிற்குள்ளாக ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் அழுது கொண்டிருந்தார்கள். இறந்தவனின் மனைவியும் மகளுமாக இருக்கக் கூடும் என்று கற்பிதம் செய்து கொண்டேன். அவர்களின் மிக அருகில்தான் நின்று கொண்டிருந்தேன். ஆனால் எதுவும் பேச வேண்டும் என்று தோன்றவில்லை. அவர்களும் சுற்றி நிற்பவர்களைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் அழுது கொண்டிருந்தார்கள். ஆம்புலன்ஸ் ஒன்று வந்து சேரவும் சாக்கடைக்குள் இறங்கியவர்கள் பிணத்தை மேலிழுக்கவும் சரியாக இருந்தது. 

பெண்ணும் சிறுமியும் ஆட்டோவை விட்டு கீழிறங்கி வேகமாக ஓடினார்கள். மற்றவர்களை போலீஸார் தடுத்துவிட்டனர். முகம் உப்பிக் கிடந்த அந்த மனிதனைப் பார்த்து கதறியபோது அந்தச் சிறுமி மயக்கமடைந்து விட்டாள். அவளுக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கக் கூடும். அவளை சில ஆட்டோ டிரைவர்கள் தாங்கிப்பிடித்துக் கொள்ள கொஞ்ச நேரத்தில் ஆம்புலன்ஸ் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டது. அந்தப் பெண்ணும் ஆம்புலன்ஸிலேயே ஏறிக் கொண்டாள். சிறுமியை ஆட்டோவில் அமர வைத்து தண்ணீர் தெளித்தார்கள். 

அடுத்த சில வினாடிகளில் கூட்டம் அந்த இடத்தை விட்டு நகரத் துவங்கியது. வேடிக்கை பார்த்தவர்கள் சகஜ நிலையை அடைந்து கொண்டிருந்தார்கள். சில நிமிடங்களில் அந்தச் சாலையும் வழக்கமான சாலையாக மாறிவிட்டது. முகம் உப்பிய மனிதன் தனது உடலில் அப்பி எடுத்துவந்த சாக்கடைத் தண்ணீர் மட்டும் உலருவதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டது. இன்னும் இருபது நிமிடங்களில் எனக்கு அலுவலகத்தில் மீட்டிங் இருக்கிறது என்ற நினைப்பு உந்தித்தள்ள அனிச்சையாக கைகள் ஆக்ஸிலேட்டரை முறுக்கிக் கொண்டிருந்தன.

அடுத்த சில நாட்களில் அந்த இடத்த்தில் சிமெண்ட் பலகைகளைப் போட்டு மூடி மேடாக்கிவிட்டார்கள். இந்த மேடுதான் முதல் பத்தியில் பேசின மேடு. ஆனால் இதோடு முடிந்துவிடவில்லை. உங்களிடம் சொல்வதற்கு இன்னும் கொஞ்சம் சரக்கு இருக்கிறது.

அடுத்த ஓரிரண்டு மாதங்களுக்கு அந்த இடத்தில் கொஞ்சம் பூக்கள் இறைந்து கிடப்பதையும் எரிந்து கொண்டிருக்கும் அல்லது அணைந்து போன ஊதுபத்தியையும் இந்த இடம் பரிச்சயமானவர்கள் கவனித்திருக்கக் கூடும். அந்தப் பெண்ணோ அல்லது சிறுமியோ வந்து போகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.

சமீபகாலமாக இந்த இடத்தில் பூக்களும் ஊதுபத்தியும் கண்ணில்படுவதில்லை. இது சகஜம்தானே. தினசரி நெருக்கடிகளும் வாழ்வியல் தேவைகளும் ஒவ்வொருவரையும் அலைகழித்துக் கொண்டிருக்க இறந்தவனுக்காக வாழ்நாள் முழுவதும் இந்த இடத்திற்கு வந்து போவார்கள் என்பது சாத்தியம் இல்லாததும் கூட. எனக்கும் அந்த மரணம் கிட்டத்தட்ட மறந்து போயிருந்தது.

சில நாட்களுக்கு முன்பாக ஏதோ ஒரு ஆடிட்டிங் என்று அலுவலகத்திற்கு நேரத்திலேயே வரச் சொல்லியிருந்தார்கள். ஏழரை மணிக்கு சிக்னலை அடைந்த போது அந்த இடத்தில் ஒரு பெண்மணி ஊதுபத்தி வைத்துக் கொண்டிருந்தார். அவர் ஆட்டோவில் அழுத பெண்மணியும் இல்லை சிறுமியும் இல்லை. வேறு யாரோ. விசாரித்தே தீர வேண்டும் என மனம் விரும்பியது. வண்டியை நிறுத்திவிட்டு அவர் அருகில் போன போது வித்தியாசமாக பார்த்தார். போனில் பேசுவது போல பாவ்லா காட்டிவிட்டு போனை பாக்கெட்டுக்குள் வைத்தவாறே “எதற்காக ஊதுபத்தி வைக்கிறீர்கள்?” என்றேன். அனேகமாக இறந்தவனின் அம்மாவாக இருக்கக் கூடும் என்று தோன்றியது. அவர் பதில் சொல்ல விரும்பாதது போலத் தோன்றியது.

“இந்த இடத்தில் ஒருவர் இறந்து போனாரே அவருக்காகவா?” என்ற போதும் போதும் அவர் பெரிய ரியாக்‌ஷன் காட்டவில்லை. 

சில கணங்களுக்குப் பிறக்கு ஏதோ நினைத்தவராக “ஆமாம்” என்றார்.

அமைதியாக இருக்க முடியவில்லை.  “உங்களுக்கு சொந்தமா?” என்ற போது முறைத்தார். ஆனால் பதில் சொல்லவில்லை.

மீண்டும் ஒரு முறை கேட்டேன். 

“சொந்தமும் இல்லை ஒன்றும் இல்லை. அவர் சாகும் போது நான் நேரில் பார்த்தேன்” என்றார். அதன் பிறகு வேகமாக அந்த இடத்தைவிட்டு நகரத்துவங்கினார். எத்தனை முறை கேட்டும், எந்தக் கேள்வியைக் கேட்டும் அவர் நில்லாமல் நடந்து கொண்டேயிருந்தார். 

ஒரு மரணம் ஆயிரம் கேள்விகளை தனக்குள் புதைத்துக் கொள்ளும் என்பார்கள். ஆனால் இந்தச் சாவு ஆயிரம் கேள்விகளை எழுப்பியது. 

“அவன் எப்படி இறந்திருக்கக் கூடும்?” 

 “கொலையாக இருக்குமா? அல்லது தெரியாத்தனமாக விழுந்திருப்பானா?” 

“இந்தப் பெண்மணி எதற்கு அங்கு இருந்தாள்?”

 “அவன் சாகும் போது இவளை பார்த்திருப்பானா?”

 “இவளிடம் ஏதாவது கேட்டிருப்பானா?”

 “அவனுக்காக இவள் ஏன் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறாள்?” 

கேள்விகள்...இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. ஆனால் எந்த ஒரு ஒற்றைக் கேள்விக்கும் பதில் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் என்னளவில் இந்த மரணத்தில் இருக்கும் சுவாரசியம். துக்கமான சுவாரசியம்.