Mar 4, 2013

மனுஷ்ய புத்திரனுடன் ஒரு பஞ்சாயத்து


உயிர்மை பதிப்பகம் மூலமாக எனது இரண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஒன்று கவிதைத் தொகுப்பு, இன்னொன்று சைபர் கிரைம் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. வெளிப்படையாகச் சொன்னால் ஆரம்பகட்டத்தில் உயிர்மையும், மனுஷ்ய புத்திரனும்தான் நான் தொடர்ந்து எழுதுவதற்கான களம் அமைத்துக் கொடுத்தவர்கள். உயிர்மையின் மூலமாக புத்தகம் வெளிவந்ததையும் மிகச் சிறந்த Recognition ஆகவே கருதிக் கொண்டிருக்கிறேன். இது போன்ற பல காரணங்களால் புத்தகங்கள் பற்றிய எந்தத் தகவலையும் அவர்களிடம் கோரியதில்லை. அவர்களும் பகிர்ந்து கொண்டதில்லை. ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக “கண்ணாடியில் நகரும் வெயில்” தொகுப்புக்கு நூலக ஆணை கிடைத்திருப்பதாகத் தெரிந்தது. ஆனால் யாரோ சிலரின் மூலமாக தெரிந்து கொண்ட தகவல்தான் அது. 

சில மாதங்களாக உயிர்மைக்கு தொடர்ந்து ஒரே கேள்வியை உடைய மின்னஞ்சலை வெவ்வேறு வாக்கியங்களில் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  “புத்தகங்கள் எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன?” என்ற கேள்விதான் அது. ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. 

இந்தக் கேள்வியும் நானாக கேட்டதில்லை. எங்கள் நிறுவனத்திற்கு புதிதாக வந்திருக்கும் டைரக்டர் ஒருவரிடம் ‘இவன் மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறான்’ என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார்கள். 

உற்சாகமான அவர் சில கேள்விகளை கேட்டுவிட்டு “ஒவ்வொரு புத்தகமும் எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன?” என்றார். 

“கடைசியாக வந்த புத்தகம் ஐம்பது பிரதிகள் விற்றிருக்கின்றன. மற்ற இரண்டு புத்தகங்களும் கணக்கு தெரியவில்லை” என்றேன். 

ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பிரதிகள் விற்றிருக்கும் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. ஏமாந்தவராக “ஜஸ்ட் ஃபிப்டி?” என்றார்.

“ஐம்பது என்பது கூட ரவுண்டாக இருக்கட்டும் என்று நானாகச் சொன்னது. உண்மை நிலவரம் இன்னும் குறைவானதாக இருக்கக் கூடும்” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு தலையாட்டினேன். 

“மற்ற இரண்டு புத்தகங்கள் பற்றிய கணக்கு ஏன் தெரியவில்லை” என்றார். ஏதேதோ சால்ஜாப்புகளை சொல்ல வேண்டியிருந்தது. புத்தகங்கள் விற்ற கணக்கு தெரியவில்லை என்று சொன்னால் பெரும்பாலானவர்கள் நம்புவதில்லை. பொய் சொல்கிறான் என்று நினைக்கிறார்கள். 

ராயல்டி என்பது அவசியமானதாகத் தெரியவில்லை ஆனால் குறைந்தபட்சம் எத்தனை புத்தகங்கள் விற்றிருக்கின்றன என்றாவது தெரிந்து கொள்ள விரும்பியதன் விளைவாகத்தான் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினேன். என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லை எந்த பதிலும் வருவதில்லை. 

பதில் வராத போதெல்லாம் ஒவ்வொரு புத்தகத்துக்குமான எனது உழைப்பு உதாசீனப்படுத்தப்படுவதாகவே உணர்கிறேன். நான் தெரிந்து கொள்ள விரும்புவதெல்லாம் எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன என்பதுதான். ஆனால் இதற்கான பதிலை என்னால் பெற்றுவிட முடியும் என்று தோன்றவில்லை. தனிப்பட்ட மின்னஞ்சல்களை பதிவாக வெளியிடுவது அநாகரீகமான செயலாக இருக்கக் கூடும் என்று தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் இதைவிட வேறு எதைச் செய்வது என்று தெரியவில்லை.

ஒருவேளை என்னிடம் இருக்கும் உயிர்மையின் மின்னஞ்சல்கள் தவறானதாக இருக்கக் கூடும் அல்லது உயிர்மையின் நிறுவனர் தொலைக்காட்சிகளில் உலகப்பிரச்சினைகளுக்கு தீர்ப்பு சொல்வதில் பிஸியாக இருக்கக் கூடும். அவர் பிஸியாக இருக்கட்டும். ஆனால் அவரிடம் இருக்கும் பல பணியாளர்களில் ஒரே ஒரு பணியாளரை அழைத்து “அவனுக்கு பதிலை சொல்லிவிடுங்கள். தொலையட்டும் சனியன்” என்று என் பஞ்சாயத்தை முடித்து வைக்கலாம் அல்லவா?

எளிமையான இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு வரி...எத்தனை புத்தகங்கள் விற்றிருக்கின்றன என்பதை மட்டும் தெரியப்படுத்துங்கள்.

நன்றி

--------------------
2012/4/28 Vaa.Manikandan
Subject: Re: புத்தகங்கள்
To: uyirmmai *
Cc: Uyirmmai Publications , editor@uyirmmai.com

வணக்கம்.

தங்களோடு பேசுவதற்கு முயன்றேன். உங்களுக்கு என்னோடு பேசுவதற்கு விருப்பமில்லை என்று அறிந்து வருத்தமுறுகிறேன். 

“கண்ணாடியில் நகரும் வெயில்” “சைபர் சாத்தான்கள்” ஆகிய புத்தகங்களை ஒரு நூலகத்தில் பார்த்தேன். நூலகத்திற்கு அனுப்பப்பட்ட புத்தகங்களோடு சேர்த்து எத்தனை புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன என்ற தகவலை தெரியப்படுத்த இயலுமா?

பணம் ரீதியாக இந்த வினாவை கேட்கவில்லை. எத்தனை புத்தகங்கள் விற்பனை ஆகியிருக்கின்றன என்று அறிந்துகொள்ளவே விரும்புகிறேன்.

நன்றி.

வா.மணிகண்டன்.

--------------------
2012/5/14 Vaa.Manikandan

வணக்கம்.

எனக்கு வோக்ஸ்வேகன் கார் வேண்டாம். குறைந்தபட்சம் எத்தனை புத்தகங்கள் விற்றது என்ற தகவலைத் தெரிவிக்க மட்டும்தான் கேட்டேன்.

மணிகண்டன்.

--------------------
2012/5/22 Vaa.Manikandan

நான் உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கலாமா? காத்திருக்கிறேன்.
அல்லது தெரிவிக்க முடியாது என்னும்பட்சத்தில் தயவு செய்து ஒரு பதிலையாவது அனுப்புங்கள்.

--------------------
Date: 2012/6/18 Vaa.Manikandan

வணக்கம்.

எனது புத்தகங்களை மின் நூலாக வெளியிடவிருக்கிறேன். உங்களுக்கு விருப்பமில்லையெனில் தெரியப்படுத்தவும்.

நன்றி.

அன்புடன்,
மணிகண்டன்.

------------------------
Date: 2013/3/2 Vaa.Manikandan
Subject: புத்தகங்கள்

டியர் சார்,

வணக்கம்.

nhm தளத்தில் உயிர்மையின் எழுத்தாளர்கள் பெயர் பட்டியலில் என் பெயர் விடுபட்டுள்ளது. கண்ணாடியில் நகரும் வெயில், சைபர் சாத்தான்கள் இன்னும் பிரதிகள் மிச்சம் இருக்கின்றனவா? பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். எப்படி பெற்றுக் கொள்வது என தெரியப்படுத்தவும்.

நன்றி.

வா.மணிகண்டன்.