Mar 3, 2013

No Comments


இன்றிலிருந்து நிசப்தம் தளத்தில் பின்னூட்டமிடும் வசதியை நீக்கிவிட விரும்புகிறேன். இதில் பெரிய பில்ட்-அப்பும் இல்லை அரசியலும் இல்லை. சாதாரண விஷயம்தான். இதற்கு பதிலாக இவனுக்கு வரும் மின்னஞ்சல்களையும் அதற்கு அதற்கு எழுதிய பதில்களையும் வரிசையாக பதிவிட்டு பெரிய மனுஷர்கள் ஜீப்பில் ஏறும் Intention இருக்குமோ என்று நீங்கள் பயப்படுவது அவசியமில்லாதது. மின்னஞ்சல் வராத நாட்களில் டாஸ்மானியாவிலிருந்தோ அல்லது பொலவக்காளிபாளையத்திலிருந்தோ யாராவது எழுதுவதாக இவனே கேள்விகேட்டு அதற்கு இவனே பதிலும் எழுதி ‘ஸீன்’ போடுவானோ என்றெல்லாம் தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கும் உங்களின் கற்பனைக் குதிரையை இழுத்து நிறுத்துங்கள். 

தொண்ணூற்று ஒன்பது சதவீதம் அப்படியெல்லாம் நடக்காது. அப்படியானால் மீதமிருக்கும் ஒரு சதவீதம் என்ற கேள்வி எழுகிறதா? இவனும் ஆசாபாசங்கள் நிரம்பிய மனுஷன் தானே என்று விட்டுவிடுங்கள்.

உண்மையைச் சொன்னால் எத்தனை நாளைக்குத்தான் வடிவேலு கணக்காக ‘ரொம்ப நல்லவனாகவே’ அடி வாங்கிக் கொண்டிருப்பது என்ற குழப்பம்தான் காரணம். ஒரு சிலரோ அல்லது ஒரே மனிதனோ ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டம் என்ற பெயரில் தொடர்ந்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார்(கள்). பெரும்பாலும் அவற்றை அனுமதிப்பதில்லை. அனுமதிக்கும் அளவிற்கு அவை நாகரீகமான பின்னூட்டங்களாக இருப்பதில்லை என்பதால் Delete செய்வதுதான் வழக்கமாக இருக்கிறது. இத்தகைய பின்னூட்டங்கள் என்னை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை என்று ‘கெத்தாக’ பேசினாலும் கொஞ்சமாவது ஜெர்க் ஆகிவிடுகிறேன் என்பதுதான் நிஜம்.

தினமும் பதிவு எழுதுவதற்கு சற்று அதிகப்படியான உழைப்பு தேவைப்படுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ‘என்ன எழுதுவது’ என்று யோசிப்பதில் ஆரம்பித்து யோசித்தவற்றை கணிணியில் தட்டச்சு செய்வது, பிழை திருத்தம், தேவையற்ற சொற்களை நீக்குதல், வாக்கிய அமைப்பு மாறுதல் என சகலத்தையும் செய்து முடித்து போஸ்ட் செய்த அடுத்த சில நிமிடங்களில் அடுத்த நாளைக்கான பதிவு பற்றிய யோசனை தொடங்கிவிடும். இப்படித்தான் குடும்பம், வேலை என்பனவற்றிற்கு ஒதுக்க வேண்டிய நேரங்களைத் திருடி வலைப்பதிவு எழுதுவதற்காக பயன்படுத்திக் கொள்கிறேன். அதற்காக ஒரு நாளைக்கு முப்பத்திரண்டு மணிநேரம் உழைக்கிறேன்; சமூக சேவை செய்கிறேன் என்றெல்லாம் டபாய்க்கவில்லை. ஆனால் முன்பை விட அதிக உழைப்பு; முன்பை விடவும் அதிக வாசிப்பு தேவையானதாக இருக்கிறது.

எழுதுவது கூட சுயநலம்தான். எழுத்தை Tune செய்வதில் ஆரம்பித்து தினசரி நெருக்கடிகளிலிருந்து கிடைக்கும் சிறு விடுதலை என்பது வரைக்குமான நூற்றுக்கணக்கான சுயநலன்கள் அடங்கியிருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. 

என்றாலும்,  ‘யார் என்ன சொன்னால் என்ன?’ என்று மேற்சொன்ன பின்னூட்டங்களை முழுமையாக Ignore செய்ய முடிவதில்லை. ஏதாவது ஒரு விதத்தில் பாதித்துவிடுவதாகவே தோன்றுகிறது. அடையாளம் தெரியாத மனிதன் ஒருவன் எதற்காக நம் மீது இத்தனை காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் உமிழ வேண்டும் என்பது துளி கணமேனும் மனதை அலைவுறச் செய்துவிடுகிறது. 

இனிமேல் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதற்கான Option ஆக பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டியதில்லை என்பதுதான் தோன்றியது. 

இதுவரை தொடர்ந்து பின்னூட்டங்களிட்டு உற்சாகமூட்டியும் நேர்மையான விமர்சனங்களை பகிர்ந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கு நன்றி.  இனி, தொடர்ந்து மின்னஞ்சல்களில்(vaamanikandan@gmail.com) தொடர்பில் இருப்போம்.

0 எதிர் சப்தங்கள்: