Mar 28, 2013

கழிவறை இலக்கியங்கள்


வாழ்க்கை ஒன்றும் அத்தனை எளிமையானதாகத் தெரியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் தகிடுதத்தம்தான்.  “எனக்கு எந்த பிரச்சினையுமில்லை” என்று நாமாக சொல்லிக் கொள்வது கூட நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் Self Justification என்றுதான் நினைக்கிறேன். அவனவன் பிரச்சினை அவனவனுக்கு.  அப்படியிருக்கும் போது அடுத்தவன் பிரச்சினையை காமெடியாக பார்ப்பது கூட நம் பிரச்சினைகளை மறைத்துக் கொள்ளத்தானே?

                                                               ****

பள்ளியில் படிக்கும் போது மாரப்பன் என்ற காவலாளி இருந்தார். இந்த இடத்தில் மாரப்பன் என்பது மாரப்பன் அல்ல அது நாகப்பனாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஏதோ ஒரு பெயராகவும் இருக்கலாம். பெயரை மாற்றித்தான் கதை சொல்ல வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் நிசப்தத்தை முந்நூறு அல்லது நானூறு பேர்தான் அதிகபட்சமாக படித்துக் கொண்டிருப்பார்கள். யாரையாவது பற்றி எழுத வேண்டுமானால் தைரியமாக பெயரைக் குறிப்பிட்டே எழுதிவிடலாம். யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இப்பொழுதல்லாம் அப்படியில்லை. சின்ன மாமனாரைப் பற்றி எழுதினால் பெரிய மாமனார் படித்துவிடுகிறார். வாத்தியார் பற்றி எழுதினால் “எங்கப்பாவை பற்றி எழுதியதை வாசித்தேன்” மின்னஞ்சல் வருகிறது. ஏற்கனவே என் கீபோர்டில் நவகிரகங்களும் குடியிருக்கிறார்கள் அதுவும் சனிபகவான் உச்சத்தில் இருக்கிறார் போலிருக்கிறது. யாரைப் பற்றி எழுதினாலும் கடைசியில் நக்கலாகவே முடிந்துவிடுகிறது. எதற்கய்யா வம்பு வழக்கெல்லாம்? பெயரை மாற்றிவிடுவதுதான் உசிதம்.

நாங்கள் ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான் மாரப்பனுக்கு திருமணம் ஆகியிருந்தது. அவருக்கு பள்ளியிலேயே கிணற்றோரமாக வீடு கட்டிக் கொடுத்துவிட்டார்கள். எங்கள் பள்ளி ஆண்கள் பள்ளி. பெண்வாடையே சுத்தமாக இருக்காது என்று சொல்ல முடியாது- சில ஆசிரியைகள் இருப்பார்கள். ஆனாலும் ஒரு ரோஜா கூட நிலத்தில் விழாத பாலைவனம்தான். இதுதான் மாரப்பனுக்கு பிரச்சினை என்று நினைக்கிறேன். அவரது வீட்டுப்பக்கமே பையன்களை விட மாட்டார். ஏதாவது காரணம் சொல்லி துரத்திவிட்டுவிடுவார். அந்தக் காரணங்கள் படு மொக்கையாக இருக்கும் என்பதால் பையன்கள் விடாப்பிடியாக அதே இடத்தில் விளையாட வேண்டும் என முரண்டு பிடிப்பார்கள். முரண்டு பிடிக்கும் மாணவர்களைப் பற்றி விளையாட்டு வாத்தியாரிடம் போட்டுக் கொடுத்துவிடுவார். அதிலும் ஒரு பி.டி வாத்தியார் இருந்தார் பாருங்கள். கிடைத்த பையன்களையெல்லாம் பிழிந்து சாறு எடுத்துவிடுவார். மாரப்பன் என்ன காரணம் சொல்கிறார் என்றெல்லாம் தெரியாது ஆனால் வாத்தியாரிடம் கும்மாங்குத்து விழும். இத்தனை தடங்கல்களும் இருந்தாலும் மாணவர்கள் அசர மாட்டார்கள். மாரப்பனின் வீட்டிற்கு முன்பாகத்தான் மூன்று குச்சியை நிறுத்தி வைத்து கிரிக்கெட் விளையாடுகிறோம் என்று தவம் கிடப்பார்கள். 

அதிலும் முதல் பீரியட் பி.டி வகுப்பாக இருந்துவிட்டால் எட்டுமணிக்கெல்லாம் சிங்கக்குட்டிகள் களத்தில் இறங்கிவிடும். உணர்ச்சி வேகத்தில் ஏழு மணிகே பள்ளிக்கு வந்துவிடும் சில முந்திரிக்கொட்டைகளும் உண்டு. இந்த சிங்கக்குட்டிகள், முந்திரிக்கொட்டைகளின் பட்டியலை எடுத்து பி.டி வாத்தியாரிடம் நாகப்பன் போட்டுக் கொடுக்கத் துவங்கியிருந்தார்.  “ஏண்டா பரீட்சைக்கு வரும் போது பல்லு கூட வெளக்காம வருவீங்க, பி.டி. பீரியட்ன்னா ஏழு மணிக்கே வருவீங்களா?” என்று வாத்தியார் சுளுக்கெடுப்பார். 

அடியை வாங்கிக் கொள்ளும் பையன்கள் தங்களின் அத்தனை கோபத்தையும் கழிவறையின் சுவர்களில் கொட்டிவிடுவார்கள். அப்பொழுதெல்லாம் எங்கள் பள்ளியின் மிகச் சிறந்த இலக்கியக் கூடமாக கழிவறைதான் இருந்தது. பள்ளியிலிருந்த அத்தனை இலக்கியவாதிகளும் தங்களின் இலக்கியத்தை அதன் சுவர்களில்தான் எழுதி வைப்பார்கள். இலக்கியவாதிகள் மட்டுமில்லை படுபயங்கரமான ஓவியர்களையும் அந்த கழிவறை உருவாக்கிக் கொண்டிருந்தது. மாணவனை அடிக்கும் ஒவ்வொரு வாத்தியாரும் அந்த சுவர்களில் நிர்வாணமாக்கப்பட்டார்கள். மற்றவர்களை நிர்வாணமாக விட்டுவிடும் மாணவ ஓவியர்கள் இந்த பி.டி.வாத்தியாரின் உறுப்பை துண்டித்தும் விட்டுவிடுவார்கள். 

நாட்கள் ஓட ஓட மாரப்பன் போட்டுக் கொடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. முறிந்து போகும் பி.டி.வாத்தியாரின் குச்சிகளின் எண்ணிக்கையும் தாறுமாறாக எகிறியது. இதுவரை கழிவறைச் சுவர்களில் இடம் பெறாத மாரப்பனும் அவரதும் மனைவியும் கூட இடம் பிடிக்கத் துவங்கினார்கள். மாரப்பனுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்தவுடன் விடிந்தும் விடியாமலும் கழிவறைச் சுவர்களை சுத்தம் செய்யும் பணியையும் துவங்கிவிட்டார். மாரப்பனே சுத்தம் செய்வதை தெரிந்து கொண்ட மாணவர்கள் இன்னமும் உற்சாகமாகிவிட்டார்கள். சுவர் முழுவதையும் மாரப்பனுக்கும் அவரது மனைவிக்கும் மட்டுமே ஒதுக்கிவிட்டார்கள். மாரப்பனும் அசரவில்லை. பல நாட்களுக்கு ஏதேதோ தகிடுதத்தங்களை செய்து பார்த்தார். தினம் தினம் கழிவறைச் சுவர்களை சுத்தமாக்கத் துவங்கியிருந்தார். மாணவர்களிலேயே சிலரை தனக்கான ஒற்றர்களாக மாற்றினார். ஆனால் இவை எதுவும் ஓவியங்களின் எண்ணிக்கையையும், இலக்கியங்களின் வீரியத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. 

தனது தோல்விகளால் அடுத்து வந்த நாட்களில் மாரப்பனின் முகம் வாடிப்போனது. நிதானமிழந்தவராகவும் மாறியிருந்தார். சில சமயம் மாணவர்களை அடிக்கவும் துவங்கியிருந்தார். இந்தப் பிரச்சினைகள் தலைமையாசிரியரின் கவனத்துக்கு சென்றிருக்கக் கூடும். மாரப்பனின் வீட்டைச் சுற்றிலும் வேலி கட்டப்பட்டது. ஜல்லிக் கற்கள் அந்த வீட்டிற்கு முன்பால் கொட்டப்பட்டன. அதன் பிறகு மாணவர்கள் விளையாடுவதற்கு தோதற்ற இடமாக அது மாறிப்போனது. மாணவர்கள் தங்களது ஜாகையை மாற்றிக் கொண்டார்கள். இந்தச் சமயத்தில் மாரப்பன் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. பிறகு மாரப்பன் மாணவர்களை பற்றிய பிரக்ஞையற்றவராக மாறிப்போனார். மாரப்பனின் கண்காணிப்பு சுத்தமாக இல்லாமல் போன சமயத்திலிருந்து மாரப்பனும் அவரது மனைவியும் சுவர்களிலிருந்து காணாமல் போகத் துவங்கினார்கள். அந்த இடத்திற்கு வேறு சில ஆசிரியர்களும், ஆசிரியைகளும் வந்து சேர்ந்திருந்தார்கள்.

                                                     ****

வா.மு.கோமுவின் கவிதை ஒன்றை முகநூலில் ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார்.  வா.மு.கோமு கிராமத்து மனிதர். கிராமங்களைத்தான் தனது எழுத்துக்களில் பதிவு செய்கிறார்.

நகரங்களைவிடவும் இன்றைய பெரும்பாலான கிராமங்கள் பதட்டமானவை. முக்கால்வாசி கிராமங்கள் தங்களின் அப்பாவித்தனத்தை இழந்து விட்டன. கிராமங்களின் இன்றைய முகங்கள் அரிதாரம்  பூசப்பட்ட முகங்கள். நகரமயமாகிக் கொண்டிருக்கும் கிராமத்தார்களின் சிக்கல்கள் நகரத்திலிருப்பவர்களின் சிக்கல்களைவிடவும் புதிரானவை.  இந்தச் சிக்கல்களும் புதிர்களும்தான் வா.மு.கோமுவின் கிரவுண்ட். அடித்து நொறுக்கிறார். 

அங்கு உருவாகும் காதல்களையும். பாலியல் வேட்கைகளையும் வா.மு.கோமு அளவிற்கு சித்திரப்படுத்துபவர்கள் தமிழில் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன். 

நீ சௌக்கியமா ?

ஒரு நாள் சாவுகாசமாய்
உன்னோடு உட்கார்ந்து
பேச திட்டமிருக்கிறது என்னுள்.

சமயம்தான் வாய்க்கவில்லை.

ஊர் மாரியம்மன் திருவிழாவிற்க்கு
உனது ஊட்டுக்காரரோடு வந்து
சாமி கும்பிட்டு போனதாய்
சின்னமுத்து கூறினான்.

மேலும் அவன் கூறுகையில்
பழைய உனது தேஜஸ் இல்லையெனவும்
உனது ஊட்டுக்காரர் பொறத்தே
நீ ஒரு பெட்டிப்பாம்பு மாதிரிதான்
காட்சியளித்தாய் எனவும், வயிறு
புடைக்கவில்லை, தப்பட்டையாகத்தான்
இருந்ததெனவும் கூறினான்.

மழைக்குக் கூட பள்ளிக்கூடப்பக்கம்
ஒதுங்கியிராத எனது ஊட்டுக்காரி
எனது துடையிலிருக்கும் சாந்தி என்கிற‌
உனது பெயர் பற்றி எதுவும் கதைப்பதில்லை.

உனது ஊட்டுக்காரர் உனது
துடையிலிருக்கும் முருகசாமி என்கிற‌
எனது பெயர் பற்றி
உனையொன்றும் வினவவில்லையா ?