Mar 23, 2013

தாண்டவம்


அம்மாவையும் அப்பாவையும் ஊருக்கு அழைத்து வர வேண்டியிருந்தது. தொப்பூர் வரைக்கும்தான் தேசிய நெடுஞ்சாலையில் பயணம். அதற்கு பிறகு இருவழிப்பாதையில்தான் வண்டி ஓட்டுவேன். அதற்கு காரணமிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்தால் சுங்கவரியை தவிர்க்கலாம்.  சுங்கவரி என்ற பெயரில் சுருட்டிக் கட்டுகிறார்கள். கேட்டால் தனியார்மயமாக்கல் என்பார்கள். நமக்கெதுக்கு பொல்லாப்பு? எவனோ எப்படியோ போகட்டும் என்று மாநிலச் சாலையை எடுத்துக் கொள்வதுதான் உசிதம். தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் நூற்றைம்பது கிலோமீட்டரில் குறைந்தபட்சம் பத்து நாய்களாவது நசுங்கிக் கிடக்கும். டெவலப்மெண்ட் என்ற பெயரில் பெரும்பாலான ஊர்களுக்கு நடுவில் கோடு போட்டுச் செல்கிறது நெடுஞ்சாலை. முன்பு அடுத்ததடுத்த தெருவாக இருந்தவர்களை இப்பொழுது நெடுஞ்சாலை பிரித்து வைத்திருக்கிறது. அடுத்த தெருவுக்கு செல்வதென்றால் கூட நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் பயணித்து யூ டர்ன் அடிக்க வேண்டியிருக்கிறது. நம்மவர்களே கணக்கு வழக்கில்லாமல் வண்டிகளின் சக்கரத்திற்கடியில் சரணமடைகிறார்கள். நாய்கள் எம்மாத்திரம்? குனிந்துகொண்டே ஓடி நொடியில் நசுங்கிப் போகின்றன.

தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்துவிட்டு தொப்பூர் சாலையில் பயணிக்கும் போது அந்தியூர் என்ற ஊர் இருக்கிறது. அந்தியூர் பற்றி தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. பெருமைக்குரிய அண்ணன் ஜூனியர் பவர்ஸ்டார் தேவயானி ராஜகுமாரனை ஈன்றெடுத்த ஊர் என்று அந்த ஊருக்கு அறிமுகம் கொடுக்கலாம்தான். ஆனால் அந்தியூர்க்காரர்கள் சண்டைக்கு வரக் கூடும் என்று பயமாக இருக்கிறது. அவரை தவிர்த்துவிட்டால் அந்தியூர் வெற்றிலை, அந்தியூர் செங்கல் என்று இன்னொரு பட்டியலும் இந்த ஊருக்கு இருக்கிறது. இந்த ஊரைத் தாண்டி கொஞ்சம் வந்துவிட்டால் போது பசுமை கொழிக்கத் துவங்கிவிடும். சாலைக்கு இரண்டு பக்கமும் வயல்களாக கண்களை குளிரச் செய்துவிடும்.

ஆனால் இதெல்லாம் சென்ற வருடம் வரைக்கும்தான். இந்த வருடம் காய்ந்து கிடக்கிறது. இப்பொழுது எங்கு பார்த்தாலும் வறட்சி. மழை பொய்த்துவிட்டது. பவானியில் சாக்கடைத் தண்ணீர்தான் ஓடுகிறது. வாத்துகள் மேய்ந்த வயல்கள் வெப்பத்தில் வெடித்துக் கிடக்கின்றன. கொக்குககள் பறந்த எங்கள் ஊரின் வானம் வெக்கையில் காந்துகிறது. ஒரே வருடத்தில் ஒட்டுமொத்தமாக இந்த ஊரை புரட்டிப் போட்டுவிட்டது இயற்கை. கிணறுகளில் இருந்த மீன்கள் செத்து நாற்றமடிக்கின்றன. எப்பொழுதும் கேட்கும் தவளைகளின் சப்தத்தை கேட்க முடியவில்லை. கால்நடைகளையும் பஞ்சம் விட்டுவைக்கவில்லை. ஆடுகளும் மாடுகளும் வெப்பத்தை தாங்கமுடியாமல் திணறுகின்றன. ஊருக்குள் கால் வைக்கவே பதட்டமாக இருக்கிறது. பச்சிலைகளால் போர்த்தியிருந்த இந்த பூமியை நோயாளியைப் போல பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது.

முப்பது வருடங்களாக என் மூச்சாக இருந்த இந்த ஊரை இப்படி மூப்பெய்திய அநாதைக் கிழவியென பார்க்க வேண்டியிருக்குமானால் இந்த ஊருக்கு வராமல் இருந்துவிடுவதே நல்லது என நினைக்கிறேன். நீச்சல் பழகிய வாய்க்காலும், குருவி பிடித்து விளையாடிய மரங்களும் தங்களின் அந்திமக் காலத்தை நெருக்கிவிட்டதென அதிரச் செய்கின்றன. வாய்க்கால் கரையோரம் மணிக்கணக்காக கிடந்த நாட்கள் நினைவில் வந்து போகின்றன. இப்பொழுது சில கணங்கள் கூட இந்த கரைகளின் வெம்மையைத் தாங்க முடியவில்லை. 

வெக்கையின் இத்தனை கொடூரமும் பங்குனியிலேயே படுத்தியெடுக்கிறது. சித்திரையும் அக்னிநட்சத்திரமும் இன்னும் எவ்வளவு குரூரமானதாக இருக்கும் எனத் தெரியவில்லை. தோட்டவேலைகளுக்கு செல்லும் கூலிகள் பல மாதங்களாக வேலை இல்லை என்கிறார்கள். விவசாயமே நடத்த முடியாத பூமியில் கூலியாட்களுக்கு அவசியமே இல்லாமல் இருக்கிறது. அரை ஏக்கர், முக்கால் ஏக்கர் நிலங்களை குத்தைகைக்கு பிடித்திருந்த சிறு விவசாயிகள் கந்து வட்டிக்கு கடன் வாங்கியிருக்கிறார்கள்.  அடுத்த வருடம் மழை பெய்யும் என்ற சிறு நம்பிக்கை மட்டுமே அவர்களின் வாழ்விற்கான பற்றுகோலாக இருக்கிறது.

கட்டுரையை உற்சாகமானதாக ஆரம்பித்தாலும் இயற்கையால் குத்திக் கிழிக்கப்படும் எனது ஊரின் அவலத்தை எழுத்தாக மாற்றும் மனோதிடம் இந்தக் கணத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். 

வண்டியில் எனது அருகில் அமர்ந்திருந்த அப்பாவிடம் “இப்படியொரு வறட்சியை உங்கள் காலத்தில் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா?” என்றேன். பதில் சொல்லவில்லை. “அப்பா” என்றழைத்துவிட்டு இன்னொரு முறை அதே கேள்வியைக் கேட்டேன். அப்பா கண்களைத் துடைத்ததை கவனித்தேன். அவருக்கு அறுபத்தைந்து வயதாகிறது. தாத்தா இறந்த போது அவர்  அழுததை முதன்முதலாகப் பார்த்தேன். பிறகு அவர் விபத்தில் அடிபட்ட போது ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பாக எங்களைப் பார்த்து அழுதார். இப்பொழுது மூன்றாவது முறை. கண்களை துடைத்துவிட்டு “இல்லை” என்றார். ஏனோ அப்பொழுது அவரை என்னால் நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை.