Mar 13, 2013

சுயசொறிதல்...ஈகோ


ஒரு ஆசாமி இருக்கிறார். நல்ல மனிதர்தான் போலிருக்கிறது. பெயர் எதுவும் தெரியவில்லை. ஒரு Fake IDயில் உலவுகிறார். நிசப்தத்தில் எதை எழுதினாலும் திட்டி எழுதுவார்.  “மண்டை மேல கொண்டை தெரியுது தம்பீ!” மாதிரியான வடிவேலு டயலாக்காக அடித்து நொறுக்குவார். ஆரம்பத்தில் கடுப்பாக இருந்தது. அவரது மின்னஞ்சல்களுக்கு சில பதில்களை அனுப்பினேன். அவரும் சில குண்டக்க மண்டக்க பதில்களை அனுப்பினார். இதற்கு மேல் தாங்காது என்று முடிவு செய்து அவரது மின்னஞ்சல்கள் அத்தனையும் Trash க்கு செல்லும்படி Filter அமைத்துவிட்டேன். தேவையில்லாத டென்ஷன் வேண்டாம் என்றுதான் இந்த நடவடிக்கை. அதற்கு பிறகு சமீபத்தில் எனக்கு எதுவும் எழுதினாரா என்று தெரியவில்லை. 

ஆங்...இதை எதற்கு இப்பொழுது குறிப்பிட வேண்டும்? காரணம் இருக்கிறது. அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து கிண்டலடிப்பதற்கு முன்பாக நாமே நம்மை நக்கலடித்துக் கொள்வது தப்பிப்பதற்கான வழி என்று நம்பிக் கொண்டிருந்தேன். உதாரணமாக “உன்னை நீயே ஏன் சொறிஞ்சுக்கிற?” என்று யாராவது கேட்டால் சுள்ளென்று இருக்கும். அப்படி யாராவது கேட்பதற்கு முன்பாகவே “சொறிந்து கொள்வது எனக்கு பிடித்த கலை” என்று நாசூக்காக சொல்லிவிட்டால் பிறகு சுயசொறிதல் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டியதில்லை. “நானே சொல்லிட்டேன். நீ என்ன சொல்லுறது?” என்று சிரித்துக் கொள்ளலாம்.

ஆனால் இப்படி நம்மை நாமே கிண்டலடித்துக் கொள்வதற்கு சாத்தியமிருக்கிறதா என்பதுதான் கேள்வி. ஏகப்பட்ட பில்ட் அப்களைச் சுமந்து கொண்டிருக்கும் ஒருவனால் எவ்வளவு தூரம் சுய எள்ளல் செய்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை. உண்மையில் நமது வாழ்வில் பெரும்பாலான செயல்களை Mask அணிந்து கொண்டுதான் செய்கிறோம். ஒவ்வொரு காரியத்திலும் ஒவ்வொரு முகமூடி தேவையானதாக இருக்கிறது. இந்த முகமூடிகளுக்குள் இருக்கும் நமது உண்மையான முகத்தை அடுத்தவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்றுதானே அத்தனை image built up வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.

உண்மையான சுய எள்ளல் என்பது நமது பல்லிளிக்கும் பலவீனங்களை துளியளவு தயக்கம் கூட இல்லாமல் வெளிப்படையாக  ‘நமக்கு நாமே’ திட்டத்தில் நக்கலடிக்கும் துணிச்சலுடன் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சுய எள்ளல்களின் Hidden Agenda என்பது வேறொன்றாகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில்தான் நம்மால் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள முடியாத நமது பலவீனங்களை அடுத்தவன் குத்திக் காட்டினால் நமது ஈகோ விழித்துக் கொள்கிறது. ஈகோ என்பது திடீரென்று ஒரு நாளில் நமக்குள் ஏறிக் கொள்வதில்லை. அல்லவா? நாம் வளர வளர அதுவும் வளர்ந்து தொலைத்துவிடுகிறது. 

தனிப்பட்ட வாழ்க்கையில்(Personal life) குடும்பத்திடமும், சுற்றத்தாரிடமும் காட்டும் ஈகோவெல்லாம் ஒரு வகை என்றால், எழுதிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மிடம் எழுத்து மூலமாக அறிமுகமாகுபவர்களிடம் காட்டும் ஈகோ இன்னொரு வகை. எழுதுகிறவனுக்கு ஈகோ தேவை, கர்வம் அவசியம், திமிர் வேண்டும் என்றெல்லாம் யார் கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை. ஒன்றரரை பக்கம் மட்டுமே எழுதியிருக்கும் என்னையும் ஒரு எழுத்தாளனாக கற்பிதம் செய்து கொண்டு இந்தக் கருமத்தையெல்லாம் தலைக்குள் வைத்திருக்கிறேன். அப்படியில்லையெனில் அந்த மனிதரின் மின்னஞ்சலுக்கு டென்ஷனாகியிருக்க வேண்டியதில்லை. சரி அதை விடுவோம்.

எழுத்தாளனுக்கு கர்வம், அகங்காரம், பருத்திக் கொட்டை, புண்ணாக்கெல்லாம் தேவை என்று சொன்னவர்களின் பட்டியலை தேடிப்பாருங்கள். அந்தப் பட்டியலில் இருப்பவர்கள்தான் தங்களது சுயலாபத்திற்காகவும், தேவைகளுக்காகவும் அதிகாரத்திலிருப்பவர்களின் காலை நக்கிக் கொண்டிருக்கிறார்கள். எழுதுகிறவன் எந்த எழவையும் மறைக்க வேண்டியதில்லை. எந்த பில்ட் அப்பும் அவசியமில்லை. அவன் நேர்மையானவனாக, திறந்த புத்தகமாக, நிர்வாணமாக நிற்கக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படியொரு வரம் கிடைத்தால் எந்தவிதமான பாரமும் இல்லாத மனிதனாக என்னை உணர்ந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன். 

Stop...Stop...Stop....எதுக்கு இந்த பிலாசபி? ஜக்கி வாசுதேவ் பற்றி சவுக்கு தளத்தில் விலாவாரியாக படித்ததிலிருந்தே இப்படித்தான். தனது வீட்டுக்கு பின்னாலிருந்த மரத்துக்கு மஞ்சள் துணியைக் கட்டிவிட்டு அதன் மூலம் தொழிலதிபராகிவிட்ட பங்காரு வயிற்றெரிச்சலை கிளப்பிக் கொண்டிருந்தார். அவர்தான் அப்படியென்றால் என்னை விட வயது குறைந்த வேலூர் நாராயணீ பீடம் சாமியார் அதற்குள் தங்கக் கோபுரம் எல்லாம் கட்டிவிட்டார். நான்கைந்து வயது மூத்த நித்யானந்தா வளைத்து வளைத்து- இந்த வளைத்து 'இடுப்பையும் சேர்த்த' வளைத்து சொத்து சேர்த்துவிட்டார்- இப்படியெல்லாம் குமைந்து கொண்டிருந்தேன். இப்பொழுது ஜக்கியின் சொத்து வேறு மலைக்கச் செய்கிறது. மறுபடியும் முந்தைய பத்திகளை வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். தொழிலையும் ஜாகையும் மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.