Feb 9, 2013

நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு


கவிதை எளிமையை(Simplicity) நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற வாக்கியத்தை முழுமையாக நம்பிக் கொண்டிருந்தேன். திருகலான கவிதைகளும், நேரடித்தன்மையில்லாத கவிதைகளும்  வழக்கொழிந்துவிடும் என்று வாதிடுவதற்கு உறுதியான ஆட்கள் இருக்கிறார்கள். வல்லார்கள் தங்களின் அழுத்தமான குரலால் தாங்கள் சொல்வதை நம்ப வைத்து வாய்க்காலும்  வகுத்தும்விடுகிறார்கள். அதே சமயம் எளிமையான கவிதைகளும் நேரடியான கவிதைகளும் மட்டுமே கவிதைகள் இல்லை என்பதை நிறுவவதற்கான ஆழமான எதிர்வினைகளை  அவ்வப்போது எதிர்கொள்கிறோம். புதிரின் சூட்சமங்களையும், புனைவின் உச்சங்களையும் கொண்டிருக்கும் நல்ல கவிதைகளை வாசிக்க நேரும்போதெல்லாம் கவிதை ’எப்படி  வேண்டுமானாலும்’ இருக்கலாம் என்று மனம் உற்சாகமடைகிறது. இந்தக் கட்டற்ற போக்குதான் கவிதையை எப்பொழுதும் உயிர்பித்துக் கொண்டிருக்கின்றன. 

சமீபமாக பல கவிஞர்கள் கவிதையின் கட்டுகளை உடைத்தெறிந்து கொண்டிருக்கிறார்கள். றியாஸ் குரானாவின் “நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு” கவிதைத் தொகுப்பினை வாசிக்கும்  போது சமகாலக் கவிதைகளின் கட்டற்ற போக்கிற்கான ஒரு உதாரணமாக இந்தத் தொகுப்பை முன்வைக்க முடியும் எனத் தோன்றியது. தொகுப்பிலுள்ள கவிதைகளின் வழியாக தமிழ்க்  கவிதையின் வழமைகளை கவித்துவத்தின் கூறுகளோடு உடைத்தெறியும் முயற்சியில் பரவலான இடங்களில் றியாஸ் வெற்றி பெற்றிருக்கிறார். இத்தொகுப்பின் கவிதைகளில் றியாஸ்  மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் தமிழ்க்கவிதையின் போக்கில் நிகழ்த்தப்பட்டிருக்கும் முக்கியமான பரிசோதனை முயற்சி என்று அழுத்தம் கொடுக்கத் தோன்றுகிறது. முயற்சிகள் என  குறிப்பிடப்படுவது கவிதையின் மொழியமைப்பு சார்ந்த அம்சங்களையும், கவிதையின் வெளிப்பாட்டு முறையையும் தான். தமிழ்க்கவிதையில் பழகிப்போன படிமங்களையோ அல்லது  வரிகளின் அமைப்பையோ தனது கவிதைகளில் றியாஸ் பயன்படுத்தியிருக்கவில்லை காதல், அன்பு, பிரியம், பிரிவு போன்றதான ரொமாண்டிசக் கூறுகளை தொகுப்பில் தேடிக்  கொண்டிருக்கிறேன். இதுவரை எதையும் கண்டுபிடிக்கவில்லை. மாறாக பின்வரும் கவிதைதான் கிடைத்தது 

“கொழுத்துக் குலுங்கும் சதைகள் என்னிடமில்லை
எலும்பையும் தோலையும்  உனக்குத்தர
நான் விரும்பவுமில்லை
உள்ளங்கையைத் தோண்டி உண்ணத் தரலாம்
அது உனக்கு போதுமானதோ என்னவோ
இப்படிப் பேசியதை நீ எப்படி
புரிந்து கொண்டாயென்று  தெரியவில்லை
இப்போதெல்லாம் நீ
என்னைக் கண்டால் வாலை ஆட்டுவதில்லை”

கவிதையின் போக்கை முடிவு செய்வதிலும், கவிதையை நகர்த்துவதிலும் றியாஸ் தேர்ந்தவராக இருக்கிறார் என்பது அனுமானம். சில வரிகளை உதாரணமாக்க வேண்டுமானால் பின்வரும்   வரிகளைக் குறிப்பிடலாம் “ஒன்றன் பின் ஒன்றாக சரசரவென நட்சத்திரங்கள்/கொட்டுகின்றன. காற்றின் ஒரு முடி உதிர்ந்து நானி/ருந்த ஜன்னல் வழியாக ரயில் வண்டியெங்கும்/ பரவுகிறது”  இந்த வரிகளோடு நிறுத்தியிருந்தாலும் கூட கவிதை வேறு இடத்திற்கு அல்லது தளத்திற்கு நகர்வதற்கான அனைத்து சாத்தியங்களும் இருக்கின்றன ஆனால் கவிதையின் அடுத்த வரிகள்   “இது இரவென்றும் ஒரு பயணமென்றும்/நீங்கள் விளங்கியிருப்பீர்கள்” என்று தொடர்கிறது. கடைசியாகக் குறிப்பிடப்பட்ட வரிக்கான அவசியம் இல்லை என்றாலும் இதனை றியாஸின்  மொழி விளையாட்டாகவே ரசிக்கிறேன். “மொழி விளையாட்டு” என்று குறிப்பிடுவதற்கான காரணம், இந்த வரி தனித்து சொல்லப்பட்டிருந்தால் “ஸ்டேட்மெண்டாக’ மட்டுமே தொக்கி  விடுவதற்கான அபாயங்களைக் கொண்டிருக்கிறது. கவிதையோடு வாசிக்கும் போது மேற்சொன்ன அபாயத்தை இந்த வரி தவிர்த்திருக்கிறது- தவிர்க்கும் வண்ணமாக சரியான இடத்தில்  றியாஸ் பயன்படுத்தியிருக்கிறார்.

றியாஸ் கைக்கொண்டிருக்கும் கவிதைக்கான மொழி புதிதென்றாலும் கூட கவிதைக்கான பாடுபொருள்களும், கவிதைகள் வழியாக புரிந்துகொள்ளக்கூடிய கவிஞனின் சிந்தனை வெளிப்பாட்டு  முறையும் ஏற்கனவே நமக்கு அறிமுகமானவைதான். பிரதி, சொற்கள், புனைவு, கவிதை போன்றதான சொற்களும் மற்றும் அவற்றிற்குரிய தளங்களும் றியாஸின் கவிதைகளில்  அளவுக்கதிகமான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாகப்படுகிறது. கவிதைத் தொகுப்பில் அதிகளவிலான பாடுபொருளோ அல்லது சொற்களோ சலிப்பூட்டுவதற்கான இருக்கும்  வாய்ப்புகளை இவை உருவாக்கிவிடுகின்றன.

தொகுப்பில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாக பரவலான வசனகவிதைகளைக் குறிப்பிடலாம். கவிதைகள் பெரும்பாலும் நிகழவல்லாதவனவற்றை(Impossible in reality) முன்  வைத்து அமைந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் கற்பிதமான நிலங்களைக் கொண்ட புனைவுகளாக இருக்கின்றன. றியாஸ் கவிதையின் புனைவுகள் என்பதை இன்னும் குறிப்பாகச்  சொல்ல முடியும் என்றால் கனவுகளுக்குள்ளும், கற்பனைகளுக்குள்ளும் அல்லது தனது உடலும் மனமும் இருக்கக்கூடிய ஒரு நிகழ் வெளியிலிருந்து இன்னொரு அரூப வெளிக்குள்ளாக  வாசகனை அழைத்துச் செல்லுதல்-“கனவுக்குள் மழையுள்ளவர்கள் மட்டும் அவளைச்/சந்திக்கலாம்” “மீதமிருந்த மூன்று பசுக்களும் பிரதிக்குள்/நுழைந்ததும் கன்று போட்டிருந்தன” “என்  கனவுகளுக்குப் பின்னே ஒரு பறவை/பறந்து கொண்டேயிருக்கிறது” இப்படியான வரிகளை தொகுப்பினூடாக எதிர்கொள்ள முடிகிறது. இந்த வரிகள் உருவாக்கக்கூடிய வாசகனுக்கான தளம்  அவனது சிந்தனை செயல்பாட்டிற்கான மிகச் சிறந்த தளம் என்று கருதுகிறேன். கனவுகளுக்குள் நுழைவதையும், இன்னொரு பிரதிக்குள் நுழைவதையும் கவிதைகளில் வாசிக்கும் போது  ஒருவித கொண்டாட்ட மனநிலை உருவாகிறது. ஆனால் இந்தக் கொண்டாட்ட மனநிலையை மிக எளிதில் அடைந்துவிட முடிவதில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.

எளிமையான கவிதைகள் நேரடியான வாசிப்பனுபவத்தை தந்துவிடக்கூடும். ஆனால் றியாஸ் கவிதைகள் தரும் வாசிப்பனுபவத்தை பெறுவதற்காக அந்தக் கவிதைகளுக்குள் உழல  வேண்டியிருக்கிறது. மேம்போக்கான வாசிப்பு இக்கவிதைகள் மீதான எந்தவித ஈர்ப்பையும் உருவாக்குவதில்லை. கவிதைகள் தொடர்ச்சியாக உருவாக்கும் சலனங்களுக்காக எந்தவிதமான  தயக்கமும் இல்லாமல் கவிதைகளிடம் மனதினை ஒப்படைத்து வைத்திருக்க வேண்டியிருக்கிறது. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் கவிதானுபவத்தை பெறுவதற்காக உச்சபட்ச  உழைப்பைக் கோரும் கவிதைகள் இவை. இத்தகைய கடும் உழைப்பைத் ஒரு கவிதைத் தொகுப்பிற்கு தர வேண்டுமா என்பது வாசகனைப் பொறுத்தது. ஒரு கவிதைப் பிரியனாக அதிகபட்ச  உழைப்பைக் கோரும் ஒரு தொகுப்பை நான் ஆரவாரத்தோடு வரவேற்கிறேன். 

கவிதையில் நிகழும் சம்பவங்கள் அல்லது கவிதையின் எதிர்பாராத காட்சித்தன்மை என்னளவில் றியாஸ் கவிதைகளின் முக்கியமான அம்சமாகத் தெரிகிறது. ஒரு கவிதை பின்வருமாறு  நகர்கிறது. தெருவில் வாழும் பூனைக்கு உணவளிக்கிறார், பூனை வீடு முழுவதும் சுற்ற ஆரம்பிக்கிறது. வீட்டில் பூனை இருப்பது பாதுகாப்பானது என்று நினைக்கும் போதுதான்  காலண்டரிலிருந்த எலி காணாமல் போய் இருப்பதை கவனிக்கிறார் கவிதைசொல்லி. இந்தக் கவிதையில் பூனையும் எலியும் உருவாக்கக்கூடிய சித்திரங்கள் பன்முகத் தன்மை கொண்டவை.  பூனை வெறும் பூனையை மட்டும் குறிப்பதில்லை. இந்த உணர்வை கவிதையின் போக்கில் இருக்கும் எதிர்பாராத்தன்மை உருவாக்குகிறது.

தனக்கான மொழியைக் கண்டறியும் பாதையில் கவிஞன் கவிதையின் வெவ்வேறு நுட்பங்களை (Technology of Poetry) தொடர்ச்சியாக அழித்தும் உருவாக்கியும் நகர வேண்டும்  என்பதையே வாசக மனம் விரும்புகிறது. தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு கவிதையில், விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கியோடு நுழையும் சிலர் விளையாட்டு வீரர்களை நோக்கி  சுடத்துவங்குகிறார்கள். வீரர்கள் ஒவ்வொருவராக செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண்மணி மட்டும் தமிழ் நாவல் ஒன்றிற்குள் குதித்து தப்பித்துவிடுகிறாள். அந்த நாவாலசிரியரின்  கதைத்திட்டப்படி நாவலுக்குள் அவள் குதிக்க அனுமதிக்கப்படவில்லை என்றாலும் கூட வேறு வழியற்ற அவள் தான் தப்பிப்பதற்கு அந்த உபாயத்தையே தேர்ந்தெடுக்கிறாள். இந்தக்  கவிதையை வாசித்தவுடன் கவிதை உருவாக்கும் தனித்த மனநிலையில் எழும் கதைகளும் காட்சிகளும் கவிதையின் வாசகனை உற்சாகமடையச் செய்கிறது. கவிதையைத் தவிர வேறு எந்த  ஒரு காட்சி ஊடகத்தாலும் இத்தகைய வாசிப்பனுபவத்தின் எழுச்சி மனநிலையைத் தர முடியும் என்று தோன்றவில்லை.

இதே நுட்பத்தை பல கவிதைகளில் றியாஸ் பயன்படுத்தியிருக்கிறார். நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு என்ற கவிதை “40 வருடங்களும்/அவளால் சிறுமியாக/சிறுமியாக இருக்க  முடியவில்லை என்பதால்/இந்த மூன்றாம் பதிப்பில்/ஆசிரியரால்/அவள் கொல்லப்பட்டாள்” என்று முடிகிறது. தன் மொழிக்கான தேடலில் வேகமாக நகரும் றியாஸ் சில குறிப்பிட்ட விதமான  கவிதையியல் நுட்பங்களையே பயன்படுத்தியிருக்கிறார் என்பதை குறிப்பிட விழைகிறேன்.  இந்தத் தொகுப்பு வேறுபட்ட நுட்பங்களைக் உள்ளடக்கிய கவிதைகளைக் கொண்டிருக்குமாயின்  இதன் தாக்கம் பன்மடங்கு அதிகமானதாகவும் வேறு பல பரிமாணங்களைக் கொண்டதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.

றியாஸ் “எனது எழுத்துக்கள்- இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம் மட்டுமே” என்று தொகுப்பின் பின்னட்டையில் அறிவிக்கிறார். இலக்கியத்தை கொல்பவனின் சாட்சியம் என்பதில்  அதீதமான பாவனை தெரிகிறது. இந்த வாக்கியத்தை றியாஸ் தனக்குத்தானே சொல்லிக் கொள்வதற்கு இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இலக்கியத்தை அழிக்க முடியும்  என்பதில் எனக்கு ஒரு சதவீதம் கூட நம்பிக்கையில்லை. ஆற்றல் அழிவின்மை விதியைப்போலவே இலக்கியத்தையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஒரு வகை இலக்கியத்தை  இன்னொரு வகை இலக்கியமாக மாற்றலாம் என்பதை நம்பிக்கொண்டிருக்கும் என்னால் இப்படித்தான் இந்த கட்டுரையை முடிக்க முடிகிறது.

(இலங்கையில் வாழும் கவிஞர் றியாஸ் குரானாவின் கவிதைகள் குறித்தான கட்டுரை இது.  இந்தத் தொகுப்பு “புது எழுத்து” பதிப்பகத்தின் வெளியீடு. பிரதியை பெற்றுக்கொள்ள puduezuthu@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்) 

0 எதிர் சப்தங்கள்: