Feb 10, 2013

சுஜாதா வென்ற சினிமாவில் தோற்கும் ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன்


கடல் படம் வெற்றியடையவில்லை போலிருக்கிறது. கொஞ்சம் வருத்தம்தான். மணிரத்னம் தோற்றுப் போனார், ராதாவின் மகள் துளசி மொக்கையாக இருக்கிறார் அல்லது கார்த்திக் மகனுக்கு நல்ல ஓபனிங் கிடைக்கவில்லை போன்ற டுபாக்கூர் காரணங்களினால் வருத்தம் இல்லை. சினிமாவில் ஜெயமோகன் இன்னொரு முறையும் தோற்றிருக்கிறார். அதுதான் கமறுகிறது. இலக்கியம் தெரிந்தவர்கள் இது போன்ற Common man சமாச்சாரங்களில் நின்று சிக்ஸர் அடிக்க வேண்டும் என மனம் விரும்புகிறது. ஆனால் கோட்டை விட்டுவிடுகிறார்கள்.

ஜெயமோகன் என்றில்லை, எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட இலக்கியவாதிகள் பணியாற்றிய பெரும்பாலான படங்கள் குப்புற விழுந்துவிடுகின்றன. ஜெயமோகனையோ அல்லது எஸ்.ராமகிருஷ்ணனையோ அவர்களின் நாவல் வழியாக தேடிப்பார்ப்பதில் ஒரு ‘த்ரில்’இருக்கிறது. ஆனால் அவர்கள் பணியாற்றிய படங்களில் அவர்களைத் தேடிப்பார்த்தால் துக்கம் அல்லது எள்ளல்தான் மிஞ்சுகிறது.

வருடத்திற்கு வெறும் ஐந்நூறு ரூபாய் செலவு செய்து நிசப்தம்.காம் என்ற ‘டொமைன்’ வாங்கிவிட்டால் சர்வசாதாரணமாக “அவர்கள் தோற்றுவிட்டார்கள்” என்று எழுதித் தொலைத்துவிடுகிறேன். அதே சமயம் சினிமாவில் தனது அடையாளத்தை பதிப்பது ஒன்றும் அத்தனை சுலபமான காரியமில்லை என்பதையும் கொஞ்சம் புரிந்து கொண்டால் தேவலாம். பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனாகவோ அல்லது தேவயானியின் கணவர் ராஜகுமாரனாகவோ இருந்துவிட்டால் சினிமாவில் முத்திரை படைப்பது சாத்தியம் என்று தோன்றுகிறது. மற்றவர்கள் எல்லோரும் மென்று தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் மட்டும் எப்படி தப்பிக்க முடியும்?

நாவல் எழுதும் போதோ அல்லது சிறுகதை எழுதும் போதோ எழுத்தாளனுக்கு எந்த அழுத்தமும் இல்லை. லட்சக்கணக்கான பிரதிகள் விற்க வேண்டும் என்றோ கோடிக்கணக்கில் ராயல்டி வர வேண்டும் என்றோ அவன் எதிர்பார்ப்பது இல்லை. அதே போல கதாபாத்திரத்தைப் பற்றியோ, கதையின் போக்கு பற்றியோ அவனைத் தவிர வேறு யாரும் தலையிடுவதில்லை. தான் விரும்பியதை அவனால் எழுதிவிட முடிகிறது. ஆனால் சினிமாவில் அப்படியிருக்க முடிவதில்லை. கோடிக்கணக்கில் பணத்தை கொட்டும் தயாரிப்பாளரில் ஆரம்பித்து தனது வாழ்க்கையை அடமானம் வைத்திருக்கும் டைரக்டர், தன்னை சூப்பர் ஸ்டாராக்கிக் கொள்ள விரும்பும் நாயகன் வரை அத்தனை பேரும் அரித்து எடுப்பார்கள். இவர்களுக்காக வளைந்து போவதுதான் நடக்கிறதேயொழிய ஜெயமோகனும், எஸ்.ராவும் இந்த அழுத்தங்களை மீறி தங்களின் அடையாளத்தை சினிமாவில் பதிக்க முடியும் என்று தோன்றவில்லை. 

தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே சில Myth உண்டு. இலக்கியவாதிகள் என்பவர்கள் படு சீரியஸான முகத்துடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து அவர்கள் வெகுஜனப்பத்திரிக்கைகளை திரும்பிக் கூட பார்க்கக் கூடாது, சினிமாவில் பணியாற்றக் கூடாது என்பது வரை சகட்டுமேனிக்கு மூடநம்பிக்கைகளை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.என்னளவில் சினிமாவில் அல்லது வெகுஜன ஊடகங்களிலோ செயல்படுவது பாவச்செயலோ அல்லது தீண்டத்தகாத காரியமோ இல்லை.  விரும்பினால் வெளிப்படையாக முயற்சிக்கலாம். இதில் வெட்கப்படுவதற்கு எதுவும் இல்லை.

ஆனால் தமிழில் பெரும்பாலான படைப்பாளிகள் இவை போன்ற எல்லைகளுக்குள் தங்களைத் தாங்களே சுருக்கிக் கொண்டு Confined Space களில் இயங்கும் சூழலை மீறித்தான் ஜெயமோகனும் அல்லது எஸ்.ராவும் சினிமாவுக்குள் புகுந்திருக்கிறார்கள். ஆனால் ஏன் ஜெயிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புதிராகத்தான் இருக்கிறது. இந்த இடத்தில்“சுஜாதா வென்றிருக்கிறார்” என்று யாராவது கையை உயர்த்தக் கூடும். அவரை இலக்கியவாதியாக ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மிக சொற்பம் என்பதால் அவரை விதிவிலக்காக(Exceptional case) வைத்துத்தான் விவாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சுஜாதாவின் எழுத்துக்கள் நேரடியானவை அதே சமயம் அப்பட்டமானவை. இந்த எளிய, நேரடியான, அப்பட்டமான எழுத்துமுறையைத்தான் தனது ஆயுள் முழுவதும் பயிற்சி செய்திருக்கிறார். ஆனால் ஜெயமோகனும், எஸ்.ராமகிருஷ்ணனும் இன்னொரு கரையில் நிற்பவர்கள். தாங்கள்  எழுதியது போக எழுதாமல் தவிர்த்தவைகளை வாசகர்கள் தங்களின் சுய அறிவு மூலம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ரீதியில் எழுதுபவர்கள். இதுதான் இவர்களுக்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என புரிந்து கொள்ள முடிகிறது. 

தமிழ் சினிமா எப்பொழுதும் நேரடியானதாகவும் அப்பட்டமானதாகவுமே இருந்திருக்கிறது. தமிழ் சினிமா எதிர்பார்க்கும் அந்த நேரடித்தன்மையை சுஜாதாவால் கொடுக்க முடிந்த அளவில் சொற்ப சதவீதத்தையே ஜெ அல்லது எஸ்ராவால் கொடுக்க முடிகிறது. சினிமா கோருகிறதே என்பதற்காக தங்களை நேரடித்தன்மைக்காக மாற்றிக் கொள்ள முயலும் இடத்தில்தான் ஜெயமோகனும் எஸ்.ராவும் தங்களின் அடையாளத்தை இழப்பதாகத் தோன்றுகிறது. 

கீழே இருக்கும் சங்கதியும் இவர்களின் தோல்விக்கு பின்னால் இருக்கக் கூடும் என நம்புகிறேன்.

சுஜாதா தனது ரிடையெர்ட்மெண்ட் காலத்தில்தான் சினிமாவில் மிக அதிகமாக வசனம் எழுதினார். அந்தக் காலத்தில் அவர் இதனை ரிலாக்ஸ்டாகவும் அனுபவித்தும் செய்திருக்கக் கூடும். அப்பொழுது  பணமும் அவருக்கு அத்தனை பிரதானமானதாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் ஜெமோவுக்கும், எஸ்ராவுக்கும் இது வெற்றிக்களை எதிர்பார்க்கும் வயதாகவும், பணத்திற்கான தேவைகள் அடங்கிய பருவமாகவும் இருக்கிறது. இவற்றிற்கான  பதட்டங்களால் தங்களையும் அறியாமல் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

14 எதிர் சப்தங்கள்:

கொசு said...

WHY WE HAVE THING ABOUT COMERICAL HIT? NORMALLY MANI FLIM A CENTER ONLY HAVING GOOD RESPONSE . DON T THINK ABOUT HIT.. BUT WE HAVE DO THINK JAYAMOHAN FULLFILL HIM JOB.... YA OF-COURSE I THING HE DID JOB OK.....

Anonymous said...

last para is 100% true.

Ram Sridhar said...

சுஜாதா திரையுலகில் வெற்றி பெற முக்கிய காரணம் அவருக்கு இருந்த ஒரு பல்நோக்கு தன்மை (multifacetedness). அது, எஸ்ரா, ஜெமோ ஆகியோருக்கு நிச்சயம் இல்லை. சுஜாதாவின் திரையுலக வெற்றி அவருடைய ரிடயர்மெண்டுக்கு பிறகு அவர் அதை ரிலாக்ஸ் ஆக செய்தது என்பதை நிச்சயம் ஒத்துக் கொள்ளமுடியாது. இலக்கியம் என்பது மொத்த மக்கள் தொகையில் 20% மேலே போய் சேர வாய்ப்பே இல்லை என்பதை சுஜாதா உணர்திருந்தார். எனவேதான், அவரால் ஷங்கருக்கும் எழுத முடிந்தது, மணிரத்னத்திற்கும் எழுத முடிந்தது.

வவ்வால் said...

சுஜாதா, இலக்கியவாதியல்ல.வெகு ஜன பத்திரிக்கையில் எழுதியவர்.

எஸ்ரா,ஜெமோவை சுஜாதாவுடன் ஒப்பிடுவதே சரியல்ல,ஜெயகாந்தனுடன் வேண்டுமானால் ஒப்பீட்டு ,அவர் அளவுக்கு சினிமாவில் தாக்கத்தினை ஏன் செய்யவில்லை எனக்கேட்கலாம்.

சினிமாவில் முதல் இன்னிங்க்ஸில் சுஜாதாவும் இதே போல மொக்கையானார்.

தமிழ் சினிமாவில் தான் கதாசிரியர்களை வசனம் எழுதுன்னு சொல்லி மொக்கையாக்குவார்கள்.

கதை எழுதுவது ஒரு தனிக்கலை,வசனம் எழுதுவது தனிக்கலை.இரண்டுமே யாரோ ஒரு சிலருக்கு தான் வரும்.

எஸ்ரா,ஜெமோ போன்ற கதை சொல்லிகளுக்கு ,சினிமா வசனம் எழுதும் வித்தை இன்னும் படியவில்லை.கொஞ்ச காலம் சினிமாவில் தாக்குப்பிடித்தால் கற்றுக்கொள்ளக்கூடும்.

Anonymous said...

சுஜாதா ‘வென்ற’ ஒரு படத்தை சொல்லுங்களேன்

manjoorraja said...

இருக்கலாம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுஜாதா சினிமாவில் இவர்களை விட ஓரளவிற்கு வென்றார் என்றார் என்று சொல்லலாமே தவிர பெரும் வெற்றி பெறவில்லை என்றே கருதுகிறேன்.
சினிமாவில் புத்திசாலித்தனமான வசனங்களைவிட செண்டிமேன்டான வசனங்களே வரவேற்பை பெறுகின்றன.

Nat Sriram said...

சுஜாதா ஒரு கதாசிரியியராக ஜெயித்த நினைவில்லை. அவர் நாவல்கள் படமாக்கப்பட்டபோது (அவ்வளவாக) வெற்றிப்பெற்றதில்லை. ப்ரியா,கரையெல்லாம் செண்பகப்பூ முதல் விக்ரம் வரை அடிப்பட்டார். சுஜாதா ஷங்கர்/மணிசார்களுக்கு பிற்பாடு தேவைப்பட்டது ஒரு சுவாரசிய வசனகர்த்தாவாக. ஒரு smartwitted ஆசாமியாக. களம் சார்ந்த வசனம் எழுதக்கூடிய (உ.தா. ரோஜா கிரிப்டாலஜிஸ்ட்) ஆளாக. ’புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியல’..,அஞ்சு பேரு அஞ்சஞ்சு’ என வசனம் எழுத..

வசனத்தை மட்டும் எஸ்ரா செய்தால் (சண்டக்கோழி) அது ஜெயிக்கிறது. எஸ்ரா கதைசொல்லியாக இதுவரை வந்த நினைவில்லை.

ஆனால், ஜெமோ கதை வேறு. அவருடைய கருக்களோ,கதைகளோ ஒரு adapted modelஇல் அங்காடிதெருவாகவோ, நான் கடவுளாகவோ, நீர்ப்பறவையாகவோ, கடலாகவோ வெளிவருகிறது. அப்படங்களின் வணிகரீதியிலான வெற்றியை ஒதுக்கைவைத்துப்பார்த்தால் (வணிகரீதியிலும் அ.தெரு,நான்.கடவுள் ஒன்றும் முதலுக்கு மோசமில்லை என்றே நினைக்கிறேன்), ஜெமொ சினிமாவில் கதைசொல்லி என்றளவில் முன்னெடுத்துச்செல்லும் களங்கள் மிக ஆரோக்கியமானவை.

Long story short, இன்னும் நேரம் இருக்கிறது அவர்களுக்கு ஜெயிக்கவோ/தோற்கவோ..It's too early to conclude now.

சிவராஜ் said...

இரண்டாவது சொன்னது சரி

phantom363 said...

ஜெயமோகனின் அங்காடி தெரு ஒழிமுறி இந்த இரண்டையும் பொய் பாருங்கள். எஸ்ராவின் யுவன் யுவதி, ஏழாம் அறிவு நல்ல வசனங்கள் உடைய திரைப்படங்கள்.

சிந்திப்பவன் said...

இந்தியாவின் ஒவ்வொரு மாநில மக்களும் சினிமாவில் எதிர்பார்ப்பது வெவ்வேறு.அதில் நம் மக்களுக்கு பிரதானம் "சுவாரசியம்" ..இலக்கியம் என்றாலும் அதை சுவாரசியமாக சொன்னால்தான் வசூல் ரீதியான வெற்றி ிடைக்கும்.ஜெயமோகனோ,சுஜாதாவோ,பாலகுமாரனோ அதற்கு விதிவிலக்கல்ல.

அதே போல நம் இலக்கிய ரசிகர்களுக்கு ஒரு வினோத கோட்பாடு உள்ளது.
அது,

"தெளிவாக,சுவாரசியமாக எழுதப்படும் எதுவும் இலக்கியமாகாது"

என்பதாகும்.அதன்படி சுஜாதா இலக்கியவாதி அல்லர்.அவர் எழுதிய "நகரம்" இலக்கியமாகாது.

இந்த நிலை மாறும்
வரை "இலக்கிய சினிமா" என்பது நம் மாநிலத்தை பொருத்தவரை ஒரு "oxymoron" ஆகவே இருக்கும்.

Anonymous said...

பதிவிற்கு நன்றி. ஜெய மோகனோ, ராமகிருஷ்ணனோ.சினிமாவிற்கு தங்கள் பங்களிப்பை சரியாக தான் செய்கிறார்கள்.

படத்தின் நிஜ கதாநாயகர்கள் அதாவுது டைரக்டர் என்று சொல்ல கூடிய கதை சொல்லி, தன்னை மாபெரும் படித்த மேதை மாதிரி நினைத்து கொண்டு, கண்ட கண்ட படத்தை பார்த்து, கண்ணா பின்ன வென்று ஒரு மொன்ன கதையை (மேற்கொண்டு பார்த்த படத்தின் பாதிப்பை தமிழில் உள்ள சிறந்த எழுத்தாளர்களை வைத்து திரைக்கதை எழுதுகிறேன் என்று தனக்கான ஸ்டைலில் (????) அவர்களாகவே தன்னை காய் அடிப்பது சமீப காலமாய் நடப்பது தான்)

என்ன படம் வந்து கொண்டு இருக்கிறது என்று தெரியாமல் இவர்கள் தமிழ் படம் எடுப்பது தான் பிரச்சனையே ஒழிய, சிறந்த எழுத்தாளர்களை பிடித்து அவர்கள் நேரத்தை விரயம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

Vaa.Manikandan said...

//சுஜாதா ‘வென்ற’ ஒரு படத்தை சொல்லுங்களேன்//

விக்கிபீடியாவில் லிஸ்ட் இருக்குங்க...

Subramanian said...

முதலில் நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டியது சினிமா சாமானியனுக்குமானது,இலக்கியவாதிகள் தங்களை சுருக்கிக்கொள்ளவும் வேண்டாம் பெருக்கிக்கொள்ளவும் வேண்டாம்.அவர்கள் வழியில் போகட்டும் விடுங்கள்.சினிமா செத்துவிடாது,குறைந்த பட்சம் நாங்கள் எங்களுக்கு புரிகிற எங்கள் தளத்திலான சினிமாவை பார்த்து விட்டுப்போகிறோம்.அது தான் எங்களுக்குப் பிடித்த சந்தோஷமும் கூட..

உங்களுக்குத் தெரிந்த,உங்களால் அங்கீகரிக்கப்பட்ட அறிவாளிகள் உலகத்தில் எந்த துறைக்குப் போனாலும் அந்த துறையில் வளைந்து கொடுத்தாவது அதை தங்கள் தரத்திற்கு உயர்தத முயற்சிப்பது போலவும் அதை வெகுஜன ரசிகன் கண்டு கொள்ளாதது போலவும் இருக்கிறது உங்கள் கருத்து...

உங்கள் இலக்கியத் திறமை என்ன அஜினோமோட்டா வா,எதில் தூவினாலும் சுவையை கூட்டுவதற்கு.

பவர் ஸ்டாரோ,ராஜகுமாரனோ சாமானிய மக்களின் சினிமா ரசனையை வென்றிருக்கிறார்கள்.உங்களுக்கு இலக்கியமும்,ஜெ,எஸ்.ரா வும் என்றால் எங்களுக்கு வெகுஜன சினிமாவும் பவர் ஸ்டார்,ராஜகுமாரனும்.உங்களுக்குள் கோஷ்டி இருக்கிறது,நாங்கள் ரசிகர் மன்றங்கள் வைத்திருக்கிறோம்.

நீங்கள் தான் ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள் நாங்களல்ல...

வெகுஜன ரசிகன்.