Feb 8, 2013

எட்டுக்கு அப்புறம்...


நிசப்தம் தளம் இன்று முதல் தனது ஒன்பதாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதியிலிருந்து இன்று வரை தளத்தை வாசித்த அத்தனை பேருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்.

                                                                 ********

அலுவலகத்தில் ஒரு மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. தனக்கு கீழான அத்தனை பணியாளர்களையும் அழைத்து வைத்து நிறுவனத்தில் தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைப் பற்றி மேனேஜர் பேசிக் கொண்டிருந்தார். மேல் மட்டத்திலிருந்து கடைநிலைப் பணியாளர்கள் வரைக்கும் அத்தனை பேருக்கும் இந்த மாற்றங்களினால் பாதிப்பு உண்டு. பாதிப்பு என்றால் ஒரு ப்ராஜக்டிலிருந்து இன்னொரு ப்ராஜக்ட்டுக்கு மாறுவது அல்லது வேறொரு டீமுக்கு நகர்வது என்ற அளவில் தொடங்கி பணியிலிருந்து கூட துரத்திவிடக் கூடும். மாற்றங்களைப் பற்றி கதை கதையாக பேசிவிட்டு “கேள்வி ஏதாச்சும் இருக்கா?” என்றார் மேனேஜர்.

ஒவ்வொருவரின் வயிற்றுக்குள்ளும் பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. எல்லோருக்குள்ளும் அடிப்படையாக இருந்தது ஒரு கேள்விதான். ஆனால் அத்தனை பெரிய கூட்டத்திற்குள் கேட்பதற்குதான் துணிச்சல் இல்லை. மழுப்பலாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதாக என சகலவிதத்திலும் வழ வழா கொழ கொழா கேள்விகளாக விழுந்து கொண்டிருந்தன. அதற்கு மேனேஜரும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். யார் முகத்திலும் ஈயாடவில்லை. பெரும்பாலான கேள்விகளையும், பதில்களையும் யாரும் சட்டை செய்யவில்லை. 

மீட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. “ஒன்மோர் லாஸ்ட் கொஸ்டின்” என்றார் மேனேஜர். இந்தக் கேள்வியோடு மீட்டிங் முடிந்துவிடும். யார் அந்தக் கடைசி கேள்வியைக் கேட்பார்கள் என்று தெரியவில்லை. பாலக்காட்டு பையன் எழுந்தான்.  “நேரடியாகக் கேட்கிறேன், இந்த மாற்றங்களினால் என் வேலை போய்விடுமா?” என்றான். அவன் கேட்டது நிச்சயம் மேனேஜரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும். மேனேஜர் உட்பட அத்தனை பேரின் தாவாக்கொட்டையும் கீழே வந்துவிட்டது. வாயைப் பிளந்து கொண்டிருந்தோம். கேள்வி கேட்டவன் அமர்ந்து கொண்டான். ஆனால் அந்தக் கேள்வி அறைக்குள் சூறாவளியாகிக் கொண்டிருந்தது. அதுதான் அத்தனை பேர் மனதிலும் அதுவரையிலும் ஓடிக் கொண்டிருந்த கேள்வி. 

Firing ஐ நேரடியாக நிறைய பார்த்திருப்பவர்களுக்கு இந்த கேள்வியும் பதிலும் எவ்வளவு முக்கியமானது என்று புரிந்திருக்கும். சோற்றுக்குள் கிடக்கும் கல்லை சாவகாசமாக தூக்கி வீசுவதைப் போல ஒருவனை இந்த நிறுவனங்களால் வீசி விட முடிகிறது. பையன் படித்துக் கொண்டிருக்கிறான், வீட்டுக் கடன் இருக்கிறது போன்ற எந்த லெளகீக சிக்கல்களைப் பற்றியும் நிறுவனங்கள் சிந்திப்பதில்லை. இந்த நிலையில் அடுத்த சில மாதங்களுக்கான உறுதியை மேனேஜரிடம் இருந்து வாங்கித் தந்த அவன் மீது மரியாதை வந்திருந்தது.

கார்பொரேட் நிறுவனங்களில் இப்படி முகத்தில் அடித்தாற்போல கேள்வி கேட்பது ஆச்சரியம். அவன் கேட்டவுடன் ஆளாளுக்கு தங்களுக்குள் முணுமுணுத்தார்கள். சுதாரித்துக் கொண்ட மேனேஜர் “அதற்கு வாய்ப்பில்லை. என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார். இந்த பதில்தான் அந்தச் சமயத்தில் அத்தனை பேருக்கும் தேவையானதாக இருந்தது. இந்த பதில் ஒட்டுமொத்த மீட்டிங்கின் மனநிலையையும் மாற்றிவிட்டது. மிக ஆசுவாசமான மனநிலைக்கு வந்ததோடில்லாமல் ஆளாளுக்கு ‘ஜோக்’ அடிக்க ஆரம்பித்தார்கள். கேள்வி கேட்டவனும் சற்று ஆறுதலடைந்திருக்கக் கூடும். அவனுக்கு ஏதோ ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. எழுந்து போனான்.  அவனை நோக்கி “இவனது தைரியம் ரொம்பத் தேவையானது அதே சமயத்தில் ரொம்ப அபயாகரமானதும்” என்று கண்ணடித்தார் மேனேஜர். அவன் திரும்பிப் பார்த்தபடி சிரித்துக் கொண்டே வெளியேறினான்.

தைரியமானவர்களை அல்லது தைரியமானவர்களாக சித்தரிக்கப்படுபவர்களை பிடித்துப் போவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அப்படித்தான் நரேந்திர மோடியையும் கொஞ்ச நாட்களாக பிடிக்கிறது. காங்கிரஸை பல காரணங்களால் பிடிப்பதில்லை. ஆனால் நரேந்திர மோடியை ஒரே ஒரு காரணத்திற்காக மிகப் பிடிக்கும். எனக்குப் பிடிக்காத காங்கிரஸின் கண்களில் விரலை விடக் கூடிய ஒரே ஆளுமை மோடிதான் என்பதுதான் அந்தக் காரணம். இன்றைய சூழலில் காங்கிரஸின் நெட்வொர்க்கையும், அதன் சூழ்ச்சி மிக்க தலைவர்களையும் வெல்லக் கூடிய மனிதனாக மோடி மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறார்.

மரணத்தின் வியாபாரி என்பதில் ஆரம்பித்து தனது மீதான அத்தனை குற்றச்சாட்டுக்களையும் தாண்டி பெரிய இயக்கத்தின் வேர்களை தனிமனிதனாக அசைத்துப் பார்க்கும் மோடியை அவரது தைரியத்திற்காக பிடிக்கிறது. பாலக்காட்டு பையனில் ஆரம்பித்து மோடிக்கு போய்க் கொண்டிருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பாக டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் கதாநாயகன் கணக்காக மோடி மேடையேறியதை பார்த்ததன் எஃபெக்ட் இது போலிருக்கிறது.                          
         
                                                                  *******

நிசப்தம் எட்டு வருடங்களாக இருக்கிறது என்று முதல் பத்தியில் சொன்னேன் அல்லவா? ஆனால் சமீபகாலம் போல இத்தனை வசவுகளை எப்பொழுதும் எதிர் கொண்டதில்லை. இப்பொழுதெல்லாம்.....ம்ம்ம்ம்ம்...தூள் கிளப்புகிறார்கள். அனானிமஸாக வரும் கமெண்ட்கள் குரூரமானதாக இருக்கின்றன. பொறுக்கி, மனநோயாளி போன்ற டீசண்டான வசவுகளில் ஆரம்பித்து ____________ மற்றும் ___________ என்ற ரேஞ்சில் பலவிதங்களில் பட்டாசு கொளுத்துகிறார்கள். அவர்களிடம் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது: “நன்றி. அடித்து ஆடுங்கள்!”

16 எதிர் சப்தங்கள்:

Kimupakkangal said...

தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதியிலிருந்து இன்று வரை தளத்தை வாசித்த அத்தனை பேருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்//

அப்ப நடுவுல வாசிக்கத் தொடங்கிய எங்களுக்கெல்லாம் நன்றி கிடையாதா மணிகண்டன்?

வாழ்த்துக்கள்...நான் விரும்பி வாசிக்கும் பலரில் உங்களுக்கு தனியிடம்...

Vaa.Manikandan said...

நன்றி கிருஷ்ண மூர்த்தி, தனபாலன்.

ரெவெரி,

ஏன் கிளப்பிவிடுறீங்க? :) இன்று வரைக்கும் வாசித்த அத்தனை பேருக்கும் நன்றின்னுதானே சொல்லியிருக்கேன்...

அகல்விளக்கு said...

தூற்றுபவர்கள் தூற்றட்டும்...

உங்கள் பாதையில் நில்லாமல் தொடருங்கள்... :))

Unknown said...

வாழ்த்துக்கள்...

செத்த பிணம் போல இருக்கும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி அகல வேண்டும், மக்களுக்கு புதிய விடியல் வேண்டும்.

Unknown said...

நான் இணையதளம் திறக்கும் போதெல்லாம் நிசப்தத்தின் குரலைக் கேட்காமல் இருப்பதில்லை.மிகச் சாதாரண செய்தியானாலும் கூட அது உங்கள் எழுத்துக்களின் கை வண்ணத்தால் விஸ்வரூபம் எடுக்கின்றது.உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

Ranjani Narayanan said...

ஒன்பதாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிசப்தம் தளத்திற்கு மேலும் மேலும் வளர வாழ்த்துகள்.

திரு மோடியைப் பற்றி நீங்கள் சொன்னது மிகவும் பிடித்திருக்கிறது.

நிசப்தத்தில் 'தூள்' கிளப்புகிறார்களா?
நல்ல 'irony!'

அடுத்த முறை பெங்களூர் பதிவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

Anonymous said...

வா மணிகண்டன் said...

ரெவெரி,

ஏன் கிளப்பிவிடுறீங்க? :) இன்று வரைக்கும் வாசித்த அத்தனை பேருக்கும் நன்றின்னுதானே சொல்லியிருக்கேன்...//

You are most welcome...-:)

Awaiting your next one,while reading your archives...

Anonymous said...

hey...best wishes to u...i enjoy reading ur blog....

Maheswaran Palanisamy said...

வாழ்த்துக்கள்...மணிகண்டன் சார்

RAGHU said...

நமது தைரியலட்சுமிபோல

சேக்காளி said...

உங்களை சந்தோசப் படுத்துவதற்க்காக என நினைத்தாலும் பரவாயில்லை.உண்மையில் ,"மோடி" பற்றிய அதே மனநிலை தான் என்னுள்ளும் ஓடிக்கொண்டிருக்கிறது.பிரிட்டனை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் மோடி மீதான தடையை தளர்த்தியிருக்கிறதாமே.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

எட்டு வருடம் ....
பணியிலிருப்பவர்கள் இந்தமாதிரி சாத்தியனகளை நிகழ்த்த எத்துனை விஷயங்களை சந்த்திக்க வேண்டும் என்பதை உணர்கிறேன் .பகிர்ந்துகொள்கிறேன்.வாழ்த்துக்கள்.

கிரி said...

வாழ்த்துகள் மணிகண்டன் :-)

Uma said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்!

துளசி கோபால் said...

ஆஹா..... எட்டில் இருந்து ஒன்பதா!!!!

மேன்மேலும் 'வளர'வாழ்த்துகின்றேன்.

தொடருங்கள். தொடர்கின்றோம்!