Feb 26, 2013

கட்டியாச்சு கட்டியாச்சு


ஒரு வீடு கட்டியாகிவிட்டது. கனவு மாதிரிதான் இருக்கிறது. கனவு என்பதால் வீடு குறித்து ஆயிரக்கணக்கான கற்பனைகள் செய்து வைத்திருந்ததாக நினைக்க வேண்டியதில்லை. இதற்கு முன்பாக பெங்களூரில் பி.டி.எம். லே-அவுட்டில் குடியிருந்தோம். குடியிருந்தோம் என்றெல்லாம் சொல்ல முடியாது. சட்டி பானைகளை அந்த வீட்டில் வைத்துவிட்டு பயந்து கொண்டிருந்தோம். எதற்கெடுத்தாலும் வீட்டு உரிமையாளருக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது. அவரும் அவர் மனைவியும் பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள். ஆனால் இரண்டு பேரும் ஒரே வீட்டில்தான் குடியிருந்தார்கள்.  ஆரம்பத்தில் சுவரில் ஆணி அடிக்கக் கூடாது என்றுதான் சொல்லியிருந்தார். சரி என்று சொல்லியிருந்தோம். கொஞ்ச நாட்கள் ஆன பிறகு காலிங் பெல் கூட அடிக்கக் கூடாது என்று டார்ச்சரிக்க ஆரம்பித்துவிட்டார். சத்தம் அவருக்கு டிஸ்டர்பென்ஸாக இருக்கிறது என்று காரணம் சொன்னார். கதவைத் தட்டும் போது கூட கதவுக்கு ஏதும் பாதிப்பு வந்துவிடாமல் தட்டுங்கள் என்றெல்லாம் சொன்ன போது அலர்ஜியாக இருந்தது.  இதன் பிறகு தண்ணீர் பயன்பாட்டில் ஆரம்பித்து துவைத்த துணிகளை வீட்டிற்கு முன்னால் காயப்போடும் முறை வரைக்கும் எல்லாவற்றிலும் மூக்கை மட்டுமில்லாது மொத்த உருவத்தையும் நுழைத்துக் கொண்டிருந்தார்.

வேறு வழியில்லாமல் வேறு வீடு பார்க்க வேண்டியிருந்ததது. எங்கள் குடும்பத்தில் எட்டு நபர்கள். எட்டு பேருக்கு வீடு தர முடியாது என்று சொல்லும் ஓனர்களைத்தான் அதிகம் பார்க்க முடிந்தது. அத்தனை பேரும் செளகரியமாக புழங்கும் அளவிற்கான பெரிய வீட்டை பிடித்தால் முக்கால்வாசி சம்பளம் வாடகையாக கரைந்து கொண்டிருந்தது. வீடு தேடும் இந்த அலைச்சல் ஆளை பாதியாக்கிவிடும் போலிருந்து. இப்படியாகத்தான் வாடகை வீடு தேடலாம் என்பதிலிருந்து சொந்த வீடு வாங்கலாம் என்ற மனநிலைக்கு மாறிக் கொண்டிருந்தோம். இதன் பிறகு நடந்ததுதான் கனவு மாதிரி இருக்கிறது.

ஊரில் இருந்த இடத்தை விற்று இங்கு இடம் வாங்கி, கொஞ்ச நகைகளை வங்கியில் வைத்து, எப்படியெல்லாம் கடன் வாங்க முடியுமோ அப்படியெல்லாம் சேர்த்து...இப்படி இழுத்துக் கொண்டே போகலாம். பணம் சேர்ப்பது ஒரு பிரச்சினை என்றால் வேலை செய்தவர்களின் பிரச்சினைகள் பல பல. இஞ்சினியரின் அக்கப்போர்கள், வேலையாட்களின் அழிச்சாட்டியங்கள், பக்கத்துவீட்டுக்காரர்களின் புகார்கள் என அத்தனையும் தாண்டி ஒன்றரையணா கட்டடத்தை முடிக்க கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகியிருக்கிறது. 

கட்டட வேலை நடந்து கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு மாதமும் இரத்த அழுத்தம் கூடிக் கொண்டே வந்ததை உணர முடிந்தது. எப்பொழுது அடுத்த தொகை வரும் என்ற பொறியாளரின் கேள்வியில் ஆரம்பித்து, பெய்ண்ட் வாங்கி வாருங்கள், பத்து சதுர அடி மரம் வேண்டும், ஆசிட் ஐந்து லிட்டர் வேண்டும் என்று வேலை செய்பவர்களின் நச்சரிப்புகள் வரை ஒவ்வொன்றும் விரக்தியின் விளிம்புக்கு தள்ளிக் கொண்டிருந்தன. ஆசாரிக்காக மரக்கடையில் நிற்கும் போது பெய்ண்டர் அழைத்து அவசரப்படுத்துவார். அவருக்காக ஓடினால் டைல்ஸ் ஒட்டுபவருக்கு ஏதாவது தேவைப்படும். ஒரு கட்டத்தில் தொலைபேசி சிணுங்கினாலே கை கால் உதறல் எடுக்க ஆரம்பித்தது. பெரும்பாலான நேரங்களில் அலைபேசியை அணைத்து வைக்க பழகிக் கொண்டிருந்தேன். என்னிடம் பேச முடிவதில்லை என்று நண்பர்கள் புகார் வாசித்தார்கள். அவரவர் பிரச்சினை அவரவருக்கு. ஆனால் இனி கொஞ்ச நேரத்துக்கு அழைப்பு வராது என்று நினைப்பது ஆறுதலாக இருந்தது.

கட்டட வேலை முடிகிறதோ இல்லையோ புதுமனை புகுவிழாவை மாசி மாதத்தில் வைத்துவிட வேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் சொல்வதும் வாஸ்தவம்தான். ஆனால் பொறியாளர் கட்டடத்தை முடிப்பதாகத் தெரியவில்லை. அலுவலகத்தில் அடிக்கடி விடுப்பும் எடுக்க முடியவில்லை. இது ஆண்டு இறுதி சமயம். சம்பள உயர்வில் கை வைத்துவிடுவார்கள். ஆனால் அரையும் குறையுமாக அடித்து நொறுக்கி புதுமனை புகுவிழாவையும் நடத்தியாகிவிட்டது. பெங்களூரில் இருக்கும் ஒரு ஐயர் வந்திருந்தார். தமிழ் ஐயர்தான். பிஸினஸூக்கு புதிதாக வந்திருக்கிறார் போலிருக்கிறது. இருபத்தைந்து வயதுக்குள்தான் இருக்க வேண்டும். அது வேண்டும் இது வேண்டும் என்றெல்லாம் கேட்காமல் “ஸ்வாஹா” “ஸ்வாஹா” என்று ஹோமத்தை நடத்தி வீட்டுச் சாவியை கொடுத்துவிட்டார். 

இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்று புரிகிறதுதானே? ஒரு வாரமாக நிசப்தத்தில் எதுவும் எழுதாதற்கான Justification. அது இருக்கட்டும். சொந்தவீடு என்பது ஒரு திருப்தியான மனநிலையை தருகிறது. குழந்தைகள் சுவரில் கிறுக்கினால் ஓனர் திட்டுவார் என்ற பயமில்லை. மேலே குதித்தால் கீழ் வீட்டுக்காரர்கள் டென்ஷனாவார்கள் என்ற பதட்டமில்லை. ஆணியடிக்க பர்மிஷன் கேட்டால் தருவார்களா என்ற யோசனை இல்லை. இவையெல்லாவற்றையும் மிஞ்சிய திருப்தியும் கூட இருக்கும் போலிருக்கிறது. புதுமனை புகுவிழாவுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக கட்டத்தில் யாரும் இல்லை. லைட், பைப் யாவும் பொருத்தியாகிவிட்டது. ஆனால் கதவில் பூட்டு இல்லாமல் இருந்தது. இரவில் அப்படியே விட்டுவிட்டு போக பயமாக இருந்தது. அங்கேயே படுத்துக் கொள்ளலாம் என்றால் குப்பை, மரத்துகள், சிமெண்ட், மணல் என சகலமும் தாறுமாறாக கலந்து கிடந்தது. சுத்தம் செய்வதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. மிச்சமிருந்த ப்ளைவுட் ஸீட் ஒன்றை கீழே போட்டு அதன் மீது இரண்டு சாக்குப் பைகளை சுருட்டி தலையணை போல வைத்து படுத்துக் கொண்டேன். யாராவது வந்தால் என்ன செய்வது பயமாக இருந்தது. ஆனால் என்ன நடந்தாலும் என் சொந்த வீட்டில்தான் நடக்கப் போகிறது என்ற நினைப்பு அந்த பயத்தை மீறிய திருப்தியாக இருந்தது என்பதுதான் உண்மை. 

17 எதிர் சப்தங்கள்:

பாலகிருஷ்ணன் said...

புதுமனை புகுவிழாவிற்கு வாழ்த்துக்கள்! டிஃபன் நல்லாருந்தது!

Kumky said...

புதுமனை புகுந்தமைக்கு வாழ்த்துக்கள்..

எனக்கு டிபன் யாரும் போடவில்லை. அடுத்த முறை வரும்போது கவனித்துவிடவும்.

Ganesh Gopalasubramanian said...

வாழ்த்துகள் மணி! எந்த ஏரியாவுக்கு போயிருக்கீங்க? அட்ரஸ் அனுப்பவும்!

Jazeela said...

புதுமனைக்கு வாழ்த்துகள்

திகழ் said...

வாழ்த்துகள்

மாதவன் said...

வாழ்த்துக்கள்

எந்த ஏரியா ?

Anonymous said...

புதுமனை புகுவிழாவிற்கு வாழ்த்துக்கள்...

அதுல ஒரு ரூம் வாடகைக்கு கிடைக்குமா மணிகண்டன்? -:)

சேக்காளி said...

வாழ்த்துகள் மணிகண்டன்.இந்த வீட்டு வேலைக்கு வந்த முஸ்லிம் நண்பர்களை(டைல்ஸ் ஒட்டுபர்கள் என்று ஞாபகம்) பாராட்டி ஒரு பதிவு எழுதியிருந்தீர்கள் அல்லவா?.

Anbu said...

வாழ்த்துக்கள்....

balutanjore said...

dear manikantan
congrats
i am very much impressed by your writings
i am from vellore(originally from tanjore) but now in electronic city
(my son is working in satyam)
pl continue best wishes

balasubramanian

Anonymous said...

எலி வளை என்றாலும் தனிவளை.......... வாழ்த்துக்கள்

Shiva said...

புதுமனை புகுவிழாவிற்கு வாழ்த்துக்கள்!

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

மிகுந்த மன அழுத்ததிலிருந்து வெளிவந்து இருக்கிறீர்கள் .இருந்தாலும் சாதனை முடித்த சந்தோசம் பரவட்டும்.எல்லாம்வல்ல இறையருள் உங்கள் இல்லம் நிரம்பட்டும்.

Unknown said...

மனமார்ந்த வாழ்த்துகள்.

SNR.தேவதாஸ் said...

தங்களது புது மனை புகு விழாவிற்கு எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.
கட்டிய வீடு சின்ன வீடா அல்லது பெரிய வீடா?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

வெங்கட் said...

"ஒன்றரையணா கட்டடத்தை முடிக்க கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகியிருக்கிறது'- இதுக்கு பேரு தான் தன்னடக்கமா?

வாழ்த்துக்கள் மணி!

வெங்கட்

Uma said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்! கஷ்டப்பட்டு ஓடி அலைந்து கட்டடம் எழும்பினால்தான் ஒரு ஆத்மார்த்தமான திருப்தி வரும். நாங்கள் தூத்துக்குடியில் 10 மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட ஒரு வீட்டை (புதுசுதான்) அப்படியே விலைக்கு வாங்கினோம்..சந்தோஷம் 100% என சொல்லமுடியாது.. so, you are so lucky to have a sweet home!