இன்றைக்கு எட்டு மணிக்கெல்லாம் அலுவலகம் வந்தாகிவிட்டது. வராமல் என்ன செய்வது? பந்த் நடப்பதால் நேரத்திலேயே வந்துவிடச் சொல்லி மின்னஞ்சல் வந்திருந்தது. எழுந்தும் எழாமலும், பல் துலக்கியும் துலக்காமலும், குளித்தும் குளிக்காமலும் இப்படியே etc etc என்று தொடர்ந்து அலுவலகம் கிளம்பியாகிவிட்டது.
பஸ் ஓடாது, ஆட்டோ இருக்காது என்றெல்லாம் நினைத்துக் கொண்டு வெளியே வந்தால் சகலமும் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த இரண்டு நாட்களுக்கு ஏ.டி.எம் களில் பணம் கிடைக்காது என்று பதட்டத்தில் நேற்றிரவே கணக்கில் மிச்சமிருந்த சொச்ச பணத்தையும் எடுத்து பர்ஸில் திணித்து வைத்திருந்தேன். இன்று காலையில் வழக்கம் போல ஏ.டி.எம்மில் பணம் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். கையில் பணம் இருந்தால் எப்படியும் கரைந்துவிடும். இப்பொழுதுதான் தேதி இருபது ஆகிறது. இந்த மாதக் கடைசியில் சீட்டிதான் போலிருக்கிறது.
ஏ.டி.எம் மட்டுமில்லாமல் நேற்றிரவு பெட்ரோல் பங்க்களிலும் கூட்டம் பிதுங்கிக் கொண்டிருந்தது. மார்கெட்களிலும் கூட்டத்திற்கு குறைவில்லை. காய்கறிகளை அள்ளிக் கொண்டிருந்தார்கள். இந்த பில்ட் அப்களை பார்த்தால் மொத்த பெங்களூரும் ஸ்தம்பிக்க போகிறது என்றுதான் தோன்றியது. ஆனால் அவை அனைத்தும் இன்றும் வழக்கம் போலவே இயங்கிக் கொண்டிருந்தன. அப்படியானால் இன்றைக்கு பந்த் இல்லை போலிருக்கிறது என்று நினைத்துவிட வேண்டாம்.
மாதச்சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் சிவப்புக் கொடிகளை பிடித்துக் கொண்டு அவர்களது அலுவலகங்களின் முன்பாக அமர்ந்து கொண்டிருந்தார்கள். ஆறாவது ஊதியக்கமிஷனின் குழப்பங்களை நீக்கு, மத்திய அரசுப்பணிகளை அவுட்சோர்சிங் செய்ய வேண்டாம் என்பதெல்லாம் அவர்களது கோரிக்கைகள். அதுபோல பணவீக்கத்தை கட்டுப்படுத்து, விலைவாசியைக் குறை, வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கு போன்று சாத்தியமே இல்லாத கோரிக்கைகளையும் சேர்த்திருக்கிறார்கள். இன்னும் சில கோரிக்கைகள் இருக்கக் கூடும்.
இந்த தொழிற்சங்கவாதிகள் கோரிக்கைகளை முன்வைப்பது பற்றிய ஆட்சேபனைகள் எதுவும் இல்லை. ஆனால் இரண்டு நாட்கள் பந்த் நடத்துவதால் காய்கறி விற்பவனுக்கும், தினசரி ஆட்டோ ஓட்டி பிழைப்பவனுக்கும், கட்டடவேலை செய்பவனுக்கு, மண் வேலை செய்பவர்களுக்கும் என்ன பயன் வந்துவிடப் போகிறது என்றுதான் தெரியவில்லை. ஆனால் இந்த பந்த்களால் அதிகம் பாதிக்கப்படப் போவது அவர்கள்தான்.
பந்த நடத்துபவர்கள் தங்களது அலுவலகங்களுக்குள் தங்களது மேனேஜ்மெண்ட் பாதிக்கும்படியாக என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டால் பிரச்சினையே இல்லை. சம்பந்தமேயில்லாதவர்களின் கழுத்தை அறுப்பதற்கு எதற்கு தொழிற்சங்கம், பந்த் போன்ற வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் குழப்பமாக இருக்கிறது. கடந்த பதினைந்து அலல்து இருபது ஆண்டுகளில் இந்த நாட்டில் பந்த்கள் சாதித்தது என்ன என்ற பட்டியல் எதுவும் எடுத்தால் வெறும் பூச்சியம்தான் மிஞ்சும். அரசியலில் தங்களின் இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், பெட்டி வாங்குவதற்கும்தான் பந்த் நடத்துகிறார்கள் என்ற பிம்பத்தைத் தவிர வேறு ஏதேனும் பயன் உண்டா என்று தெரியவில்லை.
நேற்று கே.ஆர் மார்க்கெட்டிலிருந்து எலெக்ட்ரானிக் சிட்டி வரைக்கும் ஒரு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தேன். ஆட்டோக்காரர் என்னைவிடவும் சின்னப்பையன் தான். திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. மைசூர் ரோட்டில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். ஆட்டோ அவருடையது இல்லை. வேறொரு ஆட்டோ முதலாளியிடம் இருந்து ஆட்டோவை வாடகைக்கு எடுத்து வந்து ஓட்டுகிறார். மதியம் மூன்று மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை ஆட்டோவை ஓட்டிக் கொள்ளலாமாம். இதற்காக ஒரு நாளைக்கு இருநூறு ரூபாயை முதலாளிக்கு கொடுத்துவிடுகிறார். ஆட்டோவுக்கான பெட்ரோல் சராசரியாக இருநூற்றைம்பது வரை ஆகிறது. இது போக மிச்சம் பிடித்தால் அவருக்கு இலாபம்.
ஒரு நாளைக்கு எந்நூறு ரூபாய்க்காவது ஓட்டினால்தான் வீட்டு வாடகையிலிருந்து குழந்தைக்கான செலவு வரை அத்தனையும் சமாளிக்க முடியும் என்றார். ஆனால் அத்தனை வருமானம் வருவதில்லை என்றும் சராசரியாக அறுநூறு அல்லது எழுநூறு ரூபாய்தான் கிடைக்கிறது என்றார். இதோடு நிறுத்தி தொலைந்திருக்கலாம். குழந்தையைப் பற்றி விசாரித்தேன். குழந்தை நாராயண ஹிருதயாலயாவில் இருக்கிறதாம். இதயத்தில் ஏதோ ஒரு வால்வில் பழுது என்றார். எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு கடன் வாங்கிக் கொண்டிருப்பதாகவும் குழந்தை சரியான பிறகு கடனை அடைத்துவிட முடியும் என்று நம்புவதாகவும் பேசிக் கொண்டிருந்தார். இதன் பிறகு அவரிடம் பேசுவதற்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
இன்றைய பந்த்தினால் நேரடியாக பாதிக்கப்படப் போவது இந்த ஆட்டோக்காரரை போன்ற இலட்சக்கணக்கான அன்றாடங்காய்ச்சிகள்தான். பந்த்க்கு அழைப்பு விடுத்திருக்கும் பதினோரு தொழிற்சங்கத் தலைவர்களும் ஏ.சி.ரூமில் இருப்பவர்கள் என்று நம்புகிறேன். மாதச்சம்பளம் வாங்கும் மத்திய அரசு ஊழியர்கள் இரண்டு நாள் விடுப்பு கிடைத்த சந்தோஷம். வங்கிப் பணியாளர்கள் வீட்டில் அமர்ந்து டி.வி பார்க்கலாம். மாலையில் குடும்பத்தோடு ஒரு ஜாலி ட்ரிப் அடிக்கலாம்.
சோற்றுக்கு லாட்டரி அடிப்பவர்கள் எப்படியோ தொலையட்டும்.
தொழிற்சங்கம் ஜிந்தாபாத்......சமத்துவம் ஜிந்தாபாத்!
3 எதிர் சப்தங்கள்:
அப்பட்டமாக சொல்லி இருக்கிறீல்கள். உண்மை.
எத்தனை காலம் இப்படி . பொது ம்களை துன்புறுத்துவார்களோ , கடவுளுக்கு தான் வெளிச்சம்.
http://www.dreamspaces.blogspot.in
உங்கள் கருத்துக்களை படித்தேன்.பாவம் என்று உங்கள் மேல் பரிதாபப்படுகிறேன்.அரசுக்கு மக்களின் அதிருப்தியை தெரிவிக்க இது ஒரு வடிவம் அரசும் இதை எதிர்ப்பார்க்கிறது.ரகசிய சதிவேலைகள் மூலம், பயங்கரவாதிகளால் ரயிலிலும்,மருத்துவமனையிலும் வெடிகுண்டு வைத்து தகர்த்து எதிர்ப்பைக் காட்டுவதை விட வெளிப்படையாக மக்கள் எதிர்ப்பை காட்டும் இந்த நடைமுறை உங்களுக்கு செவிடர் காதில் விழும் ராகங்கள்.வாழ்க நின் அறியாமை.
உண்மைதான் ,, அன்றாட வாழ்வியலின் ஒவ்வொரு நிகழ்வும் முத்ன்முதலில் பாதிப்பது அடித்தட்டு மக்களைத்தான்.
Post a Comment