Feb 27, 2013

எருமை



பெங்களூரில் எஸ்.பி.சாலை பக்கம் போயிருக்கிறீர்களா? சர்தார் பட்ரப்பா சாலை என்பதை சுருக்கி எஸ்.பி.ரோடு என்றாக்கிவிட்டார்கள். கப்பன் பூங்கா, ஜே.பி நகரை எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு இதுதான் பெங்களூர் என்று முடிவுக்கு வந்தால் அது தவறான முடிவாகிவிடும். அவையெல்லாம் பெங்களூரின் “மேனாமினுக்கி”முகங்கள். எஸ்.பி.ரோடு இந்த ஊரின் வியாபார முகம். மார்வாடிகள் நிறைந்த இந்தச் சாலையின் குறுக்குச் சந்துகளும், நெருக்கடியான கடைகளும் மொத்த பெங்களூருக்கும் வேறொரு பரிமாணத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு சதுர அடி இடம் கிட்டத்தட்ட அறுபதாயிரம் ரூபாய்க்கு விற்கிறதாம். அப்படியே பணம் இருந்தாலும் பத்து சதுர அடி வாங்குவதாக இருந்தாலும் கூட அடியாள் பலத்திலிருந்து அரசியல் பின்புலம் வரை அத்தனையும் தேவைப்படுமாம். இடம் வாங்குவதாக ஐடியாவும் இல்லை, திராணியும் இல்லை. 

துணிமணியிலிருந்து, எலெக்ட்ரானிக் சாமான்கள் வரை சகலமும் சல்லிசான விலைக்கு கிடைக்கும் என்று சித்தப்பா அழைத்திருந்தார். சித்தப்பா என்றால் மனைவி வகைச் சொந்தம். இந்த ஊரில்தான் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக இருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே பம்ப் செட் தொழிலில்தான் இருக்கிறார். கூட இருந்தவர்கள் ஏமாற்றியது, தன் குடும்பத்துக்கு நடந்த வாகன விபத்து போன்றவற்றிலிருந்தெல்லாம் தான் மீண்டு வந்தததை கோடிட்டு காட்டும் போது ‘பாஸிடிவ் எனர்ஜி’ என்பதை தெரிந்து கொள்ளலாம். அவரைப் பற்றி இன்னொரு நாள் தனியாகவே எழுத வேண்டும். 

இந்த பத்தியை ஆரம்பித்தது எஸ்.பி.ரோடு பற்றியோ அல்லது சித்தப்பா பற்றியோ எழுதுவதற்காக இல்லை. எருமை வளர்த்த கதையைச் சொல்வதற்குதான். இந்த எஸ்.பி.ரோட்டில் நடந்து கொண்டிருந்த போதுதான் எங்கள் வீட்டில் இருந்த எருமை ஞாபகத்துக்கு வந்தது. இந்தச் சாலையின் குறுகலான ஒரு சந்தில் இருந்த கான்க்ரீட் கட்டடம் ஒன்றில் எருமைகளையும் மாடுகளையும் கட்டி வைத்திருந்தார்கள். அது மனிதர்கள் வசிப்பதற்கு தோதான வீடுதான். ஆனால் மனிதர்களுக்கு பதிலாக எருமை மாடுகளை பால்காரர் வைத்திருக்கிறார். அவைகள் அங்கேயே வைக்கோலைத் தின்றுவிட்டு, அங்கேயே சாணத்தை போட்டுவிட்டு பால் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட அவைகளுக்கு அந்த வீடு ஜெயில் மாதிரிதான். எருமை மாடுகளை வெளியே அனுப்புவார்கள் என்று தோன்றவில்லை. எஸ்.பி.சாலையின் நெரிசலில் அவை திரும்பி வருவதும் அத்தனை சாத்தியமாகத் தெரியவில்லை.

எங்கள் ஆயா உயிரோடு இருந்த போது எருமை ஒன்று எங்கள் வீட்டு ‘பொடக்காலி’யில் இருந்தது. ஆயாவுக்கு எருமை மேய்த்த பழக்கம் இருந்திருக்கும் என்று தோன்றவில்லை. ஆயா திருமணம் முடித்து வந்தபோது பண்ணையத்தில் இருந்த ஆட்கள்தான் எருமைகளை பார்த்துக் கொள்வார்களாம். அப்பொழுது ஆட்கள் வைத்து பண்ணயம் நடத்தும் அளவுக்கு வசதியும் இருந்திருக்கிறது. ஆனால் தாத்தா தெம்பாக இருக்கும் போதே தோட்டம் காடெல்லாம் கை மாறிவிட்டது. வெறும் ஒன்றரை ஏக்கர் வயலில் வந்த வருமானம் ஓரளவுக்கு குடும்பச் செலவுகளை சமாளித்திருக்கிறது. தோட்டம் காடு எல்லாம் காலியானவுடன் ஆடு மாடுகளை விற்றுவிட்டு பண்ணையத்து ஆட்களையும் அனுப்பிவிட்டார்களாம். இருந்தாலும் எனக்கு நினைவு தெரிந்து ஆயா வெளுப்பு குறைவான புடவைகளை அணிந்து பார்த்ததேயில்லை. தனது தோலின் நிறத்திற்கு தோததாக ‘செவச்செவ’ என வெற்றிலையைக் குதப்பி முடிந்த வரை வெற்றிலைச் சாறை துப்பிவிட்டு ‘லிப்ஸ்டிக்’ பூசியது போல உதட்டு நிறத்தை வைத்திருப்பார். வீட்டில் சமையல் செய்வது மட்டும்தான் ஆயாவுக்கு வேலை. குடும்ப வருமானம் பற்றிய கவலையெல்லாம் ஆயாவுக்கு இருந்ததாக ஞாபகம் இல்லை. ஆனால் எருமை மாடுகள் வளர்க்க வேண்டும் என்பதில் ஆயாவுக்கு அளவு கொள்ளாத ஆசை. 

அம்மா திருமணம் ஆன புதிதில் ஊரிலிருந்து சீதனமாக ஒரு மாடு வாங்கி வந்திருக்கிறார். ஆனால் ஆயாவுக்கு அந்த மாட்டை பரமாரிக்கவெல்லாம் தெரிந்திருக்கவில்லை. வளையவும் இல்லை. சும்மா பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்வதோடு சரி. அம்மாவும் இதில் எல்லாம் பெரிய அனுபவசாலி இல்லை. கல்லூரி முடித்த கையோடு அப்பாவுக்கு கட்டி வைத்துவிட்டார்கள். எப்படியோதான் எருமையை சமாளித்திருக்கிறார்கள். அரசு வேலையொன்று அம்மாவுக்கு கிடைத்தவுடன் அந்த மாடும் வீட்டை விட்டு போய்விட்டது.

இதன் பிறகு வெகுநாட்களுக்குப் பிறகு சித்தப்பாவுக்கு திருமணம் ஆனபோது மீண்டும் ‘பொடக்காலி’யில் ஒரு எருமை சீதனமாக வந்து சேர்ந்தது. இந்தச் சித்தப்பா அப்பாவின் தம்பி. இரண்டாவது பத்தியில் வந்த சித்தப்பா இல்லை. 

எருமை கிட்டத்தட்ட எனக்கு தோழனாக இருந்தது. பொடக்காலியில் நின்றிருக்கும் அதன் மீது யாருக்கும் தெரியாமல் ஏறி அமர்ந்து கொள்வதில் ஒரு சந்தோஷம் இருந்தது. மாடு மீது அப்படி அமர்வது எளிதான காரியமில்லை. குத்திவிடும் என்று பயமாக இருக்கும்- குத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எருமை எதிர்ப்பு காட்டாது. ‘தொலைந்து போ’ என்று விட்டுவிடும்.

எருமைக்கு என் ரகசியங்கள் சில தெரியத் துவங்கியது. அம்மாவோ அப்பாவோ அடித்தால் எருமை கட்டி வைக்கப்பட்டிருக்கும் பொடக்காலியில் அமர்ந்துதான் அழுவேன் என்பது மட்டும் காரணமில்லை. பொடக்காலியின் கற்சுவருக்குள் சித்தப்பா ஒளித்து வைத்திருந்த கணேஷ் பீடியை எடுத்து உறிஞ்சியதை அந்த எருமை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்ததது. அப்பொழுது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். காந்தியடிகள் அவரது அம்மாவுக்கு தெரியாமல் கறி தின்ற போது அவரது வயிற்றுக்குள் ஆடு கத்திக் கொண்டிருந்ததாக யாரோ கதை சொல்லியிருந்தார்கள். அது உண்மையோ பொய்யோ தெரியாது. அம்மாவுக்கு தெரியாமல் பீடி குடித்ததை பார்த்த இந்த எருமை என் வயிற்றுக்குள் கத்தும் என்று வெகு நாட்களுக்கு பயந்து கொண்டிருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

மூன்று மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு நாள் பின்மாலை நேரத்தில் திடீரென பெருமழை கொட்ட ஆரம்பித்திருந்தது. கல்மாரியும் விழுந்தது. இந்த பனிக்கட்டிகள் எருமை மீது விழுந்தால் எருமையின் தோலில் புண்கள் ஆகிவிடக் கூடும் என்று எருமையை இடம் மாற்றிக் கட்டுவதற்காக சித்தப்பா பொடக்காலிக்குச் சென்றிருந்தார். அந்தச் சமயத்தில் மழையினால் மின்சாரம் தடைபட்டிருந்தது. நாங்கள் ஆசாரத்தில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தோம். சில நிமிடங்களில் பொடக்காலியிருந்து சித்தப்பா கதறுவது கேட்டது. மழையையும் பொருட்படுத்தாமல் அத்தனை பேரும் ஓடினோம். சித்தப்பா கீழே விழுந்து கதறிக்கொண்டிருந்தார். சில வினாடிகள் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஆளாளுக்கு சித்தப்பாவிடம் விசாரித்தார்கள். கயிற்றை அவிழ்ப்பதற்காக எருமையின் அருகில் சித்தப்பா சென்றவுடன் அது குதித்திருக்கிறது. குதித்ததோடு நில்லாமல் சித்தப்பாவின் காலையும் மிதித்துவிட்டது. சித்தப்பாவின் காலை தொட்டுப் பார்த்துவிட்டு அம்மா அதிர்ச்சியடைந்துவிட்டார். அந்த இடத்தில் விரலே இல்லை. விரல் துண்டானது மட்டுமில்லாமல் இருட்டுக்குள் ரத்தப்போக்கு பற்றியும் ஒன்றுமே தெரியவில்லை. யாரோ ஓடிச் சென்று அரிக்கேன் விளக்கை தூக்கி வந்தார்கள். அந்த மழைக்குள்ளும் காற்றுக்குள்ளும் விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்வதும், விரலைத் தேடுவதும் அத்தனை எளிதானதாக இல்லை. சில நிமிடங்களுக்கு பிறகு தம்பிதான் விரலை கண்டுபிடித்தான். பிசுபிசுத்துக் கிடந்த அந்த விரலை பாலித்தீன் கவருக்குள் சுற்றி டி.வி.எஸ் 50 சித்தப்பாவை நடுவில் வைத்து பின்னால் ஒருவர் அமர்ந்து பிடித்துக் கொண்டார். தொலைபேசி வசதி எதுவும் இல்லை. அதனால் மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அந்த மழையில் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தோம். ஆயா நிற்காமல் புலம்பிக் கொண்டிருந்தார்.

சில மணிநேரங்களுக்கு பிறகாக மழை ஓய்ந்திருந்தது. மருத்துவமனைக்குச் சென்ற மூன்று பேரும் திரும்பி வந்தார்கள். விரலை ஒட்ட வைக்க முடியாது என்று சொல்லிவிட்டார்களாம். ஆனால் வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். விரல் போனதில் ஆயாவுக்குத்தான் கடும் வருத்தம்.  “இது எருமை இல்லை எமன்” என்றார். எனக்கு எருமையை பார்க்க வருத்தமாக இருந்தது. ஆனால் எதுவுமே தெரியாதது போல எருமை அசை போட்டுக் கொண்டிருந்தது.எல்லோரும் தூங்கப்போன போது நள்ளிரவைத் தாண்டியிருந்தது. விடிந்தும் எழாமல் தூங்கிக் கொண்டிருந்தேன். அம்மாதான் எழுப்பிவிட்டார். தூக்கம் தெளிந்தவுடன் இரத்தக்கறையை பார்க்கவேண்டும் என்று பொடக்காலிக்குச் சென்றேன். ரத்தக் கறை இரண்டாம் பட்சம். அங்கு எருமையைக் காணவில்லை. மொடச்சூர் சந்தைக்கு பிடித்துச் சென்றுவிட்டார்களாம். யார் பிடித்துச் சென்றார்கள் என்று தெரியவில்லை. அந்த எருமை போனது போனதுதான். அதன் பிறகு இத்தனை வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் எந்த எருமையும் எங்கள் வீட்டுக்கு வந்ததில்லை.

6 எதிர் சப்தங்கள்:

கார்த்திக் சரவணன் said...

ஒரே இடத்தில் அடைத்துவைத்து சாப்பாடு போடுவதும் கிட்டத்த்ட்ட மிருகவதை தான்... சித்தப்பாவின் விரல் போனது சோகம்...

Ilan said...

podakkali endraal thozhuvama nanbar? nandri.

semmalai akash said...

ஒரு எருமை கதை என்று நினைத்தேன், ஆனால் இது உண்மைக்கதை என்று தெரிந்தது. பாவம் சித்தப்பா, இதில் எருமைமேல் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. காரணம் மாடுகள் ஈ தொல்லையால் இந்த பக்கம் அந்த பக்கம் என தலையை ஆட்டுவது இயல்பு, ஆனால் இருட்டில் சித்தப்பாதான் சரியாக கவனித்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். என்ன இருந்தாலும் நஷ்டம் அவருக்கே! சோகமான கதை!

Vaa.Manikandan said...

காலிப்புறம் என்பது புறம் காலி என்றாகியிருக்கிறது (கால்வாய் என்பது வாய்க்கால் என்று உருமாறி இருப்பது போல- தமிழ் இலக்கணத்தில் இதை முற்றுப்போலி என்பார்கள்)- புறம் காலிதான் பின்னர் பொடக்காலி என்றாகிவிட்டது. [வீட்டிற்கு பின்புறமாக காலியாக இருக்கும் இடம்]

Unknown said...

பொடக்காலி - இந்த சொல்லை "நாட்டாமை" திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சி ஒன்றில் கேட்டுள்ளேன்.

கொங்கு வட்டார வழக்கு சொல்.

ப.கந்தசாமி said...

பொடக்காளி என்பதுதான் எங்கள் வட்டார வழக்கு.