Feb 13, 2013

டைம்பாஸ்


வலைப்பதிவு எழுதுவது என்பது கிட்டத்தட்ட டைம்பாஸ்தான். அதற்காக ஆனந்தவிகடனின் ‘டைம்பாஸ்’ அளவிற்கு கீழிறங்க வேண்டியதில்லை. தராதரத்தோடு டைம்பாஸ் என்று வைத்துக் கொள்ளலாம். சொல்வதற்கும், எழுதுவதற்கும் வேண்டுமானால் எளிமையாக இருந்தாலும் நேரத்தை கொல்வது அத்தனை எளிதான காரியமில்லை. அதைப் போன்ற கொடுமையும் வேறு இல்லை. 

கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரும் புரட்சியை நிகழ்த்திய கண்டுபிடிப்புகளின் முக்கியமான பணியாக ‘நேரத்தை கொல்லுதல்’ இருந்திருக்கிறது. ரேடியோ, டிவி என பட்டியல் எடுத்தால் அவற்றின் தலையாய கடமை ‘டைம்பாஸ்’தானே?. இண்டர்நெட் வந்தபிறகு நேரத்தை கொல்வது இன்னமும் கடினமாகியிருக்கிறது. ஊர் சுற்றுவதில்லை, நண்பர்களோடு திரிவதில்லை என்ற ஏராளமான காரணங்களால் நேரம் நீண்டு விட்டது. கம்யூட்டர் முதல் மனைவியாகக் கட்டிக் கொண்டவர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்ட நிறுவனங்கள் கர்மசிரத்தையாக கண்விழித்து  டைம்பாஸூக்காக வழிகோலியிருக்கிறார்கள். ஆர்குட்,ட்விட்டர், ஃபேஸ்புக் என ஒவ்வொன்றின் அடிப்படையும் ‘டைம்பாஸ்’தான்.  ‘வெட்டி வேலைக்கான’தளங்கள் என்றால் நம் ஈகோ துள்ளி குதிக்கும் என்பதால் சமூக வலைத்தளங்கள் என்று டீசண்டாக பெயர் வைத்துவிட்டார்கள்.

ஓகே. 

இன்றைக்கு எழுத ஆரம்பிக்கும் போது “நோ ஃபீலிங், நோ அட்வைஸ், நோ கோபம்” என்றுதான் நினைத்தேன். விட்டால் பொங்கிவிடுவேன் போலிருக்கிறது. 

ஹைதராபாத்தில் இருந்தபோது தனிமைச்சிறையை அனுபவிக்க வேண்டும் என மனம் விரும்பியது. எதனால் அப்படியொரு ஆசை வந்தது என்று தெரியவில்லை. ஆனால் வந்துவிட்டது. அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு சிறையில் இருப்பது என திட்டமிட்டேன். ஃபோன், டிவி, செய்தித்தாள் என எந்த வசதியும் இருக்கக் கூடாது என்பது விதித்துக் கொண்ட முக்கியமான நிபந்தனை. வானத்தையும் வெளியுலகத்தையும் பார்க்கக் கூடாது என முடிவு செய்திருந்தேன். 

தமிழ்நாட்டில் இருந்த அம்மா அப்பாவிடம் ஒரு மீட்டிங்குக்காக வெளியூர் செல்வதாகவும் மூன்று நாட்களுக்கு ஃபோனில் கூட பேச முடியாது என்று சொல்லிவிட்டேன். உடன் தங்கியிருந்த அறைத்தோழர்களிடம் திட்டத்தைப் பற்றி சொன்னால் அவர்கள் என்னை மனநோயாளி என்று நினைத்துவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் அவர்களிடமும் வெளியூர் செல்வதாகச் சொல்லியிருந்தேன்.

ஹைதராபாத்தில் அமீர்பேட் என்ற இடத்தில் சிறையிருப்பதற்கான விடுதி அறையைத் தேடினேன். அறைவாடகை முந்நூறு ரூபாயைத் தாண்டினால் அந்த அறையில் நிறைய வசதிகள் இருப்பதாகப் பட்டது. குறைந்தபட்சம் சாலையை பார்க்கும் படியாக ஜன்னல் வைத்திருந்தார்கள். அவற்றை நிராகரித்துவிட்டு அலைந்து திரிந்ததில் ஒரு விடுதியை கண்டுபிடிக்க முடிந்தது. இருநூறு ரூபாய்தான் வாடகை. நல்ல மெத்தை கிடையாது, டிவி கிடையாது. ஒரேயொரு ஜன்னல்- அதைத் திறந்தால் பக்கத்து கட்டடத்தின் சுவர்தான் தெரியும். 

லெட்ஜரில் முகவரியைக் குறித்துக் கொடுத்துவிட்டு ரூம்பாய்யை அழைத்து மூன்று நாட்களுக்கும் ஒவ்வொரு வேளைக்கும் மூன்று சப்பாத்திகளைத் தந்துவிடுமாறு சொன்ன போது அவன் என்னை ஒரு மார்க்கமாக பார்த்தான். தற்கொலை செய்ய வந்திருப்பவன் என்று கூட நினைத்திருக்கக் கூடும். அவன் சென்றவுடன் அறைக் கதவை தாழிட்டு லுங்கிக்கு மாறினேன். அப்பொழுது அந்த அறை மட்டும்தான் அடுத்த மூன்று நாட்களுக்கான எனது உலகம் என நினைத்தபோதும் ஒவ்வொரு சுவரும் மாபெரும் மலையாகத் தெரிந்தது. எப்படியும் தாண்டிவிட முடியாத மலைகள் அவை.

அந்த அறையில் இருந்த ஒற்றைக் கட்டிலில் அமர்ந்து கொள்வது அல்லது தூங்குவது தவிர வேறு எந்த வழியும் இல்லை. காகிதம் பேனா கூட எடுத்துவரவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதுவரைக்கும் என் வாழ்நாளில் சந்தித்த ஒவ்வொரு மனிதரின் முகத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றேன். சில மணி நேரத்தில் முகங்கள் தீர்ந்து போயின. அதன் பிறகு அதுவரையிலும் வாசித்திருந்த ஒவ்வொரு புத்தகத்தையும் நினைவூட்டிக் கொண்டிருந்தேன். புத்தகங்களின் உள்ளடகத்தை அசைபோடத் துவங்கினாலும் அதிகபட்சமாக மூன்று மணி நேரங்களை மட்டுமே கரைக்க முடிந்தது. 

இனி வரப்போகும் ஒவ்வொரு மணியும் ஒரு யுகம் என்பதை முதன்முதலாக உணரத்துவங்கிய தருணம் அது. வெறுமை என்பது இவ்வளவு கொடூரமானதாக இருக்கும் என்று நினைத்திருக்கவில்லை. யாரிடமாவது பேச வேண்டும் என இருந்தது. யாருடைய முகத்தையாவது பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அடுத்த மூன்று நாட்களுக்கு எனது எந்த ஆசையும் நிறைவேறாது என்று நினைத்தபோது பெரிய தவறொன்றை செய்து கொண்டிருப்பதாகத் தோன்றியது.

முதல் நாள் மட்டும் எதையோ சாதிக்கவிருப்பதாக ஒரு உணர்வு இருந்தது. அதுவும் இரண்டாவது நாள் காலியாகியிருந்தது. மூன்றாவது நாள் இன்னமும் கொடுமையாக இருந்தது. தூக்கமும் வரவில்லை. இன்னும் இருபத்திநான்கு மணிநேரத்தில் வெளியேறிவிடலாம் என்ற எண்ணம் இருந்தாலும் வரவிருக்கும் இருபத்திநான்கு மணி நேரத்தை எப்படி கடத்துவது என்று தெரியவில்லை. வேண்டுமானால் கதவைத்திறந்து கொள்ளலாம். ஆனால் அதைச் செய்யவில்லை. இந்த துயரத்தை முழுமையாக அனுபவித்துவிட விரும்பிய மனம் அழத் துவங்கியிருந்தது. கண்கள் குளம் ஆகியிருந்தன. 

என்னதான் கதறினாலும் யாருமே தோள் கொடுக்காத தனிமை அது. எனக்கென ஒருவரும் இல்லாத கையறு நிலை அது. அழுதபடியே அந்த நாள் கரைந்திருந்தது. கண்கள் வீங்கியிருந்தன. அழுது முடித்திருந்த போது இருபத்தி நான்கு மணி நேரம் முடிந்தவுடன் அலாரம் அடித்தது அல்லது அலாரம் அடித்தவுடன் அழுவதை நிறுத்திக் கொண்டேன் என நினைக்கிறேன். கழிவறைக்குள் சென்று முகத்தை கழுவிக் கொண்டேன். 

கதவைத்திறந்து வெளியேறியபோது இதுவரை இல்லாத வகையில் உலகம் அழகானதாகத் தெரிந்தது. நகரத்தின் இரைச்சல்கள் உற்சாகமூட்டின. மனித முகங்கள் மீது அளவில்லாத பாசம் பெருகிய அந்த நாள் இன்னமும் அப்படியே மனதுக்குள் பதிந்து கிடக்கிறது.

(இன்னமும் விரிவாக இன்னொரு நாள் எழுத வேண்டும்)

13 எதிர் சப்தங்கள்:

pravinfeb13 said...

இதை படித்தவுடன் எனக்கு இப்படி வாழ்ந்து பார்க்க ஆசை வந்துவிட்டது சார்... சந்தர்ப்பம் வரும்போது முயன்றுபார்க்கிறேன்....

Riyas said...

அடடா.. நீங்கள் சொல்லிய விடயம் உண்மையில் நடந்ததுதானா? நம்பமுடியவில்லை!!! தனிமையும் வெறுமையும் மிகக்கொடுமைதான்..

உங்கள் கதையை படிக்கும் போது in to the wild என்ற ஆங்கிலப்படம்தான் நினைவுக்கு வந்தது உறவை,உலகை வெறுத்து தனிமையை நோக்கி செல்லும் ஒருவனின் கதை (அதுவும் உண்மையில் நடந்ததுதானாம்.)

http://en.wikipedia.org/wiki/Into_the_Wild_(film)

சிந்திப்பவன் said...

தமிழில் நான் படித்த மிக சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.உங்களுடன் ஐக்கியமாவதற்கு இடையூறாக உங்கள் தி.மு.க சார்பு நிலை மட்டுமே ஒரு சுவராகத்தடுக்கிறது.

Rathna said...

Nice

Anonymous said...

இந்த அனுபவம் தோழி ஒருவர் 90 களில் எனக்கு பரிந்துரைத்தது...

வயதுக்கு வந்த பின் வாழ்க்கையை முதல்முறையாய் அனுபவித்த தருணம்...

உங்கள் வார்த்தைகள் மூலம் கூடுதல் பூரிப்புடன்...

Philosophy Prabhakaran said...

இருநூறு ரூபாய் வாடகை அறையில் கண்டிப்பாக கரப்பான் பூச்சிகள் இருந்திருக்கும் அவைகளோடு பழக ஆரம்பித்திருந்தால் பொழுது போயிருக்கலாம்...

துளசி கோபால் said...

அனுபவம் அனுபவம், வாழ்க்கை முழுவதும் விதவிதமான அனுபவங்கள்.

எல்லாவிதமான சுதந்திரங்கள் இருந்தும் மனம் தனிமையிலே உழல்வதை நான் அனுபவித்துக்கொண்டே இருக்கிறேன்.

இடைக்கிடை தலை நீட்டும் பூனையை உபசரிப்பது நீங்கலாக:-)))

Avargal Unmaigal said...

நல்ல முயற்சி பாராட்டுக்கள்

ஜீவன் சுப்பு said...

//கதவைத்திறந்து வெளியேறியபோது இதுவரை இல்லாத வகையில் உலகம் அழகானதாகத் தெரிந்தது. நகரத்தின் இரைச்சல்கள் உற்சாகமூட்டின. மனித முகங்கள் மீது அளவில்லாத பாசம் பெருகிய அந்த நாள் இன்னமும் அப்படியே மனதுக்குள் பதிந்து கிடக்கிறது.//
நிதர்சனமான உண்மை ..

kathir said...

அட!

Kodees said...

//அதற்காக ஆனந்தவிகடனின் ‘டைம்பாஸ்’ அளவிற்கு கீழிறங்க வேண்டியதில்லை//

உண்மை!, நான் பார்த்தவரையில் இந்த அளவிற்கு ஒரு வெகுஜனபத்திரிக்கை கீழிறங்கவில்லை.

Uma said...

கொஞ்சம் அதீத துன்பச் சிறைதான்! நிறைய விஷயங்களை அனுபவித்துபார்க்க நினைக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!

radhakrishnan said...

மணிகண்டன்,என்ன இது? காந்தியடிகள்
போல விதவிதமான சோதனைகள்
செய்கிறீர்களே? வாழ்வின் பல கட்டங்களில் தனிமையான சூழல்களில்
இருக்கவேண்டிய சூழ்நிலைவந்தால் சமாளிப்பதற்கு இந்த ஒத்திகை
உதவியாக இருக்கலாம்.முயற்சித்துப் பார்க்க இந்த வயதில்(65+ )ஆசையாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி.