கல்லூரியில் படிக்கும் போது அதீத ஆர்வக்கோளாறாக திரிந்தேன். முந்திரிக்கொட்டை என்றும் சொல்லலாம். எலெக்ட்ரிகல் துறையில் சேர்ந்தவுடன் நான்தான் அடுத்த தாமஸ் ஆல்வா எடிசன் என்ற நினைப்பு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எதையாவது கண்டுபிடித்து ஆஸ்கார் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ரொம்ப நாட்களுக்கு பிறகுதான் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் ஆஸ்கார் தர மாட்டார்கள் என்று தெரிந்தது. இருந்தாலும் மனம் ஒடிந்துவிடவில்லை. ‘விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை விரும்ப வேண்டும்’ என்ற பாலிசியின் படி எனது விருப்பத்தை ஆஸ்காரிலிருந்து நோபலுக்கு மாற்றிக் கொண்டேன்.
இந்த நோபல் வெறி வந்த பிறகு எதிரில் கிடைத்த வாத்தியார்களையெல்லாம் பிறாண்டியது ஞாபகத்தில் இருக்கிறது. முதல் வருடத்தில் இரண்டு வாத்தியார்கள் எனக்கு விருப்பமானவர்களாக இருந்தார்கள். அவர்களைத்தான் அதிகமாக பிறாண்டினேன். அரவிந்த் வைத்தியலிங்கம் அதில் ஒருவர். விவரமான மனிதர். கலாய்க்கிறாரா அல்லது உண்மையாக பேசுகிறாரா என்பதை கண்டுபிடிப்பது மிகச் சிரமம். சிரித்துக் கொண்டே பேசுவார். கோபம் வந்தாலும் பற்களைக் கடித்துக் கொண்டே சிரிப்பார். இப்பொழுது சிங்கப்பூரிலோ அல்லது மலேசியாவிலோ செட்டில் ஆகிவிட்டாராம். இன்னொருவர் ஜெகதீஸ்வரன். வெள்ளந்தியான மனிதர். நான் பேசுவதையெல்லாம் வைத்து என்னை அறிவாளி என்று நம்பிக்கொண்டிருந்தார் என்றால் பாருங்கள்.
இவர்களிடம் ‘கரண்ட் ஏன் கண்ணுக்கு தெரிவதில்லை’ போன்ற கேள்விகளைக் கேட்டு டார்ச்சர் செய்ததுண்டு என்றாலும் நோபல் வெறியை காட்டிக் கொண்டதில்லை. ஆனால் ஆசையை எத்தனை நாளைக்குத்தான் அடக்கி வைக்க முடியும். அந்த நாளும் வந்தது. நோபல் பரிசு வாங்குவதற்கு பிள்ளையார் சுழி போட்ட நாள்தான் அது.
அன்று காலையிலிருந்தே கண்டுபிடிப்பு ‘ஐடியா’மூளைக்குள் குண்டு பல்பை எரிய விட்டிருந்தது. அரவிந்த் அல்லது ஜெகதீஸ்வரனிடம் பேசி இந்த கண்டுபிடிப்புக்கு எப்படியும் நோபல் வாங்கிவிடுவது என்று கங்கணம் கட்டியிருந்தேன். குளித்து, சாமி கும்பிட்டு, திருநீறை நீரில் கலந்து பட்டையாக அடித்துக் கொண்டு எலெக்ட்ரிகல் ஆய்வகத்துக்குள் தேடினால் இரண்டு பேரையும் காணவில்லை. வகுப்பு தொடங்கும் நேரம் வந்தும் அவர்கள் வந்து சேர்வதாகத் தெரியவில்லை. நோபல் கனவை அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் போலிருக்கிறது என வகுப்பறைக்கு சென்றுவிட்டேன். யாரோ இரண்டு பேர் பாடம் நடத்தினார்கள். அதெல்லாம் மண்டையில் ஏறவில்லை.
நோபல் பரிசை வாங்கிக் கொண்டு கரட்டடிபாளையம் வருவதாகவும் அங்கு ஊரே திரண்டு நின்று வரவேற்பு கொடுப்பதாகவும் முட்டி போட்டு அந்த மண்ணுக்கு முத்தமிடுவதாகவும் கலர் கலர் கனவுகளாக ஓடிக் கொண்டிருந்த போதுதான் அந்த துர்சம்பவம் நிகழ்ந்தது. நெற்றியில் ‘சட்’டென்று சாக்பீஸ் அடித்தது. ராஜேஸ்வரி மேடம்தான் அடித்திருக்கிறார். கணக்கு சொல்லித்தருவதற்கு மட்டுமில்லாமல் குறி பார்த்து அடிப்பதற்கும் பயிற்சி செய்திருப்பார் போலிருக்கிறது. ஏதோதோ கேள்வி கேட்டார். பதில் தெரியவில்லை. வெளியே துரத்திவிட்டார். விஞ்ஞானி ஆவதற்கான முதல் ஸ்டெப் இது. வெளியே வந்தவுடன் அத்தனை சந்தோஷம். இரண்டு மணி நேர தாமதத்தை ஒரு மணிநேரமாக குறைத்துக் கொண்ட சந்தோஷம் அது.
மீண்டும் ஆய்வகத்திற்கு ஓடினேன். அரவிந்த்தான் அமர்ந்திருந்தார். அந்த காலகட்டத்தில்தான் பேஜர், மொபைல் போன் எல்லாம் பரபரப்பாகிக் கொண்டிருந்தது.
“சார், இந்தக்காலத்தில் எல்லாமே வயர்லெஸ் ஆகிட்டு இருக்குல்ல?”
“ஆமாம்ப்பா...இனிமேல் அதுக்குத்தான் ஃப்யூச்சர்”
“எனக்கு ஒரு ஐடியா இருக்கு சார்”
“அப்படியா என்ன ஐடியா?”
“அந்த ஐடியாவை ஒரு ப்ராஜக்டா செய்யணும்...நீங்க கைட் செய்யறீங்களா?”
“ஐடியாவை சொல்லுப்பா”
“வயர்லெஸ்ல சிக்னல் அனுப்புற மாதிரி வயர்லெஸ்ஸா பொருட்களை அனுப்பணும்”
இந்த இடத்தில் அவர் ஜெர்க் ஆனதை கண்கூடாக பார்த்தேன். ஆனால் சமாளிக்க முயன்றார்.
“அது எப்படி முடியும்” என்று அவர் கேள்வி கேட்டிருக்க வேண்டியதில்லை. அவர் கேட்டுவிட்டார். அவர் விதியை யாரால் மாற்ற முடியும். ஒளிர்ந்த கண்களுடன் விவரிக்க ஆரம்பித்தேன்.
“கூரியர் ஆபிஸ் ஆரம்பிக்கணும் சார். டிவி, ஃப்ரிட்ஜ் என்று எதுவாக இருந்தாலும் சரி உருக்கி ஆவியாக மாற்றி கண்ணுக்கே தெரியாத மூலக்கூறுகளாகவும் அணுக்களாகவும் மாற்றிவிட வேண்டும். அவற்றை வயர்லெஸ் டெக்னாலஜியைப் பயன்படுத்தி அனுப்பி வைக்கிறோம். அதை அந்தப்பக்கத்தில் இருக்கும் ஆபிஸில் பிடித்து மீண்டும் அதே பழைய வடிவத்திற்கு மாற்றிவிடப் போகிறோம். அவ்வளவுதான். மேட்டர் சிம்பிள்”
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை நான் கலாய்ப்பதாக நினைத்திருக்கக் கூடும். அவர் பேசுவதாக இல்லை. அதனால் விட்டுவிட முடியுமா? நானே தொடர்ந்தேன்.
“இதில் ஒரு சிக்கல் இருக்கு சார்”
“ஒரு சிக்கல்தானா?” என்றார்.
“ஆமாம் சார்..நாம அனுப்புற டிவியை இடையில் யாராவது பிடித்துக் கொண்டால் என்ன செய்வது? அதனால் அதை என்கோடிங் செய்து அனுப்பணும் சார்” என்ற போது தலையில் கை வைத்துக் கொண்டார்.
“ப்ராஜக்டா செய்யலாமா சார்?” என்றேன்.
“இதைச் செய்ய நான் வொர்த் இல்லை. ஜக்குகிட்ட பேசிப்பார்க்கலாம்” என்றார். அந்த நேரத்தில் ஜெகதீஸ்வரனுக்கும் கெட்ட நேரம் போல. ஆய்வகத்துக்குள் வந்து கொண்டிருந்தார்.
“ஏம்ப்பா ஜக்கு, இந்தப் பையன் என்னமோ சொல்லுறான். நீ கைட் பண்ணுறியா?” என்று நக்கலாக சிரித்தபடியே நகர்ந்து கொண்டார்.
ஜெகதீஸ்வரன் வெள்ளந்தி மனிதர். என்னமோ ஏதோ என்று கேட்கத் துவங்கினார்.
“இதெல்லாம் ப்ராக்டிகலா முடியாதுப்பா...” என்று தொடங்கிய அவரை முடிக்கவிடவில்லை.
“முடியாது என்பது முட்டாள்த்தனம்” என்று பிலாசிபகலாக பேசத் துவங்கினேன். அவரும் எத்தனையோ சிக்கல்களை சொல்ல முயன்றார். நான் விடுவதாக இல்லை. கிட்டத்தட்ட அவரது குரல் நடுங்கியது. அந்த ஆய்வகத்தில் வேறு யாருமே இல்லாதது அவரது பயத்தை அதிகமாக்கியிருக்கலாம். ஓவர் ஆர்வத்தில் நான் கடித்து வைத்துவிடக் கூடும் என்று கூட பயந்திருக்கலாம்.
அவரால் தப்பிக்க முடியாது என்ற நிலைமை வந்தபோது “இதைப் பத்தி இன்னைக்கு ஃபுல்லா யோசனை செய்யறேன். இப்போதைக்கு அடுத்த வகுப்புக்காக கொஞ்சம் தயாரிப்பு செய்ய வேண்டும்” என்றார்.
“சரி சார். சாயந்திரம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்தேன்.
அடுத்த சில மாதங்களுக்கு அரவிந்தையும், ஜெகதீஸ்வரனையும் பார்க்கவே முடியவில்லை.
9 எதிர் சப்தங்கள்:
ஒரு தப்பு பண்ணிட்டீங்க, உங்க இந்த ஐடியாவை அப்படியே டெவலெப் பண்ணிஒரு ஹீரோயின், வேற்று கிரக வில்லன்,கொஞ்சம் டெரரான பின்னணி இசையோடு ஒரு சினிமா எடுத்திருக்கலாம் ஒண்ணு என்ன, ஒன்பது ஆஸ்கார் வாங்கியிருக்கலாம்!
//ரொம்ப நாட்களுக்கு பிறகுதான் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் ஆஸ்கார் தர மாட்டார்கள் என்று தெரிந்தது//
//“இதில் ஒரு சிக்கல் இருக்கு சார்”
“ஒரு சிக்கல்தானா?” //
//நான் விடுவதாக இல்லை. கிட்டத்தட்ட அவரது குரல் நடுங்கியது.//
:) சுவாரஸ்யமா எழுதுறீங்க மணிகண்டன்,பாராட்டுகள்.
அடமுருகா.. ஹாஹாஹா
ஒரு நிமிஷம் அந்த தெய்வங்கள நினைச்சேன்...
:))))))))))))))) அடக்க முடியல...
i think it is not a joke an more . Already people are copying objectes using 3d printer and nano technology.
You should have pateneted your idea.
மணி.. பாக்யா என்றொரு பல்சுவை விஞ்ஞான, சமூக சஞ்சிகை வருகிறது தெரியும்தானே.. நமது (நடிகர்) பாக்யராஜ்தான் ஆசிரியர்.. அந்தப் புத்தகத்தில் இதே போல ஒரு கட்டுரையை சுமார் 15 வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன்.. நீங்களாவது படியாக எழுதியிருக்கிறீர்கள்.. அதை எழுதிய மனிதர் (சஞ்சீவி என்று நினைவு) ஆதரங்களுடன் எழுதியிருந்தார்
செம காமெடிங்க .... படிச்சு படிச்சு சிரிச்சேன் ... பிரமாதம் ....
தங்களுடைய எழுத்தில் இழையோடும் இயல்பான நகைச்சுவை ரசிக்கத்தக்கது.
ரசித்தேன்.
-நூருத்தீன்
ஹல்லோ.
பொருட்களை மூலக்கூறுகளாக பிரித்து வயர்லெஸ் மூலம் சிக்னல்களாக அனுப்பி மறுபக்கம் அதை மீண்டும் ஒன்றுசேர்த்து பொருளாக மாற்றும் நுட்பமானது இயற்பியலில் சாத்தியமே. எந்த ஒரு இயற்பியல் விதியும் இதை மறுப்பதில்லை. குவாண்டம் டெலிபோர்டேஷன் சாத்தியம் ஆனால் மிகவும் கடினமான ஒன்றாகும் இன்னும் ஆரம்ப நிலையை கூட தாண்டமுடியாமல் இருக்கின்றனர்.
Post a Comment