சில விஷயங்கள் “பிச்சுக்கும்” என்று நினைத்து செய்வோம். ஊற்றிக் கொள்ளும். சிலவற்றை ஏனோதானோ என்று செய்தால் ஹிட் அடித்துவிடும். அப்படித்தான் நேற்றும் நடந்தது. சனிக்கிழமை இரவு ஊருக்கு சென்றிருந்தேன். பெங்களூரிலிருந்து கோபிச்செட்டிபாளையத்திற்கு. கண்டதையும் யோசிப்பதற்கு பயணம் செய்வதை விடவும் நல்ல தருணம் எதுவும் இல்லை. பாலப்பாளையத்தில் வசிக்கும் சுந்தரம் பற்றி ஏதாவது யோசித்துக் கொண்டிருந்தால் காரணமே இல்லாமல் சீனாவில் பார்த்துப் பேசிய பெண் ஒருத்தியின் ஞாபகம் வந்து போகும். கீழ்பவானி கால்வாயில் குளித்ததை நினைத்துக் கொண்டிருந்தால் ப்ரான்ஸின் நிர்வாணக் கடற்கரைக்கு ஆளை இழுத்துச் செல்லும். இப்படியான ஒரு நினைப்புதான் சுஜாதா, ஜெயமோகன், எஸ்ரா பற்றி நேற்று நினைத்துக் கொண்டிருந்தது.
அப்பொழுது யோசித்ததை அன்றிரவு எழுதி அடுத்த நாள் காலை போஸ்ட் செய்திருந்தேன். ஞாயிற்றுக்கிழமை பதிவுகளை ஆயிரம் பேர் வாசித்தாலே அதிசயம். நேற்று சில ஆயிரம் பேர்கள் வாசித்திருக்கிறார்கள். அடுத்த சில மணிகளில் ஓரிருவர் அழைத்துப் பேசினார்கள். ஃபேஸ்புக்கிலும், பின்னூட்டங்களிலும் சிலர் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். எழுத்தாளர் இரா.முருகன் அது பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். இவை யாவுமே எதிர்பாராத நிகழ்வுகள். சந்தோஷமாக இருந்தது.
ஃபோனில் அழைத்தவர்களில் ஒருவர் உதவி இயக்குனர். “வாத்யார்தான் எப்பவுமே டாப்தான்” என்றார். அவர் வாத்யார் எனக் குறிப்பிட்டது சுஜாதாவை. சுஜாதாதான் மிகச் சிறந்த படைப்பாளி என்பதான கமெண்ட்களுக்கு எனக்கு நேர் பேச்சில் பதில் சொல்லத் தெரியாது. தெரியாது என்பதைவிடவும் ஏதாவது எடக்குமடக்காக பேசி அவரை புண்படுத்திவிடக் கூடும் என அமைதியாகிவிடுவேன். நாளைக்கு இது பற்றி ஓரிரு வரியாவது எழுதுகிறேன் ஆனால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முடித்துக் கொண்டேன்.
அவருக்கு சுஜாதா ‘டாப்’ ஆக இருக்கக் கூடும். ஆனால் எல்லோருக்கும் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. சுஜாதாவின் கட்டுரைகள் எனக்கு பிடிக்கும். அதற்காக அவர்தான் டாப் என்பதெல்லாம் டூமச். சுஜாதாவின் நாவல்கள் மட்டமானவை. உதாரணமாக “அனிதா இளம் மனைவி” போன்ற நாவல்கள் வெறும் Readability காக மட்டும் சிலாகிக்கப்பட்டவை எனத் தோன்றுகிறது. சுவாரசியம் என்பதைத் தவிர வேறு எந்த அம்சமும் இந்த நாவலில் இருக்காது. ஆனால் இது சுஜாதாவின் மிகச் சிறந்த நாவல் என்ற ஒரு குறிப்பை இணையத்தில் வாசிக்க நேர்ந்தது. அந்த குறிப்பை எழுதிய நபர் தமிழில் வெளிவந்த வேறு நாவல்களை வாசித்திருப்பாரா என்று தெரியவில்லை. அப்படித்தான் இந்த உதவி இயக்குனரும். வேறு எத்தனை படைப்பாளிகளை அறிந்திருக்கிறார் என்று தெரியவில்லை.
நேற்றைய குறிப்பு சினிமாவில் சுஜாதாவின் பங்களிப்பு என்பதைப் பற்றி மட்டும்தான். மற்றபடி சுஜாதா பற்றித் தேடினால் அவரை சிலாகித்தும், மட்டம் தட்டியும் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எடுத்துவிட முடியும். இவற்றைத் தாண்டி புதிதாக எதையும் பேசிவிட முடியாது என்று நம்புவதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
******
மு.ஹரிகிருஷ்ணனுக்கு பன்முகம் உண்டு. எழுத்தாளர், “மணல்வீடு” என்ற சிறு பத்திரிக்கையின் ஆசிரியர் என்று சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் அவர் தனது முகமாக காட்டிக் கொள்வது கூத்துக் கலைஞன் என்பதைத்தான். ஹரியின் அப்பாவும் ஒரு கூத்துக் கலைஞராக இருந்தவர். அவர் மிச்சம் வைத்துப் போனதை இவர் உடும்புப் பிடியாக பிடித்திருக்கிறார். “குடும்பத்தைக் கூட கவனிக்காமல் கூத்துக்காக இப்படி செலவு செய்யணுமா?” என்று கேட்டிருக்கிறேன். எல்லோரும் “இப்படியே நினைத்துக் கொண்டால் அடுத்த தலைமுறையில் கூத்து இருக்காது” என்று டென்ஷனாகிவிட்டார்.
ஹரிக்கு பெரிய பொருளாதார வாய்ப்புகள் இல்லை. அவரது வீட்டிற்கு அருகில் ஜிண்டால் இரும்பு தொழிற்சாலையில் கடைநிலை தொழிலாளியாக இருக்கிறார். இருந்தாலும் தனது மொத்த உழைப்பையும் அழிந்து வரும் கூத்துக் கலைக்காக செலவிடுகிறார்.
களரி என்ற அறக்கட்டளையின் மூலம் கூத்துக்கலையை உயிர்ப்பிக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கும் ஹரி, இப்பொழுது கூத்துப்பள்ளி ஒன்றை துவங்கவிருக்கிறார்.
பள்ளி என்றவுடன் நகரத்தின் கான்வெண்ட் பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. மிக எளிமையான பள்ளி. தருமபுரி மாவட்டம் எரப்பட்டி என்ற கிராமத்தில் துவங்குகிறார். இலாப நோக்கம் எதுவும் இல்லாத இந்த பள்ளியில் மூத்த கூத்து கலைஞர்கள் மூலம் அடுத்த தலைமுறைக்கு கலையை கொண்டு போகும் பணி இது.
உயிரைக் கொடுத்து கூத்துப்பள்ளிக்கான நிலத்தை வாங்கிவிட்டார். ஒரு ஏக்கர் பரப்பு. இனிமேல்தான் பெரிய பளு காத்திருக்கிறது. இரண்டாயிரத்து எண்ணூறு சதுரடி பரப்பில் தோற்பாவை நிழற் கூத்து, பொம்மலாட்டம், கூத்து முதலான நிகழ்கலைகளை பயிற்றுவிக்க உள்ளரங்கு, ஓர் திறந்தவெளியரங்கு, ஆவணக்காப்பகம், அலுவலகம், வகுப்பறையுடன் கூடிய நூலகம், கழிவறை மற்றும் மின் இணைப்பு பெறுவதற்கான நிதி என ஏகப்பட்ட வேலைகளை செய்து முடிக்க ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும் போலிருக்கிறது.
நிதியுதவி எதிர்பார்க்கிறார். கிள்ளிக் கொடுத்தாலும் சரி; அள்ளிக் கொடுத்தாலும் சரி. இயன்ற அளவு உதவியை காலத்தினாற் செய்து உதவலாம். நமது சிறு உதவி, அழிந்து கொண்டிருக்கும் தமிழரின் கலை ஒன்றைக் காக்க உதவக் கூடும்.
நன்றி.
கூத்து பயிற்சி பள்ளியின் செயல்பாடுகள் குறித்து அறிய விரும்புவோர் 98946 05371 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
வங்கி விபரம்:
Kalari heritage and charitable trust
A\c.no.31467515260
SB-account
State Bank of India
Mecheri branch
Branch code-12786.
ifsc code-SBIN0012786
MICRCODE-636002023
4 எதிர் சப்தங்கள்:
"பாலப்பாளையத்தில் வசிக்கும் சுந்தரம்" may I know who is this? Because I am also from same village!!
கோபிக்கு அருகில் இருக்கும் பாலப்பாளையமா? :)
சோதனை முயற்சியாக ஒரு பதிவின் லேபிலில் "சுஜாதா" வை வைத்தும்,அதே பதிவின் லேபிலில் சுஜாதா இல்லாமலும் திரட்டிகள் மூலம் ஒரே சமயத்தில் வெளியிட்டு வாசகர் எண்ணிக்கை மாறுபடுகிறதா என பாருங்களேன்.மலேசியாவில் விஸ்வரூபம் வெளியான அன்று வெளி வந்த விமர்சனத்தினை Copy செய்து வெளியிட்ட என் பதிவிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதை(விஸ்வரூபம் பதிவு) தவிர்த்து எனது மொத்த பதிவுகளுக்கும் வருகை தந்தவர்களின் எண்ணிக்கைக்கு சமமானது.காரணம் விஸ்வரூபம் என்ற பெயர் மற்றும் அந்த பதிவு வெளியான நாள் என்றே எண்ணுகிறேன்.
Ya...the way "Gobi-polavakalipalayam-othakuthirai-palapalayam". Is it you told?
Post a Comment