ஸ்டாலின் திமுகவின் அடுத்த தலைவர் ஆகிவிடுவார் போலிருக்கிறது. வாய்க்கு அவல் கிடைத்திருக்கிறது. ஆளாளுக்கு மெல்லத் துவங்கியிருக்கிறார்கள். மடம், வாரிசு அரசியல் என்று கேட்டு கேட்டு நைந்து போன சொற்களை கொட்டுவார்கள். இந்த எதிர்ப்புகளால் ஸ்டாலின் தலைவராவது தடைபடப் போவதில்லை என்பது எதிர்ப்பவர்களுக்கும் தெரியும். ஆனால் எதையாவது பேசியாக வேண்டுமே. திமுகவை மட்டும் தான் அதிமுக ஆட்சியிலும் விமர்சிக்க முடியும் திமுக ஆட்சியிலும் விமர்சிக்க முடியும். அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுகவையோ அதன் தலைமையையோ அல்லது ஆட்சி நிர்வாகத்தையோ ‘சைலண்டாக’ கூட விமர்சிக்காத நடுநிலையாளர்கள் தமிழகத்தில்தான் உண்டு. இந்த மெளனத்திற்கு கள்ள மெளனம் என்று பெயர். இந்த கள்ளத்தனத்தைப் பற்றி தனியாக பேசலாம். பேசுவதற்கு தைரியம் வேண்டும். போர்ன்விட்டா குடித்தோ, நேதாஜியின் வரலாற்றைக் படித்தோ தைரியம் வந்தால் பேசலாம். இல்லையென்றால் அமைதியாக இருந்து கொள்வதுதான் உசிதம்.
தலைவரின் மகன் என்பதற்காகவே ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக எழுப்பப்படும் விமர்சனங்களுக்கு ஆயிரக்கணக்கான பதில்கள் உண்டு. தலைவரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் 1967லில் அரசியலுக்கு வந்தாலும் கூட அமைச்சர் பதவியை அடைவதற்குக் கூட 2006 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியதாக இருந்தது. கருணாநிதியின் மகன் என்பதால்தான் மிசாவில் சிறைபட்டு சித்ரவதை அனுபவித்த பிறகும் கூட எம்.எல்.ஏ பதவியை அடைய பதினான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஸ்டாலின் இன்றைக்கு நேற்று கட்சியில் முளைத்தவரில்லை என்றும் எடுத்த உடனே பொருளாளர் ஆக்கப்பட்டவரில்லை என்றும் ஏகப்பட்ட வியாக்கியானங்கள் சொல்லியாகிவிட்டது. கிட்டத்தட்ட நாற்பத்தைந்து காலமாக கட்சியில் இருக்கிறார். அதைவிட முக்கியம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கும் திமுகவின் முகமாக ஸ்டாலின் மட்டும்தான் இருக்கிறார். திமுகவினர் கைது செய்யப்பட்டால் சிறை சென்று பார்ப்பதிலும், போராட்டங்களை முன்னின்று நடத்துவதிலும், முடிந்தால் வழக்கு போட்டு பாருங்கள் என்று அரசுக்கு வெளிப்படையாக சவால்விடும் தைரியத்திலும் ஸ்டாலின் தன்னை ஒரு தலைவனாக வடிவமைத்துக் கொள்வதில் முழு வெற்றியடைந்து வருகிறார்.
சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக தேமுதிக இருந்தாலும் திமுகவைத்தான் மக்கள் எதிர்கட்சியாக கருதுகிறார்கள். இதற்கு விஜயகாந்தின் தோல்வி மட்டும் காரணமில்லை அது ஸ்டாலினின் வெற்றியும் கூட.
கட்சியில் அடுத்த தலைவருக்கான இடத்திற்கு போட்டியிடும் அளவுக்கு வேறு யாரையும் வளர விடவில்லை, மாவட்ட அளவுகளில் தனக்கு ஜால்ரா தட்டுபவர்களை மட்டுமே பதவியில் வைத்திருக்கிறார் போன்ற விமர்சனங்கள் ஸ்டாலின் மீது உண்டு. அதையெல்லாம் ஸ்டாலின் எப்படி எடுத்துக் கொள்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் இவை இன்ற அரசியலின் அடிப்படை சித்தாந்தங்களாக மாறிப்போனதுதான் நம் சூழலின் துக்கம்.
இன்றைய சூழலில் ஸ்டாலின் திமுகவின் தலைவராவதை எதிர்ப்பதற்கு ஒரே ஆள்தான் இருக்கிறார். அழகிரி. ஆனால் ஸ்டாலினை எதிர்ப்பதற்கு அழகிரிக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அழகிரி பெயரளவில் மட்டும்தான் அஞ்சாநெஞ்சன். மத்திய அமைச்சராக இருந்தாலும் கூட அதிமுக ஆட்சியில் முகம் காட்டாமல் பதுங்கிக் கொண்டிருக்கிறார். போராட்டங்களிலோ, பத்திரிக்கையாளர் சந்திப்பிலோ தெரியாத்தனமாகக் கூட கலந்து கொள்ளாமல் தவிர்க்கிறார். அறிக்கை விடக் கூட தயங்கும் அழகிரி ஒருவேளை தலைவரானால் கட்சியை எப்படி நடத்துவார் என்ற கேள்வி எழுவதுதான் இயற்கை.
ஸ்டாலின் திமுகவின் தலைவராவதன் நோக்கம் அடுத்த முதலமைச்சர் ஆகுவதற்குத்தான் என்றால் அவர்தான் திமுகவின் கடைசி முதலைமைச்சராகவும் இருப்பார். பதவிகளைக் குறி வைத்து அரசியலுக்கு வருபவர்களால் நிரம்பி புரையோடிக் கிடக்கும் திமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய பெரும் பொறுப்பு அடுத்த தலைவருக்கு இருக்கிறது. திமுகவை காங்கிரஸின் கோரப்பிடியிலிருந்து விடுதலை செய்யுங்கள் அதற்கு முன்பாக குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுங்கள். தமிழர்களுக்காகவும், இனத்திற்காகவும் குரல் எழுப்பிய பழைய இயக்கமாக தட்டியெழுப்புங்கள். இதையெல்லாம் ஸ்டாலின் இத்தனை வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக செய்திருக்க முடியும். ஆனால் அவரிடம் அதற்கான அதிகாரம் இல்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டு எதிர்பார்க்கலாம்.
திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வர வேண்டுமா அல்லது அழகிரி வர வேண்டுமா என்று கருத்துச் சொல்ல தினமலருக்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த உரிமையும் இல்லாதது போலவேதான் தார்மீகமாக எனக்கும் உரிமையில்லை. ஆனால் ஸ்டாலினிடம் இருக்கும் Charismaவுக்காக அவர் அடுத்த தலைவராக வர வேண்டும் என விரும்புகிறேன்.
5 எதிர் சப்தங்கள்:
Good one...
Super post
\\திமுகவை காங்கிரஸின் கோரப்பிடியிலிருந்து விடுதலை செய்யுங்கள் அதற்கு முன்பாக குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுங்கள். \\அப்படியே தமிழகத்தை இந்த தில்லு முள்ளு கழகத்திடம் இருந்து கடவுள் தான் காப்பாத்தணும்..
RahulJi ????????????????
Both the sons are like his father only.Whose ever comes they will loot tamilnadu.(Tamil nattai cooru pottu vidthruvanga.)
Post a Comment