Jan 18, 2013

இந்த நாள்...உன்னுடைய காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ



அவன் நண்பன் தான். சில வருடங்களுக்கு முன்பாக- குறிப்பாகச் சொன்னால் எட்டு வருடங்கள். அவனும் நானும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தோம். அப்பொழுது எனது முதுநிலை படிப்பு இரண்டாம் வருடம். சென்னையில் தங்கி ப்ராஜக்ட் செய்து கொண்டிருந்தேன்.  அந்த சமயத்தில்தான் இந்த நிறுவனத்தில் பார்ட் டைம் வேலை செய்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட மூன்றாயிரம் சம்பளம். அவன்  ஆறாயிரத்து சொச்சம் வாங்கிக் கொண்டு என்னைவிடவும் பெட்டராக இருந்தான். வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து செலவு, சினிமா இத்யாதியெல்லாம் போக குறைந்தது ஆயிரத்தைந்நூறு மிச்சம் பிடிப்பான். வீட்டுக்கு தர மாட்டான். அந்த பணத்தில் பிஸினஸ் மேன் ஆகப்போகிறேன் என்பான். அவன் ரஜினி ரசிகன்.  ‘இந்த நாள்...உன்னுடைய காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ’ என்றெல்லாம் டயலாக் அடித்து கிச்சு கிச்சு மூட்டுவான். எனக்கு சிரிப்பு வந்துவிடும். இந்த பாழாய்ப்போன சிரிப்பின் காரணமாக பல நேரங்களில் எங்களுக்குள் சண்டையும் வந்திருக்கிறது.

அந்தச் சமயத்தில்தான் படிப்பு முடிந்தது. பிறகு நான் ஹைதரபாத்தில் சிக்கிக் கொண்டேன். அவன் பெரிய நிறுவனம் ஒன்றிற்கு ஜம்ப் அடித்தான். பல லகரங்களில் சம்பளம். அவன் கார் வாங்கும் வரைக்கும் தொடர்பில் இருந்தோம். ஹவுஸிங் லோனுக்கு விண்ணப்பிப்பதாக ஒரு நாள் சாட்டிங்கில் சொன்னான். அதன் பிறகாக தொடர்பு இல்லை. ஓரிரண்டு மின்னஞ்சல் பரிமாறிக் கொண்டோம். அப்புறம் அதுவும் இல்லை என்றாகிப் போனது. அவரவர் பிரச்சினை அவரவருக்கு. ஒவ்வொருவருக்கும் ஆயிரத்தெட்டு சிக்கல்கள், நூற்றியெட்டு குறிக்கோள்கள், புத்தம் புதிய நண்பர்கள் என்று வாழ்க்கையின் அன்றாடச் சுழல் வாரிப் போட்டுக் கொண்டு சுழன்று கொண்டிருந்தது.

ஒரு வருடத்திற்கு பிறகாக சாட்டிங்கில் அதிசயமாக பேசியவன் தொலைபேசி எண்ணைக் கேட்டான். கொடுத்த இரண்டாவது நிமிடத்தில் அழைத்தான். எந்த விசாரிப்புகளுக்குமில்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான். இதுவரை இருந்த வேலையை பறித்துக் கொண்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். வீட்டுக்கடனில் ஆரம்பித்து இந்த மாத கிரெடிட் கார்ட் பில் வரை கழுத்தை நெரிக்கிறது என்றான். அந்தச் சமயத்தில் ஆறாயிரத்துக்கும் சற்று அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த என் பயம் எல்லாம் என்னிடம் ஏதாவது பணம் கேட்டுவிடுவானோ என்றே இருந்தது. அப்படி கேட்டுவிட்டால் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்ற குழப்பம் தனி ட்ராக்கில் ஓடிக் கொண்டிருந்தது. அவன் பணம் எதுவும் கேட்கவில்லை. வேலை ஏதாவது வேண்டும் என்றான். விசாரித்துச் சொல்வதாக இணைப்பை துண்டித்துக் கொண்டோம். அவ்வளவுதான். அடுத்த பல வருடங்களுக்கு தொடர்பு இல்லை.

அவனுக்கு அப்பொழுது திருமணம் ஆகியிருக்கவில்லை. பிஸினஸ் ஆரம்பிக்க விரும்பியவன் ஏன் இன்னொரு வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறான் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இன்னொருவனுக்காக அரை மணி நேரம் துக்கப்படுவதே அதிகபட்சம் என்று என்னை சமாதானம் செய்து கொண்டேன். அதன் பிற்கு வேறொரு ஆயிரத்தெட்டுச் சிக்கல்கள், வேறொரு நூற்றியெட்டு குறிக்கோள்கள் எக்ஸெட்ரா...எக்ஸெட்ரா. அவனை மறந்துவிட்டேன்.

கடந்த வாரத்தில் அவனை மீண்டும் சந்தித்தேன். டீம் லன்ச் என்று அலுவலக நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். பன்னிரெண்டு பேர் சென்றிருந்தோம். மொத்த பில்லை பன்னிரெண்டாக பிரித்து ஆளுக்கு ஒரு பங்கைக் கட்ட வேண்டும். அதைத்தான் டீம் லன்ச் என்பார்கள். இந்த ஹோட்டல் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இங்கு வருவது எனக்கு இதுதான் முதல் முறை. அதீத கூட்டமாக இருந்தது. சர்வர்கள் படு வேகமாக பரிமாறிக் கொண்டிருந்தார்கள். டோக்கன் வாங்கிக் கொண்டு வெளியே காத்திருந்தோம். ஹோட்டலில்தான் பழைய நண்பன் நின்று கொண்டிருந்தான். ஆள் அப்படியேதான் இருக்கிறான். கன்னம் மட்டும் பெருத்து போயிருக்கிறது.  நான்தான் மாறியிருக்கிறேன். மொட்டை அடித்து, கொஞ்சம் பருமனாகி, கண்ணாடி போட்டிருந்த என்னை அவ்வளவு சீக்கிரமாக அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அருகில் சென்று பேசியவுடன் கண்டு கொண்டான். 

வேலையைப் பற்றி கேட்டான். சற்று குறைத்துச் சொன்னேன். ஒருவேளை அவன் நல்ல வேலை இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தால் என் வேலையின் பெருமையைக் கேட்டு வருத்தப்படக் கூடாதே என்ற எண்ணம்தான். குறைத்துச் சொன்னதைக் கேட்டு அவன் முகம் வாடிப்போனது. வேறு வேலை தேடிக் கொள் என்று அறிவுரை சொன்னான். அவனது வேலை குறித்து விசாரித்தேன். உற்சாகமானவன் இந்த ஹோட்டல் தன்னுடையதுதான் என்றான். ஆச்சரியமாக இருந்தது. அந்த நிறுவனம்   துரத்தியவுடன் கொஞ்ச நாள் வேலை தேடியவன் எதுவும் ஒத்து வராமல் ஹோட்டல் ஆரம்பித்திருக்கிறான். பெங்களூருக்கு இடம் மாறி கடை பிடித்து, சேர், டேபிள், சட்டிபானை எல்லாம் தயாரான பிறகு சொந்த ஊரிலிருந்து சமையல்காரர் ஒருவரை பிடித்து வந்து மாஸ்டராக்கிவிட்டான். 

ஆரம்பத்தில் மெஸ்ஸாகத்தான் தொடங்கியிருக்கிறான். ஓரளவு பிக்கப் ஆனவுடன் இங்கு இடம் மாற்றியிருக்கிறான். பக்கத்திலேயே ஏகப்பட்ட ஐ.டி நிறுவனங்கள் இருப்பதால் இப்பொழுது ட்ரிப்பிள் பிக்கப் என்றான். இப்பொழுது மெஸ் என்ற பெயர்ப்பலகை ரெஸ்டாரண்டாக உருமாறியிருக்கிறது. எழுபது ரூபாய்க்கு பிரியாணி, அறுபது ரூபாய்க்கு சிக்கன் வறுவல் என்று சீப்பான ரேட்டில் ஒரு பக்கம் அடித்து தூள் கிளப்ப, இன்னொரு பக்கம் கல்யாணம், காது குத்து, பூப்பு நன்னீராட்டு விழா என்று சகலத்துக்கும் அவுட்டோர் கேட்டரிங்கும் செய்கிறானாம். சில லட்சங்களுக்கும் குறைவில்லாமல் லாபம் வருவதாகச் சொன்னான். அண்ணாமலை சினிமா பார்ப்பது போலிருந்தது. அவன் சொல்லிக் கொண்டேயிருந்தான் நான் வாயைப் பிளந்து கொண்டேயிருந்தேன். அலுவலக நண்பர்கள் நாங்கள் பேசி முடிப்பதற்காக காத்திருந்தார்கள். சாப்பிடுங்கள் பிறகு பேசுவோம் என்றான். உணவு மேஜை அரட்டையில் அவனது கதையை நண்பர்களுக்கு சொன்னேன். அவனது ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் பிஸினஸ் மேன் கனவை நக்கலடித்ததையும் மறக்காமல் சேர்த்துக் கொண்டேன்.

உணவை முடித்தவுடன் சர்வர் பில் கொண்டு வந்தார். பணத்தைக் அவரிடம் கொடுத்து அனுப்பிய போது அவன் சர்வரை திருப்பி அனுப்பிவிட்டான். பணத்தை எடுத்துக் கொண்டு நானே அவனிடம் சென்றேன். வாங்கிக் கொள்ள முடியாது என்றான். வற்புறுத்தியும் பயனில்லை. நன்றி சொல்லிவிட்டு நண்பர்களோடு வெளியேறிய போது உடன் வந்திருந்த தெலுங்குப்பையன் 'பில் எத்தனை' என்றான். 

'ஆயிரத்து ஐநூறு' என்றேன்.

'பிஸினஸ் ஆரம்பிக்க போறியா' என்றான். எல்லோரும் சிரித்தார்கள். நான் சிரிப்பது போல நடித்தேன்.

15 எதிர் சப்தங்கள்:

ஜீவ கரிகாலன் said...

impressive

Balakumar Vijayaraman said...

good one !

Anonymous said...

nice story...narration also

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஆற்றொழுக்கான நடை..

எந்த விதயம் என்றாலும் அதை ரசமாக எழுத உங்களுக்கு வருகிறது...

பாராட்டுகள்.

Jayadev Das said...

Good post!! your writing style is fabulous.

Vaa.Manikandan said...

நன்றி கரிகாலன், பாலகுமார்.

அறிவனுக்கும், ஜெயதேவ் தாஸூக்கும் நன்றி. :)

Unknown said...

ellorukkum kanavu irukku.oru silare seyal paduthukirarkal. matravargal thayankikondeullanar.

Unknown said...

Thayakkaththaivittaal vetrithaan.

அகல்விளக்கு said...

அருமை... :)))

Nagarajan said...

sema!!!

rajasundararajan said...

இதற்கு முன் நாகராஜன் என்றொரு நண்பர் சொல்லிப்போட்டார், ஆனால் வாசித்து முடிக்கையில் எனக்கும் அதேதான் தோன்றியது. (கூகுள் ப்ளஸ்ஸில் அனுஜன்யா கொடுத்த தொடுப்பு வழி இங்கே வந்தேன்.)

செமை! செமை!

(இது 'செம்மை' என்பதின் இடைக்குறை. அதாவது class!) வாழ்க!

priyamudanprabu said...

:good..:)

புதுகை.அப்துல்லா said...

அழகு மணியண்ணா :)

manjoorraja said...

மணி, நல்லா விறுவிறுப்பா சுவாரஸ்யமா எழுதியிருக்கே.

ezhil said...

அருமையான அனுபவப் பகிர்வு. சொந்ததொழில் தொடங்க வேண்டுமென்ற ஆர்வமுள்ளோருக்கு ஒரு டானிக்காக அமையும் இப்பதிவு.