உங்களது வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் வலைப்பதிவை படிக்கும்போது உங்களால் மட்டும் எப்படி வாழ்க்கையில் வேறுபட்ட மனிதர்களை சந்திக்க முடிகிறது என்று தோன்றும்.
இந்த தவிட்டு குருவி நிழற்படம் உங்களுக்கு என்னால் முடிந்த அன்பளிப்பு :)
பி.கு: இந்த படம் B.R Hills போகும்போது Malavalli அருகில் எடுக்கப்பட்டது.
Kumaresh Rajarajan.
Kumaresh Rajarajan.
******
அன்புள்ள குமரேஷ்,
அடிப்படையில் தவிட்டுக்குருவி அழகற்ற குருவி. இப்படிச் சொன்னால் இன்னொரு கேள்வியை எழுப்பலாம். எது அழகு? அழகான பெண், அழகான மலர், அழகான குருவி. இப்படி நமக்கான சில வரையறைகள் இருக்கின்றன. இந்த அத்தனை அழகுகளும் நாமாக வரையறை செய்து கொண்ட எல்லைகள்தானே. ‘இதுதான் அழகு’ என்பதை காலம் காலமாக பழகிக் கொண்டிருக்கிறோம். இந்த பழக்கத்திற்குள் பொருந்துவனவற்றை அழகாக இருக்கிறது என்று சொல்லிவிடுகிறோம். பொருந்தாதவை எல்லாம் அழகற்றவை. தவிட்டுக்குருவி என் அழகின் வரையறைக்குள் வந்ததே இல்லை. சோம்பலான நிறம். சோகமான கண்கள் என இந்தக் குருவிகள் தீர்க்கவே முடியாத துக்கத்தை சுமந்து கொண்டிருப்பதாகவே புரிந்து வைத்திருக்கிறேன். ஒரு மனிதனோ அல்லது ஒரு உயிரோ தனது சோகத்தை நம்மிடம் வெளிப்படையாக காட்டும் போது அந்த ஜீவன் மீது பரிதாபம் உருவாகும் அல்லவா? அப்படித்தான் தவிட்டுக்குருவி மீது பரிதாபம் கொண்டிருந்தேன். உருவான பரிதாபத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவத்தை கொடுக்கும் போது காதலாக மாறிவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் உண்டு. தவிட்டுக்குருவி மீதான எனது காதலுக்கு இந்த பரிதாபம்தான் காரணம் என நம்புகிறேன்.
இப்பொழுது இந்தக் காதல் கதை முக்கியமில்லை. உங்களின் நிழற்படம் குருவியை வேறொரு கோணத்தில் காட்டுகிறது.தவிட்டுக்குருவியை பார்க்கும் போது உங்களுக்கு என்னைப்பற்றிய நினைவு வந்திருக்கிறது என்பது சந்தோஷம் தரக் கூடியதாக இருக்கிறது. அன்புக்கு நன்றி.
‘வேறுபட்ட மனிதர்களைச் சந்திப்பது’ என்று முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. நம்மால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக எத்தனை மனிதர்களைச் சந்திக்க முடிகிறதோ அத்தனை வேறுபட்ட மனிதர்களைச் சந்திக்கிறோம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். பேருந்தில் நம் பக்கத்துச் சீட்டில் அமர்பவரில் ஆரம்பித்து பால்காரன், பூக்காரி, பக்கத்துவீட்டுக்காரன் என அத்தனை மனிதர்களுமே வேறுபட்ட மனிதர்கள்தான். ஒரு மனிதனைப் போலவே குணாம்சம் உடைய இன்னொரு மனிதனை பார்ப்பதற்கு துளியளவும் சாத்தியம் இல்லை என நம்பலாம்.
உங்களுக்கும் எனக்கும் ஏதோ ஒரு மாறுபாடு இருக்கிறது. இந்த மாறுபாடு நம் இருவருக்குமே unique. இந்த uniquenessஐ எப்படி பிரித்து பார்க்கிறோம் என்பதில்தான் நம் வாழ்வின் சுவாரசியம் அடங்கியிருப்பதாக நினைக்கிறேன். இதைத்தான் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.
தலைக்கனம் இல்லாமல், சுய பெருமையடையாமல், பீற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து என்னால் எழுத முடியுமானால் இன்னும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களை சுவாரசியமாக பதிவு செய்ய முடியும். பார்க்கலாம்.
நன்றி.
அன்புடன்,
வா.மணிகண்டன்.
1 எதிர் சப்தங்கள்:
மாங்கு மாங்கென ஒரு பக்கம் விடாமல் செய்தித் தாள் படித்து, ஓயாமல் சேனலை மாற்றி மாற்றி தொலைகாட்சி பார்த்து,சதா நண்பர்களுடன் உலக(!)விஷயங்கள் பேசி பல மணி நேரம் செலவு செய்து தெரிந்து கொள்ள வேண்டிய, விவாதிக்க வேண்டிய பயனுள்ளத் தகவல்களை நிசப்தம் தருகிறது வெறும் பத்து நிமிடங்களில்!.தம்பி மணிக்கு நன்றி!
Post a Comment