Jan 23, 2013

முஸ்லீம்ஸ் ஏமாத்தமாட்டாங்க


கொஞ்ச நாட்களுக்கு முன்பாக முஸ்லீம்ஸ் ஏமாத்திடுவாங்க என்று திரும்பத் திரும்ப அட்வைஸ் செய்த ஆர்கிடெக்ட் பற்றி எழுதியிருந்தேன். அந்த ஆர்க்கிடெக்ட் பற்றி சொல்வதற்கு ஒரு செய்தி இருக்கிறது. அந்தச் சம்பவம் பற்றி ஞாபகமில்லாதவர்கள் அந்தக் கட்டுரையை ஒரு முறை வாசித்துவிடுங்கள்.  

இந்த ஆர்கிடெக்ட் ஒரு அப்பாடக்கர். படிக்காத மேதை. டிப்ளமோ கூட படிக்காமல் ஓரிரண்டு கட்டடங்களை எங்கள் லே-அவுட்டில் கட்டியிருக்கிறார். அவர்தான் நாங்கள் கட்டும் துக்கினியூண்டு வீட்டிற்கும் ஆஸ்தான அழகுக்கலை நிபுணர்.

பாதி முடிந்திருந்த நிலையில் கட்டடத்தை படம் எடுக்க வேண்டும் என்றார். தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். தனது கையகல மொபைல் ஃபோனில் ஒரு நடிகையை படம் எடுப்பது போல வளைத்து வளைத்து எடுத்துத் தள்ளினார்.  “இந்தக் கட்டடத்தை மிகப் பிரமாதமாகக் கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு” என கர்ஜித்தார். அவரது கடமையுணர்ச்சி கண்களில் நீர் கசியச் செய்துவிடும் அளவிற்கு இருந்தது. 

இதற்கு ஃபீஸாக மொத்தமாக இருபதாயிரம் கொடுத்துவிட வேண்டும் என்றார். சரி என்று சொன்னதுதான் மிச்சம். அடுத்த ஒரே நாளில் இருபது முறைக்கும் மேலாக ஃபோனில் அழைத்திருந்தார். கொடுக்கும் இருபதாயிரம் ரூபாய்க்கும் ஃபோன் பில் கட்டிவிடாதீர்கள் என்று கடுப்பாகச் சொல்ல வேண்டியதாக இருந்தது. சற்று சாந்தி அடைந்தார். அடுத்த நாள் பணத்தை தருவதாகச் சொல்லியிருந்தேன். அவ்வளவுதான். மறுநாள் காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் ஒரு மர்ம மனிதர் கதவைத்தட்டினார். அடையாளம் தெரியவில்லை. விசாரித்ததில் அந்த ஆர்க்கிடெக்டின் மேஸ்திரி என்று தெரிந்தது. படுக்கையில் இருந்து எழுந்து முகம் கூட கழுவாமல் வந்து நின்றிருந்தார். இனியும் இழுக்க முடியாது என்று இருபதாயிரம் ரூபாயைக் கொடுத்தனுப்பினேன். 

இரண்டு நாட்களுக்குப் பிறகாக ஒரு ஜிகுஜிகு படத்தை எடுத்து வந்தார். அது கட்டடத்தின் படம். நடிகையின் ஃப்ளோ-அப் படத்தை மிஞ்சியிருந்தது. “உங்க பில்டிங்கை இப்படி கொண்டு வர்றோம்” என்றார். இப்பொழுதும் அவரது கடமையுணர்ச்சி கண்களில் நீர் கசியச் செய்தது. கர்சீப்பில் துடைத்துக் கொண்டேன். 

ஓரிரு நாட்களுக்கு பிறகாக சில ஆட்களை அனுப்பியிருந்தார். அவர்களுக்கு இருபதாயிரம் கொடுத்துவிட வேண்டும். வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். “சார் நான் ஊருக்குப் போகிறேன். பணத்தை உங்களிடம் கொடுத்துவிடுகிறேன். அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்” என்று சொல்லியிருந்தேன்.அவர் சரியென்றவுடன் முகம் கழுவாத மேஸ்திரி மீண்டும் வந்து இருபதாயிரத்தை வாங்கிக் கொண்டார்.

ஊரிலிருந்து திரும்ப வந்த பிறகு வேலை செய்பவர்களிடம் விசாரித்தேன். “ஆர்க்கிடெக்ட் பதினைந்தாயிரம்தானே கொடுத்தார்”என்றார்கள். அடித்துப் பிடித்து ஆர்க்கிடெக்டுக்கு ஃபோன் செய்தேன். “அவங்க ஏமாத்திடுவாங்க சார்.வேலையை முடித்த பிறகு கொடுத்துவிடலாம்” என்றார். இது வியாபார நுணுக்கம். இந்த நுணுக்கம் என்னிடம் இல்லையே என்று ஃபீலிங்க்ஸ் பொங்கி பிரவாகம் எடுத்தது. 

இரண்டு வாரங்களுக்குப் பிறகாக அவர்கள் வேலையை முடித்துவிட்டு மீதிப் பணம் ஐந்தாயிரம் கேட்டார்கள். ஆர்க்கிடெக்ட்டை அழைத்தேன். “சார், நான் இப்போ வெளியில் இருக்கிறேன். நீங்களே கொடுத்துவிடுங்கள். நான் வந்த பிறகு தருகிறேன்” என்றார். நியாயஸ்தனாக என் மனதுக்குள் சிம்மாசனம் போட்டுக்கொண்டார். ஐந்தாயிரம் ரூபாய்க்காக  அந்த பெரிய மனிதரைத் திரும்பத் திரும்ப தொந்தரவு செய்தால் நன்றாக இருக்காது என்று  அதன் பிறகு கேட்கவேயில்லை.

கட்டட வேலை முடிந்து பெயிண்ட் அடிக்கும் சமயத்தில் வீட்டிற்குள் அடிக்க வேண்டிய நிறம் பற்றிய விவரங்கள் தருவதாக சொல்லியிருந்தார். அதற்காக அழைத்த போது உடனடியாக பதிலை வாங்க முடியவில்லை. “இப்பொழுது தருகிறேன் அப்பொழுது தருகிறேன் என்று இழுத்தடித்தார்” இவரிடம் வாங்க முடியாது என்ற தோன்றியது. பெயிண்ட் நிறத்தை நாமே முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு “சார், ஐந்தாயிரம் ரூபாய் உங்களிடம் இருக்கிறது. எப்பொழுது வாங்கிக் கொள்ளட்டும்” என்றேன்.

“எந்த பணம் சார், அதை அப்பவே அவங்ககிட்ட கொடுத்துவிட்டேனே” என்றார். அதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். “வேணும்ன்னா அவங்ககிட்ட ஃபோன் செய்து கேளுங்கள்” என்றார். அதை மிகக் கூலாகச் சொன்னார். அது கூலாகத் தெரியவில்லை. கடும் எகத்தாளமாகத் தெரிந்தது. என்னிடம் அவர்களின் எண் இல்லை என்பது அந்த மனுஷனுக்கு நன்றாகவே தெரியும்.  

என்ன சொல்வது என்று தெரியவில்லை. “நல்லா இருப்பீங்க சார்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தேன்.

நியாமத் நினைவில் வந்து போனார்.

7 எதிர் சப்தங்கள்:

manjoorraja said...

நல்லவர்கள் என நினைப்பவர்கள் கெட்டவர்களாக இருப்பதும் கெட்டவர்கள் என நினைப்பவர்கள் நல்லவர்களாக இருப்பதும் சகஜம் தானே!

நீங்க அன்னிக்கி எழுதிய போதே அந்த ஆர்க்கிடெக்ட் மீதான அபிப்ராயம் போய்விட்டது. திரும்பவும் அவரிடம் நீங்கள் வேலை கொடுத்தது தப்பு என்றே சொல்வேன்.

Anonymous said...

நீங்க ரொம்ப நல்லாவரு..............எனக்கும் எதாவது குடுங்க சார்..............

DiaryAtoZ.com said...

கெட்டவர்கள் எல்லா மதத்திலும் உண்டு.

siva said...

கட்டிட ஒப்பந்தகாரர் பேச்சுத்திறைமையினால் நம்மை ஏமாற்றிவருகிறார்கள்.ஏமந்தபிறகு என்னசெய்வது!

சிராஜ் said...

ஏமாற்றுபவர்கள் எல்லா மதத்திலும் இருப்பார்கள்.. நாத்திகத்திலும் இருப்பார்கள்... அதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை...

ஆனால் ஒரு உண்மைனாய முஸ்லிம் நிச்சயம் எந்த மனிதரையும் ஏமாற்ற மாட்டான்...

ஒடனே மதத்த பேசுறான்னு ஆரம்பிச்சிடாதிங்கப்பா எதிர்கோஷ்டிகளா??? நான் என் மதத்தை வைத்து தான் பேச முடியும். உங்க மதத்த வச்சு பேசினா, நாங்க எப்படியோ போறோம்..உனக்கென்னன்னு இதே வாய் சொல்லும்..

படிப்பினை தரும் பதிவிற்க்கு நன்றி சகோ..

Anonymous said...

உண்மையான இந்துவும் ஏமாற்றமாட்டான்
உண்மையான கிருத்துவனும் ஏமாற்ற்றமாட்டான்
உண்மையான நாத்திகனும் ஏமாற்றமாட்டான்

என் என்றால் மதத்திற்கும் ஏமாற்றுவதற்கும் சம்பந்தம் இல்ல...

இந்த கமெண்ட்டுக்கு விளக்கம் என்ன கேக்காதீங்கப்பா, மேல ஒருத்தர் சொன்னத நான் வழி மொழியறேன்..

SAAnonymous said...

good... ethaye ellorum pinpattungappa..