நாங்கள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது ஜூனியராக ஒரு தேவதை வந்து சேர்ந்தாள். தேவதை என்றால் அவ்வளவு லட்சணம். கோபிச்செட்டிபாளையத்தை அடுத்த கொளப்பலூர் என்ற ஊரைச் சேர்ந்தவள். ஆளாளுக்கு சைட் அடிக்க ஆரம்பித்தோம். அவளுடன் பேசுவதற்காகவே பையன்கள் கடும் பிரயத்தனங்களை செய்து கொண்டிருந்தார்கள். அவளும் நானும் பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதால் என்பதால் ஊர்ப்பெயரை கொக்கியாக வைத்தே அவளுடன் பேசத் துவங்கிவிடலாம் என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்தேன்.
ஆனால் அவள் எந்தப் பையனுடனும் பேசவில்லை. விடுதியில் தங்கியிருக்கும் மற்ற பெண்கள் மூலமாக அவளுக்கு நூல் விட்டாலும் வேலைக்கு ஆகவில்லை. நொட்டை, நொள்ளையெல்லாம் லைப்ரரியிலும், கேண்டீனிலும் மணிக்கணக்கில் கடலை வறுத்துக் கொண்டிருக்க இவள் ஹாஸ்டல் விட்டால் வகுப்பறை, வகுப்பு முடிந்தால் ஹாஸ்டல் ரூம் என்று பையன்களை காய்ச்சிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது சேது படம் வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. ‘கெத்து’ காட்ட விரும்பும் மாணவர்கள் அவளை மிரட்டும் தொனியைக் கையில் எடுத்தார்கள். யார் மிரட்டினாலும் அவள் அழுது கொண்டே ஓடிவிடுகிறாள் என்று பேசிக் கொண்டார்கள். நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் போது இந்த மிரட்டும் குரூப்பில் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அவளை மிரட்டுவதோடு நில்லாமல் பையன்கள் தங்களுக்குள்ளும் மோதிக் கொண்டார்கள். மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டைச் சார்ந்த சீனியர் பையன் ஒருவன் மிக மூர்க்கமாக அவளை மிரட்டத் துவங்கியிருந்தான். வாட்டசாட்டமாக இருந்த அவனால் என்னைப் போன்ற பல பையன்களை ஒதுக்கித் தள்ளிவிட முடிந்தாலும் கொளப்பலூர் பெண்ணை வழிக்கு கொண்டு வர முடியவில்லை. அவன் தன்னோடு இரண்டு அல்லக் கைகளை சேர்த்துக் கொண்டு அந்தப் பெண்ணை கலாய்க்கத் துவங்கினான். அவள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்ததாகச் சொன்னார்கள். ஆனால் அவன் மீது பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அவள் நொந்து கொண்டிருப்பதாகத் தெரிந்த போது சந்தோஷமாக இருந்தது.
இந்த ‘கேப்’பில் அவளுக்கு ஆறுதல் சொல்லும் சாக்கில் உள்ளே நுழைந்துவிடலாம் என்று குறுக்குப்புத்தி குறுகுறுத்தது. அவள் வகுப்பில் இருந்து விடுதிக்குச் சென்று கொண்டிருந்த போது அதிசயமாக எந்தக் கண்களும் அவளை தூரத்தில் இருந்து கவனிக்கவில்லை. மெதுவாகச் சென்று “நீங்கள் கொளப்பலூரா?” என்றேன். அவள் மேலும் கீழும் பார்த்துவிட்டு “ஆமாம்” என்றாள். “நான் கரட்டடிபாளையம்தாங்க” என்றேன். முறைத்தாளா அல்லது பார்த்தாளா என்று தெரியவில்லை. “எனக்கு தெரியாது” என்று பெரிய பன்னாக எடுத்து வாயில் செருகிவிட்டாள். அவள் சொன்ன தொனியில் “இனி மூஞ்சியிலேயே முழிக்காதே” என்று சொல்வதாகப் புரிந்து கொண்டேன். அவ்வளவுதான். பெட்ருமாஸ் லைட்டில் இருக்கும் குமிழாக மனம் நொறுங்கிப்போனது.
அடுத்தவனோடு மோதி பெண்ணை ‘பிக்கப்’ செய்யுமளவுக்கும், திரும்பத் திரும்ப ஒரு பெண்ணிடம் பேசி அவளது மனதைக் கரைக்கவும் திராணி இல்லாததால் வேறு பெண்ணை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அப்படி ஒரு பெண்ணை பார்த்தது தனி ட்ராக். அந்த ட்ராக்கை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்.
மூன்றாவது வருடம் சென்ற பிறகும் இந்த கூத்து தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த மெக்கானிக்கல் பையன் அவளை பொதுவிடங்களில் நக்கலடிக்கத் துவங்கியிருந்தான். இந்தச் சமயத்தில் அவன் சேலம் லோக்கல் ரவுடிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் கசிந்தது. அதனால் இப்பொழுது அவனுக்கு போட்டியே இல்லாத சூழல் உருவாகியிருந்தது. எப்படியும் அவள் அவனுக்கு அடங்கிவிடுவாள் என்று நம்பத் துவங்கியிருந்தேன்.
அந்த மாதத்தில்தான் கல்லூரியில் ஆண்டுவிழா நடந்தது. சினிமா நடிகர்களை அழைத்து வந்திருந்தார்கள். நடிகர்கள் வருவதால் வெளியாட்களின் கூட்டம் அதிகமாகிவிடக் கூடும் என செக்யூரிட்டியிடம் ‘ஐ.டி கார்ட்’ இருந்தால் மட்டும் உள்ளே அனுமதிக்கவும் என்று சொல்லி வைத்திருந்தார்கள். அப்படியிருந்தும் வெளியாட்களின் எண்ணிக்கை தாறுமாறாக இருந்தது. சுவர் ஏறிக் குதித்து வந்திருக்கக் கூடும். அந்த கொளப்பலூர் பெண் அமர்ந்திருந்த வரிசையிலிருந்து இரண்டு வரிசைகளுக்கு பின்னால் அமர்ந்திருந்தேன். மெக்கானிக்கல் பையனும் அதே பகுதியில்தான் நின்று கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்கு பிறகாக அவளிடம் நெருங்கி வந்தான். இன்னும் சில பையன்களும் அவனோடு இருந்தார்கள்.
அவளிடம் ஏதோ அவர்கள் சொன்னார்கள். சில நொடிகளில் அவள் அழத்துவங்கியிருந்தாள். ஆனால் அவர்கள் அமைதியானதாகத் தெரியவில்லை. சுற்றிலும் இருந்த சிலர் அவனது சேட்டைகளை ரசிக்கத் துவங்கியிருந்தார்கள். சிலர் சங்கடமாக உணர்ந்தார்கள். அடுத்த பத்து நிமிடங்களுக்கு இது தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெண் தனக்கு முன்பாக இருக்கும் நாற்காலி மீது கையை வைத்து அதன் மீது முகம் பதித்துக் கொண்டாள். ஒருவன் அவளது முடியை பிடித்து இழுத்தான். அந்தக் கூட்டத்தில் யாரும் அவர்களைக் கேள்வி கேட்கவில்லை. எல்லை மீறிக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் பகுதியில் இருந்தவர்களின் கவனம் அவர்கள் மீது குவிந்திருந்தது. சில கணங்கள் கடந்திருக்கும். ஆவேசமாக எழுந்தாள். கண்ணை மூடி திறக்கும் கணத்தில் தனது கையில் இருந்த செருப்பால் மெக்கானிக்கல் பையனுக்கு முதல் அடியைக் கொடுத்தாள். திகிலடைந்த அவன் தன் கன்னங்களை தடவிக் கொண்டிருக்கும் போது அடுத்த அடி முடியை இழுத்தவனுக்கு. இந்த அதிரடித் தாக்குதலில் அல்லக்கைகளும் தப்பவில்லை. மெக்கானிக்கல் பையன் எதையோ சொல்ல முயன்றான். செருப்பு அவன் வாய்மீது இறங்கியது. அவனுக்கு மேலுதடு பிய்ந்து ரத்தம் பீறிட்டது. சுற்றியிருந்தவர்கள் கைதட்டத் துவங்கினோம். அவள் ஆவேசம் தீராதவளாக இருந்தாள். இப்பொழுது அரங்கம் முழுவதும் எங்கள் பகுதியை திரும்பிப்பார்த்தது. இன்னொரு முறை அவள் செருப்பை ஓங்கிய போது அவர்கள் அந்த இடத்தை விட்டு காணாமல் போயிருந்தார்கள்.
6 எதிர் சப்தங்கள்:
நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, "நிலத்தில் யாருக்கும் அஞ்சாத" இப்படிப்பட்ட தைரியம் தேவைதான். நல்ல வேளை நாம தப்பிச்சிட்டோம்.. இதுதானே உங்களோட மைன்ட் வாய்ஸ் :-)
“நீங்கள் கொளப்பலூரா?” என்றேன். அவள் மேலும் கீழும் பார்த்துவிட்டு “ஆமாம்” என்றாள். “நான் கரட்டடிபாளையம்தாங்க” என்றேன்.
அருமை மணிகண்டன்
நானும் அந்தியூர் தான்.
ஹா ஹா ஹா!! நல்லவேளையாக நீங்க தப்பிச்சிங்க, இருந்தாலும் நீங்க இதை பார்த்துகிட்டு சும்மா இருந்திருக்க கூடாது, அப்படியே ஒரு ஹீரோ மாதிரி பொங்கி எழுந்திருக்கவேண்டாம்.:-) சும்மா நகைச்சுவைக்கு சொன்னேங்க... உங்களுக்கு அடுத்த பொண்ணு சிக்கியதா இல்லையா? கடைசிவரை அதை சொல்லவே இல்லையே?
// பெரிய பன்னாக எடுத்து வாயில் செருகிவிட்டாள்//
பன்னு நல்லாருந்துச்சா?
நன்றி ராபர்ட் :)
மாதவன், ராஜகுமாரன் உங்கள் ஊர்தானே? :) அடுத்த படம் வந்துகிட்டு இருக்கு..தயாரா இருங்க!
செம்மலை ஆகாஷ்,
அது இன்னொரு ட்ராக்...தனியாகச் சொல்கிறேன்..
சேக்காளி,
:)
ரசிக்கும்படியான பதிவு.
அந்தியூர் பழமைபேசி போல நீங்களும் கொங்கு பாசையில் எழுதலாமே!
Post a Comment