Jan 24, 2013

இலியானா, இஸபெல் ஹூயுபெர்ட், எம்.ஜி.ஆர்


ஹைதராபாத்தில் இருந்த சமயத்தில் அமீர்பேட் என்ற இடத்தில் உள்ள சாரதி ஸ்டுடியோவிற்கு வெளிநாட்டுத் திரைப்படங்களை பார்ப்பதற்காக செல்வது வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு மாதமும் திரையிடல் நடக்கும். எனக்கு பார்க்க வாய்த்த முதல் அயல் திரைப்படமே இஸபெல் ஹுயுபெர்ட் நடித்திருந்த ‘பியானோ டீச்சர்’. அது பிரெஞ்சு திரைப்படம். ஒரு மார்க்கமான திரைப்படமும் கூட. ஏகப்பட்ட பலான காட்சிகள் இருக்கும். அதுவரையிலும் பலான காட்சிகளை ஒளிந்து ஒளிந்து பார்த்திருந்த எனக்கு திரையரங்கில் மேல்தட்டு பெண்களுக்கும், ஆண்களுக்கும் மத்தியில் அமர்ந்து பார்ப்பது பெரிய சங்கோஜத்தைத் தந்தது. அற்புதமான கலைப்படைப்பை பலான காட்சிகள் என்று சொல்லி கொச்சைப்படுத்துகிறான் என்று யாராவது கொடி உயர்த்த்துவார்களே என்று “திறமைமிக்க பியானோ ஆசிரியையின் பாலுணர்வும், அதனைத் கட்டுப்படுத்த இயலாமல் மனநோயால் பீடிக்கப் படுவதும்தான் கதை. இஸபெல்லின் முகபாவனைகளும், பாலுணர்வின் கோரத்தை அதன் நுணுக்கங்கள் சிதைவுறாமல் காட்டியிருந்ததும் என்னைக் கவர்ந்த அம்சங்கள்” என்று பேசி நான் ஒரு அறிவுஜீவி என்று பில்ட் அப் செய்து கொண்டேன்.

‘பியானோ டீச்சர்’ படம் முடித்துவிட்டு அந்த திரையரங்கைச் சுற்றி எஸ்.வி.ராமகிருஷ்ணன், அவருடைய நண்பருடன் சேர்ந்து ஒரு நடை போய்க் கொண்டிருந்தோம். . இந்த மாதிரி நடை போகும் சமயங்களில் எஸ்.வி.ஆர் நிறைய ரகசியங்களைச் சொல்லியிருக்கிறார். அப்படியான சீக்ரெட்களில் ஒன்று எம்.ஜி.ஆர் பற்றியது. இதை சீக்ரெட் என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் எம்.ஜி.ஆரின் ஸ்டைல் என்று சொல்லலாம்.

அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் எஸ்.வி.ஆரின் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்திருக்கிறார். அவர் பெயரும் ராமச்சந்திரன்தான். ஏதோ ஒரு விவகாரத்தில் முதல்வருக்கும் ஐ.ஏ.எஸ்ஸூக்கும் முட்டிக் கொண்டது. டென்ஷனான அதிகாரி நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு போய்விட்டாராம். வீட்டிலேயே எத்தனை நாட்களுக்குத்தான் வெட்டியாக இருப்பது என்று தனக்கு இருக்கும் தொடர்புகள் மூலமாக மத்திய அரசுப்பணிக்கு நகர்ந்துவிடலாம் என்று காய் நகர்த்தியிருக்கிறார். இந்தத் தகவலை மோப்பம் பிடித்துக் கொண்ட எம்.ஜி.ஆர் அமைதியாக இருந்துவிட்டாராம். சில நாட்களுக்குப் பிறகாக ராமச்சந்திரனை மத்திய அரசுப் பணிக்கு அனுப்பி வைக்கக் கோரும் கடிதம் ஒன்று முதல்வர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறது. 

ராமச்சந்திரனை வரச்சொன்ன எம்.ஜி.ஆர் கடிதத்தைக் காட்டி “என்ன செய்யட்டும்?” என்றிருக்கிறார். “உங்கள் விருப்பம் போல செய்யுங்கள்” என்றாராம். உடனடியாக தனது பச்சை இங்க் பேனாவை எடுத்த எம்.ஜி.ஆர் அந்தக் கடிதத்தின் கீழாக “ராமச்சந்திரனின் சேவை தமிழ்நாட்டுக்குத் தேவை” என்று எழுதி கடிதத்தை திருப்பி அனுப்பியிருக்கிறார். சோலி சுத்தம். இனி எதுவும் வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்த அதிகாரி அடுத்த வாரம் விடுப்பை ரத்து செய்துவிட்டு வேலையில் சேர்ந்திருக்கிறார்.

இந்தக் கதையை பேசிக் கொண்டிருக்கும் போதுதான் பக்கத்தில் ஒரு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. எம்.ஜி.ஆரை விடவும் ஷூட்டிங்தான் என்னை இழுத்துக் கொண்டிருந்தது. காரணம், அந்த செட்டில் இலியானா இருந்தார். தெலுங்குக்காரர்கள் எந்த அடிப்படையில் நடிகைகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பெரிய ஆச்சரியம். இலியானாவின் முதல்படமான ‘தேவதாஸூ’ பார்த்துவிட்டு இந்தப் பெண்ணுக்கு முகம் லட்சணமாகவே இல்லையே அப்புறம் எதற்காக நடிக்க வைத்தார்கள் என்று குழம்பியிருந்தேன்.

அனில்குமார் குரபாட்டி என்ற தெலுங்குவாலாவிடம் என் குழப்பத்தைச் சொன்னபோது “பாஸூ அ அம்மை நடுமு சூடண்டி” என்றார். முகத்தை எதற்கு பார்க்கிறாய்? இடுப்பை பார் என்று அர்த்தம். “அப்படியா?” என்று ஆச்சரியம் அடைந்த போது அவரே தொடர்ந்தார். “ஒருவேளை உன் கண்களை அந்த இடுப்பை விட்டு நகர்த்த முடியுமானால் தொடைகளைப் பார்” என்றார். இதற்கு மேல் இதை எழுதினால் பெண்ணை உடல் ரீதியாக பார்க்கும்  காமுகன் என்ற பட்டத்தை சுமக்க வேண்டிய அவச் சூழல் வாய்த்துவிடக் கூடும் என்பதால் அடுத்த பத்திக்கு தாவி விடுகிறேன். 

அப்பேர்ப்பட்ட இலியானாவை பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து எஸ்.வி.ஆரிடம் ஷூட்டிங் பார்க்க போக வேண்டும் என்றேன். தனக்கு விருப்பமில்லை என்று ஒதுங்கிக் கொண்டார். துள்ளிக் குதித்து ஓடினேன். நடனக்காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் நான் நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு இலியானா வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவேயில்லை. ஒவ்வொரு முறையும் நாயகன் ரவிதேஜாவிற்கு அருகில் போடப்பட்டிருந்த நாற்காலிக்குத்தான் சென்றார். இலவு காத்த கிளியாகவே நின்று கொண்டிருந்தபோது மண்டையில் யாரோ கொட்டினார்கள். திரும்பிப்பார்த்தால் எஸ்.வி.ஆர் நின்றிருந்தார். தனது கடிகாரத்தைக் காட்டினார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ‘சைட்’ அடித்திருக்கிறேன். “போலாம் சார்” என்றேன். அந்த வார்த்தைகளில் இருந்த திருப்தியின்மையை புரிந்து கொண்டு நக்கலாக சிரித்தார்.

இந்தக் குறிப்பை எழுதிவிட்டு இலியானாவும் நானும் என்று தலைப்பு வைக்கலாம்தான். ஆனால் அது அத்தனை கவர்ச்சியானதாக இருக்காது  என்று யோசித்த போது பழைய சம்பவம் ஒன்று ஞாபகம் வந்தது. பழைய சம்பவம் என்றால் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முந்தையது. ஆரம்பத்தில் இந்த மாதிரியாக எனக்கு நிகழ்ந்த அனுபவங்களை உயிரோசை இணைய இதழில் எழுதிக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் “இதையெல்லாம் அ.முத்துலிங்கம், பாரதி மணி போன்று வயதான காலத்தில் எழுதலாம். இப்பொழுது கவிதை, கதை எல்லாம் எழுதலாம் இல்ல” என்றார். நல்ல அறிவுரையாகத் தோன்றியது. எழுதியவரைக்கும் போதும் என நிறுத்தியிருந்தேன். 

ஆனால் நண்பர்களில், கூட வேலை செய்தவர்களில், சொந்தக்காரர்களில் என சகல இடங்களிலும் முப்பது நாற்பது வயதுக்காரர்கள் சிவலோக பிராப்தி அடைந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது சஷ்டியப்த பூர்த்தி காணும் வரை இருப்போம் என நினைப்பதெல்லாம் அதீத நம்பிக்கைதான். தோன்றியதை தோன்றும் போது எழுதிவிட வேண்டும். எழுதுவதற்கான மனநிலை அமைந்திருப்பதே பெரிய விஷயம். அதில் இதைத்தான் எழுத வேண்டும் அதைத்தான் எழுத வேண்டும் என எல்லைக் கோடுகள் வரைவது தேவையில்லாதது எனத் தோன்றுகிறது. 

அடித்து ஆடுவோம்!

1 எதிர் சப்தங்கள்:

பாலகிருஷ்ணன் said...

நல்லாவே ஜாலியை அனுபவித்தது எழுத்துக்களில் புரிகிறது!