Jan 4, 2013

நிர்வாண பிச்சைக்காரர்கள்


நேற்றிரவு பன்னிரெண்டு மணிக்குத்தான் வீடு திரும்ப முடிந்தது. அத்தனை வேலை. இரவில் நகரச் சாலைகளில் பயணிப்பதில் ஒரு சுகம் இருக்கிறது. இந்த நகரம் மொத்தமும் நமக்கானது என்ற எண்ணம் வந்துவிடும். நெரிசல் இல்லை, காதைக் கிழிக்கும் இரைச்சல் இல்லை, புகை இல்லை- குறிப்பாக ட்ராபிக் போலீஸார் இருக்க மாட்டார்கள். பெங்களூர் ட்ராபிக் போலீஸ்காரர்கள் டார்ச்சர் பேர்வழிகள். வெளிப்படையாக தெரியும் படி நிற்கமாட்டார்கள். ஒளிந்து கொண்டுதான் நிற்பார்கள். அதுவும் மரங்களுக்கு பிறகாக, திருப்பத்தில் என கண்டுபிடிக்க முடியாத இடமாக நின்று கொள்வார்கள். போலீஸ்காரர்கள் யாரும் இல்லை போலிருக்கிறது என்ற நம்பிக்கையில் கொஞ்சம் ஏமாந்தாலும் ஓடி வந்து அமுக்குவார்கள். 

மாதம் முந்நூறு ரூபாயாவது வெள்ளைச்சட்டை கடன்காரர்களுக்கு கப்பம் கட்ட வேண்டும் என என் தலையில் எழுதியிருக்கிறது. சில சமயம் வெள்ளையாக கொடுத்து ரசீது வாங்கிக் கொள்வேன். பல சமயம் Black இல் லஞ்சமாகக் கொடுத்துவிட்டு தப்பித்து வருவேன். சிக்னலில் நிற்காமல் சிக்கிக் கொண்டால் லைசன்ஸ், இன்ஸூரன்ஸ், புகை அளவு என சகலத்திற்கும் சேர்த்து ஆயிரம் அல்லது தொள்ளாயிரம் கட்ட வேண்டும் என்பார்கள். பேசி சமாளித்தால் நூறு ரூபாயுடன் தப்பித்து வந்துவிடலாம். நூறு ரூபாய் கூட பர்ஸில் இல்லாமல் மாட்டிக் கொண்டு காலில் விழாத குறையாக தப்பித்த வீர வரலாறுகளை வருங்கால சந்ததியினருக்காக எழுதி வைக்க வேண்டும். பிறகு எழுதலாம்.

நேற்றைய கதை இங்கிருந்து தொடர்கிறது. அலுவலகத்தில் ஏகப்பட்ட வேலை. பெண்டு நிமிர்ந்தது என்பதை விட பெண்டு வளைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆணியாக பிடுங்கியதில் கண்கள் பொத்துவிடும் போலாகிவிட்டது. முடித்துவிட்டு கிளம்பும் நேரத்தில் இன்னும் சிலர் கிளம்பாமல் இருந்தார்கள். மார்ச் மாதம் வருகிறது. சம்பள உயர்வு பருவம். இப்படித்தான் வெகு சிரத்தையாக வேலை செய்வார்கள். எப்படியும் இருபது சதவீத சம்பள உயர்வை வாங்கிவிடலாம் என்று நவம்பரிலிருந்து மாடாய் உழைத்து ஓடாய் தேய்வார்கள். மார்ச் மாதம் மேனேஜர் அழைப்பார். ரிசஸன் வந்துவிட்டது, ப்ராஜக்ட் காலியாகிவிட்டது என்று சொல்லி இரண்டு சதவீத சம்பள உயர்வை கண்ணில் காட்டினாலே ஆனந்தக் கண்ணீர் வடித்து சந்தோஷமடைய வேண்டியிருக்கும். 

இந்த உழைப்பாளிகளுக்கு டாட்டா சொல்லிவிட்டு கிளம்பினால் குளிர் எலும்பு வரை இறங்குகிறது. இருபது கிலோ மீட்டருக்கு எனது ரதத்தை ஓட்ட வேண்டும். இப்பொழுதெல்லாம் ஸ்பெண்டர் ப்ளஸ் வண்டியை ரதம் என்றுதான் சொல்கிறேன். சில மாதங்களாக என்னை கீழே தள்ளிவிடாமல் நட்பு பாராட்டும் இந்த வண்டிக்கு அதுதான் பொறுத்தமான பெயர். பெங்களூ இன்னர் ரிங் ரோடு இப்பொழுதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு இந்தச் சாலையில் கொலை கூட நடந்திருக்கிறது. 

அது ஒரு சுவாரசியமான சம்பவம். ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. கழுதை கெட்டால் குட்டிச்சுவர்; கம்ப்யூட்டர் தெரிஞ்சவன் கெட்டால் பெங்களூரு என்பது தெரிந்ததுதானே. அவளும் கம்ப்யூட்டர் தெரிந்தவள்தான். அதனால் ஐடியில் வேலை. அதனால் பெங்களூரில் வாசம். நிச்சயம் செய்யப்பட்டவனும் ஐடிக்காரன். இரவில் இன்னர் ரிங் ரோடு தனிமையை அள்ளிக் கொடுக்கும் என்பதால் அவர்கள் இருவரும் சந்தித்திருக்கிறார்கள். பிறகு சங்கமித்திருக்கிறார்கள். முயக்கம் கண்ணை மறைத்திருக்கிறது.

காதலில் முயங்கிக் கிடந்த போது “டொங்”- இந்தச் ‘டொங்க்’ சப்தம் வேறொன்றுமில்லை. அவன் தலையில் இடி இறங்கியிருக்கிறது. இடி என்றால் வானிலிருந்து இல்லை. எவனோ பின்னால் இருந்து இரும்புக் கம்பியை இறக்கிவிட்டான். அடுத்து அந்தப் பெண்ணை அவன் கற்பழிப்பான் என்று நீங்கள் தற்கால நியூஸ் ட்ரெண்டை மனதில் ஓட விடக் கூடாது. அப்படியெல்லாம் நடக்கவில்லை. அவன் சாகும் வரைக்கும் இரண்டு பேரும் பொறுத்து பார்த்துவிட்டு, கதை முடிந்த பிறகு இறந்தவன் காலைப் பிடித்து ஓரமாக வீசிவிட்டு சென்றுவிட்டார்களாம். காரணம் மிக எளிதானது. அவளும், கொன்றவனும் காதலர்கள். இடையில் நிச்சயம் என்ற பெயரில் சனியனாக வந்தவனை போட்டுத்தள்ளிவிட்டார்கள். 

இந்தக் காதல், கள்ளக்காதல், கொலை என இந்த சமாச்சாரங்களாக மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. சினிமா போஸ்டர் ஒட்டுபவரிலிருந்து, டீ விற்கும் பையன் வரைக்கும் யாரைப் பார்த்தாலும் ஒரு வினாடி பயமாக இருந்தது. என்னை தடுத்து நிறுத்துவதால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை என்று எனக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு எப்படி தெரியும்? கிரெடிட் கார்ட் கூட இல்லாத உனக்கு என்ன _________ க்கு லேப்டாப் என்று கடுப்பாகிவிடுவார்கள் என்றுதான் பயம். கோபத்தில் ஒரு அடியோடு விட்டுவிட்டால் பரவாயில்லை. குனிய வைத்து கும்மிவிட்டால்? இப்படி பயம் இல்லாமல், அடுத்தவர்களைப் பற்றிய நினைப்பில்லாமல் ஒரு இரவையாவது இந்த ஊரில் சுற்ற வேண்டும் என்று பைக்கை முறுக்கிக் கொண்டிருந்தேன்.

ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டை தாண்டியபோது உருவம் தெரிந்தது. அது ஒரு புதர் மண்டிய இடம். அருகில் மிகப்பெரிய கால்வாய் இருக்கிறது. சாக்கடை நீர் பாயும் ராஜகால்வாய். இந்தக் குளிரில் இப்படியும் படுத்துக் கிடக்க முடியுமா என நினைத்துக் கொண்ட போது உருவம் அசைந்தது. வண்டியை வேகம் குறைத்துக் கொண்டேன். அருகில் பைக் சென்றவுடன் அதிர்ச்சியாக இருந்தது. அது உருவம் இல்லை- உருவங்கள். இரண்டு பேர். ஆணும் பெண்ணும் கிட்டத்தட்ட நிர்வாணமாக புரண்டு கொண்டிருந்தார்கள். வேகமாக போய்விட வேண்டும் என விரும்பினேன். அவர்களுக்கு ஒரு பைக் நெருங்குவது பெரிய பொருட்டாகத் தெரியவில்லை. அவன் ஒரு முறை என்னை நிமிர்ந்து பார்த்தான். பிச்சைக்காரன் போலிருந்தான். அவனை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை. சங்கடமாக இருந்ததது. பார்வையைத் திருப்பினேன். அவன்  தனது காரியத்தைத் தொடர்ந்திருக்கக் கூடும். ஆனால் பைக்குக்கு பின்னாலேயே அவர்களுக்கு மிரட்டல் வந்து கொண்டிருந்தது. பயம் போலீஸ் வடிவில் வந்து கொண்டிருந்தது. தூரத்தில் போலீஸ் சைரன் கேட்கத் துவங்கியது. நான் அவர்களின் இடத்தை தாண்டுவதற்கும் அவர்கள் வாரிச்சுருட்டிக் கொண்டு ஓடுவதற்கும் சரியாக இருந்தது. அவளின் முகத்தை பார்க்க முடியவில்லை. நிர்வாணமான பின்புறம் சோடியம் விளக்கொளியில் தெரிந்தது.  இருவரும் புதருக்குள் மறையத் துவங்கினார்கள். போலீஸ் வண்டி வேகமாக  கடந்து சென்றது. நானும் அந்த இடத்தைக் கடந்திருந்தேன். ஒருவேளை திரும்பிப் பார்த்திருந்தால் அவர்கள் மீண்டும் அதே இடத்திற்கு வந்திருக்கக் கூடும். ஆனால் திரும்பிப்பார்க்க வேண்டும் என்று தோன்றவேயில்லை. 

8 எதிர் சப்தங்கள்:

தமிழ் உதயன் said...

எளியவனின் (பிச்சைகாரனின்) நிர்வாணம்தான் உங்களுக்கு தெரிய வந்தது. செயிண்ட் மார்க்ஸ் ரோட்டில் 2008-09-10 ஆண்டுகளின் நான் தங்கி இருந்த போது, பணம் படைத்தவர்களின் நிர்வாணம் இன்னும் கேவலமானது. போலீஸ் கெஞ்சி கேட்டு இடத்தை காலி செய்த நிர்வா(ர்)ணங்களை நான் கண்டுள்ளேன்.

Vaa.Manikandan said...

எளியவன், வறியவன், பணக்காரன் என்ற வர்க்கபேதமெல்லாம் இல்லை. இது ஒரு காட்சி அவ்வளவுதான்.

Anonymous said...

Superb writing style..I like it..keep it up

- Rajesh

Tamil Indian said...

Good writing style you have.

Butter_cutter said...

நீங்களாவது இரவில் நானோ இதே மாதிரி காட்சி ஐ பார்த்தது மாலை 5 மணி ! இருவருக்கும் அப்படி என்ன அவசரமோன்னு முகத்தை திருப்பீட்டு திரும்பி பாக்காம வந்துட்டேன் !

அகல்விளக்கு said...

mmmm...

Uma said...

நாங்கள் 3 வருடங்கள் அல்சூரில் இருந்திருக்கிறோம். மாலைமயங்கும் வேளைகளில் அல்சூர் ஏரியை சுற்றி பார்க் பண்ணப்பட்ட கார்களின் காஸ்ட்லியான நிர்வாணங்கள் கண்களை கூசவைக்கும். எல்லாமே உடல் தேவைதான்.அதில் பணமெங்கே, கௌரவம் எங்கே?

manjoorraja said...

சென்னை கடற்கரையில் 8 மணிக்கு மேல் நிதமும் நடக்கிறது.